கொரோனா பெருந்தொற்று பரவலின் போது மோடி அரசால் அறிவிக்கப்பட்ட திட்டமிடப்படாத பொதுமுடக்கத்தால் தன் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வீடற்றவர்களாய், உள்நாட்டு அகதிகளைப் போல திரியும் மும்பை மாநகரைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கத்திற்கு மருத்துவமனை வளாகங்களே அவர்களின் புதிய குடியிருப்புகளாகியிருக்கின்றன.

கடந்த அக்டோபர் மாதம், தன் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக லோக்மாண்ய திலக் முனிசிபல் பொது மருத்துவமனைக்கு (எல்.டி.எம்.ஜி) வந்த சக்திகுமார் தற்போது மருத்துமனையின் மூலையில் உள்ள ஒரு பச்சை நிற பெஞ்சின் மீதுதான் குடியிருந்துவருகிறார்.

இதுகுறித்து பேசும் குமார் : “நானொன்றும் இதற்குமுன் வீடற்றவனாக திரிந்தவனில்லை, விராரில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்தேன், அங்கேயே தங்கியும் வந்தேன். மாதம் 15,000 சம்பளம். சம்பளத்தின் பெரும் பகுதியை உ.பி.யிலுள்ள எனது குடும்பத்திற்கு அனுப்பினேன். இந்த கொரோனா கால பொதுமுடக்கத்தால் நான் பணிபுரிந்த உணவகம் மூடப்பட்டதால் நானும் என்னுடன் பணிபுரிந்த 5 சக ஊழியர்களும் வேலையற்றவர்களாகவும் வீடற்றவர்களாகவும் ஆக்கப்பட்டோம். நான் ஒரு விபத்தில் காயமடைந்ததால் ஒருவாரம் இங்கு அனுமதிக்கப்பட்டேன். சிகிச்சை முடிந்து அவர்கள் என்னை வெளியேற்றியபோது எனக்கு எங்குபோவதென்று தெரியவில்லை” என்கிறார்.

விஷால் பவாரும் அவரது தாயாரும் ஒரு கூடாரத்தின் கீழ்தான் கடந்த 3 மாதங்களாக வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

குமார், ஒரு பொதுக்கழிப்பறையில் தான் குளிக்கிறார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உணவு அல்லது மருத்துவமனை வார்டில் மீதமாகும் உணவைப் பெற்றுதான் சாப்பிடுகிறார்.

“ஒவ்வொரு நாளும் வேலைதேடி அலைகிறேன். 3,000 ரூபாய் கொடுத்தால் போதும் சமையல்காரன் வேலைக்கு தயாராக இருக்கிறேன்.” என்கிறார் குமார்.

ஒரு காவலாளியாகவும் எல்.டி.எம்.ஜி மருத்துவமனையில் பகுதிநேர உதவியாளராகவும் பணியாற்றிய பவார் என்பவர், “பொதுமுடக்கம் தொடங்கியபோது நான் எனது இரண்டு வேலைகளையும் இழந்தேன். வீட்டு உரிமையாளர் எங்களை வெளியேறச் சொல்லிவிட்டார். அதன் பின்பு இந்த தாழ்வாரத்தில் தான் நாங்கள் வசித்து வருகிறோம். தினமும் பிற்பகலில் என் அம்மா வார்டுக்கு வருவார். எங்கள் இருவருக்கும் அங்கு ஒரு செவிலியர் தனது மீதமுள்ள உணவைத் தருகிறார்” என்கிறார்.

“இவர்கள் பொதுமுடக்கத்திற்கு முன் வறுமைக்கோட்டுக்கு மேலிருந்தவர்கள் தான். இப்போது வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளார்கள்” என்கிறார் ‘கோஷிஷ்’ எனும் வீடடற்றவர்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த முகமது தாரிக்.

படிக்க :
♦ கொரோனா காலத்தில் “அள்ளிக் கொடுத்த” பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்வு !
♦ நகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா !

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மும்மையில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 57,415-ஆக இருந்தது. தொற்று பரவலுக்கு முன்னர் இந்த ஆண்டு பிரஹன் மும்பை மாநகராட்சியின் (BMC) அறிக்கை வீடற்றவர்களின் என்னணிக்கையை 11,915 என்று மதிப்பிட்டுள்ளது. “ஆனால் எங்களைப் பொருத்தவரையில் மும்பையில் 2 இலட்சம் வீடற்றவர்கள் இருக்கிறார்கள். பொதுமுடக்கத்தின் போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம்.” என்கிறார் ‘ஹோம்லஸ் கலக்டிவ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரிஜேஷ் ஆர்யா. “தொற்று பரவல் காலத்தில் வீட்டற்றவர்களாக ஆக்கப்பட்டவர்களை பற்றிய அதிகாரப்பூர்வ பதிவுகள் இல்லை” என்று கூறுகிறார் சமூக நீதி மற்றும் நலத்துறை முதன்மை செயலாளர் ஷியாம் தாக்டே.

