சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் நிலத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை குற்றம் சாட்டியுள்ளது. எனவே, நிலம் விற்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்த போது 3 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாகக் கணக்குக் காட்டப்படுகிறது.
இதையடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவிலின் வரவு, செலவு கணக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது கோவில் நிர்வாகம் தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையைக் கோவிலின் கணக்கில் செலுத்தாமல் தீட்சிதர்கள் எடுத்துச் செல்வதாக அறநிலையத்துறை குற்றம் சாட்டியது.
சிதம்பரம் கோவில் பராமரிப்புக்கும் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் வருவாய் ஆதாரம் என்ன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிமன்றம், இது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டது. மேலும், 2014 – 2015 முதல் 2023-2024 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான வருமானம் செலவு குறித்த கணக்கு புத்தகங்களைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
படிக்க: சென்னிமலை, அச்சங்குட்டம் மதக் கலவர முயற்சிகள்: தமிழ்நாடே, எச்சரிக்கை!
இந்நிலையில் இந்த வழக்கு செப்டம்பர் 19 அன்று மீண்டும் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீட்சிதர்கள் தரப்பில் கோவிலில் தணிக்கை செய்யப்பட்ட வரவு, செலவு கணக்கு விவரங்கள் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நீதிபதிகள் இந்த அறிக்கையை தாங்கள் கேட்கவில்லை. இது வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த அறிக்கை. நாங்கள் “புக்ஸ் ஆஃப் அக்கவுண்ட்” என்று சொல்லக்கூடிய முழுமையான கணக்கு விவரங்களைக் கேட்டதாகத் தெரிவித்தனர்.
அதற்கு தீட்சிதர்கள் தரப்பில், முழுமையான கணக்கு புத்தகத்தின் அளவு பெரியதாக இருக்கும். அதனால் தற்போது தாக்கல் செய்வது சிரமம் என்று தெரிவித்தனர். மேலும், கோவிலுக்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை நிர்வகித்து வருவதாகவும், அந்த நிலத்திலிருந்து வாடகை வருவாயாக வெறும் 93 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமாக 3,000 ஏக்கர் நிலம் இருந்த நிலையில் தற்போது 2,000 ஏக்கர் நிலத்தைத் தனி நபர்களுக்குத் தீட்சிதர்கள் விற்பனை செய்து விட்டதாகக் குற்றம் சாட்டினார்.
2,000 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டது குறித்தும், ஆயிரம் ஏக்கரிலிருந்து ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே வருமானம் வருவது மற்றும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை கணக்கில் சேர்க்காதது குறித்தும் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், 2017 – 2018 ஆம் ஆண்டிலிருந்து 2021 – 2022 ஆண்டுக்கான வரவு – செலவு கணக்கு புத்தகங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
படிக்க: ஆர்.என்.ரவி மீது வழக்குப்பதிவு எப்போது? தீட்சிதர்களின் அட்டூழியம் || தோழர் மருது
மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமாக தற்போது எவ்வளவு பரப்பளவு நிலம் உள்ளது என்பது குறித்தும், விற்கப்பட்டதாகக் கூறும் நிலத்தின் விவரங்களையும் அறநிலையத்துறை தாசில்தார் அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்து அறநிலையத் துறை கோவில்களைக் கட்டுப்படுத்தக் கூடாது, “கோயில் அடிமை நிறுத்து” போன்ற பிரச்சாரங்களை சங்கிக் கும்பல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு கோவில் சொத்துகளின் மீதான இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாடு நீக்கப்பட்டால் என்னவாகும் என்பதற்குச் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
தினேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram