தொழிலாளர்கள் தொழிலாளிகளின் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேச வேண்டும், கட்சிகளைப் பற்றியும் மதங்களைப் பற்றியும் பேசத் தேவையில்லை என்ற கருத்து சரிதானா? தொழிலாளர் வர்க்க அரசியல் என்பது எது? தொழிற்சங்கத்தில் அரசியல் கட்சிகளையும் பிற்போக்கு சக்திகளையும் பற்றிப் பேசினால் ஒற்றுமையும், நோக்கமும் சீர்குலைந்து விடும் என்பது எவ்வளவு உண்மை? தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் இந்த விஷயங்களில் அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று இருக்க முடியுமா?

» தொழிலாளி வர்க்கத்துக்கு என்று ஒரு அரசியல் இருக்கிறதா?

இந்தக் கேள்விகளை பரிசீலிப்போம்.

» தொழிலாளர்களுக்கான பொதுவான பிரச்சினைகள் என்ன?

• வேலையை விட்டு அனுப்பப்படுதல்
• ரேட்டிங் குறைத்து போட்டு சம்பள வெட்டு முதலான பணியிட அச்சுறுத்தல்கள்
• அதிக நேரம் வேலை வாங்குதல், வீட்டில் போயும் வேலை செய்ய     வேண்டியிருப்பது, விடுமுறை நாட்களிலும் அலுவலகம் அழைப்பது

இவைகளைத்தான் பெரும்பாலானோர் பிரச்சினைகளாக பார்க்கின்றனர். மற்றொரு பக்கம் இந்தப் பிரச்சனைகளுக்கு எதிராக போராடுவதற்கான உரிமைகள் பறிக்கப்படுவது பற்றி பெரும்பாலானோர் அக்கறை செலுத்துவதில்லை. இதிலிருந்து நமது விடையை துவங்குவோம்.

மேலே சொன்ன பிரச்சினைகளுக்கெல்லாம் யார் காரணம் என்று தொழிலாளிகளிடம் கேட்டால் பெரும்பாலானோர் தங்களுக்கு மேலே இருக்கும் உயரதிகாரியை கையை காட்டுவார்கள். மேலோட்டமாக பார்க்கும் பொழுது இது உண்மை போலத் தோன்றும். ஆனால், இது உண்மை அல்ல. தொழிலாளர்களின் உடனடி உயர் அதிகாரிகளின் பங்கு என்பது மிகமிக சொற்பமானது தான்.

உதாரணமாக, நமது வீட்டின் அருகில் இருக்கும் ஒரு மளிகைக் கடையை பார்ப்போம். அதன் உரிமையாளர் தனது பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக திட்டமிடுவார். அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக முன்னரே பணம் சேர்க்க ஆரம்பித்து விடுவார். பொருட்களை வாங்குமிடத்தில் அடித்துப் பேசி விலையை குறைத்து வாங்குவார். விற்கும் இடத்தில் ஏற்கனவே விற்பனை செய்த விலையை விட கொஞ்சம் அதிகப்படுத்துவார். வேலை நேரத்தை அதிகம் ஆக்குவார். செலவினங்களை குறைக்க முயற்சி செய்வார். இதிலெல்லாம் போதவில்லை என்றால் கடனாக வாங்குவார். அதற்காக ஒரு திட்டமிட்டு இயங்கத் துவங்குகிறார். அவரது கடையில் வேலை செய்யும் உதவியாளர்களை இன்னும் தீவிரமாக, இன்னும் அதிக நேரம் உழைக்க வைப்பார்.

அதுபோலவே பெருநிறுவனங்களும் தங்களுக்கான ஒரு திட்டம் தீட்டுகின்றன. உயர் அதிகாரிகளுக்கான ஊதியம், போனஸ், பங்குதாரர்களுக்கு பங்கு ஈவுத்தொகை, புதிய முதலீடு, போட்டி நிறுவனத்தை முந்துவது, புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்று ஒரு திட்டம் இருக்கும். அதற்கு ஏற்றாற்போல ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் ஒரு திட்டம் போடுவார்கள். அந்தத் திட்டம்தான் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கையை அல்லது தலையெழுத்தை முடிவு செய்யும் ‘பிரம்மச் சுவடி’.

