அலகாபாத் கும்பமேளா : நாகா சாமியார் என்ற பெயரில் நிர்வாண ஆசாமிகள் !
சனாதன தர்மத்தைக் காக்க சிரத்தை வெட்டவும் தயார் !

லகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் இந்தியா முழுவதும் உள்ள நிர்வாண சாமியார்கள் குழுமியிருக்கிறார்கள். இவர்களுக்கென கங்கைக் கரையில் பல ஏக்கரில் இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் புதிய பாலத்தில் தொடங்கி கங்கையின் சாஸ்திரி பாலம், ரயில்வே பாலம் அதனையும் தாண்டி சில கிலோ மீட்டருக்கு இவர்களுக்காகவே குடில்கள் உள்ளன. இந்த கரைகளில் தங்கும் இடங்கள், கடைகள் என பல இருந்தாலும் 60% இடம் இந்த சாமியார்களுக்குத்தான். இதில் கார்ப்பரேட் சாமியார்களும் உண்டு.

அனைத்தையும் “துறந்த நிர்வாண” சாமியார்கள்தான் என்றாலும் புதிய புதிய பெயர்களில், கெட்டப்புகளில் வந்து குவிந்திருக்கிறார்கள். யாரேனும் ஒரு சாமியார் பெயரைச் சொல்லி அங்கு காவலுக்கு இருக்கும் போலீசிடம் கேட்டால், “இங்கு மொத்தம் 22 செக்டார் உள்ளது. நீங்கள் கேட்கும் சாமியார் எந்த செக்டார்” என்று நம்மையே திருப்பி கேட்கிறார்கள். அந்தளவிற்கு ஆயிரக்கணக்கில் வந்து குவிந்திருக்கிறார்கள்.

அங்கிருக்கும் பொதுமக்களைக் கேட்டால், “பொதுவாக காசி, வாரணாசிக்கெல்லாம் கூட போயிருக்கோம், ஆனா அங்கெல்லாம் இவ்ளோ சாமியார்களை பார்த்ததில்ல. இவங்கலெல்லாம் யார் எங்கிருந்து வந்திருக்காங்க.. உண்மையான சாமியார்களா இல்லையான்னுகூட தெரியவில்லை” என்று ஆச்சரியத்தோடு சொல்கிறார்கள்.

ஓரளவிற்கு முற்போக்கு பேசக்கூடிய தமிழகத்திலேயே நித்தி, ஜக்கி போன்ற சாமியார்களின் அட்டூழியம் தாங்க முடியவில்லை, எனில் வட இந்திய சாமியார்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?  கங்கையும் யமுனையும் சர்வ நாசம்!

நிர்வாண சாமியார்கள் ஏரியாவிற்குள் நுழைந்தால் மூக்கைத் துளைக்கும் கஞ்சா வாடை. பார்க்கும் சாமியார்கள் எல்லோரும் கஞ்சா சிமிலியை வாயில் வைத்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். உடல் முழுவதும் எரிக்கப்பட்ட மரக்கட்டையின் சாம்பலை எடுத்துப் பூசிக்கொண்டு பார்க்கவே விகாரமாக காட்சியளித்தனர். பல சாமியார்களின் கூடாரம் பக்தர்கள் இன்றி காலியாக இருந்தன. ஒரு சில சாமியார்களிடம் பேண்ட்-சர்ட் அணிந்த நாகரீக மனிதர்கள், சாமியார்களின் முன்னே மண்டியிட்டு ஆசி வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.

சில சாமியார்கள் கூட்டாக அமர்ந்து எதையோ பேசிக்கொண்டு ஒரேயொரு கஞ்சா பைப்பை வைத்து கொண்டு மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தனர்.  ஒருவர், வரும் போகும் பக்தர்களை எல்லாம் அவராகவே கூப்பிட்டு ஆசி வழங்கி காசு போடச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவரிடம் ஐக்கியமானால் கஞ்சாவும் கிடைக்கும்!

வரிசையாக ஆடை இல்லாமல் நிர்வாணமாக அமர்ந்திருந்த சாமியார்களின் தோற்றமே ஒருவித பீதியை உண்டாக்கியது. அவர்களை நெருங்கவே தயக்கமாக இருந்த நிலையில், ஒரு நிர்வாண சாமியாரின் பேனரின்…… கீழ் புகையும் யாக குண்டத்தின் அருகில் காவி உடையுடன், சிக்கு பிடித்து……. அடைபடிந்த ஜடாமுடியுடன் அமர்ந்திருந்தார் ஒரு சாமியார்.

அவரிடம் அறிமுகமாகி…. இங்க இருக்க கலாச்சாரம் பத்தி எதுவும் தெரியாது. அதான் தெரிஞ்சிக்க வந்தோம் என்றதும்…… எங்களை ஒரு ஓரமாக உட்கார வைத்துவிட்டு , “என்ன தெரிஞ்சிக்கனும் கேளுங்க” என்ற தொனியில் பார்த்தார்.

