சாதி உங்களுக்கு என்ன செய்தது ?

பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவு 3,84,400 கி.மீ. அங்கு மனிதர்கள் சென்றுவந்துவிட்டனர். ஊருக்கும் சேரிக்குமான தொலைவு, அதிகபட்சம் அரை கி.மீ-தான். ஆனால், இன்னமும் ஊர்க் கிணற்றுத் தண்ணீர், சேரி வந்து சேரவில்லை. ஊரைக் காக்கும் கடவுளின் தேர், பல்லாயிரம் ஆண்டுகளாக அசைந்து நகர்ந்தாலும், சேரிக்கு வர சாமிக்கும் வழி தெரியவில்லை. அண்மைக் காலமாக, சாதியத் தாக்குதல்கள் மிக மோசமாக அதிகரித்து வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்மம், மற்ற ஆதிக்கச் சாதியினரிடையே திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் ராதாகிருஷ்ணன் என்றால், அனைவரும் அறிவார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கழுகுமலை நகரச் செயலாளர், சிறு தீப்பெட்டி உற்பத்தி சங்கத் தலைவர், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர்… என்கிற 65 வயதான ராதாகிருஷ்ணன் இந்தப் பகுதியில் மக்களின் மதிப்பைப் பெற்றவர். அவரது சொந்த கிராமம் வேலாயுதபுரத்தில் சுமார் 100 ரெட்டியார் குடும்பங்களும், சுமார் 60 அருந்ததியர் குடும்பங்களும் வசிக்கின்றன. சாதிய அடுக்கின் அடிநிலையில் அழுத்தப்பட்டிருக்கும் அருந்ததியர்கள் மீது, ரெட்டியார் சாதியினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

ஊருக்குள் செருப்புப் போட்டுக்கொண்டு போகக் கூடாது, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடக்கக் கூடாது, துண்டு போடக் கூடாது, வாகனங்களை ஓட்டிச் செல்லக் கூடாது, பேருந்தில் இடம் இருந்தாலும் தங்களுக்கு முன்பு நின்றுகொண்டுதான் வர வேண்டும். ரேஷன் கடையில் தாங்கள் பொருள் வாங்கிய பிறகுதான் அருந்ததியர்கள் வாங்க வேண்டும்… என்று பல கட்டுப்பாடுகள். அவை மீறப்படும்போது எல்லாம் தாக்குதல் நடக்கும்.

”வேலாயுதபுரத்தில் அருந்ததியர் குடும்பங்களை ஊரின் பிரதான பகுதியிலிருந்து தனிமைப்படுத்தும் நோக்கத்தில், ஊருக்கும் சேரிக்கும் இடையில் தடுப்பு வேலி ஒன்று அமைத்தார்கள். உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் போல, அது தீண்டாமை வேலி. அதை அகற்ற வேண்டி போராட்டங்கள் நடந்த நிலையில், கருப்பசாமி என்கிற அருந்ததிய இளைஞர், கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக்கு இப்போது வரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை” என்கிறார் கோவில்பட்டி சி.பி.எம் நகரச் செயலாளர் சீனிவாசன்.

அந்தச் சமயத்தில் நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அந்தத் தீண்டாமை வேலி அகற்றப்பட்டது. இப்படி ஆறேழு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த சாதி பிரச்னையில், ஆரம்பத்தில் அருந்ததியர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்து வந்த ராதாகிருஷ்ணன், கருப்பசாமியின் கொலைக்குப் பிறகு வெளிப்படையாக அதைக் கண்டித்தார். ஆனால், அந்த ஊரில் அவர் மட்டுமே கம்யூனிஸ்ட். அவருடைய ஒற்றைக்குரல் எடுபடவில்லை.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வேலாயுதபுரத்தில் ஊர்க் கூட்டம். ‘ஊர்’ என்றால் அது ஆதிக்கச் சாதியைத்தான் குறிக்கும். அதன்படி கூடிய ரெட்டியார்கள், கருப்பசாமி கொலை வழக்குச் செலவை ஊர் பொதுப்பணத்தில் இருந்து பகிர்ந்துகொள்வது தொடர்பாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போதைக்கு முகத்துக்கு நேராக அவருக்குப் பெரிய எதிர்ப்பு எழவில்லை. அதன் பிறகு, ‘உங்கள் தோட்டத்தின் வழியே அருந்ததியர்களை நடக்கவிடக் கூடாது’ என்று ஊர் மக்கள் சேர்ந்து வலியுறுத்தியுள்ளனர். ‘அப்படி எல்லாம் செய்ய முடியாது. நீங்களும் நடந்து செல்லுங்கள். அவர்களும் நடந்து செல்லட்டும்’ என்று அவர் சொல்லிவிட்டார். இதுதான் கடைசியாக நடந்த பிரச்னை. அதன் பிறகு ராதாகிருஷ்ணன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாகத்தான் கிடந்தார்.

