ங்கையில் நூற்றுக்கணக்கான மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அதற்கு நேர் திசையில் இருந்த சாலையில் ஒன்றிரண்டு பேர் நடந்து வருவதும் சில வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தது. அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில் இருந்து இறங்கினார் மருத்துவ உதவியாளர் ஆனந்த் குமார். பைசாபத் ஊரை சேர்ந்த ஆனந்த் கவுட் சாதியை சார்ந்தவர்.

ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஆனந்த்.

“பார்ப்பனர்கள் மற்றும் சத்ரியர்களின் வீட்டிற்கு தண்ணீர் கொண்டு போய் கொடுக்கும் சாதியாக இருந்திருக்கிறோம். இப்பொழுதே அந்த முறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு  எல்லோரும் வெவ்வேறு தொழிலுக்கு போயிட்டு இருக்கோம்” என்றார் ஆனந்த்.

பார்ப்பன – சத்ரியர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு சேவகம் செய்வதற்கென ஒரு சாதியை சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள் என்றால் அந்த சமூகம் எந்தளவிற்கு பின் தங்கியுள்ளது என்பதற்கு இதுவே மேலான சாட்சி. அங்கே எந்த சாதியாக இருந்தாலும் தன் சாதியை சொல்லுவதற்கு தயங்குவதே இல்லை. அந்த அளவிற்கு சாதி கட்டமைப்பு இறுக்கமாக இருப்பதை காணமுடிகிறது.

ஆனந்திடம் கும்பமேளா குறித்து கேட்டபோது, “இந்தமுறை சிறப்பாக பண்ணியிருக்காங்க. 108 ஆம்புலன்ஸ் விழாவில் எல்லா இடத்திலயும் நிறுத்தி வச்சிருக்காங்க. எங்க வேலைக்கு சிறப்பு ஊதியமாக ரூ.200 தருவதாக சொன்னார்கள். ஆனால், அது எல்லோருக்கும் கிடைக்கல. எனக்கும் வர்ல. எனக்கு மாத  சம்பளம் ரூ.9500 தர்றாங்க. அதவச்சிதான் எனக்கான செலவை பார்த்துக்கிறேன். இங்க இருக்க எல்லா டிரைவரும் அப்படித்தான் இருக்காங்க.

எங்களுக்கு இந்த இடத்தில் தங்குவதற்கு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. ஏன்னு கேட்டா, “இது எமர்ஜென்ஸி வேலை. அதனால நீங்க வண்டியிலேயே படுத்துக்கொள்ளுங்கள்’னு சொல்றாங்க.

திரிவேணி சங்கமத்திற்கு அருகே, கங்கைக் கரையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ்கள்.

சாப்பாடு, தண்ணீர் உள்ளிட்ட செலவுக்கு அந்த 200 ரூபாயில்தான் பாத்துக்கனும்னு சொன்னாங்க. ஆனா அந்த பணம் கொடுக்கமாட்றாங்க. இது எங்களுக்கு சிரமமா இருக்கு. அதேபோல காலையில எழுந்து குளிக்க கொள்ள எந்த வசதியும் இல்ல. பாத்ரூம் கூட போக முடியவில்லை. அங்க போனா அதுக்கு முறையா பக்கெட் இல்ல. அவசரத்துக்கு வரவங்க சின்ன சின்ன பாட்டில்ல தண்ணி எடுத்துட்டு வந்து வேலையை முடிச்சிக்கிறாங்க. அதை ஒழுங்கா சுத்தம் செய்யிறது இல்ல. அப்புறம் எப்படி நாங்க பயன்படுத்த முடியும்?

கும்பமேளாவுக்காக திரிவேணி சங்கமம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள்: போதிய பராமரிப்பின்றி மூடப்பட்டுள்ளது.

சுத்தம் செய்ய ஆட்கள் இருக்குன்னு சொல்றாங்க. ஆனால், சுத்தம் செய்யிற மாதிரி தெரியவில்லை. எல்லா இடத்துலயும் சுத்தமில்லாத பாத்ரூமை கயிறு போட்டு கட்டி வைச்சிருப்பாங்க. பார்த்திருப்பீங்க.

பயன்படுத்த இலாயக்கற்ற கழிவறை.

இந்த கும்பமேளாவுல எல்லாத்துக்கும் காசுதான்.  பெரிய பெரிய உணவகங்களுக்கு சுமார் 40 லட்சம் வரை கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். எனக்கு தெரியவில்லை. இந்த பணத்தை எல்லாம் அரசு அதிகாரி, காண்ட்ராக்டர்கள்தான் சாப்பிடுகிறார்கள்.

அரசு 100 ரூபாய் ஒதுக்கினால் அதில் 40 தான் மக்களுக்கு கிடைக்கிறது. மீதி எல்லாம் அவர்களே சுருட்டிக் கொள்கிறார்கள். அதுதான் இங்கே நடக்கிறது. இன்னும் சிலர் கடைகளை காண்ட்ராக்ட் எடுத்து அதிக வாடகைக்கு அவர்கள் விடுகிறார்கள். அரசு வாகனத்தில் அதிகாரி வீட்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்து குளித்து விட்டு செல்கிறார்கள்”  என்று பொறிந்து தள்ளினார்.

“சரி, இங்க நீங்க வேறு என்னவெல்லாம் பிரச்சனைய சந்திக்கிறீங்க?”

