வேலை வாய்ப்பில் வறட்சி நிலவும் ஒரு தேசத்தில் கிடைத்த வேலையை எப்படியாவது தக்க வைத்துக் கொள்வது பெரும் போராட்டமாகி வருகிறது. நிர்வாகத்தின் அடக்குமுறைகள், அவமானங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு அடங்கிக் கிடந்தாலும் அந்த வேலையும் இனி இல்லை எனும் ஒரு நிலையை வந்தடைந்திருகிறார்கள் சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள். அதுதான் தவிர்க்கவியலாமல் அவர்களை போராட்டத்தில் பயணிக்க வைத்திருக்கிறது.

வளர்ச்சி -வேலைவாய்ப்பு என்ற கோஷத்தை முன் வைத்து 10.06.2009 அன்று ரூ.19,058 கோடியில் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 59% நிதியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனமும் (Japan International Cooporation Agency – JICA) மத்திய அரசு 20%, மாநில அரசு 21% நிதியையும் வழங்கின. இதற்காக 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.  சென்னையில் வாழ்ந்த பல்வேறு குடிசைவாசிகள், வணிக வளாகங்கள், நடுத்தர மக்களின் குடியிருப்புகளை விழுங்கிவிட்டு பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது சென்னை மெட்ரோ ரயில். தற்போது அதன் நிரந்தரப் பணியாளர்களையும் விழுங்கத் துடிக்கிறது மெட்ரோ நிர்வாகம்.

மெட்ரோ பணியாளர்கள் 8 பேரை சட்டவிரோதமாக நீக்கியிருக்கிறது. மேலும் நிரந்தர பணியாளர்கள் 250 பேரை தூக்கியெறிய துடித்துக் கொண்டிருக்கிருக்கிறது.  இந்த வேலை நீக்கத்தை எதிர்த்து கடந்த 27.04.2019 அன்று கால வரையறையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து போராடினார்கள் மெட்ரோ பணியாளர்கள்.

மெட்ரோ ஊழியர்களின் போராட்டம் ஏன்?

கடந்த 2013 –ம் ஆண்டு முதல் கட்டமாக 750 பேர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் ஒரு இலட்சத்திற்கும் மேலானோர் ஆன்லைனில் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். அதில் 322 பேரை தேர்வு செய்து 250 பேரை மட்டும் வேலைக்கு அமர்த்தினார்கள். மீதமிருப்போரை தேவைப்பட்டால் எடுத்துக் கொள்வோம் என்று காத்திருப்போர் பட்டியலில் வைத்தார்கள்.

அப்பொழுதே தங்களுக்கு வேலை வழங்கப்படாததை எதிர்த்து 72 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கில் 2014 இறுதியில் மீதமிருப்பவர்களை பணிக்கு அமர்த்தாமல் புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடக் கூடாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.

ஆனால், கடந்த 2016 முதல் மெல்ல மெல்ல ஒப்பந்தப் பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது மெட்ரோ நிர்வாகம். ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளே வர ஆரம்பித்ததும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த படித்தொகை தருவதை நிறுத்தி விட்டிருக்கிறார்கள். 7 வது ஊதிய உயர்வு கமிசனின் சம்பள உயர்வும் இல்லை. மாறாக வாங்கிய சம்பளத்தையும் குறைத்து விட்டார்கள். பதவி உயர்வும் இல்லை. இப்படியாக கொத்தடிமை முறையிலான உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தியது நிர்வாகம்.

கோயம்பேடு மெட்ரோ தலைமையகத்தின் முன்பு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் தொழிற்சங்க நிர்வாகிகள் – கோப்புப் படம்.

