விசாகா உருக்கு ஆலை தனியார்மயத்தை தடுத்து நிறுத்திய தொழிலாளர் போராட்டம்

ஒன்றிய மாநில அரசுகள் இவ்வளவு பெரிய உருக்காலையை அழிவுக்குத் தள்ளிவிடும் வகையில் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நக்கபள்ளியில் வரவிருக்கும் புதிய தனியார் ஏர்சலர் மிட்டல் / நிப்பான் ஸ்டீல் உருக்காலையை கட்டியமைக்க ஏதுவாக அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன.

ராஷ்டிரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் (RINL – Rashtriya Ishpat Nigham Limited) என்று புதுபெயிரிடப்பட்டுள்ள விசாகா உருக்காலை (VSP – Vizag Steel Plant) ஒன்றிய அரசின் இரும்பு எஃகு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கி வரும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திர மாநிலத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வந்த இந்த நிறுவனம் ஒன்றிய அரசின் தனியார்மயப்படுத்தும் கொள்கையின் காரணமாக தொடர்ந்தும் அரசு ஆதரவின்றி கடும் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக நிலைமை மோசமாகி கடனில் மூழ்கியது. அதையே காரணமாக்கிக் கொண்டு அரசின் மொத்த பங்குகளையும் தனியாருக்கு விற்று விடத் தீர்மானித்துள்ளது ஒன்றிய அரசு.

இறுதியாக இப்போது கடன் நெருக்கடி முற்றி உருக்காலை அதன் முழு திறனுடன் செயல்பட இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உற்பத்தி மேன்மேலும் சுருங்கியதன் விளைவாக கடந்த ஆண்டு 2024 செப்டம்பர் முதலாக தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு பல வகையான நிலுவைத் தொகைகள் அப்படி அப்படியே பாக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஊதியம் இல்லாத நிலையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் பெரும் அவதிகளுக்குள்ளாகி வருகின்றன. ஆயினும் ஆலைத் தொழிலாளர்கள் அரசின் தனியார்மய முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒன்றிய அரசின் அமைச்சரவை குழு விசாகா உருக்கு ஆலையின் 100 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்று விட அனுமதி அளித்து இந்த ஜனவரி 27 ஆம் தேதியுடன் நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனாலும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான ஒன்றுபட்ட போராட்டத்தினால் ஒன்றிய அரசின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசின் முடிவை எதிர்த்து உருக்காலை தொழிலாளர்கள் விசாகப்பட்டினம் அனைத்து தொழிற்சங்கங்களின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டு போராட்டக் குழு அமைத்து போராடி வருகின்றனர். தொழிலாளர்களின் இந்தத் தொடர் தர்ணா போராட்டம் உருக்காலை வாயிலிலும் விசாகப்பட்டினம் மாநகராட்சி அலுவலக வாயிலிலும் 2021 பிப்ரவரி 12 முதல் நான்காண்டு காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இப்போராட்டத்தின் அடிப்படை நியாயத்தை உணர்ந்து ஏற்றுக் கொண்டிருக்கின்ற விசாகப்பட்டினம் நகர மக்கள் தொடர்ந்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். இப்போராட்டங்களின் காரணமாகவே ஒன்றிய அரசு தனது முடிவை செயல்படுத்த இயலாமல் பல வகையான சதித் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து இந்த ஜனவரி 17 அன்று பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு (CCEA – Cabinet Committee for Economic Affairs)11,440 கோடி ரூபாயை விசாகா உருக்காலையின் நிவாரண மற்றும் மீட்புத் தொகையாக ஒதுக்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் விசாகா உருக்காலை வரும் ஆகஸ்ட் மாதம் முடிவில் அதன் முழு ஆற்றலுடன் செயல்படத் தொடங்கும் என்று அமைச்சரவைக் குழு கூறி இருக்கின்றது. இரும்பு எஃகுத் துறை ஒன்றிய அமைச்சர் எச். டி. குமாரசாமியும் ஆந்திர மாநில முதல்வரான சந்திரபாபு நாயுடுவும் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்போது விசாகா உருக்காலையை தனியாருக்கு கொடுக்கும் பேச்சே எழவில்லையே என்று ’ராஜதந்திர’ முறையில் பேசி நழுவி இருக்கின்றனர்.

