சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையைக் கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத அவலநிலையில்தான் தொழிலாளி வர்க்கம் இருக்கிறது என்பதை வெளிச்சமாக்கியிருக்கிறது, மெட்ரோ ரயில் தொழிலாளர்களின் போராட்டம்.
மெட்ரோ ரயில் தொழிலாளர்களின் போராட்டம் மட்டுமல்ல கடந்த ஓராண்டு காலத்தில் சென்னை – காஞ்சிபுரம் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்பேட்டைகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆண்டைத்தனத்திற்கெதிராக எண்ணற்றப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.
எம்.எஸ்.ஐ., யமஹா, ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டங்கள் என நினைவுக்குத் தெரிந்த சில உதாரணங்களைச் சொல்லலாம். இவற்றுக்கு அப்பால் பல போராட்டங்கள் நம் கவனத்திற்கு வராமலேயே கடந்தும் போயிருக்கின்றன.
அந்தவகையில் ஒன்றுதான், இன்றுவரை உறுதியோடு நடத்துவரும் ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம்.
இங்கும் தொழிலாளர்கள் ”சங்கம் அமைத்தார்கள்” என்பதுதான் பஞ்சாயத்து.
ராயல் என்பீல்டு ஆடம்பர இருசக்கர வாகன உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. சென்னையில் திருவெற்றியூர், காஞ்சிபுரத்தில் ஒரகடம் மற்றும் வல்லம் ஆகிய மூன்று யூனிட்களில் உற்பத்தி நடைபெறுகிறது.
ஒரகடம் மற்றும் வல்லம் யூனிட்டில் தலா 8000 பேர் பணியாற்றுகின்றனர். இதில், ஆயிரம் பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள். மீதமுள்ள 7000 பேரும் காண்டிராக்ட் தொழிலாளர்கள் தொழிற் பழகுனர்கள் மற்றும் நீம் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட அத்துக்கூலிகள். ஷிப்ட் ஒன்றுக்கு 600 முதல் 800 வாகனங்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.
தொழிற்பழகுனர்களாக கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு உள்ளே நுழைந்தவர்கள் இன்றுவரையில் தொழிற்பழகுனர்களாக, பயிற்சிபெறும் தொழிலாளியாகவே உழன்று வருகின்றனர்.
தொழிற்பழகுனர்களாகிய தங்களை சட்டவிரோதமான முறையில் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தியபோதும்; மிகைபணி செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட போதும்; உணவு சரியில்லை என்று புகார் கூறியதற்காகக்கூட சக தொழிலாளிகள் பழிவாங்கப்பட்ட போதும் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என பணியாற்றி வந்தவர்கள்தான் இத்தொழிலாளர்கள்.
படிக்க:
♦ கார்ப்பரேட் காட்டாட்சியை ( GATT ) தூக்கியெறிவோம் ! – 133 வது மே தின நிகழ்வு !
♦ யமஹா – என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள் : கற்றுத்தருவதென்ன ?
”பணிநிரந்தரமாகும் வரை இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டுதான் போகவேண்டும்; இது அடிமை வாழ்க்கை என்று சொல்பவர்கள் சொல்லிக்கொள்ளட்டும். தம்மைப் பொறுத்தவரையில் இப்படி வாழ்வது ஒன்றுதான் பிழைப்புக்கான வழி.” என்பதுதான், இத்தொழிலாளர்களை ஆட்கொண்டிருந்த சிந்தனை.
ஆனால், ”ஐந்து ஆண்டுகளாக அடிமை வாழ்க்கை வாழ்ந்தும் பணி நிரந்தரம் ஆகப்போவதில்லை. நீம் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படப் போகிறோம். இருக்கும் உரிமைகளும் பறிக்கப்பட்டு சக்கைகளைப் போல ஒன்றிரண்டு ஆண்டுகளில் ஒப்பந்தம் முடிந்து தூக்கி கடாசப்படப் போகிறோம்.” என்பதை தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்தபோதுதான் நிர்வாகத்திற்கு எதிராகப் போராட ஆயத்தமாகினர், இத்தொழிலாளர்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், ”ராயல் என்பீல்டு எம்பிளாய்ஸ் யூனியன்” என்ற பெயரில் சங்கமாக அணிதிரண்ட தொழிலாளர்கள், ”நான்காண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பயிற்சி தொழிலாளர்களை நீம் திட்டத்தின் கீழ் வகை மாற்றம் செய்யக்கூடாது; ஏற்கெனவே வாக்குறுதியளித்திருந்தபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்; சம்பளம் உயர்த்தப்பட வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகத்திடம் முன்வைத்தனர்.
தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளின் நியாயம் – அநியாயம் பற்றி பேசாமல், ”என்கிட்ட பர்மிசன் கேட்காமல், ராயல் என்பீல்டு என்ற வார்த்தையை எப்படி நீங்க யூஸ் பன்னலாம்” என்றுதான் எதிர்க்கேள்வி கேட்டது என்பீல்டு நிர்வாகம்.
சட்டப்படி பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழையும் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் மனுவாக வழங்கிய போது, ”கலெக்டரே சொன்னாலும் கேட்க மாட்டோம். சங்கத்தை அங்கீகரிக்க முடியாது” என்று அடாவடி செய்தது, நிர்வாகம். இதுதான் பிரச்சினையின் தொடக்கம்.
மூன்று வருடம் டிரெய்னியாக இருந்தவர்களை நீம் திட்டத்தின் கீழ் மாற்றப்போவதாக நோட்டிஸ் போர்டில் லிஸ்ட் ஒட்டியிருந்த நிலையில், அம்முடிவை கைவிட்டது நிர்வாகம். மாறாக, இனி புதிதாக சேர்க்கப்படும் தொழிலாளர்கள் மட்டுமே நீம் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று அறிவித்தது. இதன் வெளிப்படையான அர்த்தம், ”மூன்றாண்டுகளுக்கு மேலாக டிரெய்னியாக பணியாற்றும் தொழிலாளர்களை வெளியேற்றப் போகிறேன்” என்பதுதான்.
படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த தொழிலாளர்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போடும் விதமாக வந்து சேர்ந்தது நிர்வாகத்தின் இத்தகைய அறிவிப்பு.
இந்தப் பின்னணியில்தான், கடந்த அக்டோபர் 2018-ல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் பிரதான கோரிக்கை, ”சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும்; கூட்டுபேர உரிமையின் அடிப்படையில் சம்பள பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் உடன்பட்டு வர வேண்டும்; மிக முக்கியமாக நீம் திட்டத்தை கைவிட வேண்டும்” என்பதுதான்.
தீபாவளி பண்டிகைக் காலத்தையும் பொருட்படுத்தாமல் 60 நாள் தொடர்ந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் டிரெய்னி தொழிலாளர்கள் கணிசமாக கலந்து கொண்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தின் ‘பலனாக’, 120 டிரெய்னி தொழிலாளர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். ”அவர்களுக்கான பீரியட் முடிந்துவிட்டது” என்று புளுகியது, நிர்வாகம்.
இதே காலகட்டத்தில்தான், FTE, NEEM திட்டங்களுக்கு எதிராக எம்.எஸ்.ஐ. தொழிலாளர்களும், சங்கம் தொடங்கியதற்காக சங்க முன்னணியாளர்கள் பழிவாங்கப்பட்டதற்கு எதிராக யமஹா தொழிலாளர்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர்.
இந்த மூன்று ஆலைகளில் நிலவும் அசாதாரண நிலையை கணக்கில் கொண்டு பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களின் முன்முயற்சியில் பல்வேறு இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பட்டது. ”போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கக்கூடாது; போராட்டத்திற்கு முந்தைய நிலை தொடர வேண்டும்” என்ற உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார் கலெக்டர்.
இந்த ஒப்பந்தத்தின்படி வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிய தொழிலாளர்களை நயவஞ்சகமான முறையில் பழிவாங்கத் தொடங்கியது, என்பீல்டு நிர்வாகம். ”கேண்டீனில் சாப்பாடு சரியில்லை..” என்றுகூட சொல்லிவிட முடியாது; ”முடிந்தா இரு கஷ்டம்னா போராட்டம் நடத்திக்கோ…” என்ற பதில் எச்.ஆர். இடமிருந்து உடனே வரும்.
