திருப்பதி லட்டில் செலுத்தப்படும் இந்துத்துவ விஷம்

பவன் கல்யாண், ஜக்கி போன்றவர்களின் விஷமப் பிரச்சாரம் என்பது தேவஸ்தான வாரியம், இந்து அறநிலையத்துறை போன்ற அரசுத் துறைகளை ஒழித்துக்கட்டி விட்டு தீட்சிதர்கள் உள்ளிட்ட பார்ப்பன கும்பல் மற்றும் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஆகியவர்களிடம் கோவில்களை ஒப்படைப்பதற்கான சதி.

0

ந்திராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் அமராவதியில் செப்டம்பர் 18 அன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய சந்திரபாபு, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான கடந்த ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சந்திரபாபுவின் குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, “ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் 100 நாள் ஆட்சியின் தோல்வியிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்பவே லட்டில் நெய் கலப்படம் இருப்பதாகக் குற்றச்சாட்டுகளை சந்திரபாபு முன்வைக்கிறார். சட்ட ஒழுங்கில் ஏற்பட்ட பிரச்சினைகள், ஆந்திரா வெள்ளத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் திசை திருப்புவதற்காகக் கடவுளை வைத்து அரசியல் செய்கிறார்” என்று அவரை சாடினார்.

சந்திரபாபு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தவுடன் தெலுங்கு தேசம் கட்சியினர் ஜெகன்மோகனின் மத அடையாளத்தோடு இந்த விவகாரத்தைத் தொடர்புப்படுத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டனர். ஜெகன் கிறித்தவர் என்பதால் இதைச் செய்துள்ளார் என்று திட்டமிட்ட மதவெறிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். (இதற்கு முன்னரும் ஜெகன் மற்றும் அவரது தந்தை ஒய்.எஸ்.ஆர் ஆகியோர் மீது சந்திரபாபு மத ரீதியிலான தாக்குதலை நடத்தியுள்ளார்).

இதனைத் தொடர்ந்து குஜராத்தில் அமைந்துள்ள தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தில் (National Dairy Development Board) மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கை ஒன்றும் வெளியானது. அந்த ஆய்வறிக்கையில் திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டின் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு, சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான சாத்தியக் கூறு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆய்வுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே விலங்குகளின் கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்த முடியும்.


படிக்க: சிதம்பரம் நடராஜர் கோவில்: 2,000 ஏக்கர் நிலத்தை விற்றுத்தின்ற தீட்சிதர்கள்


ஆனால், மாடு மற்றும் பன்றியின் கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டனவா என்பது உறுதியாவதற்கு முன்பாகவே சந்திரபாபு இந்த ஆரம்பக்கட்ட ஆய்வை வெளியிட்டு வெறுப்பு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டார். இதனைத் தொடர்ந்து சங்கிக் கும்பல் லட்டு விவகாரத்தை ஊதிப்பெருக்கி தேசிய அளவில் விவாதப்பொருளாக மாற்றும் வேலை இறங்கியது. இதற்கு ஒத்திசைவாகவே பெரும்பாலான ஊடகங்களும் செயல்பட்டன.

விலங்கு கொழுப்புகள் இருந்தனவா என்பதும் உறுதியாவதற்கு முன்னரே, மக்களின் மத உணர்வைத் தூண்டும் விதமாக, திருப்பதி லட்டைச் சாப்பிட்ட ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக ஒரு செய்தியை, ஒரே மாதிரியான வார்த்தைகளில் சங்கி கும்பல் சமூக வலைத்தளங்களில் பரப்பியது. லட்டு விவகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மக்களின் இந்து மத உணர்வைத் தூண்டி கலவரங்களை உருவாக்கும் நோக்கத்திலே சங்கிக் கும்பல் செயல்படத் தொடங்கியது.

தமிழ்நாட்டில், சங்கிக் கும்பலின் இந்த விஷமப்பிரச்சாரம் வழக்கம்போல் எடுபடாததோடு, இந்துத்துவ பிரச்சாரத்தையும், பசுக்குண்டர்களின் அட்டூழியங்களையும் அம்பலப்படுத்தும் கருத்துகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

ஆனால், சந்திரபாபு தொடங்கிவைத்த வெறுப்புப் பிரச்சாரம் என்பது ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகத் தொடுக்கப்பட்டது மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுடன் இணைந்து திட்டமிட்டு அரங்கேற்றியுள்ள சதி என்பதே அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது.