“தொடர்ந்து ரயிலை இயக்குபவர்களையும் ஒப்பந்த முறையில் எடுக்க ஆரம்பித்தார்கள்.” இதற்கெதிராக ஜுலை 2018-ல் மெட்ரோ ஊழியர்களின் போராட்டம் தொடங்குகிறது. “எங்கள் போராட்டத்தினால் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்று சுழற்சி முறையில் போராட்டத்தை தொடர்ந்தோம். அதாவது இரண்டாவது ஷிஃப்ட் பணியாளர்கள் முதல் ஷிஃப்டிலும், முதல் ஷிஃப்டை முடித்தவர்கள் இரண்டாவது ஷிஃப்டிலும் என்று தொடர்ச்சியாக 15 நாட்கள் நடந்த இந்தப் போராட்டத்தில் நிர்வாகம் இறங்கி வந்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறோம். ஆனால் ஒப்பந்த முறையில் ஆட்கள் எடுப்பதைப் பற்றி பேசக் கூடாது என்றார்கள். ஒப்பந்த முறையால் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று எதிர்த்தோம். இதனால் நாங்கள் தொடர்ந்து பழி வாங்கப்பட்டோம்” என்கிறார்கள் பணியாளர்கள்.

படிக்க:
தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?
♦ சென்னை மெட்ரோ : நவீன ரயிலை இயக்கும் தொழிலாளிகளின் அவல நிலை !

ஒரு மாதமாகியும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. ஆனால் ஒடுக்குறை மட்டும் தொடர்ந்தது. இதற்கெதிராக சங்கம் தொடங்கி போராடலாம் என முடிவெடுத்து கடந்த 2018 அக்டோபர் 30-ல் சங்கத்தை பதிவு செய்து  சி.ஐ.டி.யு மற்றும் சதர்ன் ரயில்வேயின் டி.ஆர்.இ.யூ-வோடு இணைத்துக் கொண்டோம். பின்னர் எங்களின் 21 அம்ச கோரிக்கையை எழுதி நிர்வாகத்திடமும், தொழிலாளர் நலத்துறையிடமும் கொடுத்தோம்.

இந்த காலகட்டத்தில் மெட்ரோ வேலைகளில் முழுவதும் ஒப்பந்தப் பணியாளர்கள் நிரம்பி விட்டார்கள். ரயில் ஓட்டுநர்கள், ட்ராக் பராமரிப்பு, பவர் சப்ளை, ஹவுஸ் கீப்பிங் என அனைத்து துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்கள். இந்த ஒப்பந்த நிறுவனங்கள் எல்லாம் அதிகாரிகளின் பினாமிகள். ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இவை.

டெண்டர் கொடுக்கும் முறையே இந்நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். உதாரணமாக, ரயில் ஓட்டுநருக்கு முன் அனுபவம் இருக்க வேண்டும், ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனத்திற்கும் அனுபவம் இருக்க வேண்டும் என்பது விதி. இதனை மாற்றி மெட்ரோவில் எந்த வேலை பார்த்தாலும், எந்த டெண்டர் எடுத்திருந்தாலும் பரவாயில்லை என்று அறிவித்தார்கள்.

பெங்களூரில் ஹவுஸ்கீப்பிங் டெண்டர் எடுத்த BVG india limited என்ற நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது. முதல் டெண்டர் அறிவிப்பில் மெட்ரோவில் ரயிலை இயக்கும் நிறுவனம் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்ததும் கியாளிஸ் என்ற சர்வதேச நிறுவனம் உள்ளே வந்தது. இதனை தடுக்க இம்மாதிரி முறைகேடாக மாற்றி ஒதுக்குகிறார்கள். இது 2016 -ல் நடந்தது.  இதுகுறித்து ஆர்.டி.ஐ போட்டால் எந்த தகவலும் வரவில்லை.

இந்த முறைகேடான டெண்டரால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் ஊழல் அதிகாரிகளால் வீணாகிறது. இன்னொரு பக்கம் நம்முடைய மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளும் பறிக்கப்படுகிறது. இதற்காகவா வீட்டை இழந்தோம். நிலத்தை இழந்தோம். பத்து ஆண்டுகளாக டிராபிக்கில் சிக்கித் தவித்தோம். எல்லாம் நமக்கு வேலை கிடைக்கும், வேலைக்கு சுலபமாக ரயிலில் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் அப்படித்தான் இருக்கிறதா என்றால் இல்லை.

