privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி !

ஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி !

மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்திய இந்து தீவிரவாதிகளை கைது செய்த ஹேமந்த் கர்கரேவால் நிரபராதி என சொல்லப்பட்ட ஃபஹீம் அன்சாரி 12 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

-

னது ஒன்பது உடன்பிறப்புகளில் இளையவரான அன்சாரி, 2008-ல் அச்சகத்தில் பணிபுரிவதற்காக துபாய்க்கு சென்றார். அதற்கு முன்பு வரை அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மும்பையிலேயே கழித்தார்.  துபாயில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின் விடுமுறைக்காக ஊருக்கு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.

ஃபஹீம் அன்சாரி (இடது புறம் உள்ளவர்)

26/11 பயங்கரவாத தாக்குதலுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் மற்றொரு வழக்கில் பெயரிடப்பட்டிருந்ததால் சிறையிலிருந்து வெளியேற முடியவில்லை. 49 வயதான ஃபஹீம் அன்சாரி, கடந்த புதன்கிழமைதான் அவ்வழக்கில் இருந்து  விடுவிக்கப்பட்டு பரேலி மத்திய சிறையில் இருந்து வெளியேறினார். அவருக்கு ஒரு பெரிய வருத்தம் உள்ளது. விடுதலையான பிறகு அவர் மிகவும் சந்திக்க விரும்பிய இரண்டு நபர்கள் இப்போது உயிருடன் இல்லை.

“நான் சந்திக்க விரும்பிய இரண்டு நபர்கள் 26/11 வழக்கில் என்னை ஆதரித்த வழக்கறிஞர் ஷாஹித் அஸ்மி மற்றும் நான் நிரபராதி என்று அதிகாரிகளிடம் கூறிய ஏடிஎஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே. துரதிர்ஷ்டவசமாக, இருவரும் பயங்கரவாதிகளின் தோட்டாக்களுக்கு இரையாகிவிட்டனர்.” என்கிறார் அன்சாரி.

படிக்க:
யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?
தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !

தனது சகோதரரின் நிறுவனத்தில் அச்சிடும் பிரிவில் கையெழுத்தராக பணிபுரிந்து வந்தவர் அன்சாரி. அஜ்மல் கசாப் உட்பட 26/11 பயங்கரவாதிகளுக்கு உதவிய வரைபடங்களை வரைந்ததாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. மே 2010-ல் 26/11 வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், ராம்பூரில் ஒரு சி.ஆர்.பி.எஃப் முகாம் மீதான தாக்குதலில் அவர் ஈடுபட்டதாகக் கூறி, 2008 பிப்ரவரியில் உத்தரபிரதேச எஸ்.டி.எஃப் பிரிவு அவரை கைது செய்தது. ஏழு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உட்பட பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்ட இந்த தாக்குதல் வழக்கிற்காக, அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டியிருந்தது.

அன்சாரி மீது போலி பாகிஸ்தான் பாஸ்போர்ட், போலி இந்திய ஓட்டுநர் உரிமங்கள், மும்பையின் சில வரைபடங்கள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த வாரம் ராம்பூர் நீதிமன்றம் அன்சாரி போலி ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டியது. ஆனால், அரசுக்கு எதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர் ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறையில் இருந்ததால், கடந்த புதன்கிழமையன்று விடுவிக்கப்பட்டார்.

“துபாயிலுள்ள எனது நண்பர்களுக்காக சில ஆடைகளை வாங்க லக்னோவிலிருந்த கடைக்குச் சென்றிருந்தபோது, உபி காவல்துறை என்னை பிடித்ததுச்சென்றது. ஒரு வாரம் கழித்து, நான் ராம்பூரிலிருந்து கைது செய்யப்பட்டேன் என்று சொன்னார்கள். நான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்று எனக்கு எந்தவிதமான தகவலும் இல்லை”, என்று அன்சாரி கூறினார்.

“26/11 சம்பவத்திற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு நான் சிறையில் இருந்தேன். ஒரு நாள், நான் 26/11 பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாக, வந்த ஒரு செய்தியை செய்தித்தாளில் வாசிக்க நேர்ந்தது. அது உண்மையில் என்னை மிகவும் காயப்படுத்தியது.” என்று அன்சாரி கூறினார்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இந்து தீவிரவாதிகளை ஆதாரங்களுடன் கைது செய்தவர் ஹேமந்த் கர்கரே. இவரால் கைது செய்யப்பட்ட சாத்வி பிரக்யா தற்போது எம்.பி.

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மும்பைக்கு அழைத்து வரப்பட்டு மகாராஷ்டிரா ஏ.டி.எஸ். அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தான் எதற்காக கைது செய்யப்பட்டோம், இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது அப்போதுதான் அவருக்கு  தெரியவந்ததுள்ளது. “26/11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்பே உ.பி. எஸ்.டி.எஃப் பிரிவு அதிகாரிகள் என்னை மகாராஷ்டிரா ஏ.டி.எஸ் பிரிவிடம் ஒப்படைத்தனர். ஹேமந்த் கர்கரே அப்போது ஏ.டி.எஸ் தலைவராக இருந்தார். எனக்கு எதிராக எதுவும் இல்லை என்று அவர் உ.பி. போலீசாரிடம் தெரிவித்திருந்தார், ஆனாலும், என் பெயர் பதிவு செய்யப்பட்டது”. என்று கூறினார்.

உ.பி. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய எனக்குத் திட்டமில்லை” என்றார் அவர். மேலும், “போராடுவதற்கான ஆதாரங்கள் என்னிடம் இல்லை. எனது குடும்பம் நிதி ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்ந்து போயுள்ளது. நான் அரசை எதிர்க்க விரும்பவில்லை. நான் எனது கடமைகளை சரியாக செய்ததாக உணர்கிறேன். நான் நிரபராதி என்று நானும் என் கடவுளும் அறிவோம்”, என்று அன்சாரி கூறினார்.

கல்லூரியில் படிக்கும் தனது மகள் தனது கல்லூரி படிப்பை நல்லபடியாக முடிக்கவேண்டும், என்பதே தனக்கு இப்போது முதன்மையானது என்றார். “நான் கைது செய்யப்பட்டபோது அவளுக்கு மூன்று வயது. அவள் ஒரு நல்ல கல்வியைப் பெறுகிறாள் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். எனது வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறேன். நான் கைது செய்யப்பட்ட பின்னர் மக்கள் என் சகோதரர்களுக்கு வேலை கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். நான் விடுதலையான பிறகு, இனி நிலைமைகள் எப்படி செல்லும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் நேர்மையான வாழ்க்கை வாழ விரும்புகிறேன்.”


மூர்த்தி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.