ஒசூர் : ஃபெவெலி ஆலையில் வேலை பறிக்கப்பட்ட
தொழிலாளர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் !

அன்பார்ந்த உழைக்கும் மக்களே ! வணக்கம் !

ஓசூர் பிரபல இருசக்கர வாகனம் தயாரிக்கும் TVS ஆலையின் அருகில் ஃபெவெலி டிரான்ஸ்போர்ட் (Faiveley Transport – a wabtec company) என்ற அமெரிக்க நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த ஆலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரயில்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட நிர்வாக அதிகாரிகளும் 105 நிரந்தரத் தொழிலாளர்களும் 200-க்கும் மேற்பட்ட நேரடி உற்பத்தி பிரிவில் வேலை செய்யும் தொழிலாளர்களும் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை செய்து வரும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமாகும்.

குறைவான முதலீட்டிலும் சந்தைக்கான போட்டி நிறுவனங்கள் பெரிய அளவில் இல்லாமலும் பொதுத்துறையான இரயில்வேயை சார்ந்து இந்நிறுவனம் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 1500 கோடி வர்த்தகம் செய்யப்பட்டு நல்ல இலாபம் ஈட்டக் கூடிய நிறுவனமாகும். இலாபத்தின் பெரும் பகுதி மக்களுடையது என்றால் அது மிகையாகாது. மற்றொரு பக்கம் அரசின் வரிச்சலுகை, நிலம், தண்ணீர், மின்சாரம், சாலை வசதி என பல வழிகளில் நன்மைகள் அடைகிறது. ஆனால், உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பணி நிரந்தரம், சம்பளம், போனஸ் உள்ளிட்ட சட்ட உரிமைகளை மதிப்பதில்லை நிர்வாகம்.

படிக்க :
♦ கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு
♦ அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !

சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலையில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நிரந்தர உற்பத்திப் பிரிவில் வேலை செய்தால் அவர்களுக்கு பணிநிரந்தரம் செய்து ஊதிய உயர்வு உள்ளிட்ட அத்தனை பொருளாதார பலன்களையும் வழங்கி வந்தனர். தற்போது பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமாக மாறிய பிறகு அதே நிர்வாக அதிகாரிகள் தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொண்டு பணி நிரந்தரம் செய்வதாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி 4 ஆண்டுகளுக்கு மேல் வேலையை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பணிநிரந்தரம், ஊதிய உயர்வு என எந்தப் பணி பாதுகாப்பு வழங்காமல் முன்னறிவிப்பு கூட இல்லாமல் 41 தொழிலாளர்களை கடந்த 22 டிசம்பர் 2020-ல் வேலையிலிருந்து நீக்கிவிட்டனர்.

இந்த நிறுவனத்திற்கு வேலைக்கு வரும்போது 23 வயது இளந்தொழிலாளர்களை வேலைக்கு எடுத்து 28 வயதில் வேலையை பறித்து நடுரோட்டுக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர். அவர்களுடைய திருமண வாழ்க்கை, எதிர்கால உத்தரவாதம் போன்ற எல்லா கனவையும் சிதைத்து உழைப்பை மட்டும் உறிஞ்சிவிட்டு அவர்களை கரும்பு சக்கையை போல விசி விடுகிறது, ஃபெவெலி நிர்வாகம். இப்படி நான்கைந்து ஆண்டுகளில் தொடர்ந்து நிரந்தர உற்பத்திப் பிரிவில் வேலையை பெற்றுக் கொண்டு வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 97-ஐ தாண்டிவிட்டது.

மீண்டும் பணிநீக்கம் தொடரக் கூடாது என்ற நோக்கத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியிலிருந்த தொழிலாளர்கள் சங்கமாக இணையலாம் என முடிவு செய்து தொழிலாளர் உரிமைக்காக போராடும் புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டு கிளைச் சங்கமாக இயங்க ஆரம்பித்தனர்.

பணி நிரந்தரம், ஊதியஉயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் முன்பாக தொழிற்தாவா 2k வழக்கு ஒன்றை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், தொழிற்சங்கம் அமைத்ததை தெரிந்து கொண்டு முதல் சமரச பேச்சுவார்த்தைக்கு கூட வராமல் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழுவில் கையொப்பமிட்ட 17 தொழிலாளர்களை சட்டவிரோதமாக ஜூலை 15-ம் தேதி பணிநீக்கம் செய்து தொழிலாளர்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கி இருக்கிறது நிர்வாகம்.

ஃபெவெலி ஆலையின் கோர முகங்கள்:

சென்றாண்டு கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பணி நிரந்தரமில்லாத தொழிலாளர்கள் அயராது கடுமையாக உழைத்தனர். நெருக்கடியான சூழலிலும் நிர்வாகத்தின் உற்பத்தி இலக்கு முழுமையாக நிறைவேற்றப்பட்டது. பணிநிரந்தர கோரிக்கை நிர்வாகத்துடன் பேசிய உடனே நிர்வாகம் திட்டமிட்டு ஒரு லே-ஆப்பை அறிவித்து அடுத்த இரு நாட்களில் 41 தொழிலாளர்களின் வேலையை பறித்து வீட்டிற்கு சட்டவிரோத பணிநீக்கத்தை அனுப்பியது நிர்வாகம். பணிநிரந்தரம் செய்வார்கள் என உழைத்த தொழிலாளர்களுக்கு பெரிய இடியாய் இந்த பணிநீக்கம் தலையில் இறக்கியது.

