“நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல”: பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்

தினசரி வேலை நேர வரம்புகளை நிறுவனங்கள் முறையாக அமல்படுத்த வேண்டும், தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையான ஆணைகள்) சட்டத்திலிருந்து ஐ.டி. துறையின் விலக்கு நீக்க வேண்டும் மற்றும் தொழிலாளர் சட்ட மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கம் கோரியது.

மார்ச் 09 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சுதந்திரப் பூங்காவில், தொழில்நுட்ப ஊழியர்கள் (ஐ.டி. ஊழியர்கள்) மீதான சுரண்டலுக்கு எதிராகவும் சட்டப்பூர்வ பணிபாதுகாப்பு கோரியும் ஐ.டி. ஊழியர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“கர்நாடகா தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தின்” (KITU) தலைமையில் நடந்த இப்போராட்டத்தில், “நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல”, “ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலை (Work life balance) ஒவ்வொரு ஊழியரின் உரிமை” போன்ற வாசகங்கள் கொண்ட சிவப்புக் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

ஊழியர்களை ஒட்டச்சுரண்டும் கூடுதல் நேர வேலை (Over time), விடுமுறை நாட்களில் பணி செய்ய நிர்ப்பந்திப்பது, ஒழுங்கற்ற வேலை நேர அட்டவணை உள்ளிட்ட வேலை நேரத்திற்குப் பிந்தைய பணி கோரிக்கைகளுக்கு (After hours work demand) எதிராக சட்டப்பூர்வ பாதுகாப்பைக் கோரி தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். தொழிலாளர்களின் இக்கோரிக்கையானது ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஏற்கெனவே சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

தினசரி வேலை நேர வரம்புகளை நிறுவனங்கள் முறையாக அமல்படுத்த வேண்டும், தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையான ஆணைகள்) சட்டத்திலிருந்து ஐ.டி. துறையின் விலக்கு நீக்க வேண்டும் மற்றும் தொழிலாளர் சட்ட மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கம் கோரியது.

போராட்டத்தில் பேசிய கெ.ஐ.டி.யூ. தொழிற்சங்க உறுப்பினரும் ஐ.டி. ஊழியருமான அஷ்வின், “தினமும் நாங்கள் வேலை முடிந்து கிளம்பும்போதும் எங்கள் வேலை முடிவடைவதில்லை. எப்போது வேண்டுமானாலும் எங்களுக்கு வேலை கொடுக்கப்படும் என்ற நிலை உள்ளது. வேலை நேரத்திற்குப் பிறகு வேலை தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை என்றால், ஒத்துழைக்காதவராகவோ அல்லது குறைவான அர்ப்பணிப்புள்ளவராகவோ பார்க்கப்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையான அழுத்தம் எங்கள் மன ஆரோக்கியத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது”என்றார்.


படிக்க: விசாகா உருக்கு ஆலை தனியார்மயத்தை தடுத்து நிறுத்திய தொழிலாளர் போராட்டம்


தொழிற்சங்க துணைத் தலைவரும் பெண் ஊழியருமான ரஷ்மி சவுத்ரி, “நாங்கள் ஏற்கெனவே ஒரு நாளைக்கு 14-16 மணிநேரம் வேலை செய்கிறோம். பின்னர் ஊதியம் இல்லாத வேலை செய்ய வீட்டுக்குத் திரும்புகிறோம். கார்ப்பரேட் தலைவர்கள் வாரத்திற்கு 70 மணிநேர வேலைக்காக வாதிடுவது, ​​அவர்கள் எதனை இயல்பாக்க விரும்புகிறார்கள் என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும். அரசாங்கம் தலையிடவில்லை என்றால், இது எங்கள் யதார்த்தமாக மாறிவிடும்” என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி மற்றும் எல்&டி-யின் எஸ்.என். சுப்ரமணியன் ஆகியோரின் நயவங்கமான கருத்துக்களை அம்பலப்படுத்தினார்.

போராட்டத்தின் ஊடாக போலிசின் தடையையும் மீறி நாராயண மூர்த்தி மற்றும் எஸ்.என். சுப்பிரமணியன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிக்கப்பட்டன. கெ.ஐ.டி.யூ. தொழிற்சங்க பொதுச் செயலாளர் சுஹாஸ் அடிகா, ஐ.டி. துறையில் நச்சுத்தன்மை வாய்ந்த பணி கலாச்சாரத்தைக் கண்டித்து, உடனடி அரசாங்கத் தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தார். தொழிற்சங்க உறுப்பினரான ராம், “ஊழியர்கள் ஒன்றுபடவில்லை என்றால், சிறந்த சட்டங்கள் கூட செயல்படுத்தப்படாமல் போகும்” என்பதை வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியானது உலகம் முழுவதிலும் பல்வேறு துறைகளில், குறிப்பாக தொழில்நுட்ப துறையில், தொழிலாளர்களுக்கு எதிரான பேரபாயமாக மாறி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை வெளியேற்றி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலுள்ள பார்ப்பனிய முதலாளிகளான நாராயண மூர்த்தி, எஸ்.என்.சுப்பிரமணியன் உள்ளிட்ட லாபவெறிப்பிடித்த ஓநாய்கள் தொழிலாளர்களை வாரத்திற்கு 70-90 மணி நேரம் வேலை செய்ய வைக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கெதிராக நடத்தப்பட்டுள்ள கர்நாடகாவின் கெ.ஐ.டி.யூ-வின் போராட்டமானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தொழிற்சங்கமே கர்நாடகாவின் சித்தராமையா அரசு கொண்டுவந்த 12 மணி நேர வேலைநேர சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாபவெறி ஓநாய்களுக்கு எதிராக தற்போது கெ.ஐ.டி.யூ முன்னெடுத்துள்ள போராட்டம் கூடிய விரைவில் இந்தியா முழுவதும் பற்றிப் பரவும்.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க