சென்னிமலை, அச்சங்குட்டம் மதக் கலவர முயற்சிகள்: தமிழ்நாடே, எச்சரிக்கை!

சென்னிமலை மற்றும் அச்சங்குட்டம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளானது பார்ப்பனிய எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாட்டிற்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும்.

ந்துமதவெறி பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தனது நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதுவரை பாசிச அமைப்பால் செரிக்க முடியாததாகவும், தொண்டைக்குள் சிக்கிய முள்ளாகவும், சிம்மசொப்பனமாகவும் இருக்கிறது பார்ப்பன எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாடு. அரை நூற்றாண்டுக்கு மேலாக வேலை செய்தும், இப்பாசிச கும்பலால் தமிழ்நாட்டு மண்ணில் வேரூன்ற முடியவில்லை. எனினும் எப்படியாவது தமிழ்நாட்டை தனது இந்துராஷ்டிரப் பிடிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டை நெருக்கி, சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். எனும் நச்சுப் பாம்பு.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்; 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியில் அரசியல் தளத்தில், “தி.மு.க எதிர் பா.ஜ.க” என்ற நிலையை உருவாக்க தமிழ்நாடு பா.ஜ.க. தீவிரமாக முயற்சித்து வருகிறது.

“தி.மு.க. இந்துவிரோத கட்சி” என்ற பொய்ப் பிரச்சாரம்; உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சுக்கு எதிரான பார்ப்பன வெறிப் பிரச்சாரம்; “தி.மு.க. பைல்ஸ் வெளியீடு” என்ற சதித் திட்டம்;  அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” நடைப்பயணம்; பெரியாரின் பெயரை சொன்னதற்காகவே அடையார் ஆனந்தபவனை புறக்கணிப்போம் என்ற சமூக வலைத்தளப் பிரச்சாரம்; அராஜகமாகக் கொடிக்கம்பம் நட முயற்சித்து தி.மு.க.வை சீண்டுவது; ஆளுநர் மாளிகைக்கு எதிரே உள்ள சாலையில் பெட்ரோல் குண்டு வீச்சு என்ற நாடகம்; தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக வெற்றுக் கூச்சல் போடுவது; அமலாக்கத்துறை மூலமாக செந்தில்பாலாஜி, பொன்முடி கைது; துரைமுருகனுக்கு எதிராக மணல் கொள்ளை விவகார விசாரணை – போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுப்பது, தி.மு.க.வை ‘மக்கள் விரோதக் கட்சி’ என்று சித்தரிக்க முயற்சிப்பது, தி.மு.க.விற்கு எதிரான கட்சியாக பா.ஜ.க.வை முன்னிறுத்துவது எனத் தனது அரசியல் நடவடிக்கைகளை வகுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது, தமிழ்நாடு பா.ஜ.க.

எனினும், இத்தகைய அரசியல் சதித்திட்டங்களால் மட்டுமே தமிழ்நாட்டில் வேரூன்றிவிட முடியாது என்பது காவி கும்பலுக்கு நன்கு தெரியும். எனவே, தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு, “இந்து மதம் எதிர் சிறுபான்மையினர்” மற்றும் “ஆதிக்கச் சாதி எதிர் தலித் மக்கள்” என்று நிறுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் இந்து மத – சாதிய முனைவாக்கத்திற்கான கீழ்மட்ட வேலைகளைத் தீவிரமாக செய்து வருகிறது.


படிக்க: “வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்” இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!


