பத்திரிக்கைச் செய்தி !

17.5.2021

பூவிருந்தவல்லி தூசான் பவர் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவன  தொழிலாளர்களது வேலையைப் பறிக்க சதி!

வன்மையாக கண்டிக்கிறோம்!

சென்னையின் புறநகரான பூவிருந்தவல்லி பைபாஸ் சாலையில் இயங்கி வருகிறது, தென்கொரிய நிறுவனமான தூசான் பவர் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம். அனல் மின்நிலையங்களுக்குத் தேவையான பாய்லர்களை தயாரிக்கும் இந்த நிறுவனத்துக்கு நொய்டா போன்ற இடங்களிலும், தென் கொரியாவிலும், உலகின் வேறு சில நாடுகளிலும் கிளைகள் இருக்கின்றன.

படிக்க :
♦ ஆட்டோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு || NDLF
♦ போர்கால அடிப்படையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பொதுத்துறை ஊழியர்கள் !

மிகவும் இலாபகரமாக இயங்கி வந்த இந்த ஆலையில் சுமார் 302 தொழிலாளர்களும், 173 அதிகாரிகளும் (உயர்நிலை அதிகாரிகள் துவங்கி கீழ்நிலை பொறியாளர்கள் உள்ளடக்கி) பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 15 ஆண்டுகளாக வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் துவங்க தொழிலாளர்கள் பலமுறை முயற்சி செய்தும், அவை தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில் நிர்வாகமே அ.தி.மு.க. வழக்கறிஞர் ஒருவரது தலைமையில் டம்மி தொழிற்சங்கத்தை பதிவு செய்து, தொழிலாளர்களை ஆட்டிப்படைத்தது.

இந்த ஆலைத் தொழிலாளர்களது வேலைநிலைமை சாதாரணமாக இருக்கவில்லை. அனல் கக்கும் வேலைப்பிரிவுகளில் ஓய்வில்லாமல் அதிகபட்ச உற்பத்தி இலக்கை செய்தாக வேண்டும். பாய்லர் குழாய்களில் ஒரு முடியின் நூறில் ஒரு பங்கு ஓட்டை இருந்தால் கூட விபத்து ஏற்படும் என்பதால் ஊடுகதிர் சோதனை செய்த பின்னரே வேலை முழுமையடையும். கடும் வெப்பம், ஊடுகதிருடன் வேலை செய்வது, நுணுக்கமான வெல்டிங் வேலையின் போது வெளிப்படும் நச்சுப்புகை ஆகிய அனைத்தும் தொழிலாளர்களுக்கு ஆஸ்த்துமா, புற்று உள்ளிட்ட அதிபயங்கர நோய்களை உருவாக்குபவை.

இந்த சூழலிலும், அரைகுறைப் பாதுகாப்பு கவசங்களுடன் தான் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். கடின வேலையை செய்தாலும், சம வேலைக்கு சம ஊதியம் தராமல், சிலருக்கு அதிக ஊதியமும் கொடுத்து தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி வைத்திருந்தது.

இந்த அநீதியை தட்டிக்கேட்டு விடக்கூடாது என்பதற்காக தனது பேச்சைக் கேட்கும் டம்மி சங்கத்தை வைத்து தொழிலாளர்களை ஒருவருடன் ஒருவரை மோதவிடுவது, பிளவுபடுத்துவது, மிரட்டுவது, பொய்க் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்வது என பேயாட்டம் போட்டது, நிர்வாகம்.

இந்த சூழலில் செப்டம்பர் 2017-ல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வழிகாட்டுதலில் “தூசான் தொழிலாளர்கள் சங்கம்” உருவானது. ஒரு விடியலுக்காக ஏங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு பு.ஜ.தொ.மு தலைமை நம்பிக்கை கீற்றாக வழிகாட்டியது. ஆகப்பெரும்பான்மையான தொழிலாளர் நிர்வாகத்தின் டம்மி சங்கத்தை விட்டு வெளியேறி தூசான் தொழிலாளர் சங்கத்தில் இணைந்தனர். தலை நிமிர்ந்தனர். உரிமைகளை கேட்கத் துவங்கினர்.