“இங்கு பல பாபாக்கள் இருக்கிறார்களே, அவர்களைப் போல் நீங்களும் நாகா பாபா-வா?”

ஆம். என் பெயர் ஜமிந்தியா மெஹந்த் பாபா – லைட்டு கிரி” என்றார் கரகரத்த குரலில்.

“நாகா சாதுக்கள்’னு சொல்றாங்களே அவங்கெல்லாம் யாரு சாமி?”

“சனாதன தர்மத்தைக் காக்க சுக்ராச்சாரியாரால் உருவாக்கப்பட்டவர்கள் தான் நாகாக்கள். நாங்கள் சுக்ராச்சாரியர் பரம்பரையில் இருந்து வந்தவர்கள். அனைத்தையும் துறந்து வாழ்பவர்கள். கடவுள் இந்த உயிருக்காக கொடுத்த ஆடை என்பது சரீரம்… இந்த தோல் மட்டும்தான். அதற்குப்பின் இந்த சாம்பல் இவைதான் உண்மையான ஆடை. அதனால்தான் நாங்கள் உடை ஏதும் அணிவதில்லை. அதைத் தாண்டி நான் இப்போது போட்டிருக்கும் ஆடை என்பது மனிதர்களால் செய்யப்பட்டவை; அவை உண்மை இல்லை. இது போலி ஆடை” என்றார்.

“சரி உங்களைப் போல மாறுவதற்கு என்ன செய்யனும், தமிழகத்திலும்கூட மடங்கள் உள்ளது அங்கு துறவரம் மேற்கொள்ள தீக்சை தருவார்கள்…. நாகாக்களுக்கு அப்படி எதாவது இருக்கா?”

தலையசைத்துக்கொண்டே ம்ம்… நாகா சாதுவாக மாற முதலில் தேவையானது சேவைதான். குருவுக்கு செய்ய வேண்டிய சேவை; அதுதான் முதல். அதன் பின்னர் அகாடா (அகாரா) வில் தங்கி அங்கேயே இருந்து வேலைகளைச் செய்ய வேண்டும், சமைப்பது, இடத்தை சுத்தம் செய்வது, பாபாக்களுக்கு உதவி செய்வது இவற்றை செய்ய வேண்டும்.

அதன்பின்னர் பூஜைகள், யாகங்கள், ஆரத்தி போன்றவற்றுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அப்போது செய்யும் சடங்குகள் இவற்றை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அதில் ஏதும் சந்தேகங்கள் என்றால் கேட்க வேண்டும். அதையெல்லாம் சரிவர கற்றுக் கொண்டபின்னர் நாகா பாபாவாக மாற ஒரு நாற்பது, ஐம்பதாயிரம் செலவு செய்ய வேண்டும், அதன்பிறகே அவருக்கு நாகா என்ற சான்றிதழ் வழங்கப்படும்.

“என்ன..! பணம் செலவாகுமா….? சான்றிதழ்… அரசாங்கம் ஏதும் தருமா..?

“ஆமாம்! செலவு ஆகத்தான் செய்யும். அரசாங்கம் எதுவும் தராது. நாங்கள்தான் சான்றிதழ் தருகிறோம்” என்று சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார்.

“சரி… கடவுள்தான் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறார் என்கிறார்களே…. அப்புறம் ஏன் சன்னியாசம்…?”

வாயில் இருந்த புகையை வெளியேற்றிவிட்டு….. “நீங்க சொல்லுவது சரிதான், எல்லா இடத்திலும் பகவான் இருக்கிறான். ஆனால், நாம் கடவுளை அடையனும் என்றால் அதுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாதுன்னுதான் தனித்தனி இடம் பண்ணி வெச்சிருக்கோம்… நீங்களே சொல்லுங்க, வீட்டுல மனைவி குழந்தைகள் எல்லாம் தொந்தரவு செய்யும் போது நாம முழு மனசா கடவுளப்பத்தி நினைக்க முடியுமா?

“நீங்க எந்த வயசுல இங்க வந்து சேர்ந்தீங்க…?”

எனக்கு 12 – 13 வயசு இருக்கும் அப்ப வந்து இங்க சேர்ந்தேன். அப்புறம்தான் பாபாவா மாறினேன். எனது தாய் தந்தை அனைவரையும் பிரிந்து வந்துவிட்டேன். இங்கு எனது குருவுக்கு சேவை செய்து, அதன் பின்னர் அனைத்து சம்பிரதாயங்களும் தெரிந்து கொண்டு மாறினேன். ஒருமுறை பாபாவாக மாறிய பின் எங்களுக்கு இந்த உலகத்துடன் எந்த பந்தமும் இல்லை. எங்களுக்கு எந்த சுகமும் – துக்கமும் இல்லை. சொல்லப் போனால் துக்கம் மட்டும்தான். எங்கள் வாழ்க்கையில் கடவுளை அடைவது மட்டும்தான் சுகம்.