இதற்காக, ஆளுநர் ரவி போன்று அரசின் அதிகாரக் கட்டமைப்புகளில் ஊடுருவி நேரடியாகப் பார்ப்பனிய – சனாதன சித்தாந்தத்தை விதைப்பது;  இந்து முன்னணி, சேவா பாரதி, விஷ்வ இந்து பரிசத் போன்ற பல பெயர்களில் நேரடியாக பார்ப்பன இந்துமதவெறிப் பிரச்சாரங்களில் ஈடுபடுவது; வன்னியர், தேவர், கவுண்டர் போன்ற ஆதிக்கச் சாதிச் சங்கங்களில் ஊடுருவிச் சாதிக் கலவரங்களைத் தூண்டுவது; அருந்ததியர், பள்ளர் போன்ற ஒடுக்கப்பட்ட சாதிகளின் சில பிழைப்புவாத சாதிச் சங்கங்களை தனது அடித்தளமாக மாற்றுவது; கோயில் நிர்வாகங்களில் ஊடுருவி சமய வகுப்புகள், குத்து விளக்கு பூஜைகள் என்ற பெயரில் மக்களின் பக்தி உணர்வைப் பயன்படுத்தி மதவெறிப் பிரச்சாரம் செய்வது; இஸ்லாமிய பயங்கரவாதம், கட்டாய மதமாற்றம் என பீதியூட்டி சிறுபான்மையினரை எதிரிகளாக சித்தரிப்பது; திராவிட இயக்க எதிர்ப்பு, சமத்துவ எதிர்ப்பு என பல வழிகளில் தமிழ்நாட்டில் ஊடுருவி வருகிறது இக்காவி பாசிச கும்பல்.

குறிப்பாக, ஆதிக்கச் சாதிவெறி அமைப்புகள் ஆதிக்கம் செலுத்துகின்ற, திராவிட -கம்யூனிச இயக்கங்களின் செல்வாக்கு குறைவாக உள்ள தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாகவே, அண்மைக் காலங்களாக தமிழ்நாட்டில் சாதிவெறித் தாக்குதல்களும் மதவெறிப் பிரச்சாரங்களும் அதிகரித்து வருகின்றன.

2021-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது, மாணவி லாவண்யா மரணத்தைத் துருப்புச் சீட்டாகக் கொண்டு தஞ்சாவூர் மைக்கேல்பட்டி கிராமத்தில் கலவரத்தைத் தூண்ட முயற்சித்தது; தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்ய முயற்சித்தது; மண்டைக்காடு, திருச்செங்கோடு சம்பவம் என கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பல் தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றுவதற்கான வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதையே அண்மைக் கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆர்.எஸ்.எஸ் கையிலெடுக்கும்கன்னியாகுமரி மாடல்

கடந்த ஜூலை மாதம் ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களின் ஆண்டுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இந்தியாவுடனே ஒன்றிணையாத வடகிழக்கு மாநிலங்களை இந்து நீரோட்டத்தில் கலக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட ஏழு சகோதரிகள் திட்டத்தை (Seven-Sisters model) ஒத்த ஒரு புதிய திட்டத்தை தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ். தீட்டியிருப்பதாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது, “தி நியூஸ்மினிட்” என்ற இணையதளம்.

வடகிழக்கு மாநிலங்களில் பல ஆண்டுகளாக, ஓராசியர் பள்ளிகள் நடத்துவது, பழங்குடிகளின் பண்பாட்டை இந்துப் பண்பாடாகத் திரித்து கதைகட்டுவது, பழங்குடியின கடவுள்களை இந்துக் கடவுள்களாக, இராமாயண, மகாபாரத அவதாரங்களாக மறுகட்டமைப்பு செய்வது, கிறித்துவ எதிர்ப்புப் பிரச்சாரம் ஆகியவற்றின் மூலமாகத்தான் அம்மக்களிடம் ஆர்.எஸ்.எஸ் வேரூன்றியது. இதன்விளைவுதான் ஆறு மாதங்களாகியும் அணையாமல் பற்றி எரிகிறது மணிப்பூர்.

இந்த ஏழு சகோதரிகள் மாடலுடன், ஆர்.எஸ்.எஸ். காவி கும்பலுக்கு தமிழ்நாட்டில் வேலை செய்த அனுபவத்தையும் இணைத்து ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியிருப்பதுதான், கன்னியாகுமரி மாடல்!

