தூசான் தொழிலாளர் சங்கம்
தென்கொரிய தூசான் நிர்வாகத்துக்கு சம்மட்டி அடி!
தொழிலாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்ய அரசு அனுமதி மறுப்பு!
பத்திரிகைச் செய்தி
01.7.2021
பூவிருந்தவல்லி பைபாஸ் சாலையில் இயங்கி வந்த தென்கொரிய நிறுவனமான தூசான் பவர் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரையும் நட்டக்கணக்கு-பொய்க்கணக்கு காட்டி ஆட்குறைப்பு செய்ய தமிழக அரசின் அனுமதி கேட்டு மனு செய்திருந்தது. தூசான் தொழிலாளர் சங்கம், அதன் சிறப்புத் தலைவர் தோழர் பா.விஜயகுமார் (பு.ஜ.தொ.மு) தலைமையில் இந்த சட்டவிரோத ஆட்குறைப்பை எதிர்த்து சட்டப்போராட்டங்களை முன்னெடுத்தது.
வழக்கறிஞர்கள் திரு.பாலன் ஹரிதாஸ் மற்றும் திரு.காமாட்சி சுந்தரேசன் ஆகியோர் சங்கத்தின் சார்பில் ஆஜரானார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் மிகச்சிறப்பாக வாதிட்டனர். இதன் தொடர்ச்சியாக, 23.6.2021 அன்று தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் துறை அரசு செயலாளர் திரு.கிர்லோஷ் குமார் I.A.S நடத்திய விசாரணையின் இறுதியில், தூசான் நிர்வாகத்தின் ஆட்குறைப்பு மனுவை நிராகரித்து அரசாணை (அரசாணை (டி) எண் : 261 தேதி: 30.6.2021) வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக, தூசான் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
தூசான் தொழிலாளர்களின் ஆட்குறைப்பு தொடர்பான அரசாணை
எமது சட்டப்போராட்டத்தில் துணைநின்ற வழக்கறிஞர்கள் திரு.பாலன் ஹரிதாஸ் மற்றும் திரு.காமாட்சி சுந்தரேசன், தொழிலாளர்துறை அதிகாரிகள், வழிநடத்திய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக்குழு (தமிழ்நாடு) ஆகிய அனைவருக்கும் தூசான் தொழிலாளர் சங்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தூசான் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களையும், முதலாளித்துவ பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்படும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
மா.செ.சந்திரமோகன்,
பொதுச்செயலாளர்,
தூசான் தொழிலாளர் சங்கம்.
தொடர்புக்கு : 8056048103