“பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை” என்பார்கள். அது ஆன்மிகத்தில் இன்னும் அதிகம் என்பதே நிதர்சனம். கும்பமேளா என்ற பெயரில் யோகி ஆதித்யநாத் அரசு நடத்தும் பாஜக-வின் அரசியல் மேளாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து ஊடகங்களும் புளகாங்கிதமடைந்து உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றன.

கும்பமேளாவிற்காக வருகை தந்துள்ள நடுத்தர மக்கள் மத்தியில் ஆன்மிக சிந்தனை பெயரளவிலும் சுற்றுலாவிற்கு வந்த மனநிலையே மேலோங்கியும் இருந்தது. சாதாரண மக்கள் அனுபவிக்க முடியாத, இதுவரையிலும் பார்த்திராத இந்த விழா ஏற்பாடுகளை இலயித்துப்போய் சொல்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

சங்கம் என்று அழைக்கப்படக்கூடிய கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி ஆகியவை ஒன்றுகலக்கும் இடமான முக்கூடல் பகுதிக்கு அருகில் பணக்காரர்களுக்கான குடில்களும், சாதாரண மக்களுக்கு தொலைவிலும் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பணக்காரர்கள் தங்கள் பக்தி நிலைக்கும், சக்தி நிலைக்கும் ஏற்ப ஒரு நாளைக்கே சிலபல ஆயிரங்களில் செலவு செய்து தங்கி இருந்து தங்களின் பாவங்களைக் கழுவிச் செல்கின்றனர்.

ஆம்! உத்திரப் பிரதேசத்தின் சுற்றுலா துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சங்கம் டெண்ட் காலனி பகுதியில் ஒரு நாளைக்கான கட்டணம் உங்களின் விருப்பத்திற்கேற்ப 9,000/- ரூபாயிலிருந்து 18,000/- வரை உள்ளது. இவை இல்லாமல் கூடுதல் வரியும் வசூலிக்கப்படுமாம். வரிகள் உட்பட இவற்றின் கட்டணம் 12,000/- முதல் 24,000/- ரூபாயாக வருகிறது. இவை அனைத்தும் ஒரு நபருக்கானது மட்டுமே. உங்களுடன் கூடுதல் நபர்கள் வந்தால் அவர்களுக்கு தலா ஒரு நபருக்கு 15% மொத்த கட்டணத்தில் கூடுதலாக வசூலிக்கப்படும்.

இந்த குடில்களின் பெயரே நமக்கு சொல்லிவிடும் இவை யாருக்கானவை என்பதை. ரூ.9,000/- செலுத்துபவர்களுக்கான குடில்களின் பெயர் SWISS Cottage (சுவிஸ் காட்டேஜ்) மற்றும் ரூ.18,000/- செலுத்துபவர்களுக்கான குடிலின் பெயர் Maharaja Swiss Cottage (மஹாராஜா சுவிஸ் காட்டேஜ்). என்று தனித்தனியாக பிரித்து வைத்திருக்கிறது உ.பி டூரிஸம்.  நம்மைப் போன்ற ஏழைகள் அதன் உள்ளே சென்று பார்ப்பதற்கு கட்டணம் நிரணையித்தால்கூட அந்தக் காசை கொடுக்க முடியாது. அந்தளவிற்கு அதன் பாதுகாப்பும், இன்னபிற வசதிகளும் உள்ளன. அத்துவான வெளியிலே ஒரு ஐந்து நட்சத்திர விடுதியின் வசதிகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் அதற்கு சுவிஸ் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள். கும்பமேளாவிற்கான குடிலாக இருந்தாலும் அதற்கு இந்துத்துவப் பெயர்கள் வைக்க முடியாமல் போயிருக்கிறது. ஒருவேளை வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பிருந்தாவனம், கிஷ்கிந்தா என்று வைத்தால் செட்டாகாது என்று கூட நினைத்திருக்கலாம்.

