கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்ற வழக்கு இன்றைய டிஜிட்டல் உலகத்தில் என்னவாக இருக்கும்? அதற்கு குழந்தைகள் மனதில் கடவுளின் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
நண்பர் ஒருவரது வீட்டுக்கு போயிருந்தோம். அவர் வீட்டருகில் ஐம்பது பேர் கலந்து கொண்ட அல்லேலுயா செபக் கூட்டம் நடந்தது. மாலை ஆறுமணி இருக்கும். டெண்டு கொட்டகை, ஒளி விளக்குகள், மேடை, மைக்செட் சகிதம் கூட்டம் துவங்கியது. முதலில் மெழுகுவத்தி ஏத்துவாங்கன்னு பாத்தா, கொசு வத்திய ஏத்தி மூலைக்கி ஒன்னா வச்சுட்டு கூட்டத்த தொடங்கினாங்க.
“பேய் பிசாசை விரட்டும் வல்லமை வாய்ந்த கர்த்தருக்கு கொசுவ வெரட்ட முடியாம போச்சே பாவம்…” என கூட வந்த நண்பர் நாத்திகத்துக்கான பிள்ளையார் சுழியை போட்டார்.
எதுக்கும் பிரோயோசனம் இல்லாத எங்களை கண் இமைபோல காக்கும் கர்த்தாவே உமக்கு நன்றி, என தொடங்கி பிரசங்கம் ஆராவாரமாக ஓடிக்கொண்டு இருந்தது. கர்த்தர் உயிர்தெழுவார் என்று பொங்கி பொங்கி அடங்கினாரு பிரசங்கம் செய்த ஃபாதர்.
கூட்டத்தை வேடிக்கை பாத்துட்டு இருந்த தோழரின் ஆறு வயதுக் குழந்தை சிரித்துக் கொண்டே வீட்டுக்குள்ள ஓடி வந்தது. தன் அம்மாவிடம் போய் “ஏசு இறந்து மண்ணுக்குள்ள போயி செடியாவே மொளச்சுருப்பாரு. திரும்ப எப்படி உயிரோட வருவாரு. எறந்து போனா யாராலையும் திரும்ப வரவே முடியாது. ஏசு மட்டும் என்ன ஸ்பெசலா… திரும்பி வர்ரதுக்கு. ஒரே மாப்பிள்ளை (நடிகர் வடிவேலுக்கு அந்த குழந்தை வச்ச பேரு) படம் போல பேசுராங்கம்மா” என்றது.
“ஏன் ஒனக்கு சாமின்னா பிடிக்காதா” என்றார் கூட வந்த நண்பர்.
சாமிய பாத்தாதானே மாமா பிடிக்குதான்னு சொல்ல முடியும். நீங்க உங்க வீட்டுல சாமி கும்பிடுவிங்களா? என எதிர் கேள்வி எழுப்பியது.
கும்பிடுவோமே… ஏன் நீங்க கும்பிட மாட்டிங்களா?
சாமியே இல்ல. இருந்தாதானே கும்புட முடியும்.
சாமி இல்லையா. இப்பதான் நான் டீ கடையில பாத்துட்டு வாரேன் டீ குடிச்சுட்டு போச்சு.
நீங்க பொய் சொல்றீங்க. சாமிக்கி வாயி ஓட்டையாவே இருக்காது. எல்லா சாமியும் லிப்ஸ்டிக் போட்டுகிட்டு ஒதட்ட ம்ம்ம்ம்னு… தான் வச்சுருக்கும். நீங்க கோயில்ல பாத்ததில்ல!
நான் பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். இப்பதான் பாத்து வணக்கம் சொல்லிட்டு வந்தேன்.
அப்பன்னா சாமி எந்த கையால வணக்கம் சொன்னுச்சு.
வலது கையாலதான் வணக்கம் சொன்னுச்சு.
சாமிக்கி நெறையா கையி இருக்கும்ல அதுல எந்த கையில சொன்னுச்சு. அதபோல நாலஞ்சு கையி எனக்கும் இருந்தா ஈசியா வீட்டுப் பாடம் எழுதலாம். சீக்கிரம் சோப்பு போட்டு குளிக்கலாம் சூப்பராருக்கும்…
நண்பர் எதிர்பாக்கல, இருந்தாலும் சமாளிச்சுட்டாரு “ஆமாமா நெறையா கையிருக்கதால ஒரு கையால டீ குடிச்சுட்டே ஒரு கையால வணக்கம் சொல்லிச்சு.
சாமி கல்லுல செஞ்ச சிலை. அப்புடியேதான் கைய வச்சுருக்கும் நான் பாத்துருக்கேன். கல்லுக்கு வணக்கம் சொல்றீங்க என்னா… மாமா நீங்க.
நீ ஒங்க மிஸ்சுக்கு வணக்கம் சொல்வல்ல. அதுபோல சாமின்னா எனக்கு மிஸ்சு மாதிரி. நான் சாமிய எங்க பாத்தாலும் வணக்கம் சொல்வேன்.