டெல்லி மெட்ரோவில் மினிமம் டிக்கெட் ரூ.6 அதிகபட்சம் 34 ரூபாய். இங்கு மினிமம் ரூ. 10 அதிகபட்சம் ரூ.70 என்று பிடுங்குகிறார்கள். இந்தியாவில் எந்த மெட்ரோவிலும் இப்படி ஒரு கட்டணம் இல்லை. இவர்களுடைய நோக்கம் சேவை இல்லை. மெட்ரோ என்ற ப்ராஜெக்ட் எடுத்து அதன் மூலம் இவர்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

முறைகேடான டெண்டர் மூலம் முதலில் பராமரிப்பு, இரண்டாவது ரயிலை இயக்குவது ஆகியவற்றை இந்நிறுவனங்களுக்கு ஒப்படைத்து விட்டார்கள். இப்போது மூன்றாவது நிலையக் கட்டுப்பாடு டெண்டர். அதில் அண்டர் கிரவுண்ட் ஸ்டேசன் ஆபத்து நிறைந்தது. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதனை நிர்வகிக்க இரண்டு ஆண்டுகள் பயிற்சி கொடுப்பார்கள். தீ விபத்து, லிஃப்டில் மாட்டிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது, ரயில் திடீரென நின்றால் என்ன செய்வது என்று எல்லா வகையிலும் பயிற்சி பெற்றவர்களை எடுத்து விட்டு எந்த பயிற்சியும் இல்லாத நபர்களை ஒப்பந்த முறையில் நியமித்து இருக்கிறார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நிலையக் கட்டுப்பாட்டிற்கு எந்த டெண்டரும் அறிவிக்கவில்லை. முழுக்க முழுக்க சட்டவிரோதமாக நடந்தவைதான். ஓப்பன் டெண்டர் விட்டு ஆட்களை எடுத்தால் ஊழியர்கள் கேள்வி கேட்போம். அதைவிட பெரிய பிரச்சனை, 2013-ல் செலக்ட் ஆன காத்திருப்பு பட்டியலில் உள்ள நபர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு  ஓப்பன் டெண்டருக்கு பிரச்சனையாக உள்ளது.

அதைவிட முக்கியம் இதே காலகடத்தில் மெட்ரோவில் ஜூனியர் எஞ்சினியருக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதுவே கடைசி அறிவிப்பு. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட அந்த நபர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடி “எங்களுக்கு வேலை வழங்காமல் புதியதாக ஆட்களை எடுக்கக் கூடாது என்ற தீர்ப்பு உள்ளபோது வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இது நீதிமன்ற அவமதிப்பு என்று வழக்கு போடுகிறார்கள்.  இதனை விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன் பென்ச் இவர்களுக்கு உடனடியாக வேலை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் உங்களை கைது செய்ய வேண்டிய நிலை வரும்” என்று மெட்ரோவிற்கு கண்டனம் தெரிவிக்கிறது.

மெட்ரோ சார்பாக “எங்களுக்கு இப்போதைக்கு ஆட்கள் தேவைப்படவில்லை. வேண்டுமானால் அடுத்த கட்ட மெட்ரோவிற்கு எடுத்துக் கொள்கிறோம்” என்று சொன்னது. இதனை மனதில் கொண்டுதான் ஓப்பன் டெண்டர் கொடுக்கவில்லை.

ஏற்கனவே டெண்டர் எடுத்த BVG india limited மற்றும் KCIC (Karnataka commercial and industrial corporation)  ஆகிய இந்த இரண்டு கம்பெனிகளும் அதிகாரிகளுடைய பினாமி கம்பனி. இதனைக் கொண்டு ஒன்றரை ஆண்டுகள் ஓட்டிவிட்டார்கள்.

இப்போது இந்த நிலைய கட்டுப்பாடு வேலைக்கு டெண்டர் விட்டால் தகுதியான கம்பெனி போட்டிக்கு வந்து விடும், பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதால்,  டெண்டர் விடாமல் மறைமுகமாக கே.சி.ஐ.சி கம்பெனிக்கு கொட்டேசன் கொடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 தேதி 17 ஸ்டேசனுக்கு அனுமதி கொடுத்து விட்டார்கள்.