தொழிலாளர்கள் இதுவரை பணியாற்றி வந்த டிபார்ட்மென்ட்-ஐ மாற்றுவது; அனுபவமிக்க டெக்னீஷியன்களை ஆர்.ஓ. பிளாண்டிலும் குவாலிட்டி கண்ட்ரோல் டிபார்ட்மென்டிலும் போடுவது; ஒரகடம் யூனிட்டில் பணியாற்றும் தொழிலாளியை வல்லம் யூனிட்டுக்கு மாற்றுவது; சங்க முன்னணியாளர்களை திருவெற்றியூர் யூனிட்டுக்கும், ஓ.எம்.ஆரில் உள்ள R&D யூனிட்டுக்கும் இடமாற்றம் செய்வது என முன்னைக்காட்டிலும் பழிவாங்கும் நடவடிக்கை தீவிரமடைந்தது.
இவ்வளவு ரணகளத்துக்கு மத்தியிலும், கொலாப்ரேசன் ஃபாரம் என்ற பெயரில் நிர்வாகமே ஒரு சங்கத்தை உருவாக்கியிருக்கிறது. புதிய நபர்களை சேர்க்கும் பொழுதே கை ரேகையை உருட்டி வாங்கிக் கொண்டே உள்ளே அனுப்புகிறது.
“சங்கம் என்ற பெயரில் வெளி ஆட்கள் உள்ளே வரக்கூடாது. நிர்வாகத்துக்கு எதிராக ஸ்டிரைக் செய்யக்கூடாது. குறைகளை மட்டும் சொல்ல வேண்டும். மிக முக்கியமாக, உன்னோட சேலரியை சக தொழிலாளியிடம் கூட சொல்லக்கூடாது” என்று ‘தொழிற்சங்க வகுப்பு’ எடுத்து வருகிறது..ராயல் என்பீல்டு நிர்வாகம்.
நிர்வாகம் வேண்டுமென்றே பழிவாங்குகிறது என்பதை உணர்ந்திருந்த போதிலும், சகித்துக்கொண்டு பணியாற்றி வந்தனர், தொழிலாளர்கள். சங்கத்திற்கு புதிய தலைவர்களையும் தேர்வு செய்தனர். புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளையும் ஜெய்ப்பூர், கல்கத்தா, புது டெல்லி, மும்பை என ஆளுக்கொரு திசைக்கு டிரான்ஸ்பர் செய்வதாக மீண்டும் அடாவடி செய்தது, என்பீல்டு நிர்வாகம்.
கடந்த ஓராண்டுகளாக தொடர்ந்து வரும் நிர்வாகத்தின் இத்தகைய பழிவாங்கும் போக்கை கண்டித்து ஆலைக்குள்ளும் ஆலைக்கு வெளியே பிற ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்டியும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்திவிட்டனர், இத்தொழிலாளர்கள். தாம்பரம், திருவெற்றியூர் பகுதிகளில் உள்ள ராயல் என்பீல்டு ஷோரூம் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றனர். இவ்வளவுக்குப் பிறகும் நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகள் மட்டும் நின்றபாடில்லை.
படிக்க:
♦ கல்வி உரிமையை பறிப்பது நீட் – தொழிலாளியின் தொழில் உரிமையைப் பறிப்பது நீம் !
♦ தொழிலாளி வர்க்க அரசியல் எது ?
இதுவரை 28 பேர் பணியிடமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். 3 மாதம் டெபுடேசன், டிரைய்னிங் என்ற பெயரில் வடமாநிலங்களுக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கின்றனர். 40 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். பலருக்கு பல்வேறு காரணங்களுக்காக மெமோ கொடுக்கப்பட்டு அவர்கள் மீது உள்விசாரணை நடைபெற்று வருகிறது. உச்சகட்டமாக, நாலரை ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்யப்பட்டதற்கான ஆர்டர் வரும் என் காத்துக்கிடந்த டிரெய்னி தொழிலாளர்கள் 60 பேர் டெர்மினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த ஓராண்டு காலத்தில் ராயல் என்பீல்டு தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் பழிவாங்கப்பட்டார்கள் என்ற கதையின் சுருக்கம்தான் இது. நாள், நேர வாரியான குறிப்பான சம்பவங்கள் இன்னும் பல இருக்கின்றன. ராயல் என்பீல்டு என்றில்லை, எம்.எஸ்.ஐ., மற்றும் யமாஹாவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதியும் ஏறத்தாழ இதுவேதான்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விசயம், நிர்வாகங்களால் பழிவாங்கப்பட்ட இத்தொழிலாளர்கள் அனைவரின் வயதும் 25 முதல் 30-க்குள்தான். இவற்றுள் வெகு சிலருக்கே திருமணமாகியிருக்கிறது. சிலருக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுவில் பலர் பணி நிரந்தரத்திற்காக திருமணத்தை தள்ளிப் போட்டிருப்பவர்கள். இன்னும் சிலர் பணிநிரந்தர உத்தரவோடு தம் காதல் கனவும் கைகூடும் என்று காத்திருப்பவர்கள். இவ்விளம் தொழிலாளர்களின் ஆசையில் மண்ணள்ளிப் போட்டதோடு, அவர்களை வீதியிலும் வீசியெறிந்திருக்கிறது நிர்வாகம்.