மளிகைக்கடை நடத்துபவர் தனது உடலை வருத்தி உழைப்பை அதிகமாக்குவதை, தனது செலவினங்களைக் குறைப்பதை முதன்மைப்படுத்துவார். பெருநிறுவனங்களின் உயரதிகாரிகளோ, முதலாளிகளோ தங்களை வருத்துவது, தமது செலவினங்களைக் குறைப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாறாக ஊழியர்களைக் குறைப்பது, குறைந்த விலைக்கு புதிய புராஜெக்டுகள் எடுப்பது, அதற்காக செலவினங்களைக் குறைப்பது என்று தனது ஊழியர்களின் தலையில்தான் கைவைப்பார். இதற்கென்றே பிரத்யேகமாக, கௌரவமான பெயரில் “காஸ்ட் கட்டிங்” என்று ஒரு டீமையும் நியமித்து கட்டளையிடுவார். இந்தக் கட்டளைதான் தொழிலாளிகளின் தலையெழுத்தாக எழுதப்படுகிறது. தொழிலாளிகள் இவற்றை எதிர்க்காத வரையில் எந்தத் தடையுமின்றி முதலாளிகள் சுரண்டுவார்கள்.

பெரும்பாலானோர் தனிப்பட்ட முறையில் தாங்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான் சங்கத்தை அணுகுகிறார்கள். ஐ.டி துறையில் அவ்வாறு தொழிற்சங்கமாக அணிதிரள்வது கூட கடந்த ஒரு சில ஆண்டுகளில்தான் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கட்டத்தைத் தாண்டி பல ஆயிரம் ஊழியர்கள் சங்கமாக திரண்டவுடன் என்ன நடக்கும்? இது பிற துறைகளில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது.

தொழிலாளிகள் பரவலாக சங்கமாக திரண்டு எதிர்க்கத் துவங்கியவுடன் முதலாளிகள் தங்களது மறுபக்கத்தை காட்டுவார்கள். தொழிலாளர் சட்டங்களையே திருத்த வைப்பார்கள். தமக்கு சேவை செய்யும், தம்மிடம் நிதி வாங்கி பிழைக்கும் அரசியல் கட்சிகள் வழியாகச் அதைச் செய்வார்கள்.

நமது நாட்டைப் பொறுத்தவரை பணியிலிருக்கும் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பது, அதிகாரிகளை விலைக்கு வாங்குவது, ஓய்வுபெற்ற அதிகாரிகளை பதவிகளில் அமர்த்தி சட்டத்திலிருக்கும் ஓட்டைக்கு ஏற்ப விதிகளை வகுப்பது, மிரட்டுவது என்று கார்ப்பரேட்டுகள் அரசு எந்திரத்தை ஆட்டிப் படைக்கிறார்கள். அடுத்தகட்டமாக உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் ஆலோசனைக்கிணங்க ஆளும் கட்சியின் உதவியுடன் புதிய சட்டங்களையே இயற்றுகிறார்கள், பழைய சட்டங்களைத் தமக்கு சாதகமாகத் திருத்துகிறார்கள். அவற்றுக்கு உதாரணம்தான் தற்போது நாம் பார்க்கும் NEEM, FTE போன்றவற்றுக்கான சட்ட திருத்தங்கள்.

இத்தகைய சட்டத் திருத்தங்கள் மூலம் தற்போது நாம் நிறுவனங்களுக்கு உள்ளே அனுபவிக்கும் சட்டவிரோதமான பிரச்சினைகள் வெளியிலிருந்து சட்டப்பூர்வமாக்கப் படுகின்றது.