இங்கே வண்டி ஓட்டுறது ரொம்ப சிரமாக இருக்கு. எல்லா இடத்துலேயும் பேரிகார்டர் தடுப்புக்கள் போட்டு வச்சிருக்காங்க. யாருக்காவது உடம்பு முடியலனா அவசரத்துக்கு கொண்டு போயி சேக்க முடியல. இன்னொரு பக்கம்  போலீஸ் பிரச்சனையா இருக்கு. எப்படி போனாலும் இது வி.ஐ.பி போற வழி. அதனால வேறபக்கமா போ’ன்னு என்று திருப்பி அனுப்பிடுறாங்க. இதுவே எங்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கு.

கோடிகளில் கொட்டி செய்யப்பட்ட கும்பமேளா ஏற்பாடுகள்.

இங்க டூட்டி போட்டதுல இருந்து உடம்பு முடியலன்னு அதிகமா வந்தது பெண்கள் தான். அதிலும் குறிப்பாக வயசானவங்க மற்றும் புதுசா வந்து குளிக்கிறவங்க. பழக்கமில்லாதவர்கள் குளிர் நீரில் இறங்கிடுறாங்க.. அவங்களால குளிர தாக்கு பிடிக்க முடியறதில்ல.  அதேமாதிரி குளிச்ச பின்னாடி ஈரத்துணியோடு இருப்பதால உடல் டெப்ரேச்சர் குறைஞ்சிடுது. அதுவும் இரவு மற்றும் அதிகாலையில்தான்.

போன ஜனவரி 15-ம் தேதி இந்த பிரச்சனையால தூக்கிட்டு வந்த இரண்டு பெண்களை வண்டிக்குள்ளயே வச்சிகிட்டு யமுனா செக்டார்ல 40 நிமிடம் சுத்திக் கொண்டு இருந்தேன். அதுக்கு காரணம் போலீஸ் வண்டிய விடாமா திருப்பி விட்டதாலதான்.

மருத்துவத்தை பொருத்தவரை கோல்டன் ஹவர்னு சொல்லுவாங்க. ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. ஆனால், அதுகுறித்த கவலையே பாதுகாப்புக்கு இருக்கும் போலீசுக்கு இல்லை” என்றார்.

தெரு விளக்குகள் இல்லா இருண்ட அலகாபாத்தின் வீதிகள்.

இந்த விழாவில் எந்த குறையும் வந்துடக்கூடாதுன்னு தாராளமா செலவு பண்ணியிருக்காங்க. ஆனா அலகாபாத்துல அடிப்படை வசதிகள் இல்லை, தெரு விளக்குகள் இல்ல. எப்பொழுதும் வாகனத்துல பயணிக்கும் நீங்க வெளிச்சம் இல்லாததைப் பற்றி என்ன நெனக்கிறீங்க?

இது வெத்து செலவுதான். இந்த காசை உட்கட்டமைப்பை விரிவுபடுத்த செலவிட்டிருக்கலாம்.  தெருவிளக்கு இல்லைங்கிறது பெரும்  குறைதான். ஆனா எங்களுக்கு பழகிடுச்சி.

கும்பமேளாவிற்கு வந்த மக்கள் இந்தமுறை சிறப்பாக செய்திருப்பதாக சொல்கிறார்களே.. அடுத்தமுறை யோகி வருவாரா?

நிச்சயம் இல்லை.

“ஏன்?”

இந்த ஆட்சி மீது விவசாயிகளுக்கு நிறைய வெறுப்பு இருக்கிறது. கடன் தள்ளுபடி செய்வதாக சொல்லி செய்யவில்லை. சமீபமாக கடன் வாங்கிய விவசாயிகள் கடனையும் ரத்து செய்யவில்லை. யார் வாங்கிய கடனை சுத்தமாக கட்டவில்லையோ அவர்களுக்கு தள்ளுபடியாகியுள்ளது. அவர்கள் எல்லாம் பெரிய பெரிய பண்ணையார்கள். மூன்று, நான்கு வருஷமா இவர்கள் கடனே கட்டாதவர்கள்.

படிக்க:
யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !
குழந்தைகள் உலகில் ஆத்திகம் VS நாத்திகம் – ஓர் அனுபவம் !

“கவ் ரக்‌ஷன் திட்டத்தைப் பற்றி என்ன நெனக்கிறீங்க? எந்த அளவிற்கு அதற்கு ஆதரவு உள்ளது?”

அதுவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. மாடு விற்க முடியவில்லை. எங்க ஊர்லயே நிறைய பேருக்கு பிரச்சனையா இருக்கு. மாட்டை அப்படியே விட்டுவிடவும் மனசு வரல. அதேசமயம் வீட்டிலேயே கட்டி பராமரிக்கவும்  முடியல. நிறைய செலவாகுது. அதனால் மொத்தமாக ஒரு தடுப்பு கட்டி அதில் மாட்டை கட்டிவிடுகிறார்கள். யோகி பசு பாதுகாப்பு மையம் வைப்பதாக சொன்னார். அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“ஆண்டி ரோமியோ ஸ்குவாடு இன்னும் இருகிறதா?”

ஆரம்பித்த கொஞ்ச நாள்லயே முடிவுக்கு வந்து விட்டது. காரணம் பொது இடத்தில் அண்ணன் தங்கையாக இருக்கும்பட்சத்தில் அது பிரச்சினையாகி விடுகிறது. அதனால் அது முடிவுக்கு வந்துவிட்டது. இன்னொருபக்கம் காதல் திருமணம் என்பது எங்கள் ஊரில் 10% கூட இருக்காது. கலப்பு திருமணம் சுத்தமாக இல்லை” என்றவரிடம் அடுத்த முறை யோகிக்கு ஓட்டு போடுவீங்களா என்றால்… சிரிக்கிறார்.

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து …


முந்தைய பாகம்:
பாகம் – 1: அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
பாகம் – 2: கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !
பாகம் – 3: கும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்