இதன் பின்னர் இந்த 17 நிலையங்களிலும் யாரும் போகக் கூடாது. அந்த நிலையங்களுக்கு கே.சி.ஐ.சி கம்பெனியில் இருந்து ஆட்களை நியமித்துக் கொள்வார்கள் என்று சொன்னார்கள். இதற்கு ஒரு ஆளுக்கு ரூ.68,000 தருவதாகச் சொல்லி ஆர்டர் காப்பியும் கொடுத்து விட்டார்கள். இந்த ஆர்டர் காப்பி யூனியன் கைக்கு கிடைத்து விட்டது

இதே வேலையை செய்ய நிரந்தர ஊழியர்கள் நாங்கள் ரூ.28,000 பெறுகிறோம். ஆனால் தனியாருக்கு ரூ.68,000 தருவதாக சொல்கிறார்கள். ஆனால், ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் வெறும் ரூ.18,000. அப்படியெனில் ரூ.50,000 எங்கே செல்கிறது?.

ஏற்கனவே மெட்ரோவில் பயணிக்க ஆட்கள் இல்லாமல் தள்ளாடும் சூழலில் ரூ.68,000 சம்பளம் கொடுப்பது யாரை வாழவைக்க? இதில் பல கோடிகள் வரை ஊழல் நடப்பதாக ஐயத்தை ஏற்படுத்துகிறது. இதைப்பற்றி ஊடகங்களும் வாயைத் திறக்கவில்லை.

இதனை எதிர்த்து சி.ஐ.டி.யூ சங்கத்தலைவர் தோழர் சௌந்தராஜன், “நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படும் வகையில் தாங்கள் அவுட் சோர்சிங் முறையில் ஆட்களை எடுப்பதாக தெரிய வருகிறது. இதனை பரிசீலிக்குமாறு கேட்டு கடிதம் எழுதுகிறார்.

அதேபோல் இந்த கே.சி.ஐ.சி நிறுவனத்திற்கும் ஒரு கடிதம் எழுதுகிறார். “நீங்கள் டெண்டரே எடுக்காமல் மறைமுகமாக ஆட்களை நியமிக்க முயற்சி செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் நியமிக்க இருக்கும் வேலைக்கு ஏற்கனவே செலக்ட் ஆகி 40 பேர் வெளியில் இருக்கிறார்கள். உயர் நீதிமன்ற உத்தரவும் இருக்கிறது. எனவே நீங்கள் மேன் பவர் சப்ளை செய்வது தவறு” என்று எழுதுகிறார்.

இந்த கடிதம் நிர்வாகத்திற்கும், டெண்டர் எடுத்த கம்பெனிக்கும் சென்ற பிறகு ஆத்திரம் தலைக்கேறி ஊழியர்களை பழி வாங்கும் நோக்கத்தோடு சம்பள குறைப்பு, ஷிஃப்டு டைம் மாற்றம், எட்டு மணி நேர வேலை 14 மணி நேரம் மாற்றம், விடுப்பு இல்லை, எதற்கெடுத்தாலும் ஒழுங்கு நடவடிக்கை. அதேபோல் பெண் தொழிலாளர்களை 4 மணிக்கு வர சொல்லி பழி வாங்கினார்கள். அவர்களுக்கு வாகன வசதி எதுவும் செய்து தரப்படவில்லை. இன்னும் சொல்ல முடியாத அளவிற்கு பழி வாங்கும் போக்கை மேற்கொண்டது நிர்வாகம். எப்படி பி.எஸ்.என்.எல். என்ற மாபெரும் நிர்வாகம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்த ஊழியர்கள் வேட்டையாடப்பட்டார்களோ அதேதான் இங்கும் நடக்கிறது.