படிக்க :
♦ சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்
♦ தருமபுரி: தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!

‘கொலைப்பழி எப்படியும் அருந்ததியர்கள் மீதுதான் விழும்’ என்பது அவர்களின் கணக்கு. ஆனால், சம்பவத்தின்போது ராதாகிருஷ்ணனுடன் இருந்த ஒருவர் தப்பித்துவிட்டதால் கொலையாளிகள் யார் என்பது தெரிந்துவிட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ஐந்து பேரில் ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் இரண்டு பேர் என்பது இன்னும் கொடுமை. இப்போது ராதா கிருஷ்ணனின் மகன், மகள்கள், மனைவி… என மொத்தக் குடும்பமும் கடும் மன உளைச்சலிலும், உயிர் பயத்திலும் இருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசக்கூட அஞ்சுகின்றனர். வட இந்தியாவின் ‘காஃப்’ பஞ்சாயத்துகளைப்போல, ஊர் கூடி, பேசி, திட்டமிட்டு ராதாகிருஷ்ணனைக் கொலை செய்திருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா – இளவரசன் காதல் பிரச்னையைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைத் தீ வைத்து எரித்தார்கள். மொத்த ஊரும் எரிந்து கரிக்கட்டையானது. ஒருசில மாதங்களில் கடலூர் மாவட்டம் பாச்சாரப் பாளையத்தில் தலித் குடியிருப்புக்குத் தீ வைத்து எரித்து எட்டு வீடுகள் நாசமாக்கப்பட்டன. பிறகு, மரக்காணத்தில் தலித் குடியிருப்புக்குத் தீ வைக்கப்பட்டது. 11 வீடுகளைத் தீ தின்றது.

பெரியகுளம் அருகே மேல்மங்களம் கிராமத்தில் அருந்ததியர் பையனுக்கும், அம்பலக்காரர் பொண்ணுக்கும் காதல். இரு மாதங்களுக்கு முன்பு இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டனர். உடனே ஊரில் வசிக்கும் மற்ற ஆதிக்கச் சாதியினரும் ஒன்றிணைந்து, தலித் குடியிருப்புக்குத் தீ வைத்துக் கொளுத்தினார்கள். இதில் 10 -க்கும் மேற்பட்ட வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டன.

தேர்தலுக்கு ‘திருமங்கலம் ஃபார்முலா’ போல, இப்போது தலித் மக்களை அடக்கி ஒடுக்க ஆதிக்கச் சாதியினர் கையில் எடுத்திருப்பது ‘தருமபுரி ஃபார்முலா’. மொத்த ஊரையும் எரித்து நாசமாக்கி, தலித்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, அடுத்த வேளை உணவுக்குத் தங்களிடமே கையேந்தவைக்கும் குரூரம் இது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற உயர்ந்த தத்துவத்தை, தலித்களை ஒடுக்கும் மிகக் கேவலமான நோக்கத்துக்காகப் பின்பற்றி, மற்ற ஆதிக்கச் சாதியினர் ஒன்று சேர்ந்துகொள்கின்றனர்.

”இது தலித் மக்களின் எழுச்சிக் காலம். கடந்த 10 ஆண்டுகளாக தலித்கள் தங்களின் கடுமையான உழைப்பின் மூலமும், கல்வியின் மூலமும் பொருளாதாரத்தில் மேல் எழுந்து வருகின்றனர். இது மற்ற சாதியினரின் கண்களை உறுத்துகிறது. காலங்காலமாக தனக்கு கை கட்டி அடிமை சேவகம் செய்தவர்கள் தங்கள் கண் முன்னாலேயே வசதியாக வாழ்வதையும், வாகனங்களில் செல்வதையும், ஜீன்ஸும், கூலிங்கிளாஸும் அணிவதையும்… அவர்களால் பொறுக்க முடியவில்லை. ஏதாவது ஒரு சிறு பிரச்னை வரும்போது, அதையே காரணமாக வைத்து மொத்த வன்மத்தையும் தீர்த்துக்கொள்கின்றனர்” என்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.

தலித்களுக்குச் சொந்த நிலம் இல்லாத சூழலில், தங்கள் உழைப்பினால் சிறுகச் சிறுக சேர்த்த வீடும் வாசலும் எரிந்து சாம்பலாகிவிட்டால், அது அவர்களை ஒரு தலைமுறை பின்னோக்கிக் கொண்டுசென்றுவிடும்.

கடந்த ஓர் ஆண்டில் குளித்தலை காவல் நிலைய எல்லையில் மட்டும் மொத்தம் ஐந்து தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி, ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி… என்ற வரிசையில் நான்கு வயது பெண் குழந்தைகூட இருக்கிறது. அந்தச் சின்னஞ்சிறு தளிர்களைச் சீரழிக்கும் குரூர மனநிலையை இவர்களுக்கு அளிப்பது எது?

