சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்கச் சென்ற மாணவர்கள், சோதனைகள் என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் நேற்று (05-05-2019) நடைபெற்ற எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் 15,19,000 பேர் எழுதியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 1,40,000 பேர்.

வழக்கம்போலவே, முழுக்கைச் சட்டைகள் அரைக்கை சட்டைகளாக கத்தரிக்கப்பட்டன. கொலுசு, நகை, மூக்குத்தி, துப்பட்டா உள்ளிட்டவைகள்  கழற்றப்பட்டன. சடை பிண்ணப்பட்டிருந்த தலைமயிர்கூட அவிழ்க்கப்பட்டு தலைவிரி கோலத்தில் தவிக்கவிடப்பட்டனர் மாணவிகள்.

நன்றி : தினகரன்

சோதனை என்ற பெயரில் மாணவர்கள் அவமானப்படுத்தப்படுவதை கடந்த ஆண்டே பலரும் கண்டித்த போது, ”மாணவ – மாணவிகளை இவ்வாறு சோதனை செய்வதையெல்லாம் கைவிட முடியாது; வேண்டுமானால் தனி அறையில் சோதனையை மேற்கொள்கிறோம்” என்று திமிராக அறிவித்திருந்தது நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சி. நிர்வாகம். அதன்படி, இம்முறை கேவலம் நான்கு குச்சிகளை நட்டு அதன்மேல் தார்ப்பாயை போட்டிருந்தார்கள். அதுதான் தனியறையாம்.

இம்முறை, தீவிரவாதிகளைப்போல மாணவர்கள் மெட்டல் டிடக்டர் கருவிகளைக் கொண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக மாணவர்கள் அணிந்து வந்திருந்த பேண்ட்டில் இருந்த ஜிப்பைக்கூட அகற்றிய பின்னர்தான் தேர்வு எழுத அனுமதித்த வக்கிரத்தையும் என்னவென்று சொல்வது?

கர்நாடக மாநிலத்தில் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 8 மணி நேரம் தாமதமாக வந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியவில்லை. வழக்கமாக காலை 7 மணிக்கு பெங்களூரு வரும் ஹம்பி எக்ஸ்பிரஸ், ஞாயிற்றுக்கிழமை மட்டும் பகல் 2.36 மணிக்குத்தான் பெங்களூரு வந்தது. இதனால் 1.30 க்கு தேர்வு அறையில் இருக்க வேண்டிய மாணவர்கள் செல்ல முடியவில்லை.

தேர்வு மையங்களை அந்தந்தப் பகுதிகளிலேயே ஏற்பாடு செய்து, இந்த ‘யோக்கியமான’  தேர்வு முறையை அங்கு நடைமுறைப்படுத்துவதற்கு இவர்களுக்கு என்ன கேடு ? தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு இவர்களது பதில் என்ன ?

படிக்க:
மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! புதிய கலாச்சாரம் மின்னிதழ்
சாதி உங்களுக்கு என்ன செய்தது ?

மாற்றுத்திறனாளியான ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்தியாவுக்கு தேர்வு மையம் மதுரையில்தான் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வு மைய அலைக்கழிப்புகள், சோதனை என்ற பெயரில் நடந்த அட்டூழியங்கள், கேள்வித்தாளின் சி.பி.எஸ்.இ பயங்கரம் ஆகியவற்றின் காரணமாக, தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் பேருந்திலேயே மயங்கி விழுந்து இறந்திருக்கிறார், சந்தியா.

இன்னும் எத்தனை ஆண்டுகள், அனிதாக்களையும், சந்தியாக்களையும் இழந்து கொண்டிருக்கப்போகிறோம் ?

சில இடங்களில் தேர்வுக்கு முந்தைய நாளான மே 4-ம் தேதி திடீரென தேர்வு மையங்களை மாற்றி புதிய ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. மக்களவைப் பொதுத் தேர்தல் மற்றும் இதர தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மாற்றம் செய்யப்படுவதாக என்.டி.ஏ. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மதுரையில் இவ்வாறு தேர்வு மையங்கள் மாற்றப்பட்டன.

