மிழகத்தின் மீது இந்திய ஆட்சியாளர்களுக்கு இருக்கும் வன்மமும் வெறுப்பும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் இருக்கைகளை தமிழக மாணவர்களிடமிருந்து பிடுங்கி வசதிபடைத்த வடமாநில மாணவர்களுக்கு படையல் வைப்பதற்காகவே நீட் தேர்வை கட்டாயமாக்கியது மோடி அரசு. அனிதாவின் மரணத்தையும் மத்திய மாநில அரசுகளின் துரோகத்தையும் தொடர்ந்து, கடந்த ஆண்டு நீட் தேர்வுகளுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகமெங்கும் சென்னையில் புமாஇமு நடத்திய ஆர்ப்பாட்டம் – கோப்புப் படம்.

இந்நிலையில், இந்தாண்டு தமிழக மாணவர்களுக்கான நீட் தேர்வு மையங்களை தமிழகத்திலும் கேரள, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களிலும் ஒதுக்கியுள்ளது சிபிஎஸ்இ. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை ஒதுக்குமாறு உத்தரவிட்டது. நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதின்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களுக்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும்தான் அப்படி செய்யவில்லை எனவும் தெரிவித்தது. தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை கண்டறிய தங்களுக்கு நேரமில்லை எனவும், அதனால் வெளிமாநிலங்களில் ஒதுக்கியதாகவும் அவ்வாறு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு வினாத்தாள்களை அச்சடித்து அனுப்பி விட்டதாகவும் தெரிவித்தது. இந்த திமிர்த்தனமான பதிலை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், தமிழக மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வெளிமாநில மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதிக் கொள்ளட்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேற்படி ”தீர்ப்பு” வெளியான நாள் மே 3ம் தேதி (வியாழன்கிழமை). நீட் தேர்வு 6ம் தேதி; இடையில் இருப்பதோ வெறும் மூன்றே நாட்கள். பல மாணவர்களுக்கு ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு நான்கு இரயில்கள் உள்ளன (கோவையில் இருந்து ஒன்று, மன்னார்குடியில் இருந்து ஒன்று, சென்னையில் இருந்து இரண்டு). வியாழன் அன்று சென்னையில் இருந்து கிளம்பும் அனுராவத் எக்ஸ்பிரஸ் ரயிலும், வெள்ளியன்று கோவையில் இருந்து கிளம்பும் ரயிலும் தான் உள்ளது.

சென்னையில் இருந்து ராஜஸ்தான் பயணிக்க 36 மணி நேரம் பிடிக்கும். 2159 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க இரண்டு நாட்களாகும். வெள்ளிக்கிழமை ரயிலில் இருக்கை கிடைப்பதே கடினம். முன்பதிவின்றி பொதுப் பிரிவுப் பெட்டியில் நின்று கொண்டோ, கழிவறையில் ஒதுங்கிக் கொண்டோ பயணிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மொழி தெரியாத, திசை தெரியாத வெளிமாநிலம் ஒன்றுக்கு சென்று தங்கி, தேர்வு மையத்தைக் கண்டுபிடித்து தேர்வெழுத வேண்டும் தமிழக மாணவர்கள். இந்தி மாநிலம் என்பதால் தேர்வு மையத்தில் வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்படுமா அல்லது இந்தியில் கொடுக்கப்படுமா என்பதற்கெல்லாம் எந்த உத்தரவாதமும் இல்லை.

வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்கள் தங்களுடன் துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டும். காமவெறி பிடித்த பா.ஜ.க மிருகங்கள் ஆளும் மாநிலம் என்பதால் அங்கே தங்களது பெண் குழந்தைகளை தேர்வுக்காக அழைத்துச் செல்லும் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் இந்த செலவுகளை எப்படி ஈடுகட்ட முடியும்? அதுவும் ஓரிரு நாட்களில் பயணத்திற்குத் தேவையான சில ஆயிரம் ரூபாயை எப்படிப் புரட்ட முடியும்? இத்தனை உளவியல் சித்திரவதைகளுடன் அங்கே செல்லும் மாணவ மாணவிகள் தேர்வெழுதும் மனநிலையில் இருப்பார்களா?

எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாம் என்கிற கோரிக்கையில் இருந்து தமிழகத்திலாவது நடத்துங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு திட்டமிட்டுக் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. தமிழக மருத்துவக் கல்லூரிகளின் இருக்கைகளைப் பிடுங்கி பணக்கார வடமாநில மாணவர்களுக்கு கொடுத்ததும் இல்லாமல் தமிழக மாணவர்கள் இனிமேல் மருத்துவக் கல்லூரி வாசலையே மிதிக்க கூடாது என்பதற்கான திட்டமாகத்தான் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளனர். இந்திய ஆளும் வர்க்கம் தமிழர்களை தீண்டத்தகாத சூத்திர பஞ்சமர்களாகவே நடத்துகிறது என்பதற்கு நீட் மற்றும் காவிரி விவகாரங்களை அவர்கள் கையாளும் விதமே சாட்சி.

நீட் தேர்வு மையங்கள் விசயத்தில் “நீதிமன்றமே சொன்ன பிறகு நாங்கள் என்ன செய்வது” என கையை விரிக்கும் பாரதிய ஜனதா, காவிரி விசயத்தில் நீதிமன்றமே இறுதித் தீர்ப்பைச் சொன்ன பிறகும் ”தேர்தல் இருப்பதால் நாங்கள் என்ன செய்வது?” என இரட்டை நாக்குடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கண்டிக்கவோ, தட்டிக் கேட்கவோ வக்கில்லாத ஒரு கும்பல் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தின் மீது மத்திய மாநில அரசுகளும், உச்சநீதிமன்றமும் கைகோர்த்து மேற்கொள்ளும் ஒவ்வொரு தாக்குதலும் இந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை நாளுக்கு நாள் குறைத்து வருகிறது.

இனி இவர்களை நம்பி எந்தப் பலனும் இல்லை என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். தெற்கில் ஒரு காஷ்மீர் உருவாகும் நிலையை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலே ஏற்படுத்தி விட்டது.

– வினவு செய்திப் பிரிவு.

சந்தா