தமிழ்நாட்டில் இந்து முன்னணி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றுவதற்கு முன்புவரை மதக்கலவரங்கள் ஏற்பட்டதாக வரலாறு இல்லை. ஆனால், 1960-களிலிருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து முன்னணி ஊடுருவியதிலிருந்துதான் 1982- ஆம் ஆண்டு முதன்முதலில் மண்டைக்காடு கலவரம் நடந்தது. இக்கலவரமானது தமிழ்நாட்டு வரலாற்றில் நீங்காத கரும்புள்ளியாக இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் இந்து நாடார்களும், கிறித்துவ மீனவர்களும் ஏறக்குறைய சம அளவில் வசிக்கின்ற பகுதியாகும். தமிழ்நாட்டில் இருந்தாலும், குமரி மாவட்டமானது அரசியல் ரீதியில் பெரியளவிற்கு திராவிட, கம்யூனிச இயக்க செல்வாக்கிற்கு உட்பட்ட பகுதியல்ல. அப்பகுதியில் காங்கிரசு கட்சிதான் செல்வாக்கு செலுத்தியது, இன்றளவிலும் செல்வாக்கு செலுத்தி வருகிறது.

அப்பகுதியில், ஆர்.எஸ்.எஸ் வேலை செய்வதற்கு முன்பு வரை இந்து நாடார்கள், கிறித்துவ மீனவர்களுக்கிடையில் சிறு சிறு முரண்பாடுகள் இருந்தாலும் எந்த பிரச்சினையுமின்றிதான் வாழ்ந்து வந்தனர். இந்துக்களுக்கும், கிறித்துவர்களுக்கும் இடையே இருந்த விவேகானந்தர்  பாறை (தற்பொழுது) தொடர்பான பிரச்சினையை ஊதிப் பெருக்கியது ஆர்.எஸ்.எஸ். அதுமட்டுமின்றி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில், கிறித்துவ இளைஞர்கள் இந்துப்  பெண்களை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று புரளியைக் கிளப்பிவிட்டு கிறித்துவர்களுக்கு எதிரான மதக் கலவரத்தை அரங்கேற்றியது ஆர்.எஸ்.எஸ். இக்கலவரத்தை அடக்க நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மூன்று மாதங்களுக்கும் மேலாகக் கலவரம் நீடித்தது. கிறித்துவர்கள் சமூக ரீதியாக விலக்கி வைக்கப்பட்டனர். இந்து நாடார்கள், கிறித்துவர்களுக்கிடையிலான வணிக உறவும் துண்டிக்கப்பட்டது. கிறித்துவர்களுக்கு இந்து நாடார்கள் பொருட்களை ஏதும் விற்பதில்லை என்ற கொடூரம் அரங்கேறியது. மூன்று மாதங்களுக்குப் பிறகு கலவரம் அடங்கினாலும், இயல்புநிலை திரும்பப் பல மாதங்கள் ஆகின. தற்பொழுது, எப்படி மணிப்பூரில் குக்கிகளும், மெய்திக்களும் இணைந்து வாழ முடியாது என்ற நிலையைக் காவி கும்பல் உருவாக்கியிருக்கிறதோ, அதே போல, மண்டைக்காடு கலவரத்திற்கு பிறகு இன்று வரை இந்து-கிறித்துவ பிரிவினை நீடிக்கிறது.

இந்து-கிறித்துவ பிரிவினையைத் தக்க வைப்பதற்காக மதமாற்றப் பிரச்சினையைக் கையிலெடுப்பது, “தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு உரிமையில்லை” என்ற பொய்ப் பிரச்சாரம் செய்வது, கிறித்துவர்களைப் படுகொலை செய்வது என கன்னியாகுமரியைக் கலவர பூமியாக்கியிருக்கிறது இந்த நச்சுக் காவி கும்பல்.