நிர்வாகங்கள் வேறு வேறு என்ற போதிலும், தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்ட விதமும் பழிவாங்கப்பட்டதற்கான காரணமும் ஏறத்தாழ ஒன்றுதான். ”தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்றும் நீம் திட்டத்தை கைவிட வேண்டும்; சங்கம் அமைத்ததற்காக தொழிலாளர்களை பழிவாங்கக்கூடாது” என்பதுதானே தொழிலாளர்களின் பொதுக்கோரிக்கை. ஆனால், இவற்றுக்கெதிரான போராட்டங்கள் தனித்தனியாகத்தானே நடைபெற்று வந்திருக்கின்றன.
எம்.எஸ்.ஐ.யும், யமாஹாவும், ராயல் என்ஃபீல்டும் ஒரகடம் சிப்காட் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள ஆலைகள். எம்.எஸ்.ஐ. -இல் ஒரு சங்கம், யமாஹாவில் மற்றொரு சங்கம், என்ஃபீல்டில் வேறொரு சங்கம். எம்.எஸ்.ஐ.-ல் போராட்டம் நடைபெறும்போது யமாஹா தொழிலாளி கடந்து போவதும்; யமாஹாவில் நடைபெறும் போராட்டத்தை என்பீல்டு தொழிலாளி கடந்து போவதும்தானே நடந்திருக்கிறது. மெட்ரோ ரயில் தொழிலாளர்களின் போராட்டத்தையும் இவ்வாறு கடந்து செல்லப்போகிறோமா?
தொழிற்சங்க சட்டங்கள் படிப்படியாகத் திருத்தப்பட்டு இதுவரை தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்ற பல உரிமைகள் ஒவ்வொன்றும் பறிக்கப்பட்டு வரும் இந்தச் சூழலில்; FTE, NEEM என்ற பெயரில் எவ்வித உரிமைகளுமற்ற அத்துக்கூலிகளாய் தொழிலாளர்கள் மாற்றப்பட்டுவரும் அபாயம் சூழ்ந்துள்ள இந்நிலையில் இவற்றுக்கெதிரான போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டாமா?
சாதி, மதம் கடந்து ஓர் ஆலைக்குள் பணிபுரியும் தொழிலாளர்கள் என்ற அளவில் சங்கமாக அணிதிரள்வதால் மட்டுமல்ல; ஆலை கடந்து சங்க வேறுபாடுகள் கடந்து பொது எதிரிக்கு எதிரான போராட்டத்தின் ஓர் அங்கமாக தொழிற்சங்கக் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையல்லவா இந்த நிலைமைகள் நமக்கு உணர்த்துகின்றன.
– இளங்கதிர்
பயனர்களாய் உள்ள பொது மக்களுக்கும், ஊழியர்களாய் உள்ள தொழிற்சங்களுக்கும் உள்ள இந்த இடைவெளி அதிகரித்து கொண்டே போகிறதாய் நான் உணருகிறேன்
இந்த இடைவெளியை எப்படி குறைப்பது ? அதற்கான விளக்கம், செயல் திட்டம் என எதுவும் உள்ளதா?