வழக்கம்போல, குடிநீர், கழிவறை, காத்திருக்கும் பெற்றோர்களுக்கான இடவசதி உள்ளிட்டவை பற்றி துளிகூட அக்கறை எடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை. மகள்களிடமிருந்து கழட்டப்பட்ட துப்பட்டாக்களை தலையில் போட்டுக்கொண்டு கொளுத்தும் வெயிலில் தணிவான இடத்தைத் தேடியும், தாகம் தணிக்கத் தண்ணீரைத் தேடியும் அலைந்தனர் தாய்மார்கள்.

மாணவர்களிடம் காட்டப்பட்ட கெடுபிடிகள்; பெற்றோர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை பதிவு செய்த அதேநேரம், பாஸ்போர்ட் சைஸ் போட்டாவை மறந்துவைத்து விட்ட மாணவனுக்கு 40 ரூபாய் கொடுத்த போலீஸ்காரர்… ஆதார் கார்டை மறந்து வைத்துவிட்டு வந்த மாணவனை மின்னல் வேகத்தில் ஆட்டோவில் கூட்டி சென்ற ஆட்டோகாரர்… மகனுக்கு தன் சட்டையைக் கழட்டி கொடுத்த தந்தை… அவசர அவசரமாக கிளம்பி வந்ததில் கீழே விழுந்து கை உடைந்த நிலையிலும் தேர்வு எழுதிய மாணவன்… என அவலங்களைக் கூட சுவாரஸ்யமான செய்திகளாக வெளியிட்டன ஊடகங்கள். ஆனால், நீட் என்னும் அயோக்கியத்தனம் நரித்தனமாக இளந்தலைமுறையினர் மீது சுமத்தப்பட்டதைப் பற்றி வாய் திறக்க மறந்துவிட்டன.

நீட் தேர்வு முறையே கூடாது. சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் இத்தேர்வு முறை அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்களை குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களை ஒழித்துக்கட்டுவதை நோக்கமாகக் கொண்டது என எதிர்ப்புணர்வை மடைமாற்றி, ”ஓவரா கெடுபிடி பண்ணாதே! தொலைதூரங்களில் தேர்வு மையத்தைப் போடாதே! உடன் வரும் பெற்றோர்களுக்கு போதிய வசதிகளை செய்துகொடு!” என்று கோரிக்கை வைப்பதை நோக்கி நகர்த்திச் சென்றுள்ளது. இதுதான் பார்ப்பன நரித்தனம். தொழிற்சங்க உரிமை கேட்கும் தொழிலாளியையும் இப்படித்தானே ஆளும் வர்க்கம் அடிபணிய வைக்கிறது ?

படிக்க:
நீட் தேர்வு : மத்திய அரசு – உச்ச நீதிமன்றத்தின் கூட்டுச் சதி !
நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !

”சோதனைகள் மூலம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் குறையும். அதன் மூலம் திறமையில்லாத ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது. திறமையும் தகுதியும் உடைய ஒருவர் மருத்துவர் ஆவார்.” என்கிறார், இல.கணேசன். பச்சையாக சொல்வதென்றால், இவர்களின் இழிவான நடைமுறைகளை சகித்துக் கொள்ளக் கூடியவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்பதுதான் இதன்பொருள். இவையெல்லாம் ‘அவமான’ பட்டியலில் சேராதா?

கருப்பசாமிக்காக கையில் கட்டியிருந்த கயிறையும், இடுப்பில் இருந்த அரைஞான்கயிறையும்கூட விட்டுவைக்காமல் அறுத்தெறிந்தவர்கள் பூநூலை என்ன செய்தார்கள்? நாடெங்கும் தேர்வு நடைபெற்றாலும் கூட, தமிழகத்தில் மட்டுமே இத்தகைய கெடுபிடிகள் அதிகம் காட்டப்படுவதாக குற்றஞ் சுமத்தப்படுவதிலும் உண்மை இல்லையா என்ன? இவற்றையெல்லாம் வெறுமனே தேர்வு நேர கெடுபிடிகள் என்ற அளவில் மட்டுமே சுருக்கிவிட முடியுமா என்ன?

எழில்