இந்த நிதி ஒதுக்கீட்டையே விஷாகா உருக்காலையின் மீட்டுருவாக்கம் என்று ஒன்றிய அரசும் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவோம் புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால் அனைத்துத் தொழிற்சங்கங்களின் விசாகா உருக்காலை பாதுகாப்புப் போராட்ட கமிட்டி இந்த நிதி ஒதுக்கீடு எவ்வகையிலும் பயனில்லை என்று கூறியுள்ளது. மேலும், இரும்பு தாதுக்கான தனி சுரங்க ஒதுக்கீடு; செயில்-உடன் (SAIL – Steel Authority of India Limited) இணைப்பது ஆகியவை மட்டுமே பிரச்சனையை தீர்க்கும் என்றும் அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.


படிக்க: அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !


இப்பொழுது ஒதுக்கப்பட்டு இருக்கும் நிதியான 11,140 கோடி என்பதும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சில மாத சம்பள பாக்கி, செலுத்த வேண்டிய சேம நிதி, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கிகள், நிலுவை வைத்திருக்கின்ற ஜி.எஸ்.டி, அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி இவற்றுக்காகவே கணிசமான தொகை போய்விடும். மீத நிதியை கொண்டு சந்தை விலையில் இரும்புத்தாது வாங்கி கோக் நிலக்கரியை இறக்குமதி செய்து உற்பத்தியை தொடங்க முடியுமா என்பதே சந்தேகத்துக்குரியதாகும்.

2023 ஏப்ரல் மாதத்தில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 15,000 என்றிருந்தது. இப்பொழுது ஜனவரியில் 12,300 பேர் மட்டுமே உள்ளனர். இன்னும் வருகிற மூன்று ஆண்டுகளில் 4,000 பேர் ஓய்வு பெற உள்ளனர். அதேபோன்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2023 இல் 20,000 பேர் இருந்தனர். இப்போது 14,000 பேர் மட்டுமே இருக்கின்றனர். 2025 ஜனவரி 31க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென கெடு விதித்து அறிவிக்கப்பட்ட வி.ஆர்.எஸ். திட்டத்தின் கீழ் அதிகாரிகளும் தொழிலாளர்களுமாக சேர்ந்து 800 பேர் வரை விருப்ப ஓய்வு விண்ணப்பம் கொடுத்து விட்டனர்.

இறுதியாக கடன் நெருக்கடியுடன் ஊழியர்கள் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து போய் விசாகா உருக்காலையின் இன்றைய நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. உருக்காலையில் மொத்தம் உள்ள மூன்று உருக்கு உலைகளில் கடைசியாக அன்னபூர்ணா என்னும் இரண்டாவது உருக்கு உலை (BF 2) 2024 செப்டம்பர் 12 அன்று மூடப்பட்டது. கோதாவரி எனப்படும் முதலாவது உருக்கு உலை (BF 1) மார்ச் மாதமே மூடப்பட்டு விட்டது. மூன்றாவது உலை கிருஷ்ணா (BF 3) மட்டுமே எப்பொழுது மூடப்படுமோ என்ற நிலையில் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. விசாகா உருக்காலை தானே உற்பத்தி செயல்பாட்டை இழந்து கடனில் மூழ்கி மூடப்படும் நிலையை அடைய ஒன்றிய மாநில அரசுகள் முழு மூச்சுடன் நெட்டி தள்ளுகின்றன.

விசாகா உருக்காலை கடனில் மூழ்க காரணம் தான் என்ன?
தனிச்சுரங்கம் இல்லாததே அடிப்படை பிரச்சனை

இந்தியாவில் இருக்கும் தனியார் மற்றும் பொதுத்துறை சார்ந்த இரும்பு உருக்காலைகளில் விசாகா மட்டுமே தனக்கென தனிச் சுரங்கம் இல்லாத ஒரே உருக்காலையாகும். ஒரு டன் இரும்பு எஃகு தயாரிக்க 1.6 டன் இரும்புத்தாது தேவைப்படுகிறது. டாட்டா, ஜிந்தால், மற்றும் செயில் போன்ற எல்லா உருக்கு ஆலைகளுக்கும் ஒரு டன் இரும்புத்தாது 3,000 ரூபாய்க்கு கிடைக்கும்பொழுது (சொந்தமான சுரங்கம் இருப்பதினால் அதன் உற்பத்தி விலைக்கே கிடைக்கிறது) விசாகா உருக்காலை ஒரு டன் ரூ.6,350 க்கு வெளிச்சந்தை வாங்குகிறது. (சந்தையில் ஏற்ற இறக்கங்கள் உண்டு என்பது தெரிந்ததே) இதுதான் விசாகா உருக்காலைக்கு முப்பதாண்டுகளாக நீடித்து வரும் அடிப்படையான பிரச்சினையாகும்.