இவ்வாறு, கலவரத்தின் மூலம் மத முனைவாக்கம் செய்ததால்தான் இன்றுவரை குமரியில் வலுவாக ஆர்.எஸ்.எஸ் காலூன்றியிருக்கிறது. காங்கிரசு செல்வாக்கு மிக்க அப்பகுதியில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு செலுத்துகிறது. அதனால்தான், நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் பா.ஜ.க-வால் வெற்றி பெற முடிந்தது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அதிகபட்ச வாக்குகளைப் பெற முடிகிறது. 2014-இல் நாடாளுமன்றத்தேர்தலில் பொன். ராதா கிருஷ்ணன் குமரியில்தான் வெற்றிப் பெற்றார்.


படிக்க: அதானியின் ஊழல் முறைகேடுகள் மீண்டும் அம்பலம்!


மேலும், மண்டைக்காடு கலவரத்திற்குப் பிறகு, பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் மாசி கொடை விழாவின் போது நடத்தப்படும் மாநாட்டை 85 ஆண்டுகளாக ஹைந்தவ சேவா சங்கம் என்ற ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான் நடத்தி வருகிறது. தற்போது, இந்த மாநாட்டை தமிழ்நாடு அறநிலையத்துறை எடுத்து நடத்தும் என்று தி.மு.க. அரசு தலையிட்டாலும், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் எதிர்ப்பின் காரணமாக அச்சங்கத்துடன் அறநிலையத்துறை இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாடு மட்டுமின்றி, அம்மாவட்டத்தின் கோவில் நிர்வாகக் குழுக்களில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவியிருக்கிறது. இதனால், கோவில் நிகழ்ச்சிகள் இந்துத்துவ பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. கோவில் வளாகங்களும், மக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளும் ஆர்.எஸ். எஸ். நிகழ்ச்சிகளுக்குத்தான் பயன்படுகின்றன. இவற்றை எதிர்க்கின்ற அறநிலையத்துறை ஊழியர்களைத் தனது செல்வாக்கின் மூலம் இடமாற்றம் செய்கிறது இக்காவி கும்பல். இதிலிருந்து தமிழ்நாடுக் கோவில்களை தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும், கோவில் நிர்வாகங்களில் அரசு தலையிடக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் ஓலமிடுவதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இவைமட்டுமின்றி, சமய வகுப்புகள், சேவா பாரதி போன்றவற்றின் மூலம் மாணவர்கள், இளைஞர்களிடம் இந்துத்துவ அரசியலை விதைத்து வருகிறது. குறிப்பாக, இந்த சேவா பாரதி அமைப்பில் இருக்கும் இளைஞர்கள், கடந்த அ.தி.மு.க அரசாங்கத்தின் ஆசியுடன் “போலீசு நண்பர்கள் குழு”க்களிலும் (ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசு) இணைக்கப்பட்டனர். சாத்தான்குளம் கிறித்தவ சிறு வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலையின் போது,  “போலீசு நண்பர்கள் குழு”வினருக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையில் சேவா பாரதியின் பெயர் இருந்த விசயமும், அவர்கள்தான் சாத்தான்குளம் லாக்-அப் படுகொலையில்  போலீசுடன் இணைந்து செயல்பட்டனர் என்பதும் அம்பலமானது.

கன்னியாகுமரியில் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளைத்தான், நாடாளுமன்ற தேர்தலுக்காக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க குறி வைத்திருக்கும் கோவை, ஈரோடு, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தென் சென்னை, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய ஒன்பது தொகுதிகளில் செயல்படுத்த இருக்கின்றது. அதை நிரூபிக்கின்ற விதமாகவே சமீபத்திய ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

கட்டாய மதமாற்றம்எனும் பொய்ப் பிரச்சாரமும் இந்து முனைவாக்கமும்

அண்மையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ‘கட்டாய மதமாற்றப்’ பிரச்சினையைக் கையிலெடுத்தது இந்து முன்னணி கும்பல். கடந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, கத்தக்கொடிக்காடு பகுதியில் ஜான் பீட்டர் என்பவர் வீட்டில் பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையறிந்த காவி கும்பல், ‘கட்டாய மதமாற்றம்’ செய்கிறார்கள் என்று அவரது வீட்டிற்குச் சென்று தகராறு செய்து, அவரது குடும்பத்தினரைத் தாக்கியிருக்கிறது.