“நீங்க உங்க வாழ்க்கையில இவ்ளோ கஷ்டப்படுறீங்க, பல கார்ப்பரேட் சாமியார்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபாராம்தேவ்லாம் சொத்து சுகமுன்னு இருக்கிறாங்களே…  இவங்கள பத்தி என்ன நினைக்கிறீங்க…?

ம்ஹும்…. பெரிய பெரிய பாபாக்கள்-ன்னு சொல்லுறாங்களே அவங்க எல்லாம் ஏமாத்து பேர்வழிகள், குண்டர்கள், லுச்சா பசங்க இப்படி வச்சி இருக்கானுங்களே அது எப்புடி சரியா இருக்கும்..? இப்ப வந்து ஒருத்தன் என்கிட்ட பணம் கொடுத்து தப்பு செய்யச் சொன்னா அவன்கிட்ட வாங்க மாட்டேன். அடிச்சி துரத்துவேன். நாங்க யாருக்கும் பயப்பட மாட்டோம்.

“நீங்க சனாதன தர்மம்முன்னு சொல்லுறீங்களே அப்படின்னா என்ன? அத காப்பாத்துவதுன்னா என்ன?

இந்து தர்மம்தான் சனாதன தர்மம். சனாதன தர்மத்துக்காக நாங்க யார் தலையையும் சீவுவதற்கும், தேவைபட்டா எங்கத் தலைய கொடுக்குறதுக்கும் கூடத் தயாரா இருக்கோம். இப்பவும் துணிய அவுத்துட்டு நிர்வாணமா நின்னு சண்ட போடத் தயாரா இருக்கேன்.

“இப்படி சொல்லுறீங்களே போலீசு எதுவும் செய்யாதா..?”

ஒரு ஏளனமான சிரிப்பை உதிர்த்துவிட்டு….. “போலீசா.. எங்கள யாரும் எதுவும் செய்ய முடியாது.. நாங்க யாருக்கும் கட்டுப்பட மாட்டோம். எந்த பயமும் எங்களுக்கு கிடையாது. எல்லா இடத்துக்கும் போவோம், திரிசூலம், தல்வார் (வாள்) இது எல்லாம் அக்காடாவுல இருக்கும். யாரும் எங்ககிட்ட பிரச்சினைக்கு வரமாட்டார்கள். எந்த கேசும் எங்க மேல போட முடியாது.

“ஓ.. நாகா பாபாவுக்கு இவ்வளவு செல்வாக்கா.. யார் வேணுமுன்னாலும் பாபா-வா மாறமுடியுமா? அதுக்கு வயசு ஏதாவது தடை இருக்கா…?”

அதெல்லாம் கிடையாது.. யார் வேணுமுன்னாலும் ஆகலாம். சின்ன வயசுல இருந்து சாகற வயசுல இருக்குறவங்க வரைக்கும், பாபா-வாக மாற முடியும்.

“சரி எல்லா சாதியும் ஆகமுடியுமா…?”

ஆம்! பிராமண, சத்ரிய, பனியா (வைசியர்கள்) என யார் வேண்டுமானாலும் ஆகலாம் எல்லா சாதியினரும் இங்க அகாடாவுல இருக்காங்க எல்லா சாதிகளும் நாகாவா மாறலாம். ஆனா, ஹரிஜன் (தலித்துக்கள்) மட்டும் பாபா – வா மாறமுடியாது.

“அப்படின்னா பிராமணன் தான் உயர்ந்தவனா..?”

“எல்லாருக்கும் குரு பிராமணன், பிராமணர்களுக்கு குரு சன்னியாசிகள்.. நாங்கள் எல்லாரும் சன்னியாசிகள்” என்றார்.

“நன்றி….! புறப்படுகிறோம்…. என்றதும் நெற்றியில் விபூதியை பூசிவிட்டு தட்டை எடுத்து நீட்டினார்.

பூ வேறு… புஷ்பம் வேறு அல்ல. என்பதைப்போல, சனாதன தர்மம் வேறு… வருணாசிர தர்மம் வேறு அல்ல என்பது புரிந்தது! திரிவேணி சங்கமம் முழுவதும் இந்த சாமியார்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். அங்கே சாமியார் என்பதே ஒரு பெரும் தொழில் போல நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு சாமியாரைச் சுற்றியும் அவரது  குடும்பத்தினர், உறவினர்கள், சீடர்கள், உதவியாளர்கள் எனப் பலர் இருந்தனர். ஆசீர்வாதம் வாங்க வேண்டுமென்றால் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லை என்று மறுக்க முடியாது. மக்களைப் பொறுத்தவரை பசுமாட்டை தொட்டுக் கும்பிடும் அனிச்சைச் செயல் போல இந்த சாமியார்களை வணங்கி திருநீறு பெறுகின்றனர்.