அதேபோல், ஆயுர் யுனிவெர்ஸ் என்ற நிறுவனம் தங்கள் பயனாளர்களுக்காக டீலக்ஸ் காட்டேஜ், லெக்சுரி காட்டேஜ் என்று வைத்திருக்கிறார்கள். சுமார் 25 ஏக்கரில் இந்த காட்டெஜ் அமைக்கப்பட்டுள்ளது. தரமான இருக்கை வசதிகளுடன் 100 குடில்கள் உள்ளன.  அதன் வசதிகள் நம்மை மிரட்சியடைய வைக்கின்றன. வை-ஃபை இன்டர்நெட், டபுள் அண்ட் சிங்கிள் பெட் ரூம், வெஸ்டெர்ன் டாய்லட், ஹாட் வாட்டர் என்று வைத்திருக்கிறார்கள்.

தூங்கி எழுந்ததும் கங்கையின் அழுக்கு நிறைந்த அழகை ரசித்தவாறே நீங்கள் போட்டிங் செல்ல முடியும். அதற்காக இந்த நிறுவனமே சொந்த படகுகளை வைத்துள்ளது.

பசுமையான செயற்கைத் தோட்டங்கள், சங்கத்திற்கு அருகே குடில்கள் இருப்பதால் நதிகளை பார்த்துக்கொண்டே காலை நடை செல்லலாம். தியானம் மற்றும் யோக மையம், நாகா மற்றும் அக்காராஸ்களுக்கு செல்வதற்கான வழிகாட்டுதல்கள், யாருடைய தொந்தரவும் இல்லாமல் குளிப்பதற்கு தனியான இடம், உண்ணுவதற்கென்றே அமைக்கப்பட்டுள்ள தரமான உணவகம், மாலை நேரம் நெருங்க நெருங்க இசையுடன் கூடிய விருந்தோம்பல்கள், குளிருக்கு இரவு நேர நெருப்பு,  இவற்றை எல்லாம் தின்னு கழிக்க அட்டாச்சிடு பாத்ரூம்; அதற்கு துப்பாக்கி ஏந்திய போலீசு பாதுகாப்பு என்று சகலமும் வைத்துள்ளனர்.

அதேபோல் கல்ப வ்ரிக்‌ஷ் என்ற பெயரில் யமுனா நதிக்கரையில் நூற்றுக்கணக்கான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டு உரிமையாளரில் ஒருவர் அலகாபாத்தின் லல்லூஜி பிரதர்ஸ்.

லல்லூஜி பிரதர்ஸ் அலகாபாத்தின் புகழ்பெற்ற ஒரு ஒப்பந்ததாரர்.  கார்ப்பரேட் ஈவண்ட், திருமண நிகழ்ச்சி போன்றவற்றிற்கு ஸ்டீல் ஸ்ட்ரெச்சர் உருவாக்குவதிலும்; பெரு நிறுவனங்களுக்கு உலோகம், அலுமினியம் மற்றும் கனிம, ஸ்டீல் மற்றும் துருப்பிடிக்காத ஸ்டீல் கட்டமைப்பு உருவாக்கி கொடுப்பவரும்கூட. இத்தொழிலில் நான்கு தலைமுறை அனுபவமும், தனக்கு இருக்கும் செல்வாக்கையும் பயன்படுத்தி அரசின் பல ஒப்பந்தங்களை பெற்றுவரும் ஒரு கார்ப்பரேட் ஒப்பந்ததாரர்.

இந்த கல்ப வ்ரிக்‌ஷ் 3 வகையான அறைகள், KV Dorms, KV Cottages மற்றும் KV Luxury ஆகிய முறைகளில் குடில்களை வழங்கி வருகிறது. குறைந்தபட்சம் படுத்துக் கொள்வதற்கு ஒரு படுக்கை – தலையணைக்கு ரூ.600 தொடங்கி, சகல வசதிகளையும் பெற அதிகபட்சமாக ரூ.11,000 வரை வாங்குகிறது. இது சாதாரண நாட்களுக்கும், சிறப்பு நாட்களுக்கும் வேறுபடும். கல்ப விரிக்ஷின் இடம் சங்கத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இரும்பு தகடால் போடப்பட்ட சாலை வசதியும் உள்ளது. குடிலுக்கு செல்ல போட் வசதியும் உள்ளது.

