த்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில்  பல ஆயிரம் கோடிகளை கொட்டி கும்பமேளா விழாவை நடத்தி வருகிறது உ.பி. அரசு. பாஜக-வின் இந்துத்துவ பிரச்சாரத்திற்காக முன்னெடுக்கப்படும் இந்த விழாவின் பிரம்மாண்டத்தில் ஒரு அம்சம் மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டக் கண்காட்சி. உள்நாட்டில் இருக்கும் தொழிலையும், சிறு முதலீட்டாளரையும் அழித்து வரும் மத்திய அரசு மறுபுறம் மேக் இன் இந்தியா என்று ஒரு முழுப் புரட்டை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட செட் சினிமா செட்டையே மிஞ்சி விடும் அளவிற்கு பல இலட்சங்கள் செலவு செய்து போடப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு வருபவர்களை கவர அரங்கத்திற்கு வெளியே திறந்தவெளி மேடை இசைக்கச்சேரியும் நடத்தப்பட்டு வருகிறது. யாரும் கேட்கவில்லையென்றாலும் பாடல் மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இடையிடையே இந்துத்துவத்தின் பிரசங்கமும் காதை குடைகிறது.

திறந்தவெளி மேடை இசைக்கச்சேரி.

காண்காட்சியின் உள்ளே சென்றால் உ.பி.யில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் தொழிலையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். அமேதி மற்றும் அலகாபாத்தின் மூஞ்ச் தயாரிப்பு, அயோத்தியின் ஜெக்கரி, ஜான்சி பகுதியின் பொம்மைகள், பெதாபுரி பெட்சீட்கள், சம்பாலின் கார்பெட் மற்றும் கைவினைப் பொருட்களின் தயாரிப்பு என்று ஏராளமாக இருந்தன. கடைசியில் மோடியின் மேக் இன் இந்தியாவிற்கான பிரச்சாரத்தில் வெறும் கொலு பொம்மைகளே வீற்றிருந்தன.

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்று சொல்லி உள்ளூர் தொழில் முதலாளிகளை வைத்து கண்காட்சி நடத்தியது போல அலகாபாத்திலும் நடத்துகிறார்கள். குளுகுளு ஏசி.. சிகப்புக் கம்பள விரிப்புகள், வண்ணமயமான டிசைன்கள் என்று பார்க்கவே பளபளப்பாக இருந்தன.

அந்த கண்காட்சியில் அலகாபாத் மாவட்டத்தின் தயாரிப்பான மூஞ்ச்-அழகு கூடை பின்னும் ஸ்டாலில் இருந்தவரிடம் கேட்டபோது, “மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பத்து வருடம் இந்த தொழிலை செஞ்சிகிட்டு இருக்கோம். இதனை வித்துதான் வேலை செய்யும் பெண்களுக்கு 200 ரூபாய் கூலி தரணும்.. அதையே தர முடியுமா.. இல்லையான்னு தெரியல. வருடா வருடம் இந்தமாதிரி கண்காட்சி நடக்கக்கூடியவைதான். ஆனால், இந்த வருடம் கண்காட்சியும், கும்பவிழாவும் ஆடம்பரமா செய்திருக்காங்க. ஆனா பெரிய அளவுல கூட்டம்தான் வர்ல” என்றார்.

உங்களுக்கு தொழில் செய்ய அரசு லோன் எதாவது தருகிறதா எனக்கேட்டால், “எதுவும் இல்லை” என்று சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினார். மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வந்து தொழில் முதலீடு செய்வதாக கதையளந்தவர்களுக்கு இது ஒரு நல்ல கவிதை நீதி! மகளீர் சுய உதவிக் குழுக்கள்தான் பாஜக அரசின் உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்பு செய்கிறார்கள்.

வழக்கமாக இந்தக் கண்காட்சி “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” என்ற பெயரில் இருக்குமாம். ஆனால், இந்த முறை அந்தக் கண்காட்சிக்கு “மேக் இன் இந்தியா” எனப் பெயர் வைத்து தனது விளம்பரத்தை தேடிக்கொண்டது காவி கும்பல். மக்களை எப்படி மலிவாக நினைக்கிறார்கள் பாருங்கள்!

சரி இத்தகைய கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலுக்காக மோடி அரசு ஏதும் செய்ததா என்றால் எதுவும் இல்லை. மேற்கண்ட தொழில்கள் பெரும்பாலும் நலிவடைந்து வருகின்றன. இதை அந்த அரங்குகளில் இருக்கும் பணியாளர்களிடம் பேசினால் நிறைய செய்திகளை அளித்து ஒத்துக் கொள்கிறார்கள். அவர்களை ஊக்குவிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பலவற்றை நம்மூரில் சாலைகளில் கடை விரித்து விற்றுக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

படிக்க:
இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்
நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு லோன் தருவதாக வங்கிகள் ஸ்டாலும் வைத்திருந்தனர். அது எல்லா கண்காட்சியிலும் இருக்கும் ஒரு வழக்கமான டெம்ப்ளேட்தான் என்பதால் இந்த கைதொழில் நிறுவனங்களுக்கு அவற்றால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது நாமறிந்ததே.

வினவு களச் செய்தியாளர் அந்த காட்சியரங்கத்திற்குள் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் திரையில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் போடப்பட்ட புரிந்துணர்வு  ஒப்பந்தங்கள் குறித்த வீடியோவை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். ’மேக் இன் இந்தியா’ என்ற பெயரில் ஒப்புக்கு எதையாவது ஒளிபரப்பிக் கொண்டு தமது தோல்வியை மறைத்து வருகிறது காவி கும்பல். பெயர் மட்டும் பளபளப்பாக ‘மேக் இன் இந்தியா’வாம் !

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து…


முந்தைய பாகம்:
பாகம் – 1: அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. உண்மைதாங்க நம்புங்க, அதுக்குன்னு தட்டு முட்டு சாமான்லல்லாம் மேக் இன் இண்டியா, மேட் இன் இண்டியான்னு பொரிக்க முடியுமா , நெனச்சுப் பாருங்க.
    அந்த காலத்துலதான் சிலுவர்ல ஸ்பூனு வாங்குனாலும் பேர் வெட்டுவாங்க.. இன்னைக்கி செஞ்சா சிரிக்க மாட்டாங்க…
    எங்களுக்கு முன்னாடி எவனும் சிரிக்க முடியாது இருந்தாலும் பின்னாடி சிரிச்சிடுவாங்களே!!!!!!!!!!!!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க