தனிச்சுரங்கம் ஒதுக்க வேண்டும் அல்லது செயிலுடன் (SAIL) இணைக்க வேண்டும். இதுவே தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் துறை சார் வல்லுனர்களின் ஒரே கோரிக்கையாகும்; இதுவே நெருக்கடிக்கு ஒரே தீர்வுமாகும். ஆனால் இப்போது ஜனவரி 23 அன்று பேசிய இரும்பு எஃகுத் துறையின் இணை அமைச்சரான பூபதி ராஜு சீனிவாச வர்மா “இவ்வளவு கடனில் சிக்கி இருக்கின்ற விசாகா ஆலையை செயிலுடன் இணைக்க எந்த வாய்ப்பும் இல்லை” என்று கறாராக கூறியிருக்கிறார்.

ஒன்றிய அரசின் சதித்தனங்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக நிலைமை மேலும் மோசமாகி உருக்காலை நட்டத்தில் விழுந்ததுடன் கடனிலும் மூழ்கியது. விசாகா உருக்காலையின் இப்போதைய கடன் மட்டும் 26 ஆயிரம் கோடிக்கும் மேலாகும். இன்னும் ஜி.எஸ்.டி, சேமநலநிதி, வருமான வரி போன்ற பாக்கிகளை எல்லாம் சேர்த்துக் கணக்கிட்டால் 28 ஆயிரம் கோடியை தாண்டும் என்கிறார்கள்.

உருக்காலையின் ஆண்டு உற்பத்தித் திறன் 7.3 மில்லியன் டன்களாகும். தொடர்ந்தும் பல சவால்களை சமாளித்து லாபத்தில் இயங்கி வந்த இந்த பொதுத்துறை நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் பெரும் நட்டத்தில் விழுந்தது. 2023 – 24 ல் மொத்தம் 4,850 கோடி நட்டம் காட்டியது. இது 2022 – 23 இல் 2,860 கோடியாக இருந்தது. ஓராண்டுக்கு 2,000 கோடி நட்டம் என்கிற விகிதத்தில் ஒரு நிறுவனம் எப்படி இயங்க முடியும்? நிறுவனம் நட்டமடைவதற்கு காரணமாக இருந்த ஒன்றிய அரசே (அது பற்றிய விவரங்களை கீழே விரிவாக பரிசீலிப்போம்) இப்போது நட்டமடைந்த நிறுவனத்தை தனியாருக்கு கொடுத்து விடுவதைத் தவிர வேற என்ன வழி இருக்கிறது? என்று எளிய முறையில் எவரும் ஏற்கின்ற வகையில் தனது முடிவை நியாயப்படுத்திடப் பார்க்கிறது..

நட்டம் ஏற்பட வேறு தனித்த காரணங்கள் ஏதுமில்லை. மூலப் பொருட்களான இரும்பு தாது மற்றும் எரிபொருளான கோக்நிலக்கரி ஆகியவற்றின் சப்ளை சங்கிலித் தொடர் உத்தரவாதம் இல்லாமல் இருப்பதும், அதற்கு ஈடாக ஒன்றிய அரசின் எந்த நிதி ஆதரவும் இல்லாமல் இருப்பதும் தான் ஒரே காரணமாகும். இரும்புத்தாதுக்கு இரண்டு மடங்கு விலை தர வேண்டி இருக்கிறது. மூலப் பொருட்களை விலை குறையும் காலத்தில் வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள போதிய நிதி ஆதாரங்கள் இல்லை. எப்பொழுதுமே இவற்றில்தான் சிக்கல் நீடித்து வருகிறது.