நாங்க எங்க மிஸ்சுக்கு வணக்கம் சொன்னா பதிலுக்கு அவங்க குட்மானிங் சில்ட்ரென்னு சொல்வாங்க. உங்க சாமி சொல்லுமா..?
ம்…. சொல்லுமே. குட்மானிங் சொல்லும் சாப்பாடு குடுக்கும் எங்க சாமி எல்லாம் செய்யும்.
அப்ப உங்களுக்கு பசிச்சா சோறு சாமி போடுமா இல்ல உங்க அம்மா போடுவாங்களா?
சரி விடு நீ நம்ப மாட்டேங்குற. நாளைக்கி ஒங்க வீட்டுக்கு கடவுள கூட்டிட்டு வரேன் அப்ப என்ன செய்வ.
கடவுள் இருக்காருன்னு நம்புவேன்.
சின்னப் பிள்ள… யாரோ உன்ன நல்லா ஏமாத்திருக்காங்க. சாமி இல்லேன்னு யாரோ ஒனக்கு தப்பாச் சொல்லியிருக்காங்க.
பெரியார்தான் சாமி கும்பிட்றவங்க முட்டாள்னு சொல்லிருக்காரு. அதனால நான் சாமி கும்பிட மாட்டேன்.
பெரியாரு ஓங்கிட்ட வந்து சொன்னாரா சாமி இல்லேன்னு.
பெரியாரு இறந்து மண்ணுக்குள்ள புதைஞ்சு புல்லா முளைச்சிட்டாரு. அவரு உயிரோட இருந்தப்ப புத்தகத்துல எழுதி வச்சுருக்காரு, நாமதான் படிக்கனும்.
புதைச்சிட்டாங்க… முளைச்சிட்டாருன்னு அறிவியல் விளக்கம் வேற தர்றியா நீ. பெரியாரு எழுதுனத நீ படிச்சியா? எந்த புத்தகத்துல இருக்கு எடுத்துட்டுவா பாப்போம்.
நான் ஒன்னாவதுதான் படிக்கிறேன். எனக்கு அ, ஆ, இ, ஈ… தான் தெரியும். எங்க அம்மாதான் படிச்சுட்டு சொன்னாங்க.
உங்க அம்மா சொல்றதல்லாம் நம்பாதே. உங்க பள்ளிக்கூடத்துல தினமும் பிரேயர் பண்ணி சாமி கும்பிடுறல்ல அதனால டீச்சர் சொல்றத நம்பு.
நான் நம்ப மாட்டேன் அவங்களும் சாமி பத்தி தப்பா சொல்றாங்க.
டீச்சருக்கே பாடம் எடுக்குறியா நீ. சரி அவங்க என்ன தப்பா சொன்னாங்க.
அன்பான இறைவா இந்த காலை பொழுதை எமக்காக தந்தமைக்கு நன்றின்னு சொல்ல சொல்றாங்க. தப்புல்ல…
தப்பில்லையே சரியாதானே சொல்லிருக்காங்க. நமக்கு எல்லாம் கடவுள் தானே தர்ராரு.
நமக்கு காலை பொழுத தர்ரது சூரியானா? கடவுளா? அப்ப சூரியனுக்குதானே நன்றி சொல்லனும்.
இப்படி ஒரு விவாதம் விறுவிறுப்பா போகும் நேரம் அருகில் நடந்த ஜெபக்கூட்டம் முடிந்துவிட்டது. சிக்கன் பிரியாணி இதர ஐட்டங்கள் மற்றும் ஐஸ்கிரிம் சகிதம் உணவு வேளை ஆரம்பமானது.
அதுவரை கடவுள் மறுப்பு பேசிய குழந்தை, ”நானும் போகணும், பிரியாணி சாப்பிட்டே ஆகணும்” என அடம் பிடித்தது. சிங்கம் போல வாசப்படியை நோக்கி சீறி பாய்ந்த குழந்தையை கட்டுப்படுத்த பெற்றோர் இருவரும் பெரும் பாடுபட்டனர்.
இதுவரைக்கும் கடவுள் இல்லை ஏசு எறந்துட்டாரு திரும்பவும் வரமாட்டாருன்னு வசனமெல்லாம் பேசிட்டு பிரியாணிக்காக கட்சி மார்..றியே இது சரியா? என்றார் நண்பர்.
“பிரியாணி மட்டும் இல்ல, ஐஸ்கிரிமும் தர்றாங்க, என்ன போக விடுங்க ப்ளீஸ்” என்றதும் சிரிப்பொலி அடங்கவில்லை.
அப்ப சாமி இருக்குன்னு ஒத்துகிட்டு சாப்பிட போறியா?
“நீங்க வேணும்னா அங்க எட்டி பாருங்க உண்மையிலேயே சாமி தெரியல.. பிரியாணியும் ஐஸ்கிரிமுந்தான் இருக்கு” என்றது குழந்தை.
அறிவாக விவாதித்த அழகு குழந்தை பிரியாணி வாசத்தால் அழுதழுது அரைமணி நேரம் கடந்தது.