எனது வருத்தம், இந்த இடைவெளி நீண்டு கொண்டே செல்கிறது, சமுகத்திற்க்கு ஆரோக்கியமானது இல்லை, இதை இடைவெளியை குறைப்பதற்கான அடுத்தகட்ட செயல் திட்டங்கள் வேண்டும், அந்த செயல் திட்டங்கள் கட்டுரை/கூட்டம் போன்ற வடிவங்களோடு நின்று விடாமல் , அதிக வரலாறு இல்லாமல், தற்கால நிகழ்வுகளை கொண்டு, எளிமையாகவும், தொழிட்நுட்பத்துடன் இருக்கும் பட்சத்தில் பயனர்களாகிய உள்ள பொதுமக்களுக்கு புரிய வைக்கமுடியும் என நினைக்கிறேன்.
கம்யுனிசம் தான் முதலாளித்துவத்தை எதிர்க்கும் சக்தி என்பதில் மாற்று கருத்தில்லை, ஆனால் சக்தி வளர்ந்து வருகிறதா என்ற கேள்வியும் அதற்கான விடையும் தான் வருத்தமளிக்கிறது
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதின் இன்னும் ஜார் மன்னர்களின் ஒடுக்குமுறை, ரஷ்ய, சீன புரட்சி களை பேசி கொண்டிருப்பது மட்டும் சக்தியை அதிகபடுத்தாது. சிந்தாந்த அடிப்படையிலும், செயல் படும் விதங்களிலும் மாற்றங்கள் தேவை. மாற்றங்கள் இல்லாவிடில், அடுத்த தலைமுறை இதை பற்றி பேசுமா என்பது சந்தேகமே ..
உதாரணமாக, எனக்கு நன்கு தெரிந்த குடும்பத்தின் முன்னோர் (தாத்தா) ,சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பெரியாரை பின்தொடர்ந்தவர் கொள்கையின் மீது அதீத பிடிப்பால்/ குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சி தடைபட்டுள்ளது. அவரது பிள்ளைகள், தந்தையின் குடும்ப நிர்வாக தோல்வியால், தனி மனித நேர்மையற்று இலஞ்ச, கட்ட பஞ்சாயத்து என வாழ்வதோடு அடுத்த இரு தலைமுறைக்கும் அதுதான் சரியென்று போதிக்கபடுகிறது (திரைகதை போல தோன்றலாம் ஆனால் யதார்த்தமான உண்மை)
கம்யுனிச கொள்கையிலும், செயலிலும் மாற்றங்கள் இல்லாவிடில் , தேய்பிறையே ..
கம்யுனிசம் என்றாலே ரஷ்யா, சீன என்று உதாரணங்களை கொண்டு பேசுவவதால் ஒருவேளை மக்களுக்கு அந்நியபட்டு விட்டதோ என்று சில நேரங்களில் தோன்றுகிறது, சீன மற்றும் அந்நிய பொருட்களை விரும்பும் மக்கள் அங்கிருந்து உதாரணங்களை கொண்டு பேசும் கம்யுனிசத்தை விரும்பவில்லை, பல நேரங்களில் பல நண்பர்கள் தெறித்து ஒடுவதை பார்த்திருக்கிறேன்.
நான் எதிர்பார்க்கிற கொள்கை மாற்றம் என்பது இந்திய மக்களின் வாழ்வியல், வேறுபாடுகளை நன்கு அறிந்து அதை கொண்டு வடிவமைக்கபட்சத்தில் கம்யுனிசத்திற்கான வளர்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன்
கசப்பாக இருக்கலாம், நாம் எதிர்த்தாலும், சாதி/மத எனும் சாக்கடை இன்னும் இரு தலைமுறை கண்டிப்பாக இருக்கதான் போகிறது, பசியும் ஆசையும் இருக்கிற வரை முதலாளித்துவமும் வாழதான் போகிறது, இவர்களிடையை கம்யுனிசம் எதிர்த்து போராட வேண்டுமானால் மக்கள் ஆதரவு பெரிதாக தேவை, முதலாளித்துவத்தால்
பாதிக்கபட்டவர்களின் ஆதரவை காட்டிலும் , பாதிக்கபடாத பொது ஜனங்களின் ஆதரவு மிக முக்கியம்
எப்படி பெறபோகிறோம் என்றுதான் தெரியவில்லை, இந்த தலைமுறை இதை தவறவிட்டால் அடுத்த தலைமுறையில் கம்யுனிசத்தை பற்றி பேச போவது “முதலாளிகளின் B டீம்” மட்டுமே