உருக்காலைக்குத் தேவைப்படும் முக்கியமான எரிபொருளான கோக் நிலக்கரி (Coking Coal) முற்றிலுமாக இறக்குமதி செய்யப்படுகிறது. உருக்காலையில் இருக்கும் மூன்று உலைகளிலும் 20 ஆயிரம் டன் எஃகு உற்பத்தி செய்ய 14 ஆயிரம் டன் கோக் நிலக்கரி தேவைப்படுகிறது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் எப்பொழுதும் நிலக்கரியை இறக்குமதி செய்து இருப்பு வைத்துக்கொள்ள இயலுவதில்லை. ஒரு வாரத்துக்கானது மட்டுமே இருப்பு வைக்க முடிகிறது. எனில் இருப்பு தீர்ந்தால் உலை மூட வேண்டி நேரும். எப்போதுமே வாய்க்கும் கைக்கும் என்றே இயங்கி வருகிறது. விசாகா உருக்காலைக்கு செயல் மூலதனம் (Working Capital) போதிய அளவு இல்லாதது முக்கிய பிரச்சினையாகும். அரசின் நிதி ஆதரவும் இல்லாததால் போட்டியாளர்களின் எந்த சவாலையும் எதிர்கொள்ள இயலாமல் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.

உருக்காலையின் அடிப்படை பிரச்சனை தனி சுரங்கம் இல்லாதது தான் என்பதை வல்லுநர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக் கொண்டு விட்டனர். ஒன்றிய அரசுக்கும் எடுத்துச் சொல்லி விட்டனர். ஆயினும் ஒன்றிய அரசு, இரும்பு தாதுவை பொது துறை உருக்காலையின் உற்பத்திக்கு ஒதுக்கீடு செய்யாமல், சீனாவுக்கும் ஜப்பானுக்கும் நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது என்பதை எப்படி புரிந்து கொள்வது? மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் இங்குதான் பல்லிளிக்கிறது.

இரும்பு எஃகு உற்பத்தி துறையில் இந்தியா பின்பற்றும் கொள்கை நடைமுறை

விசாகா உருக்காலை ஆந்திரத்தில் உள்ளதிலேயே மிகப்பெரிய கனரகத் தொழிற்சாலையாகும். ஏற்றுமதி இறக்குமதிக்கு வசதியாக கடற்கரையில் துறைமுகத்துக் அருகே அமைந்திருக்கிறது. நவீன தொழில்நுட்பங்களையும் பெற்றிருக்கிறது. விசாகா உருக்காலை 1991-இல் 1.6 மில்லியன் டன் உற்பத்தியில் தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்று ஆண்டுக்கு 7.3 மூன்று மில்லியன் டன் உற்பத்தி ஆற்றலை அடைந்திருக்கிறது. மேலும் அது 20 மில்லியன் டன் உற்பத்தி ஆற்றலை உயர்த்தும் அளவுக்கு இட வசதியும் கட்டமைப்பு வசதிகளும் பெற்றிருக்கின்றது. மூலப்பொருளான இரும்புத்தாது தொடர்ந்து கிடைத்து வரும் நிலையில் விசாகா உருக்காலையில் நட்டம் ஏற்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

ஆனால் ஒன்றிய மாநில அரசுகள் இவ்வளவு பெரிய உருக்காலையை அழிவுக்குத் தள்ளிவிடும் வகையில் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நக்கபள்ளியில் வரவிருக்கும் புதிய தனியார் ஏர்சலர் மிட்டல் / நிப்பான் ஸ்டீல் உருக்காலையை கட்டியமைக்க ஏதுவாக அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. புதிதாக உருவாகி வரும் ஏர்சலர் மிட்டல் / நிப்பான் ஸ்டீல் உருக்காலைக்கு இரும்புத்தாது சப்ளைக்காக என்.எம். டி.சி. உடன் நீண்ட கால ஒப்பந்தம் உருவாக்கி கொடுத்திருக்கிறது ஒன்றிய அரசு. ஆனால் அதையே விசாகா உருக்காலைக்குச் செய்ய மறுக்கிறது என்பதே. மிட்டலின் உருக்காலை 1.4 லட்சம் கோடி மூலதனத்தில் 17.8 மில்லியன் டன் உற்பத்தி இலக்குடன் பிரம்மாண்டமானதாக உருவாகி வருகிறது. இது எல்லா வகையிலும் விசாகா உருக்காலைக்கு நேரடி போட்டிக் கம்பெனி ஆகும். விசாகாவைச் சுருட்டி மிட்டலிடம் ஒப்படைத்து விடுவதே அரசுகளின் சதித்திட்டமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி அரசாங்கம் இருந்தபோதே ஜி. பி. எல். (G.P.L.Gangavaram port Limited) இல் அரசுக்கு சொந்தமான 10.4 சதவிகித பங்குகளை (5. 38 கோடி பங்குகள்) ஏர்சலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டது. இப்பொழுது ஜி.பி.எல் துறைமுகம் ஏர்சலர் மிட்டல் / நிப்பான் ஸ்டீல், எஃகு உருக்காலை நிறுவனத்துக்குச் சொந்தமாகிவிட்டது. ஜி.பி.எல். என்பது விசாகப்பட்டினத்தில் விசாகா உருக்காலைக்கு அருகில் இருக்கின்ற ஆழ்கடல் துறைமுகமாகும் (Deep Sea Port). ஜி.பி.எல் ஏற்கனவே லாபத்தில் இயங்கி வந்தது. கடன் சிறிதும் இல்லாதது. எனில் அரசாங்கத்திற்கு தனது பங்குகளை விற்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? விசாகா உருக்காலையின் 80 சதவிகித ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் இந்தத் துறைமுகத்தின் மூலமாகவே நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.