இதில் நீதிமன்றங்கள் எப்படி தலையிடுகின்றன. ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இவ்வாறு சொல்கிறார், “போராட்டங்கள் நடத்தினால் அந்நிய முதலீட்டாளர்கள் எவ்வாறு வருவார்கள்? வேலைவாய்ப்பு எவ்வாறு உருவாகும்” என்று. அதாவது சொந்த நாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சினையை விட அந்நிய முதலீட்டாளர்கள் ஓடிவிடுவார்கள் என்பதுதான் நீதிமன்றத்தின் கவலையாகவும் உள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது கார்ப்பரேட் கட்சிகளைப்பற்றி, அதிகார துஷ் பிரயோகங்கள், லஞ்ச லாவண்யங்கள், நீதித்துறை ஊழல்கள் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்பது நமது பிரச்சினைக்கான பிறப்பிடத்தை காணக் கூடாது என்று சொல்வதாகாதா? எனவே, நமது பணியிடங்களில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளுக்குள்ளேயே மட்டும் உருவாகி வளர்ந்து வருவதல்ல, அரசின் உதவியுடன் வெளியிலிருந்தும் திணிக்கப்படுகிறது. எனவே கட்சிகள், அதிகாரிகள், நீதிமன்றம் உள்ளிட்டவைகள் பற்றியும் நாம் பேசியாக வேண்டும். அது தவிர்க்கவே முடியாதது.

இதை ஏற்றுக்கொள்பவர்கள் கூட மதங்கள், சாதிகள் பற்றி பேசுவது தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.

படிக்க:
நாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் !
காதலர் தினம் : பொண்ணுங்களுக்காக யோசிக்கிறோம் இல்லேன்னா இந்துமுன்னணிய அடிச்சு விரட்டுவோம் ப்ரோ !

மக்கள் கோவில் குளங்களுக்குச் செல்வது நீண்டகால பழக்கவழக்கமாக உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் பிரச்சினைகளை கொட்டும் இடமாக கோவில்கள் இருக்கின்றன. அவ்வாறு சென்று பிரச்சினைகளைக் கொட்டுவது தனிப்பட்ட முறையில் கொஞ்சம் மனநிம்மதியை தருவதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பாருங்கள் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டேதான் வந்துள்ளது. இது என் நம்பிக்கை என்று கூறுபவர்கள் உங்களது நம்பிக்கையை கொஞ்சம் உண்மையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நாம் அனுபவிக்கும் சமூகநலத் திட்டங்கள் எதுவும் எந்தக் கோவில் வழிபாட்டாலும் வந்தவையல்ல. அனைத்தும் போராட்டங்களின் ஊடாக வந்தவைதான். தொழிற்சங்க சட்டங்கள் கூட பல ஆயிரம் தொழிலாளிகள் போராடியதால் வந்ததுதான். அதுபோல நாம் ஒற்றுமையாக போராடினால் வெற்றிபெற முடியும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் ஒற்றுமை என்பது இன்னமும் மோசமானதாக உள்ளது. கோவிலுக்குச் செல்வது மட்டுமல்ல, ஜோசியம் பார்ப்பது, விரதமிருப்பது, மொட்டையடிப்பது என்று மூடப்பழக்க வழக்கங்கள் அதிகமாக உள்ளது. நம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் பிரச்சினையை ஒற்றுமையாக எதிர்கொள்வதை தடுத்து தனித்தனியாக செல்லச் செய்கிறது.

நமது நாடு முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளிகளது பி.எஃப். பணத்தைப் பற்றி மத்திய அரசு தொழிலாளர் விரோத முடிவெடுத்த சமயம் அதை முறியடித்து நமக்கும் சேர்த்துப் போராடியது பெங்களூர் ஆயத்த ஆடைத் தொழிலாளிகள் தான். ஆனால், நாம் அவர்களை மறந்துவிட்டு கோவில்குளங்களுக்குச் செல்கிறோம். இதுபோன்ற ஒற்றுமையின்மையை மதங்களும் சாதிகளும் மூடப்பழக்கங்களும் உருவாக்கி வளர்த்துவருகிறது.