ஏனெனில், ஆய்விற்கான மாதிரி நெய், ஜூலை 9 அன்று குஜராத் நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜூலை 16 அன்றே அந்நிறுவனம் ஆய்வறிக்கையைக் கொடுத்துவிட்டது. ஆனால், சந்திரபாபு செப்டம்பர் 18 வரை அமைதியாக இருந்தது எதனால்? திருப்பதியிலிருந்து குஜராத்திற்கு ஆய்விற்கு அனுப்பியது யார்? ஆந்திராவில் ஆய்வு செய்யப்படாமல் குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்திற்கு ஏன் மாதிரிகள் அனுப்பப்பட்டன? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்குப் பதில் ஏதும் இல்லை.


படிக்க: ராமர் கோவில், பக்தியா? கலெக்ஷன் கட்டும் உத்தியா?


முக்கியமாக, லட்டில் கலப்படம் என்று தொடங்கிய இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் நிகழ்ச்சி நிரலான “கோவில்களை அரசு கட்டுப்படுத்தக் கூடாது” என்பதும் புகுத்தப்படுவதை நாம் கவனிக்க வேண்டும்.

லட்டு விவகாரத்தில் கருத்து கூறியுள்ள ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண், “இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் இது போன்ற பிரச்சினைகளை ஆராயத் தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ என்ற அமைப்பை நிறுவ வேண்டிய நேரம் வந்துவிட்டது. சனாதன தர்மம் எந்த வடிவத்திலும் இழிவுபடுத்தப்படுவதைத் தடுக்க நாம் அனைவரும் உடனடியாக ஒன்றிணைய வேண்டும்” என்று பேசியுள்ளார்

அதேபோல், ஈஷா அறக்கட்டளை நிறுவனரான கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் தள பதிவில், “கோவில் பிரசாதத்தில் மாட்டிறைச்சியைப் பக்தர்கள் சாப்பிடுவது மிகவும் அருவருப்பானது. அதனால்தான் கோவில்கள் அரசால் நடத்தப்படாமல் பக்தர்களால் நடத்தப்பட வேண்டும் என்கிறோம். பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது. இந்து கோவில்களைப் பக்தியுள்ள இந்துக்களால் நடத்தப்பட வேண்டிய நேரம் இது; அரசு நிர்வாகத்தால் அல்ல” என்று கூறியுள்ளார்.

பவன் கல்யாண், ஜக்கி போன்றவர்களின் விஷமப் பிரச்சாரம் என்பது தேவஸ்தான வாரியம், இந்து அறநிலையத்துறை போன்ற அரசுத் துறைகளை ஒழித்துக்கட்டி விட்டு தீட்சிதர்கள் உள்ளிட்ட பார்ப்பன கும்பல் மற்றும் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஆகியவர்களிடம் கோவில்களை ஒப்படைப்பதற்கான சதி.

மேலும், குஜராத் தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் லட்டு விவகாரத்தில் உள்நுழைந்திருப்பதும், சந்திரபாபுவின் ஹெரிடேஜ் நிறுவனத்தின் பெயர் இவ்விவகாரத்தில் அடிபடுவதும்  இதன் பின்னால், கார்ப்பரேட் சதி இருக்கிறதா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

சங்கப் பரிவார கும்பல் இந்துக்களின் மனம் புண்பட்டு விட்டது என்று கூறுவதெல்லாம் அப்பட்டமான மோசடியாகும். இவ்வாறு கூறித்தான் அனைத்து இந்து ராஷ்டிர திட்டங்களும் தற்போது வரை நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. இந்து உணர்வினைத் தூண்டிவிட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களைக் காவி – கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிப்பதற்கான களமாக மாற்றுவதே இந்த சங்கிக் கும்பல்களின் நோக்கமாகும். அதற்காகத் தான் இவர்கள் திட்டமிட்டே இந்த உறுதிப்படுத்தப்படாத லட்டு விவகாரத்தைப் பூதாகரமாக்கி வருகிறார்கள்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க