இதனைக் கண்டித்து, கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி அன்று “கிறித்துவ முன்னணி” என்ற அமைப்பின் சார்பில் சென்னிமலையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், “சென்னிமலையைக் கல்வாரி மலையாக்குவோம்” என்று சரவணன் என்கிற ஜோசப் பேசியிருக்கிறார். உடனே, “முருகன் இருக்கும் சென்னிமலையைக் கல்வாரி மலையாக்கப் போகிறார்கள்” என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது இந்து முன்னணி. “முருகன் கோயிலுக்கு ஆபத்து” என்று பீதியைக் கிளப்பி, மக்களின் பக்தி உணர்வை மதவெறியாக்க முயற்சித்தது.

அதுமட்டுமின்றி கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி அன்று மாலை “சென்னிமலை ஆண்டவர் குழு” என்ற பெயரில் காவிக் கொடிகளுடன் இந்து முன்னணி சென்னிமலையில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலிருந்து 10,000-க்கும் அதிகமானோரை திரட்டியிருப்பதாக ஆர்.எஸ்.எஸ்.யின் “ஆர்கனைசர்” இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆனால், “சென்னிமலையைக் கல்வாரி மலையாக மாற்றுவோம்” என்று பேசிய சரவணன் என்கிற ஜோசப், “இந்து முன்னணி ”அமைப்பைச் சார்ந்தவர்தான் என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. போலீசும் இவரை கைது செய்திருக்கிறது. ‘கட்டாய மதமாற்றம்’ செய்கிறார்கள் என்று கிறித்தவக் குடும்பத்தைத் தாக்கியதோடு, “கல்வாரி மலையாக்குவோம்” என்று தன்னுடைய அமைப்பைச் சேர்ந்தவரைப் பேச வைத்து கிறித்துவர்களை எதிரிகளாக்கி சென்னிமலை மக்களின் இந்து உணர்வை அறுவடை செய்திருக்கிறது, இந்து முன்னணி.

சென்னிமலையில் நடைபெற்றது போலவே, தென்காசி மாவட்டம் அச்சங்குட்டத்திலும் ‘கட்டாய மதமாற்றம்’ செய்கிறார்கள் என்றும், அரசு புறம்போக்கு நிலத்தில் தேவாலயம் கட்டுகிறார்கள் என்றும் புரளியைக் கிளப்பிவிட்டு, அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இந்து முன்னணி கும்பல்.

அச்சங்குட்டத்தில் 700 இந்துக் குடும்பங்களும், 100 கிறித்துவக் குடும்பங்களும் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள், திருமண உறவுகளையும் கொண்டுள்ளவர்கள் என்ற வகையில் ஒன்றாகப் பழகி வருகின்றனர். இவர்களிடம் தற்போது பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது காவி கும்பல்.

இப்பகுதியில் 1941 முதல் திருநெல்வேலி சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மறைமாவட்ட அறக்கட்டளை சார்பில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளி இருந்த இடத்திலேயே ஒரு தேவாலயமும் இருக்கிறது. 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின் அடிப்படையில் வேறு விசாலமான இடத்திற்குப் பள்ளி மாற்றப்பட்டது. பள்ளியில் ஏற்கனவே இருந்த தேவாலயத்தையும் புதுப்பிக்கும் பணியும் தொடங்கப்பட்டது.