முதலாளிகளைக் கவனியுங்கள், அவர்களுக்குள் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள், போட்டிகள், மத நம்பிக்கைகள் இருந்தாலும் அதை எல்லாம் நம்பி இருந்துவிடுவதில்லை. ஒடுக்கவும், சுரண்டவும் ஒன்றாக நிற்கிறார்கள், கூட்டமைப்புகள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள், உலகளாவிய முதலாளிகளுடன் இணைந்து மாநாடுகள் நடத்துகிறார்கள், அரசுகளை தங்களது நலனுக்கு ஏற்ற கொள்கைகளை அமல்படுத்த பணியவைக்கிறார்கள்.

தொழிலாளிகள் அனைவருக்குமான பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்ள தடையாய் இருக்கும் எதையும் புரிந்துகொள்ளாதவரை தொழிலாளிகள் மேலும் மேலும் சுரண்டப்படுவது மட்டுமல்ல, இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறிகொடுத்துக்கொண்டேதான் இருப்போம்.

“அதெல்லாம் சும்மா சொல்லாதீங்க, நீங்களும் எவ்வளவோ பேராட்டங்களை நடத்துகிறீர்கள். ஆனால், என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டீர்கள்?” என்று சிலர் நினைக்கலாம். உண்மைதான், பெரிதாக எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லைதான். ஏன் முடியவில்லை? என்று சிந்தியுங்கள்.

தைப்பூசம், அழகர் ஆத்துல இறங்குவது, புத்தாண்டு கிறிஸ்துமஸ் காலங்களில் சர்ச்சில், பக்ரீத் போன்ற பண்டிகைகளின் போது மசூதிகளில் இருக்கும் கூட்டத்தைப் பாருங்கள். அதேநேரம் நமது வாழ்க்கையையும் எதிர்கால சந்ததியினரையும், சுற்றுச் சூழலையும் பாதிக்கும் பிரச்சினைகளுக்கான போராட்டங்களைப் பாருங்கள். அங்கு கூடுவோர் யாரும் என்ன சாதித்துவிட்டோம் என்று கேட்டுக்கொண்டு நிற்பதில்லை. மாறாக, கோவில் குளங்களில் தஞ்சம் புகுந்தவர்கள்தான் என்ன சாதித்துவிட்டீர்கள் என்று கேட்கிறார்கள். இதற்கு வெட்கப்பட வேண்டும்.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா!!

ஒவ்வொரு சங்கத்தையும் நடத்துபவர்கள், வெகு சிலர்தான். அவர்களுக்குத் தோள்கொடுக்கக் கூடத் தயங்குவதும், நமக்கு ஏதாவது தேவை வந்தால் சென்று ஒட்டிக்கொள்ளலாம் என்றும் நினைப்பது எந்தவிதத்தில் நியாயம். “அய்யோ அப்படியெல்லாம் இல்லை, நிறைய வேலை இருக்கிறது, நேரமே இல்லை”யென்று ஓர் சப்பைக் கட்டு கட்டலாம். பாவம், பொது விசயங்களுக்காக களத்திலிறங்கி பணியாற்றுபவர்களுக்கு குடும்பமோ, வேறு வேலையோ இல்லையா என்ன? போராடிவிட்டு ஏ.சி. ஓட்டலில் ரூம் எடுத்து ஓய்வெடுக்கச் சென்றுவிடுவார்கள் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. அவர்களுக்கு இருக்கும் நேரம் உங்களுக்கு இல்லை என்றால் அனைவருக்கும் 24 மணி நேரம் தான் என்பதை கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்கள்.

ஆகவே, நாம் பேசாமல் மௌனமாயிருந்தால், விலகிச் சென்றால் விட்டு ஒதுங்கிவிடாது எதார்த்தம். மேலும் மேலும் படுத்தி எடுத்துவிடும். அதை எதிர்த்து முறியடிப்பதில்தான் மனித இனத்தின் தனிச்சிறப்பே அடங்கியுள்ளது. ஒற்றுமைக்குத் தடையாய் இருக்கும் எதையும் உடைத்தெறியாதவரை விடிவில்லை.

ஒன்றுபடுவோம் வென்றுகாட்டுவோம்.


கட்டுரையாளர்: பிரவீன்
நன்றி:new-democrats

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க