இதற்கு காரணம் யூனியன்தான் என்று பொறுப்பில் இருந்த 8 பேரை டிசம்பர் 3-ம் தேதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்கள். மேலும் “நீங்கள் சி.எம்.ஆர்.எல். பற்றி தவறாக வெளியில் சொல்லி இருக்கிறீர்கள்” என்று போலியான விசாரணை நடத்துகிறார்கள். யூனியன் ஆரம்பிப்பதற்கு முன்னர் சம்பளத்துக்காக போராடியவர்கள் இன்று ஊழலை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் இவர்கள் பழி வாங்கும் நடவடிக்கைக்கு காரணம். இவர்களுடைய நோக்கம் எப்படியாவது யூனியனை காலி செய்ய வேண்டும். நிர்வாக முறைகேடுகளுக்கு எதிராக கேள்வி எழுப்புவோரை அச்சுறுத்த வேண்டும் என்பதுதான்.

படிக்க:
சென்னை மெட்ரோ ரயிலின் வியர்வை மணம் !
♦ நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?

இந்த சஸ்பென்டை எதிர்த்து தொழிலாளர் நலத்துறையை அணுகி தொழிற்தாவா கொடுக்கிறோம். இதேசமயத்தில் உயர் நீதிமன்றத்தில் “இந்த சஸ்பெண்ட் செல்லாது. இதனை ஸ்குவாஷ் செய்யுங்கள்” என்று வழக்கு போடுகிறோம். தொழிலாளர் நலத்துறை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை ஜனவரியில் தொடங்கி ஏப்ரல் வரை ஐந்து கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும்போது யார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. இதனை தொழிலாளர் துறை ஆணையர் திரு. ஜானகிராமன் ஒவ்வொரு முறையும் பேச்சு வார்த்தையின்போது மெட்ரோ நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.

ஆனால் நிர்வாகமோ “எங்களுக்கென்று தனியாக சட்டம் வைத்திருக்கிறோம்” என்று சொல்லியது. அதனையும் தொழிலாளர் துறை ஆணையர் கண்டித்திருக்கிறார்.  அதனை எல்லாம் மீறி ஏப்ரல் 26 ம் தேதி 8 பேரையும் டிஸ்மிஸ் செய்தது நிர்வாகம்.

டிஸ்மிஸ் செய்தி அறிந்த தொழிலாளர்கள் 8 பேரும் இயக்குனரை பார்க்க செல்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சரியாக இரண்டு மணிக்கு அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கி மாலை ஐந்து மணி வரை தொடர்கிறது. 6 மணியாகியும் மெட்ரோ இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் வெளியில் வரவில்லை.

அதற்குள் பணியில் இருந்த அனைத்து ஊழியர்களும் வந்து விட்டார்கள். போராட்டத்திற்கு வந்த சில ஊழியர்களை வரவிடாமல் தடுத்த அதிகாரிகள் இரண்டு ஊழியர்களை கடுமையாகத் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள். அதனையும் மீறி ஊழியர்கள் அனைவரும் வரவே போராட்டம் தீவிரமடைந்தது.

இதற்கு காரணம் யாருக்கும் பணிப்பாதுகாப்பு இல்லை என்பதுதான். ஏற்கனவே அனைத்து வேலைகளும் ஒப்பந்த முறையாகிவிட்ட நிலையில், நிரந்தரப் பணியாளர்கள் இருப்பது நிலையக் கட்டுப்பாடு பணி மட்டும் தான். அதனையும் தனியாருக்கு விட வேண்டுமானால் இருப்பவர்களை வெளியேற்றினால்தான் சாத்தியம். அதனால்தான் “எங்களிடம் உபரியாக 130 ஊழியர்கள் இருக்கிறார்கள்” என்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதுகிறது மெட்ரோ.

இதுகுறித்து அதிகாரிகளை கேட்டால், “வெளியில் வேலைக்கு போங்க. உங்களை யாரும் சி.எம்.ஆர்.எல் -லில் இருங்க என்று சொல்லவே இல்லையே” என்று திமிராக பேசுகிறார்கள். இதுதான் நிரந்தர ஊழியர்களை போராட்டத்தை நோக்கி தள்ளி விட்டது.

கடந்த 30-ம் தேதி குறளகத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தொழிலாளர் துறை அலுவலர் “டிஸ்மிஸ் செய்தது தவறு. அவர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்” என்கிறார். ஆனால் நிர்வாகம் சேர்க்க முடியாது என்று மறுக்கவே அடுத்த நாள் மீண்டும் பேச்சு வார்த்தை தொடர்ந்தது. அதில் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று நிர்வாகம் ஒப்புக்கொண்டதால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்கள்.

தனியார்மயம் புகுத்தப்பட்ட பிறகு யாருக்கும் வேலை நிரந்தரம் இல்லை என்பதுதான் விதி. அரசு-தனியார் கூட்டு முதலீட்டில் தொடங்கப்பட்ட மெட்ரோ மட்டும் தப்புமா என்ன? தொடங்கவிருக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோவிற்கு சுமார் ரூ.69,180 கோடி என்று மதிப்பிட்டு இருக்கிறார்கள். நிரந்தர பணியாளர்கள் எடுக்கும் திட்டமே இல்லை. எல்லாமே ஒப்பந்தம். அதற்கான முன்னோட்டமே தற்போது தொழிலாளர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறை!

வினவு செய்திப் பிரிவு

பணிப்பாதுகாப்பு இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தில் பயணப் பாதுகாப்பு மட்டும் இருக்குமா என்ன? அனைத்தும் ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு வேலைகள் நடக்கும் போது இந்த உயர்திறன், எச்சரிக்கை தேவைப்படும் பணிகள் எந்த அளவு அபாயத்தில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் மற்றுமொரு ஊழல் மற்றும் சுரண்டல் திட்டத்திற்கு மெட்ரோவும் ஒரு சான்று!

– வினவு செய்தியாளர்.

3 மறுமொழிகள்

  1. வெறும் அரசியல் கண்ணோட்ட வாசகங்களுடன் நிற்காமல், கட்டுரை தொடர்பிலான பொருண்மையைப் புரிந்துகொள்ளவும் கூடிய விவரங்களை அளிப்பது, எளிதில் சங்கதியைப் பற்றிக்கொள்ளச் செய்யும். அந்தவகையில் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. …………………./பதிக்க அல்ல/: இந்நிறுவனம், சட்டப்படி முழுக்கமுழுக்க அரசு நிறுவனம்தானே? ஓரிடத்தில் தனியார் கூட்டு என வருகிறது. தனியாருக்குத் தாரைவார்ப்பதும் பெயரளவுக்கு அரசுகள்வசம் உள்ள ஒன்றை தனியார்கூட்டு எனக் குறிப்பிடுவது, தவறான புரிந்துகொள்ளலை உண்டாக்கிவிடும்.

  2. சென்னை மெட்ரோ பெயரளவில்தான் சென்னைக்கு சம்பந்தப்பட்டதாக தெரிகிறது. தமிழர்களுக்கு இவ்வளவு துரோகம் செய்யும் சென்னை மெட்ரோவை அதில் பயணித்து கொழிக்க வைக்க வேண்டுமா?
    வசதியான மின் இரயில்களும் பேருந்துகளும் இருக்க இந்த தமிழர் விரோத மெட்ரோவிற்கு நாம் ஆதரவு கொடுப்பது அவசியமில்லை. தொழிலாளர் மற்றும் தமிழர் விரோத போக்கை விடும் வரை மெட்ரோவில் பயணிக்க கூடாது என நான் தீர்மானித்து விட்டேன்.

  3. மெட்ரோ நிறுவனம் பெயரளவுக்குத்தான் அரசிடம் இருக்கிறது என்பதே உண்மை. மெட்ரோ ரயில் திட்டம், முழுக்க முழுக்க தனியார் முதலாளியின் லாபத்திற்கு தொடங்கப்பட்டதே. உற்பத்தி செய்த ரயிலை நம் தலையில் கட்டி விட்டான். அதற்கு இப்போது தண்டம் கட்டுவது போல் ஆகிவிட்டது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க