இந்த சூழலில்தான், 177 மாணவர்கள் படித்து வந்த பள்ளியில் ‘கட்டாய மதமாற்றம்’ நடைபெறுவதாகவும், பள்ளிக் குழந்தைகள் தங்கள் வீட்டில் ஜெபம் செய்ய சொல்லுவதாகவும் காவி கும்பலால் வதந்தி பரப்பப்பட்டது.  இதனால் கடந்த மார்ச் மாதமே, பள்ளியிலிருந்து மாணவர்களது மாற்றுச் சான்றிதழ்களை பெற பெற்றோர்களை வற்புறுத்தியிருக்கிறது காவி கும்பல். இக்கும்பலின் வற்புறுத்தலாலும், மிரட்டலாலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழைப் பள்ளியிலிருந்து திரும்பப் பெற்றனர். மாற்றுச் சான்றிதழ்கள் பெற்ற மாணவர்களின் கல்வி பாதித்துவிடக்கூடாது என்று அருகிலுள்ள வீராணம் கிராமத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எழுத கல்வித்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


படிக்க: பா.ஜ.க. எதிர்ப்பில் தி.மு.க.வின் சந்தர்ப்பவாதம்


தற்பொழுது புதியக் கட்டிடத்தில் இயங்கி வரும் பள்ளியில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க நினைத்தாலும், அக்குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழை தங்கள் வசம் வைத்திருக்கும் இந்து முன்னணி குண்டர்கள் மாற்றுச் சான்றிதழைத் தரமறுக்கின்றனர். இதனால் இக்குழந்தைகள் பள்ளி செல்ல முடியவில்லை. இக்குழந்தைகளுக்குத் திருமண மண்டபத்தில், படித்த இளைஞர்களைக் கொண்டு பாடம் நடத்துவதாகக் கூறப்படுகிறது.  இந்த வகுப்புகளும் இந்து முன்னணி சேர்ந்தவர்களே எடுக்கவே வாய்ப்பிருக்கிறது. பள்ளியைத் கிறித்துவர்கள் நடத்தக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இந்து முன்னணி கும்பல் இத்தகைய சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழைக் கைப்பற்றி வைத்துள்ள 12 இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. குழந்தைகளிடம் மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயற்சித்தது, குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழைக் கைப்பற்றி வைத்திருப்பதால் அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியிருக்கிறது. எனவே முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட இக்குண்டர்களின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், புதிய தேவாலயமும் பதிவுசெய்யப்பட்ட நிலத்தில் (சர்வே எண் 248/41) கட்டப்படும் சூழலில், புறம்போக்கில் கட்டப்படுவதாக மக்களிடம் பொய்யைப் பரப்பி தென்காசி மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்திருக்கிறது இந்து முன்னணி. உண்மையில், இந்த தேவாலயமானது பள்ளி வளாகத்தில்தான் 1941 முதல் செயல்பட்டு வந்துள்ளது. மேலும், 1978 முதல் மின் இணைப்பு பெற்றுள்ளதோடு, அச்சங்குட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குக் குடிநீர் கட்டணமும் செலுத்திவந்துள்ளது.

மொத்தத்தில், சென்னிமலை, அச்சங்குட்டம் மற்றும் தஞ்சாவூர் மைக்கேல்பட்டி ஆகிய இடங்களில்  ‘கட்டாய மதமாற்றம்’ என்ற பெயரில், இந்து-கிறித்துவ மக்களிடம் பிளவை ஏற்படுத்தி, இந்துக்களிடம் செல்வாக்கு பெறவும்,  தமிழ்நாட்டில் ஒரு மதக்கலவரத்தை நடத்தவும் எத்தனித்து வருகிறது காவி கும்பல். மேற்கூறிய பகுதிகள் மட்டுமின்றி சிறுபான்மை மக்கள் செறிவாக வாழக்கூடிய பகுதிகளில் மதவெறிக் கலவரத்தையும், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ள பகுதிகளில் சாதிவெறிக் கலவரத்தையும் ஏற்படுத்தத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.

