ரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை ஊதியஉயர்வு கோரிக்கைகளுக்கு எதிரான முட்டுக்கட்டைகளை தகர்க்க கரம் கோர்ப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்
22.01.2021, வெள்ளிக்கிழமை மாலை 5 மணி,
ராமநகர் அண்ணாசிலை முன்பு, ஒசூர்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2009-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் ரெனால்ட்நிசான் கம்பெனியானது பிரான்ஸ்ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு கார் உற்பத்தி செய்யும் கூட்டு நிறுவனமாகும். இரண்டு சிப்ட்களுக்கு 1500 கார்களை உற்பத்தி செய்யும் இத்தொழிற்சாலையில் கடந்த 21 மாதங்களாக ஊதியஉயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் 3500 நிரந்தரத் தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது, நிர்வாகம். மேலும் காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என 1500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். மொத்தத்தில் பெருவாரியானவர்கள் இளம் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காரில் பயணிப்பது மகிழ்ச்சியானதாகவும் கார் வாங்குவதை ஓர் இலட்சியமாகவும் காட்டும் ஊடகங்கள் அதை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளை, நெருக்கடிகளை ஒருபோதும் பேசுவதில்லை.

இவ்வாலையில் இன்ஜின், கேபின், பெயிண்டிங் தவிர்த்து பெருவாரியான கார் பாகங்கள் அதாவது ஸ்டேரிங், ஆக்ஸில், சேசிஸ், வயரிங் யுனிட் என பெரும்பகுதியை குறைவான கூலி கொடுத்து வரம்பில்லாமல் உழைப்பை சுரண்டும் சப்ளையர் கம்பெனி மூலம் வாங்கிக்கொள்ளப்படுறது.

படிக்க:
♦ யமஹா – என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள் : கற்றுத்தருவதென்ன ?
♦ மீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு !

நேரடி உற்பத்திக்கு தேவையான 500க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தாமல் தந்திரமாக தினந்தோறும் ஒரு மணிநேரம் OT என்ற பெயரில் கசக்கி பிழிகிறது,நிர்வாகம். இந்த சூழ்நிலையில் தான் ஊதிய உயர்வு கோரிய சங்கத்திடம் சுமார் 800 நிரந்தரத் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்யவேண்டும் என்று கோரி வருகிறது, நிர்வாகம்.

பணியிடமாற்றம் 150 பேர், மினிமம் போனஸ் மறுக்கப்பட்டோர் 143, அற்பக் காரணங்களுக்காக சங்க பொருளாளர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட், தரக் குறைபாட்டை நிவர்த்தி செய்த பின்னும் ஒருவர் டிஸ்மிஸ் என மொத்த தொழிலாளர்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் அரங்கேற்றியுள்ளது, நிர்வாகம்.

தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒத்த புரிதல், ஒருங்கிணைந்த பார்வை அவசியம்!

தொழிலாளர்களின் உழைப்பு தான் ஆலையின் உற்பத்தி, விற்பனை, இலாபம் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்றாலும் தொழிலாளர்களின் ஊதியஉயர்வு, போனஸ் கோரிக்கைகள் எழும் பொழுதெல்லாம் வருடக்கணக்கில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஆத்திரமூட்டி வேலைநிறுத்தத்தை நோக்கி தள்ளிவிட்டு ஆட்குறைப்பு, உற்பத்தி சுமை உள்ளிட்ட அடக்குமுறைகளை ஏவிவிட்டு தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதென்பது தனியார் நிறுவனங்களில் பொதுவான போக்காக உள்ளது. அதற்கு ரெனால்ட் நிசான் நிர்வாகமும் தயாராகிவிட்டது.

தமிழக அரசும் தன் பங்கிற்கு 16 மாதங்களாக போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் கழகத்தை நஷ்டமாக்கி, தனியார்மயமாக்கும் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. மத்தியில் கார்ப்பரேட்களுக்கு ஒத்திசைவான மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையும் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளதால் பல ஆண்டுகள் வேலை செய்த நிரந்தரத் தொழிலாளர்களாக இருந்தாலும் ஈவு இரக்கமற்ற தாக்குதலுக்கு தயாராகி வருகிறார்கள்.

இதேபோல் சென்னை, ஒசூர் நகரங்களில் இயங்கும் அசோக் லேலாண்ட்ன் 4 யுனிட்களிலும் மருந்து பொருட்களை தயாரிக்கும் மைவா ஃபார்மா (குளோபல் ஃபார்மா டெக்), MYLAN, WEG INDIA, GeT&D, உள்ளிட்ட பல ஆலைகளிலும் ஊதியஉயர்வு கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கூட பல மாதங்களாக நடத்தப்படாமல், இழுபறியாக உள்ளது. குறிப்பாக ஒசூரில் AVTEC(பிர்லா குழுமம்) 36 + 36+ 6 = 78 மாதங்களாக மூன்றாவது ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடக்கின்றது. இதில் 2 ஒப்பந்தங்கள் நீதிமன்றத்தின் முன்கொண்டு செல்லப்பட்டுள்ளது. செயலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது, நிர்வாகம். ‘கொரானா ஊரடங்கு ஒர் காரணமாக காட்டினாலும் கடந்த காலங்களில் தாக்குதல் இல்லாது ஊதிய உயர்வு வழங்கப்பட்டதாக வரலாறு இல்லை. அத்துடன் மேற்கண்ட ஆலைகளில் பணிநிரந்தரமில்லாத FTE, நீம், MT, Staff என பல பெயரில் இளம் தொழிலாளர்களை திணித்து உற்பத்தி குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பணி நிரந்தரமில்லாமல் அற்பக்கூலி 10 ஆயிரம் வாங்கிக்கொண்டு இளைய சமுதாயம் விலைவாசி உயர்வை எதிர்கொள்ள முடியுமா?, வயதான பெற்றோரை பராமரிக்க முடியுமா?, திருமணம் செய்துகொள்ள முடியுமா?, கெளரவமான வாழ்க்கை தான் நடத்த முடியுமா?