மேலும் இந்தியாவுக்கு தேவையான இரும்பு எஃகு சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் டிசம்பர் முடிய இறக்குமதி செய்தது கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். சீனத்தின் இரும்பு எஃகு விலை குறைவாக இருப்பதே முக்கிய காரணமாகும். மேலும் தென்கொரியா ஜப்பான் ஆகிய நாடுகளுடன் எப்.டி.ஏ (Free Trade Agreement) என்ற முறையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதால் அந்த நாடுகளிலிருந்தும் இறக்குமதிகள் அதிகரித்திருக்கின்றன. அதில் இரும்பு எஃகு முக்கியப்பங்கு வகிக்கிறது.

ஏற்கெனவே ஐரோப்பாவின் எஃகுச் சந்தை கணிசமாக குறைந்து விட்டது. அங்கெல்லாம் கட்டுமானங்கள் நிறைவடைந்து விட்டதே காரணம். எனவே அந்த நாடுகள் தங்களின் உற்பத்தி முறையை மேன்மேலும் நவீன மயமாக்கும் முயற்சிகளில் இருக்கின்றன. இந்தியாவிலோ இன்னும் அடிப்படை கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கான இரும்பு எஃகு சந்தையும் விரிவடைந்திருக்கிறது. எனவேதான் சீனா போன்ற நாடுகள் இந்திய எஃகுச் சந்தையை குறி வைக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நம் நாட்டுத் தேவைக்கே உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வளர்க்கலாம். ஆனால் ஒன்றிய அரசு எப்போதும் கார்ப்பரேட் நலன் சார்ந்து சிந்தித்து இயங்குவதால் உள்நாட்டு உற்பத்தி, தற்சார்பு பொருளாதாரம் என்பதையெல்லாம் ஏற்பதில்லை.


படிக்க: வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!


இந்தியாவின் இரும்பு எஃகு தேவை, 2030 – 31 ல் 300 மில்லியன் டன்கள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை உள்நாட்டு உற்பத்தியை கொண்டு அடைய வேண்டும் என்றால் இந்திய அரசின் இறக்குமதி கொள்கைகளில் மாற்றம் வேண்டும். ஒன்றிய அரசு கூறிக்கொள்ளும் 2030 ல் 300 மில்லியன் டன்கள் என்கிற இலக்கை அடைய இந்தியா இன்னும் வெகு தூரம் பயணப்பட வேண்டி உள்ளது. இப்போதைய உற்பத்தியாற்றல் 138.5 மில்லியன் டன்கள் மட்டுமே. அதேசமயம் சீனாவின் உற்பத்தியாற்றல் ஒரு பில்லியன் அதாவது 1,000 மில்லியன் டன்கள் ஆகும். ஆனாலும் இந்தியா தொடர்ந்தும் இறக்குமதியை தான் ஊக்குவித்து வருகிறது. அதனால் உள்நாட்டு இரும்பு எஃகு உற்பத்தி நிறுவனங்கள் நெருக்கடிக்குள்ளாகின்றன.