இன்னொரு புறம் மக்கள் சொல்வது போல கும்பமேளா கலக்செனுக்காக பலர் அப்போது மட்டும் சாமியார் டூட்டி பார்க்கவும் செய்கின்றனர். அந்த நாட்களில் நீங்கள் நிர்வாணமாக இருப்பதெனத் துணிந்தால் பெரும் சில்லறையை புரட்ட முடியும். மறுபுறம் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களில் வாழும் சாமியார்கள் தனி உலகம். இவர்களைக் கண்டு பொதுசமூகம் அஞ்சுகிறது. போலீசும் எதற்கு பிரச்சினை என்று இவர்களை கண்டு கொள்வதில்லை. இவர்கள் எங்கு சென்றாலும் முதல் உரிமை, சலுகை கோருகிறார்கள். பாஜக-வின் இந்துத்துவத்திற்கு இந்த சாமியார்கள் ஏதோ ஒரு வகையில் மதம், வருணாசிரமம், பண்பாடு என்று பயன்படுகிறார்கள். அதனால் அரசும் இவர்களுக்கென்று பெரும் ஏற்பாடுகளையும், செலவையும் செய்து வருகிறது.

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து …


முந்தைய பாகம்:
பாகம் – 1: அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
பாகம் – 2: கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !
பாகம் – 3: கும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன !
பாகம் – 4:
அடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஊழியர் ஆனந்த் நேர்காணல்

1 மறுமொழி

  1. .

    சூப்பர்!சூப்பர்!!மகிழ்ச்சி!!! கேள்விகள் யதார்த்தம். நி.சாமியார்களின் பதில்கள் யதார்த்தமோ யதார்த்தம். மாயக்கண்ணாடியில் தேவர்கள் பூலோகத்தைப்பார்ப்பதுப்போல் நானும் வினவின் வழியாக கும்பமேளாவை தரிசித்தேன்.

    ஆனால், தமிழ்நாட்டின் ஜீன்ஸ் சாமியார் இலக்கிய ஜெயமோகன் நி. சாமியார்கள் பற்றி கூறுவதை பாருங்கள் “….இந்துமதத்தின் இன்றைய எளிய லௌகீகர்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ள முடியாது. தங்களை அறிவாளிகள் என நினைக்கும் நகர்சார்ந்த அரைவேக்காட்டு லிபரல்களால் அவர்களை அணுகவே முடியாது. ஒவ்வொரு கும்பமேளா வரும்போதும் டெல்லி மும்பை சார்ந்த அறிவிலிகளான இதழாளர்களால் நாகா பாபாக்களைப் பற்றிய அவதூறும் ஒவ்வாமையும் பரப்பப்படுகின்றன. நவீனமேற்கத்திய சிந்தனைகளே அறிவு என நம்பும் ஒரு தரப்பிலிருந்து சலிப்புக்குரல்களும் எழுகின்றன.” “…அவர்களின் உலகை பிறர் அறிவது கடினம், …”அதன்மேல் தீர்ப்புகளை செலுத்துவதென்பது ஆணவம் மற்றும் கீழ்மை.அதற்கு பண்பாட்டு ஆய்வில் அடிப்படை அறிதல் இருக்கவேண்டும். தத்துவ அறிமுகம் இருக்கவேண்டும். இங்கே பேசிக்கொண்டிருப்பவர்கள் மிக எளிய அரசியல்சரிகளை நாலைந்து வரிகளுக்குள் அடக்கி புரிந்துகொண்டிருக்கும் தற்குறிகள். மானுடப் பண்பாட்டின் பேருருவைவிட தன்னை மேலே தூக்கி வைத்துக்கொள்ள ஆணவம் முற்றியிருக்கவேண்டும். அந்த ஆணவம் அறியாமையிலிருந்தே எழமுடியும்.” என்கிறார். விமானத்தில் பறந்து நி.சாமியார்களை தரிசித்தது போலவே இந்த கும்பமேளாவை இந்திரலோகமாக மாற்றிய ஜீனியர் மோடி உ.பி.முதல்வர் ஆதியநாத்தின் நிர்வாகத்தில் உ.பி. யில் மாயங்கள் நிகழ்ந்துள்ளதாக பூரிப்பு அடைகிறார். நல்லது,நி.சாமியாரே இந்த ஜீன்ஸ் சாமியார் முகத்தில் சாணியை ச்சீ சாம்பலை பூசிவிட்டார். நமக்கு வேலை மிச்சம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க