இந்த முதலாளித்துவ சுரண்டல் முறையால் இனி மக்கள் வாழமுடியாது என்பதற்கு பெருகிவரும் சமூக குற்றங்களும் நெருக்கடிகளுமே சாட்சியாகும். அதேசமயம், அடுத்தகட்ட சுரண்டலை விரிவுபடுத்த முதலாளித்துவத்திற்கு ஓர் வழி அடக்குமுறையாகும். இதனால்தான் இந்தியாவில் சுரண்டல் இயற்கையானது, நியாயமானது, விதி, தலையெழுத்து என்று விசம் கக்கும் பார்ப்பனக் காவிப் பாசிசத்தை தலைமைக்குப் பொருத்தியுள்ளது, கார்ப்பரேட் கும்பல்.

மக்களின் வரிப்பணத்திலிருந்து ஆலைகள் அமைக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கப்படும் வங்கிக்கடன், சலுகை விலையில் நிலம்,நீர், சாலைவசதி, மின்சாரம் இவற்றை கணக்கிட்டால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என்பது உழைப்புக்கான கூலி அல்ல என்பது புரிந்துகொள்ளலாம். இத்தனை சலுகைகள் இம்மண்ணின் விவசாயிகள், சிறுகுறு தொழில்முனைவோர்க்கு இல்லை என்பதை பார்த்தால் இதயம் வெடித்துவிடும்.

இரயில்வே, வங்கி, காப்பீடு, கல்வி, சுகாதாரம்,சுரங்கங்கள், கனிமவளங்கள் உள்ளிட்ட பொதுத்துறைகள் எல்லாம் தனியார்மயம், கார்ப்பரேட் கொள்ளையர்களை திணிக்கும் புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் 90% சதவீத பொருளாதாரமும் சிலரின் கட்டுபாட்டுக்கு சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையை கண்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நீதித்துறையோ, அரசின் பிற நலத்துறைகளோ கண்டுகொள்ளாமல் ஆலை நிர்வாகங்களுடனும் கார்ப்பரேட் கொள்ளையர்களுடனும் சரணடைந்து தொழிலாளர்களுக்கு எதிரான சக்தியாக மாறியது மட்டுமின்றி, வயிற்றை சுருக்கி வரிகளை கட்டி படியளக்கும் மொத்த மக்களையும் நேர்மையில்லாமல் ஏமாற்றி வருகின்றனர்.

படிக்க :
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !
♦ வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

எஞ்சியிருக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் தாக்குதல்!

மற்றொரு பக்கம், மத்திய அரசு மொத்தமாக 44 தொழிலாளர் சட்டங்களை பயனற்ற காகித குப்பைகளாக்கி அதை 4 தொகுப்பு விதியாக்கியுள்ளது. பணிப்பாதுகாப்பு, ஊதியஉயர்வு, போனஸ், 8 மணிநேர வேலை உத்திரவாதமில்லாத, அதாவது தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக வைத்துக்கொள்ள இதுவரை இருந்த சட்டரீதியான முட்டுக்கட்டைகளை அகற்றி சகல அதிகாரங்களையும் கார்ப்பரேட்களுக்கு வழங்கிவிட்டது. வருகின்ற ஏப்ரல்-1 முதல் 4 தொகுப்பு விதிகளையும் மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வருகிறது.

நாம் விரும்பினாலும் நாடாளுமன்றம், நீதிமன்றம், ஆலை நிர்வாகம் இவ்விடங்களில் தொழிலாளர்களின் உழைப்புக்கான கூலியைப் பேசித்தீர்க்க முடியாது என்பதை பளிச்சென டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் மூலம் நாட்டின் மொத்த மக்களுக்கும் பிரமாண்டமான பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் தொழிலாளர் வர்க்கத்தின் முன்னுள்ள ஓர் வழி புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயத்தையும் கார்ப்பரேட்கள் கைப்பற்றுவதை எதிர்த்து ரத்து செய்யக்கோரி டில்லியை முற்றுகையிட்டுப் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைப் போல் சென்னை, ஒசூர், கோவை, திருச்சி போன்ற பெரியதொழில் நகரங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், நீம் ,FTE, அப்ரண்டிஸ்கள், பொதுமக்கள்,மாணவர்கள், சிறுகுறு தொழில்முனைவோர் என அனைவரையும் தொழிலாளர் வர்க்கம் அணிதிரட்டி போராடவேண்டும்.

கரம் கோர்ப்போம்ஆர்ப்பாட்டத்திற்கு வாருங்கள்!

உற்பத்தி பொருளின் விலையை தீர்மானித்து மக்களிடம் விற்பது முதலாளிதான்!
உழைப்புக்கான உரிய கூலியை தீர்மானிக்க வேண்டியது தொழிலாளர்கள்தான்!
உழைப்புக்கான கூலி என்பது முதலாளிகளின் கருணை அல்லதொழிலாளர்களின் உரிமை !
பணிநிரந்தம், ஊதிய உயர்வு, போனஸ், பென்சன் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிட டில்லி விவசாயிகளை போல் ஒன்றிணைவோம் !


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தர்மபுரி – சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு
: 97880 11784

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க