தலித் வீட்டில் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கிக் குடித்தால் தங்கள் சாதி கௌரவத்துக்கு இழுக்கு எனக் கருதும் இவர்களின் கால்கள், காம அரிப்பு எடுத்தால் காலனிக்குத்தான் நடக்கின்றன. இது குளித்தலையின் கதை மட்டும்தான் என்றால், மாநிலம் முழுக்க உள்ள யதார்த்தத்தின் பிரமாண்டத்தை எண்ணிப் பாருங்கள். சாதி இழிவுடன் சேர்த்து, ஆண் வக்கிரத்தின் அபாயத்தையும் இந்தப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

படிக்க :
♦ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்
♦ பரமக்குடி துப்பாக்கி சூடு: HRPC நேரடி அறிக்கை!

”இத்தனை ஆண்டுகள் நாம் பெற்ற கல்வி, நம்மை எந்த வகையிலும் பண்பாடு உள்ளவர்களாக மாற்றவில்லை என்பதன் சாட்சியமே இப்படியான சம்பவங்கள். சாதிவெறி நடவடிக்கைகளில் ஈடுபடும் பலர், படித்தவர்களாக இருக்கின்றனர். அதுதான் இன்னும் அச்சத்தைத் தருகிறது. இந்தச் சூழலை மாற்ற நாம் உடனடியாகக் கல்வியில் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டுவந்தாக வேண்டும். தன் சொந்த வீட்டில் சாதி பார்க்கப்படுவதை எதிர்த்துப் பேசும் மனநிலை உடைய மாணவர்களை உருவாக்க வேண்டும். அதற்கு ஏற்ற ஆசிரியர்கள், வகுப்பறைகளைக் கொண்டுவர வேண்டும். நாம் உண்மையில் மிகப் பெரிய சமூகச் சிக்கலின் விளிம்பில் நிற்கிறோம். இதைப் புரிந்துகொண்டு தொடர்ந்து செயலாற்றினால், அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகேனும் இந்த நிலையைக் கொஞ்சம் மாற்றலாம். அரசு, சமூக இயக்கங்கள், கட்சிகள் அனைவரும் இத்தகைய கல்வி மாற்றத்துக்காகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்” என்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.

சாதிப் பற்று கொண்டோர் சிந்திக்க வேண்டியது என்னவெனில், அது எந்தச் சாதி வெறியாக இருந்தாலும் அது தன் சொந்த சாதியின் ஏழைகளுக்கும் எதிராகத்தான் இருக்கும் நிதர்சனத்தை.

தி.நகர் துணிக்கடைகளில், சொற்பக் கூலிக்கு ஒரு நாளைக்கு 15 மணி நேரம் உழைப்பை உறிஞ்சுவதற்குத்தான் சாதி பயன்படுகிறது. சொந்த சாதியின் ஏழைகளுக்கு வேலைவாய்ப்புத் தருவதாக இதைச் சொல்ல முடியுமா? வறுமையை வஞ்சகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் காரியவாதம் அல்லவா அது?

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! -கடந்த ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பெரும் வன்முறை நடந்தது. அதில் காயம்பட்டோரை புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அந்த மருத்துவமனை உரிமையாளரும் அடிபட்டவர்களும் ஒரே சாதிதான். ஆனால், ‘பணம் கட்டாமல் மருத்துவம் கிடையாது’ என்று கறாராகக் கைவிரித்துவிட்டனர்.

தன் சொந்த சாதியில் உள்ள ஏழை மக்களை அழைத்து வந்து, ஜவுளிக் கடைகளிலும் முறுக்குக் கம்பெனிகளிலும் குறைந்த கூலிக்கு உழைப்பை உறிஞ்சுவது யார்? சாதிக்காரன் நடத்தும் கல்லூரி என்பதற்காக, உங்கள் பிள்ளைக்கு நன்கொடை வாங்காமல் ஸீட் தருவார்களா? ஒரே ஒரு எல்.கே.ஜி ஸீட் இலவசமாகப் பெற்றுவிடுங்கள் பார்ப்போம். செத்தால் மாலையுடன் வரும் சாதி சங்கம், வாழ வழி இல்லாமல் ரோட்டில் நிற்கும்போது, பச்சைத் தண்ணீர்கூடத் தருவது இல்லை. சாதியால் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள, உலக அறிவு தேவை இல்லை. தங்கள் சொந்த வாழ்க்கை அனுபவங்களைச் சற்றுத் திரும்பிப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். ஒருவேளை தொடர்ந்து சாதிவெறியோடுதான் இருப்பீர்கள் என்றால், உங்களுக்கு மிஞ்சப்போவது தலைக்கு ஒரு வழக்கும்… நிம்மதியற்ற வாழ்க்கையும்தான்!

நன்றி : முகநூலில் – பாரதி தம்பி 2014, ஜூலை 10 அன்று விகடன் பத்திரிகையில் வெளியான கட்டுரை.