என்னென்னவோ மிரட்டல்கள், பொய் வழக்குகள், டெக்னிக்கல் தொழிலாளர்களை தொலைதூர குடோனுக்கு கட்டாய பணியிடம் செய்து சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்தி மன உளைச்சல் ஏற்படுத்துவது, தற்காலிக பணி நீக்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற தாக்குதல்களை சந்தித்த போதும் தூசான் தொழிலாளர் சங்கம், பு.ஜ.தொ.மு தலைமையின் வழிகாட்டுதலோடு தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது.

இனியும் தொழிலாளர்களை ஏய்க்க முடியாது என்கிற நிலை ஏற்பட்ட பின்னர், நிர்வாகம் ஆகக்கொடூரமான செயலில் இறங்கியது. மார்ச் 2020-ல் லாக் டவுன் அறிவிக்கப்பட்ட பின்னர் இன்று வரை (மே 2021 வரை) ஆலையை திறக்கவில்லை. ஆலை நட்டத்தில் இயங்குவதாகவும், தொழிலாளர்கள் அனைவரையும் வேலை நீக்கம் செய்வதாகவும், 15.7.2021 முதல் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிறுத்தபடும் எனவும், ஏப்ரல் 2021 கடைசி வாரத்தில் அறிவிப்பு செய்தது.

இதனை அனுமதிக்குமாறு தொழிற்தகராறு சட்டம்,1947 பிரிவு 25 N கீழாக தமிழக அரசிடம் மனு செய்துள்ளது. நிர்வாகத்தால் சமாளிக்க முடியாத அளவுக்கு நட்டம் எனில் 80 சதவீதம் அதிகாரிகளை வேலையில் தக்க வைத்துக் கொண்டு, 100 சதவீதம் தொழிலாளர்களது வேலையை பறிக்கும் செயலானது தீய உள்நோக்கம் கொண்டது. (அதிகாரிகளது  ஒட்டுமொத்த சம்பளம் மட்டும் பல கோடிகள்.) நிரந்தரத் தொழிலாளர்களை வேலையிலிருந்து துரத்திவிட்டு, அதிகாரிகள் மூலம் நீம், FTE, டிரெய்னி, காண்டிராக்ட் தொழிலாளர்களை வைத்து ஆலையை இயக்கவே இந்த ஆட்குறைப்பு சதி செய்கிறது, நிர்வாகம்.

நிர்வாகத்தின் சதியை அம்பலப்படுத்தி தொழிலாளர் துறையின் முதன்மை அரசு செயலாளர், தொழிலாளர் ஆணையர் ஆகியோருக்கு புகார்க் கடிதங்கள் அனுப்பப் பட்டுள்ளதுடன் சட்டபூர்வ பாதுகாப்பும் பெறப்பட்டுள்ளது. இதனால் நிர்வாகம் குறுக்கு வழியில் தனது சதிகளை நிறைவேற்றத் துடிக்கிறது. பணப்பெட்டிகளை வைத்துக் கொண்டு பலதுறை அமைச்சர்களை வளைத்துப் போட அலைந்து கொண்டிருக்கிறது. தென்கொரிய முதலாளிகள் இந்திய தொழிலாளர்களையும், தொழிலாளர் உரிமைகளையும் கிள்ளுக்கீரைகளாக நடத்துகின்றனர் என்பதற்கு ஹூண்டாய் முதல் GSH வரை பல உதாரணங்கள் இருக்கின்றன.

படிக்க :
♦ பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்த தெலுங்கானா அரசு
♦ ‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

இப்போது பொதுமுடக்க காலத்தைப் பயன்படுத்தி இன்னொரு தாக்குதலுக்கு தயாராகி வருகின்றன. இதனை புரட்சிகர தொழிற்சங்கத்தால் வழிநடத்தப்படும் தொழிலாளர் முறியடிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்திய தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க தொழிலாளர்களின் ஒரு பகுதியாக இருக்கும் தூசான் பவர் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிலாளர்களது போராட்ட முன்னெடுப்புகளுக்கு தோள்கொடுப்பது நமது கடமையாக இருக்கிறது.

  • தொழிலாளர் வாழ்வை சூறையாடும் சதிகளை கண்டிப்போம்!
  • தூசான் தொழிலாளர்களுக்கு துணை நிற்போம்!


இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் – 94448 31578

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க