அவற்றிலிருந்து இந்திய கார்ப்பரேட் தனியார் நிறுவனங்களை மட்டும் காப்பாற்றும் வகையில் பொதுத்துறை நிறுவனங்கள் பலியிடப்படுகின்றன. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை நெருக்கடிக்குள் தள்ளி நட்டம் ஏற்படுத்தி அவற்றை தனியார் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்ப்பது, தனியார் நிறுவனங்களுக்கு அரசுத்துறை வங்கிகளில் கடன் அளித்து உதவுவது என்கிற தேசத்துரோக கொள்கை நடைமுறையைக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.

கடலோரத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் ஏற்றுமதி இறக்குமதிக்கான துறைமுக வசதிகளுடன் 1.5 லட்சம் கோடி பெருமானம் உள்ள 22 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் பெற்றிருக்கும் விசாகா உருக்காலையை 20 மில்லியன் டன் ஆற்றல் கொண்டதாக மாற்றுவதற்கான வசதி வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இதே காரணத்தினால் இந்த மொத்த உற்பத்தி வளாகத்தையே கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்கு மாற்றிவிட துடிக்கிறது ஒன்றிய அரசு. சந்திரபாபு நாயுடுவின் மாநில அரசும் அதே அலைவரிசையில் செயல்படுகிறது. மோடி அரசு கொஞ்சமும் கூச்சநாச்சம் இல்லாமல் தொழில் செய்வது அரசின் வேலையில்லை (Government have no business in business) என்பதை கொள்கையாக உயர்த்தி பிடித்து நிற்கிறது.

விசாகா உருக்காலையின் வளர்ச்சிப் பாதையில் 20 ஆண்டுகாலப் போராட்டம்

விசாகா உருக்காலை, மக்கள் போராட்டத்தில் பிறந்த தனித்த வரலாறு கொண்டிருக்கிறது. 1966 – 67 ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அரசியல் ஆதாயத்திற்காக இந்த உருக்காலையை கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்ல முயன்றார். அந்த முயற்சிக்கு எதிராக “விசாகா உருக்கு – ஆந்திர உரிமை” என்கிற முழக்கத்துடன் ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடந்தது. அப்போராட்டத்தில் அரசு அடக்கு முறையால் 32 உயிர்கள் பலியானது ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் காயமடைந்தனர். ஆந்திர மக்களின் போராட்டத்தை ஆதரித்து, அரசின் அடக்கு முறையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 52 பேர் உள்ளிட்டு 67 எம்.எல்.ஏ. க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதே போன்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இறுதியில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடந்த மக்கள் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு பணிந்தது.

1971 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி விசாகப்பட்டினத்தில் உருக்காலைக்கு அடிக்கல் நாட்டினார். அதற்குப் பின்னரும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் கட்டுமானத்தைக் கிடப்பில் போட்டது இந்திரா அரசாங்கம். பின்னர் 1977-ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த போது தான் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, உருக்காலை கட்டுமானம் தொடங்கியது. இந்த உருக்காலைக்காக 64 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. பல்லாயிரம் கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வெளியேறினர். விவசாயிகளிடமிருந்து 22,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த ஆலை கட்டுமான பணிகளின் போது 200 தொழிலாளர்கள் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர். இறுதியாக 1991-இல் பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது உருக்காலை தொடங்கப்பட்டது. 1971 இல் அடிக்கல் நாட்டப்பட்ட உருக்காலை 1991 ல் அதாவது 20 ஆண்டுகள் முடிந்த பின்பு தான் செயல்படத் தொடங்கியது.

அப்போது இயங்கி வந்த அரசு மற்றும் தனியார் இரும்பு எஃகு உருக்காலைகள் அனைத்துக்கும் ஒன்றிய அரசு 100 ஆண்டுகளுக்கு இரும்புத்தாது வழங்க சுரங்க ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. டாட்டாவின் ஜாம்செட்பூர், பிலாய், பொக்காரோ, துர்காப்பூர், மற்றும் ரூர்கேலா ஆகிய மிகப்பெரும் உருக்காலைகள் அவற்றில் அடங்கும். தனக்கென்று தனிச்சுரங்கமோ அரசு ஒப்பந்தமோ, ஒதுக்கீடோ இல்லாமலேயே மேற்கண்ட நிறுவனங்களோடு போட்டியிட்டு வளர வேண்டிய கடுமையான நிலைமையில் தள்ளிவிடப்பட்டது விசாகா உருக்காலை. அந்தப் பாரபட்சமான போட்டியிலும் வளர்ந்து கடந்த 30 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி இருக்கிறது விசாக்கா உருக்காலை.