மேலும், சென்ற லாக்டவுன் காலத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டப்படி 2 மாதம் சம்பளம் வழங்கினர். பின்னர் அதற்கு ஈடு செய்யும் வகையில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு இலவசமாக ஓட்டிப் பார்த்து நிர்வாகத்தின் உற்பத்தி இலக்கை அடைய மிரட்டியே வேலையை பெற்றுக் கொண்டது. இப்படியெல்லாம் தொழிலாளர்களை தார்மீக ரீதியாக உழைப்பை சுரண்டும் நிர்வாகமானது அவருடைய பணிப்பாதுகாப்பு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்கும்பொழுது அதற்கு முறையாக அழைத்து பேசுவதோ கோரிக்கையை குறைந்தபட்சம் நிறைவேற்ற ஆலைக்குள்ளேயே முயற்சிப்பதில்லை. அதற்கு மாறாக, அவருடைய வேலையை பறித்து வயிற்றில் அடிக்கிறது, நிர்வாகம்.

இது மட்டுமில்லாமல் ஸ்டோர் போன்ற இடங்களில் Lead என்ற காணட்ராக்ட்டை பயன்படுத்தி ஆண்டுக்கான சம்பள உயர்வும் இல்லாமல் கடுமையான வேலைக்கு உட்படுத்தி சுரண்டப்பட்டும் வருகிறது. அவர்களுடைய கோரிக்கையை கேட்டால் புதிய காண்ட்ராக்ட் ஆட்களை வைத்து வேலையை பறித்து விடுவதாக மிரட்டி வருகிறது. அவர்களுக்கும் சம்பள உயர்வு, போனஸ் வழங்காமல் கடுமையான உழைப்புச் சுரண்டலை மேற்கொண்டு வருகிறது, இந்த நிறுவனம்.

Faivelay நிறுவனத்தின் சாதனைகள்:

கிட்டத்தட்ட இந்த ஆலையில் வேலை செய்யும் 400-க்கும் மேற்பட்ட நிர்வாக அதிகாரிகளில் அதிகமானோர் மேலாளர்கள், துணை மேலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மேலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு பல லட்சம் சம்பளம் மேலும் அவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாள் விடுமுறையும் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு தன்னுடைய திறமையால்தான் இவ்வளவு உற்பத்தியை அடைந்தோம் எனப் பீற்றிக் கொண்டு அதற்கான இன்சென்டிவ் என தனியாக அதிகாரிகள் எடுத்துக் கொள்கின்றனர். உல்லாச வாழ்க்கையில் திளைத்து வருகின்றனர்.

இப்படி இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 10 ஆண்டுகள் வேலை செய்தாலும் இன்னும் ஒரு சொந்த வீடுகூட இல்லாமல் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்த நிறுவனத்தில் நிறுவன அதிகாரியாக வேலை செய்யும் சிலர் வேலைக்கு வந்து இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டியுள்ளனர். சொகுசான வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பியுள்ளனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பணிநிரந்தமில்லாத தொழிலாளர்களை மேலும் மேலும் வதைக்கிறது நிர்வாகம்.

நிர்வாகத்தின் உழைப்புச் சுரண்டலுக்கு முக்கிய காரணம் நிரந்தர உற்பத்திப் பிரிவில் கடுமையான உழைப்பை சுரண்டிக் கொண்டு அவர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்காமல் வயிற்றில் அடிக்கும் மிகப்பெரிய கொடூரம் இந்த நிறுவனத்தில் நடந்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமையான பணிநிரந்தம் பறிக்கப்படுவது குறித்து தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. நிர்வாகம் சட்டபூர்வ உரிமைகள் பறிப்பது குறித்து தொழிற்சங்கமும் கண்டு கொள்ளாமல் ஊதிய உயர்வு, போனஸ் குறித்து பேசுவதே சங்க நடவடிக்கை என்று கருதிக் கொண்டும் அடுத்த தலைமுறை குறித்து யோசிக்காமல் மெளனமாக இருந்து வருகின்றனர். இதுதான் இளம் தொழிலாளர்கள் வாழ்க்கையை நடுரோட்டிற்கு வந்ததற்கு காரணமாகும். வேறு வழியின்றி போராட்ட களத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமையே முதலாளித்துவ சுரண்டலை தடுக்கும் !