இதுபோல ஒரு வாதம் பள்ளியிலும் நடந்ததாக குழந்தையின் அம்மா கூறினார். கடவுள் பற்றி தன் கூட படிக்கும் பிள்ளைகளுடன் சமயம் வரும் போதெல்லாம் பேசியிருக்கிறாள் அந்தக் குழந்தை. ஒருநாள் பள்ளிக்கூடத்தில் அவள் கூட படிக்கும் குழந்தைகள் சூழ்ந்து கொண்டு அவள் அம்மாவிடம் இப்படி பேசியுள்ளனர்.
ஆண்டி நேத்து இலக்கியா ஏன்னோட புத்தகத்த மிதிச்சுட்டா. தொட்டு கும்பிடுன்னு சொன்னேன், செய்ய மாட்டேங்குறா.
புத்தகத்த மிதிச்சா சாரிதானேம்மா சொல்லனும் எதுக்கு தொட்டு கும்பிடனும்.
“இப்புடி தப்பு செஞ்சா.. தப்பா பேசுனா சாமி கண்ண குத்தும் தானே ஆண்டி.” என்றது இன்னொரு குழந்தை.
“சாமி கும்பிட மாட்டேன்னு நிறையா வாட்டி சொல்லிட்டேன். ஒரு தடவகூட சாமி கண்ண குத்தல” என்றாள் இலக்கியா.
நீ இப்படி பேசினே சாமி பிள்ளையா இல்லாமெ சாத்தான் பிள்ளையா மாறிடுவெ.
நா சாத்தான் பிள்ளை கிடையாது, எங்க அம்மா அப்பா பிள்ளை.
நீங்களே சாமி கும்பிட மாட்டிங்கன்னு சொல்றா இலக்கியா. உண்மையா ஆண்டி?
ஆமாடா கண்ணு நானும் கும்பிட மாட்டேன்.
ஏதாவது ஒரு சாமிய நாம கும்பிடணும். முருகரோ, பிள்ளையாரோ, ஏசுவோ, முஸ்லிமோ கண்டிப்பா கும்பிடணும் ஆண்டி…
சரிடா செல்லம், நீ சொல்றென்னு கும்பிடரேன். நீ சொன்னதுல ஏதாவது ஒரு சாமிய எங்க வீட்டுக்கு வரச்சொல்லு வந்ததும் நான் கும்பிடரேன்.
அய்ய……! சாமி எப்புடி வீட்டுக்கு வரும் நாமதான் கடக்கி போயி வாங்கிக்கனும்.
என்னடா பாப்பா கடையில போயி பிஸ்கெட்டு வாங்கறாப்போல சொல்ற. சாமி என்ன கடையில விக்கிற பொருளா.
ஆமா ஆண்டி கடையில எல்லா சாமி போட்டாவும் இருக்கும். எந்த சாமி வேணுமோ வாங்கிக்கலாம்.
நானு கடையில போயெல்லாம் போட்டா வாங்க மாட்டேன். ஒங்க வீட்டுல இருக்குற சாமிய எங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வா. கடையில போட்டோவுக்கு போஸ் குடுத்தாப்போல ஒரு போஸ் குடுக்க சொல்லு. அந்த படத்த வச்சு கும்பிட்டுக்குறேன்.
போங்க ஆண்டி நீங்க ஒரே சிரிப்பு சிரிப்பா பேசுறீங்க. என்று அந்தக் குழந்தை சொன்னதைக் கேட்ட மற்ற குழந்தைகளும் சிரித்தனர்.
குழந்தைகள் உலகில் ஆத்திகமோ நாத்தீகமோ எவ்வளவு இயல்பா இருக்கு பாத்தீங்களா? இவ்ளோ அறிவா இருக்குற நம்ம குழந்தைகளை இன்னும் 5 வருசம் மோடி ஆண்டால் முழு முட்டாளாக்கிடுவாங்களா இல்லையா?
(உண்மைச் சம்பவம் – அடையாளங்கள், பெயர் மாற்றப்பட்டிருக்கின்றன)
அருமையான பதிவு,
வாழ்த்துக்கள்.
ஒரு நாள் அந்தச் சிறுவன் அழுதுகொண்டே பள்ளியில் இருந்து வீடு வந்துள்ளான். கேடதற்கு, “ஆட்டோல வர்ர அண்ணன் அடிசிட்டான்” என கூறி உள்ளான்.
“ஏன் அடிச்சான்? நீ என்ன பண்ணுன?”
“எல்லாரும் ஜாலியா பாட்டு பாடினாங்க, நானும் பாடினேன். அதான் அடிச்சான்.”
“என்ன பாட்டு பாடின?”
“கடவுள் இல்லை, கடவுள் இல்லை,
கடவுள் என்பதில்லையே!
கடவுளை வணங்குவோர்
அறிவு கெட்ட மூடரே!
பாட்டு பாடினேன்”
ஆத்திகம் சகிப்பின்மையையும் வளர்க்கும். பாசிஸ்டாகவும் நம் குழந்தைகளை அடக்கும்.
படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. அருமை.
Nice article, God is within us no need to search outside every human in the world is GOD