இவை இன்றி இன்னமும் பல்வேறு நிறுவனங்களும் இது போன்ற தங்கும் இடங்களை ஏற்பாடு செய்து அவற்றை வாடகைக்கு விட்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றும் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாடகைகளை நிர்ணயித்துள்ளனர். இப்படியாக கும்பமேளாவின்  மூலம் பாஜக தனது ஆதரவு நிறுவனங்களுக்கு பெரும் வருவாய் ஏற்பாடு செய்திருப்பதோடு, மக்களிடம் இந்துத்துவ சாம்பியனாக காட்டிக் கொள்ளவும் முயல்கிறது.

இந்த பிரமாண்ட தற்காலிக குடில்களுடன் கங்கை ஆற்றங்கரையில் நிரந்தரமாக குடியிருக்கும் குடிசைப் பகுதியைப் பார்த்தால்மேன்மக்களுக்கு எரிச்சல் வரும். இந்த ஏழைகள் கும்பமேளாவின் அழகை சீர்குலைப்பவர்கள், இவர்களை அப்புறப்படுத்தினால்தான் மேளா முழு அழகையும் பெறும் என்ற சிந்தனை வெண்தோல் இந்தியர்களுக்கு நிச்சயமாக எழும்.

“பாஜிராவ் மஸ்தானி” என்ற படத்தில் பேஷ்வா மன்னனாக வரும் ரன்வீர் காய்ச்சலால் நர்மதை நதிக்கரையோரம் டெண்ட் அமைத்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியிருப்பார்கள்.

அதைப்போலவே யமுனா மற்றும் கங்கா நதிக்கரையை ஆக்கிரமித்து தற்காலிக குடில்கள் அமைக்க அனுமதியளித்திருக்கிறது யோகியின் இந்துமதவெறி கும்பல். ரன்வீருக்கு வந்தது காதல் காய்ச்சல் என்றால் பணக்கார மேட்டுகுடிகளுக்கு வந்திருப்பதோ ஆன்மீகக் காய்ச்சல். இவர்கள் தங்களின் ஆன்மீக அனுபவத்தை சிலாகித்து சொல்லுவார்கள். இதனை பயன்படுத்தி கார்ப்பரேட்டுகள் நிச்சயம் ஒரு தொகையை கறந்து விடுவார்கள். அதில் பாஜக கும்பலுக்கும் பங்கு போய்விடும்.

ஆனால், பக்தியின் பால் வந்துள்ள ஆயிரக்கணக்கான ஏழை பக்தர்கள் எலும்பைத் துளைக்கும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள ஆங்காங்கே சிறு கூடாரம் அமைத்து கீழே உமியை கொட்டி நிரவி படுக்கையை தயார் செய்து கொண்டனர். அதற்கும் வழியில்லாதவர்கள் திறந்தவெளியில் இரவின் உறைபனிகுளிரில் உறைந்துகிடந்தனர். இதன்படி பார்த்தால் கும்பமேளா ஏற்பாடுகள் எவையும் சாதாரண மக்களுக்கு அல்ல. ஊடகங்கள் வியந்தோடும் கும்பமேளா கட்டமைப்புகள் அனைத்தும் மேன்மக்களுக்கானது மட்டுமே. கடவுள், மதமும் கூட வர்க்க பிரிவினைக்கு உட்பட்டதே என்பதற்கு கும்பமேளாவும் விதிவிலக்கு அல்ல!

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து…


முந்தைய பாகம்:
பாகம் – 1: அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
பாகம் – 2: கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க