(AITUC-இன் பொதுத்துறை தொழிற்சங்கங்களின் தலைவர் சி.ஸ்ரீகுமார் அவர்களின் கருத்து.)

கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்க துவங்கிய பின், மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக மக்கள் பலர் இறந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு என்பது குறித்து ஒருபுறம் பேசப்பட்டு வருகிறது. அதே நேரம், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற தேவையான மருத்துவ ஆக்சிஜனை நாடு முழுவதும் உள்ளப் பொதுத்துறை ஊழியர்கள் அமைதியாக (ஆரவாரமின்றி) உற்பத்தி செய்து வருகிறார்கள்.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு

♦ ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி : தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி !

சமீபத்தில் அரசாங்கம் தனியாருக்கு விற்க முடிவு செய்திருந்த விசாகப்பட்டினம் எஃகு ஆலையின், பொதுத்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராமல் மருத்துவத்திற்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து வருகிறார்கள். இதேபோல் பிலாய் துர்காபூரில் உள்ள எஃகு ஆலைத் தொழிலாளர்களும், பெட்ரோலியத் துறையில் உள்ள இதர பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்களும் ஆக்சிஜன் உற்பத்தியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

SAIL Bokaro எஃகு ஆலையிலும், 25 உயர் அதிகாரிகள் உட்பட 145 ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் மருத்துவத் தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகிறார்கள். மாலை 4 மணியளவில் கூட இத்தொழிலாளர்கள் மதிய உணவினை எடுத்துக் கொள்ளாமல் வேலை செய்து வந்துள்ளனர். இது குறித்து கேட்கும் போது, ஆக்சிஜனுக்காக பல நோயாளிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்துவிட்டுதான் உணவு எடுத்துக் கொள்வோம் என்கிறார்கள்.

இவை பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அவற்றின் தொழிற்சங்க ஊழியர்களின் அர்ப்பணிப்பு, ஈடுபாட்டினை வெளிப்படுத்துகின்றன. நாடு ஆக்சிஜன் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கையில் இலாபம் நோக்கம் கொண்ட எந்தவொரு நிறுவனமும் (தனியார்) நம்மை மீட்க வரவில்லை. இந்த பெருந்தொற்றின் போது தேசத்திற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னலமின்றி உழைத்து வருவது பொதுத்துறை மற்றும் அரசு ஊழியர்கள் மட்டும்தான்.

அரசாங்க மற்றும் பொதுத்துறைத் திறமையற்றது என்று எப்போதும் பழி கூறிவரும் எவரையும் (யாரையும்) இந்த நெருக்கடியின் போது எங்கும் காணமுடியவில்லை. வழக்கமான அல்லது எந்த நேரத்திலும் அதாவது அரசு எப்போதெல்லாம் நெருக்கடிக்குள்ளாகிறதோ அப்போதெல்லாம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மட்டும்தான் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பாறைப் போல் உறுதியாக நிற்கிறார்கள் (நிற்பார்கள்) என்பதை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையாக இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மக்களை காவு வாங்கும் இந்த தொற்று நோயைப் பயன்படுத்தி எவ்வாறு இலாபம் ஈட்டுவது என்பது குறித்து மட்டும்தான் கவலை.

அரசு மற்றும் பொதுத்துறையின் தேவை, முக்கியத்துவத்தை உணர்ந்து, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்குப் பதிலாக அரசாங்க பொதுத்துறை நிறுவனங்களை மேலும் வலுப்படுத்தி அபிவிருத்தி செய்ய வேண்டும்.

இதுபோன்றதொரு பேரழிவுக் காலத்தில், நாட்டிற்குத் தேவையானதை கார்ப்பரேட் நிறுவனத்திடம் சென்று பிச்சைக் கேட்க முடியாது. பிரதமர் ஆலோசர்கள் இதனைப் புரிந்துக் கொண்டு, அரசுத் துறை மற்றும் பொதுத்துறை மீதான அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.


கட்டுரையாளர் : சி.ஸ்ரீகுமார்
தமிழாக்கம் : ஷர்மி
நன்றி : Indianpsu.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க