ஆகவே, தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து அடக்குமுறையை ஏற்றுக்கொண்டால் ஆங்கிலேயரிடம் போராடி பெற்ற உரிமைகள் கூட பறிபோய்விடும். முதலாளிகள் சட்டத்தை மீறினால் அரசு கண்டுகொள்வதில்லை. ஆனால், தொழிலாளர்கள் தன்னுடைய வாழ்வுரிமையைப் பறிக்கும் போது அதற்கு எதிராக சட்ட ரீதியாக போராடும் போது கூட அவர்களை முறையாக அணுகாமல் நிர்வாகத் தரப்பிலான வாதங்களையே அடுக்கி வைத்து நிர்வாக சார்புடன் அரசின் அங்கமான தொழிலாளர் நலத்துறை ACL அணுகுவது தான் சகிக்க முடியாததாக உள்ளது.

TVS, லேலண்ட், டைட்டான், எக்ஸைடு போன்ற மிகப்பெரிய நிறுவனங்களிலும் CL, காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ், NEEM, FTE என பல்லாயிரக்கணக்கான இளந்தொழிலாளர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகள் இல்லாமல் நவனீ கொத்தடிமைகளாக கசக்கி பிழியப் படுகின்றனர். இதற்கு பல வழிகளில் அரசுத்துறை அதிகாரிகளும் பக்க பலமாகவும் இருக்கின்றனர். முதலாளிகளுடைய அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டுமென்றால் ஓசூரில் உள்ள பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி வர்க்க ஒற்றுமையைக் கட்டிமைத்தால்தான் தீர்வுகாண முடியும்!

This slideshow requires JavaScript.

தொழிலாளர்களே ! பொதுமக்களே !

  • ஃபெவெலி போராட்டம் என்பது எங்களுடைய கோரிக்கைக்காக மட்டுமல்ல!

இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்களை CL, காண்ட்ராக்ட், நீம், FTE என்று பல்வேறு பெயர்களில் உழைப்பு சுரண்டப்பட்டு வாழ்க்கை பாழாவதை எதிர்த்த போராட்டம்!

  • சிறுதுளி என்றாலும் பெரும் வெள்ளமாக மாறுவது போல தொழிலாளர் உரிமைகளை நிலை நாட்ட இந்த போராட்டத்திற்கு தார்மீக ரீதியான ஆதரவை தாருங்கள்!
  • ஒசூரில் ஆயிரம் தொழிலாளர்கள் திரட்டி பொதுக்கூட்டம் நடத்தி நாட்டின் கவனத்தை ஈர்ப்போம்!
  • உங்களை நாடி வந்துள்ளோம். ஆதரவும் நிதி உதவியும் தாருங்கள்!
  • தொழிலாளர்களை சுரண்டும் முதலாளித்துவத்திற்கு சவுக்கடி கொடுக்க அமைப்பாக இணைவோம்.

தமிழக அரசே தலையிடு!

  • வேலை பறிக்கப்பட்ட ஃபெவெலி தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க ஆணையிடு!
  • தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டிவிட்டு பணிநிரந்தரம், போனஸ், ஊதிய உயர்வு வழங்காத நிறுவனத்தின் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!
  • CL, காண்ட்ராக்ட், FTE, அப்ரண்டீஸ், NEEM என்று தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு தடைபோடு!
  • TATA, OLA, DELTA புதிய கம்பெனிகள் வருவது மட்டும் வளர்ச்சி அல்ல… தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம் கொடுத்து இயங்குவதே உண்மையான வளர்ச்சி!
  • ஒசூரில் இயங்கும் கம்பெனிகளின் கூட்டாளியாகி விட்ட தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலை ஆய்வகத்துறை மீது நடவடிக்கை எடு!

போராட்ட நிதி உதவிக்கு : google pay – 70947 32376

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
Faiveley Transport a wabtec company – கிளைச் சங்கம்.
பதிவு எண் : 24/KRI. செல்: 97880 11784.

000

கிளைச்சங்க பிரச்சார அனுபவங்கள்:

நிர்வாகத்தின் மேற்கண்ட அடக்குமுறைகளை தொழிலாளி வர்க்கத்துக்கு எடுத்துரைக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு நாட்கள் குடியிருப்பு பிரச்சாரமும் இரண்டு நாட்கள் ஆலை வாயில் பிரச்சாரமும் செய்யப்பட்டது. இப்பிரச்சாரத்தில் பல தொழிலாளர்கள் நிதி கொடுத்து ஆதரவு தெரிவித்தனர். அசோக் லேலண்ட் யுனிட் – 2 ஆலை வாயில் துண்டு ஏந்தி நிதி கோரியதில் ரூ.3980 நிதியை தொழிலாளர்கள் வழங்கினர்.

பிரசுரத்தில் “நிர்வாக அதிகாரிகளுக்கு லட்சங்களில் சம்பளம், உல்லாச வாழ்க்கை” என்ற இந்த வாசகம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. பிரசுரத்தை படித்தவுடன் தங்கள் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, காலைச் சிற்றுண்டி வழங்கப்படாத உரிமைகள் பறிப்பு பற்றிய பிரச்சினையை முன்வந்து பலர் அறிந்துகொண்டனர்.


தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
ஒசூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க