இந்த விசாகா உருக்காலையின் வளர்ச்சியின் ஊடாகவே விசாகப்பட்டினம் மிகப் பெரும் தொழில் நகரமாக வளர்ச்சி அடைந்தது. நேரடியாக 15,000 பேர் நிரந்தர ஊழியர்களாக பணி செய்கின்றனர் தவிர 30,000 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இதை சார்ந்து ஒரு லட்சம் குடும்பங்களுக்கு மறைமுகமாக வாழ்வாதாரத்தை அளிக்கிறது. இது பொதுத்துறையாக இருப்பதினால் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பழங்குடி மற்றும் தலித் மக்கள் 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி முன்னேற்றி இருக்கிறது. 8,500 வீடுகளைக் கொண்ட டவுன்ஷிப் குடியிருப்பு வளாகம் இன்றும் மிகப்பெரும் சமத்துவபுரமாக திகழ்கிறது. நிரந்தர ஊழியர் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதாந்திரம் 100 கோடிக்கு மேல் ஊதியமாக வழங்குகி விசாகப்பட்டினம் மாநகரத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைந்திருக்கிறது.

அரசு பொதுத்துறைகளின் தனிச்சுரங்கத்திற்கான உரிமை

சுரங்கம் மற்றும் கனிமவள ஒழுங்குமுறை சட்டப்பிரிவு 17/1/பி, 1957. உருக்காலைகளுக்கு சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்படுவதை அரசின் கடமையாக்கி இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் இருக்கும் இரும்புத்தாது சுரங்கத்தில் விசாகா உருக்காலைக்கு சட்டப்படியான உரிமை இருக்கிறது. 1985-இல் உருவாக்கப்பட்ட விசாகா உருக்காலைக்கான விரிவான திட்ட அறிக்கை பொதுத்துறையான என்.எம்.டி.சி. (NMDC – National Mineral Development Corporation) யின் பைலதில்லா இரும்பு சுரங்கத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது தொகுதிகள் (Block) விசாகா உருக்காலைக்கு வழங்க வேண்டும் என்று என்.எம்.டி.சி. க்கு நிபந்தனை விதித்திருந்தது.

இருப்பினும் இதுநாள் வரையிலும் அவ்வாறு வழங்காமல் இருப்பது சட்டவிரோதமானதும் தனியார் மயமாக்கத்திற்கு துணைபோகும் தீய நோக்கம் கொண்டதுமாகும். மேலும் விசாகா உருக்காலைக்குச் சொந்தமான 1,400 ஏக்கர் நிலத்தை அதானி உருவாக்க இருக்கும் துறைமுகத்துக்கு (Adani Ports / Special Economic Zone) ஒதுக்கி கொடுத்துவிட்டது சந்திரபாபு நாயுடு அரசாங்கம்.

1991-இல் விசாகா உருக்காலையில் அரசு மூலதனம் என்பது 4,890 கோடி மட்டுமே. ஆனால் இன்று வரை வரிகள் மற்றும் ஈட்டுத்தொகையாக ஒன்றிய அரசுக்கு 54,000 கோடி ரூபாய் திருப்பி செலுத்தி இருக்கிறது. விசாகா உருக்காலையை தனியாருக்கு விற்பது ஆந்திர மக்களின் நலன்களுக்கு கேடு விளைவிப்பதாகும். மேலும் சமூக நீதிக் கொள்கைக்கு எதிராக குழிபறிப்பதாகும்.

இவற்றை உணர்ந்திருக்கும் ஆந்திர மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தனியார்மய போக்குக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட்டு உருக்கு ஆலைக்கு தனியே சுரங்கம் ஒதுக்கி தருவது அல்லது செயில்-உடன் இணைத்து விடுவது என்கிற முடிவு ஏற்படுகின்ற வரை மக்களின் போராட்டம் உறுதியாக தொடரும் என்று அறிவிப்பு செய்திருக்கின்றனர். உருக்காலைத் தொழிலாளர்களுக்கு பொதுமக்களும் துணை நிற்கின்றனர் என்பதும் முக்கியமானதாகும். எனவே தொழிலாளர்கள் மட்டுமின்றி விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை ஆதாரமாகக் கொண்டதாக இப்போராட்டம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். போராட்டத் தலைமை இதை உணர்ந்து அங்கீகரிக்க வேண்டியது இத்தருணத்தின் தேவையாகும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க