“குடிமை அமைப்பு இயங்கும் எந்த மருத்துவமனையிலும் வீடற்றவர்கள் தஞ்சமடைகிறார்களா என்று மும்பை மாநகராட்சி (BMC) விசாரிக்கும் அவர்களுக்கு சிகிச்சை தேவைப்பட்டால் நாங்கள் மருத்துவமனையில் சேர்ப்போம், வீடற்றவர்களை காவல்துறை உதவியுடன் தங்குமிடங்களுக்கு அனுப்புவோம்” என்கிறார் கூடுதல் நகராட்சி ஆணையர் சுரேஷ் கக்கானி. ஆனால், எல்.டி.எம்.ஜி. மருத்துவமனையின் டீன் டாக்டர் மோகன் ஜோஷி, இதுபோன்ற வழக்குகளை “கவனிக்கவில்லை” என்கிறார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் மையமாக விளங்கும் தாராவி மற்றும் செம்பூருக்கு இப்படியொரு ‘தங்குமிடங்கள்’ (மருத்துவமனைகள்) மிக நெருக்கமாக இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.

“மருத்துவமனைகளின் காத்திருக்கும் பகுதி, தாழ்வாரங்கள் மற்றும் இருக்கைகளில் வீடற்ற மற்றும் வேலையற்ற ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வார்டுகளில் அதிகப்படியான உணவு இருக்கும்போது அதை அவர்களுக்கு விநியோகிக்கிறேன்” என்கிறார் வார்டு பாயாக வேலைசெய்யும் முகமது ஷேக். “நாங்கள் அவர்களை திருப்பி அனுப்புகிறோம். ஆனால் அவர்கள் திரும்பவும் வந்துவிடுகிறார்கள்” என்கிறார் மருத்துவமனை காவலாளி சுனில் பாட்டீல்.

000

லக்ஷ்மி கங்காதர் பாரட்

பி.ஒய்.எல் நாயர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டயப்பர்கள் மாற்றி விடுதல், நோயாளிகளைக் குளியலறைக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற வேலைகளின் மூலம் தினம் ரூ 200, 300 வருமானமாகப் பெற்று வாழ்ந்து வந்த 60 வயது மூதாட்டியான லக்ஷ்மி கங்காதர் பாரட், “இந்த பொதுமுடக்கக் காலத்தில் மருத்துவமனை எங்களை போன்றவர்களை பணி செய்யவிடாமல் நிறுத்தியது. எனக்கு வேலை கொடுக்க அல்லது என்னை தங்க வைத்துக் கொள்ள யாரிடமாவது கேட்பதற்காக இப்போது இங்கே நான் இருக்கிறேன்.” என்று கூறுகிறார்.

கே.இ.எம் மருத்துவமனையின் டாக்டர் தேஷ்முக் கூறுகையில், “வீடற்ற ஒரு சிலர் தாங்கள் நோய்வாய்ப்படாத போதும் மருத்துவமனையில் தாங்கள் நோய்வாய்ப்பட்டதாக கூறி சேர முயன்ற வழக்குகள் உள்ளன” என்கிறார். தனது மகளுடன் மருத்துவமனை வளாக மரத்தடியில் வசித்துவரும் போயிட் அப்படிப்பட்டவர்களில் ஒருவர். “நான் பார்த்து வந்த வேலை பறிபோய் ஏழு மாதங்களாகிறது. வீட்டு வாடகை செலுத்த முடியாத காரணத்தால் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டோம். என் மனைவி என்னை விட்டுப் போய் விட்டாள். என் இரண்டு மகள்களில் ஒருத்தியை நண்பர் ஒருவரின் வீட்டில் விட்டுவிட்டு மற்றொருத்தியை என்னுடன் இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறேன். நாங்கள் ஒரு அரச மரத்தின் கீழ் தங்கினோம். என்னை அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தால் எனது மகள் அங்கு தரையிலாவது தூங்கலாம் என்று நினைத்தேன்” என்கிறார் அவர்.

ஒவ்வொரு நாளும் போயிட், ‘பலவீனம் மற்றும் முதுகுவலி’ என்று பொய் சொல்லி தன்னை நோயாளியாக அனுமதிக்குமாறு முயற்சித்துள்ளார். இறுதியாக மருத்துவமனை அவரை 6 நாட்கள் அனுமதித்து, குளுகோஸ் ஏற்றி பின் அவரை விடுவித்தது. காவலர்கள் வந்து அவரை வெளியேற்றுவதற்கு முன் தனது மகளுடன் அவரே வெளியேறி மீண்டும் அதே மரத்தடிக்கு சென்றார். 40 வயதான அவர் இன்று உல்ஹாஸ் நகரில் உள்ள தனது பழைய வீட்டிற்கு வெளியே தெருவில் வசித்து வருகிறார். இன்னும் அவருக்கு வேறு வேலை கிடைக்கவில்லை.

போயிட்

000

பாசிச மோடி அரசு யாருக்காகச் செயல்பட்டு வருகிறது என்பதை கோவிட்-19 பெருந்தொற்று அப்பட்டமாக அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது. யாரைக் காப்பாற்றுவதாகக் கூறி யாரைக் கைகழுவி விட்டது என்பதையும், எந்த வர்க்கத்தைப் பாதுகாக்க எந்த வர்க்கத்தை முடக்கியது என்பதையும் கொண்டுதான் இந்த அரசு யாருக்கானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும் ! கண்டிப்பாக இந்த அரசு கார்ப்பரேட்டுகளுக்கானதுதானே ஒழிய உழைக்கும் மக்களுக்கானது அல்ல !!


தமிழாக்கம் : பால்ராஜ்
நன்றி : Indian Express

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க