சமூக ஊடகங்களில் இந்துத்துவ நச்சுப் பிரச்சாரம்

இந்து முன்னணி, பா.ஜ.க., சங்க பரிவார அமைப்புகள் வடமாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் தமது சொந்தப் பெயர்களில் வெளிப்படையாக வேலை செய்வதில்லை. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுவது போல கீழ்மட்ட அளவில் பல பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, சமூக ஊடகங்களில் இந்துத்துவக் கருத்துகளையும் தி.மு.க எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு, அவதூறு கருத்துகளையும் வாட்ஸ்-அப் குழுக்களிலும், முகநூல் பக்கங்களிலும் பரப்பி வருகின்றன.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, அதற்கு அடிமைச் சேவகம் செய்த, விடுதலைப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்த வரலாறு கொண்ட இந்த ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க காவி கும்பல்,  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வ.உ.சிதம்பரனாரையும்,  மருது சகோதரர்களையும், பகத்சிங்கையும் ‘இந்து சான்றோர்கள்’ என இழிவுப்படுத்துகிறது, காவிமயப்படுத்துகிறது. அறிவியலுக்கு எதிரான இந்த பிற்போக்கு பாசிச கும்பல், அறிவியல் அறிஞர் சந்திர சேகரையும், அறிவியலாளரும், பார்ப்பனிய எதிர்ப்பாளரும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளரும்,  சோசலிசவாதியுமான மேக்நாட் சாகாவையும் காவியமப்படுத்துகிறது. இவையெல்லாம் சில சான்றுகள் மட்டுமே.

மேலும், திராவிட மற்றும் கம்யூனிச இயக்கத்தால், கோவில்கள் இடிக்கப்படுகின்றன; நமது பண்பாடு அழிக்கப்பட்டு மேற்கத்தியப் பண்பாடு புகுத்தப்படுகிறது என சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்கிறது.

அதுமட்டுமின்றி, பல்வேறு மக்கள் பிரிவுக்கான புதிய புதிய அமைப்புகள் தொடங்கப்படுகின்றன. “இந்து அன்னையர் முன்னணி”, “இந்து ஆட்டோ ஓட்டுநர் முன்னணி”, “இந்து வியாபாரிகள் நலச் சங்கம்”, “இந்து இளைஞர் முன்னணி’, “இந்து வழக்கறிஞர் முன்னணி” என நேரடியாகவும், கவுண்டர், வன்னியர் சாதி வெறிச் சங்கங்களில் ஊடுருவியும் வேலை செய்து வருகிறது. சாதிவெறி அமைப்புகளில் உள்ள இளைஞர்களைக் குறிவைத்து, அவர்களை வாட்ஸ்-அப் குழுக்களில் ஒருங்கிணைத்து மேற்கூறிய வகையில் செய்திகள் போடப்படுகின்றன. இதனால், சாதிவெறி அமைப்புகளில் இருப்பவர்கள், இயல்பாகவே இந்துத்துவ கருத்தியலுக்கு ஆட்படுகின்றனர்.

இக்காரணத்தால்தான், “தமிழ்நாடு முழுக்க 2,000 சாகாக்கள் நடைபெறுகின்றன. 5,000 -க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். இதில் 80 சதவீதத்தினர் 15 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாவர். தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்புக்கு வராத மாணவர்கள், இளைஞர்களே இருக்க முடியாது” என்று உறுதியாகக் கூறுகிறார், ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியர்.

கடந்த அக்டோபர் மாதம் இரண்டாவது முறையாக, 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களை நடத்த முயற்சித்த போது, தமிழ்நாடு காட்டிய எதிர்ப்பு தற்பொழுது இல்லை என்பதுதான் எதார்த்தமாகும்.

களநிலைமை இவ்வாறிருக்க தமிழ்நாட்டில், தேர்தல்களில் பா.ஜ.க பெறுகின்ற வாக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு “ஒத்த ஓட்டு பா.ஜ.க.” என்றும், “நோட்டாவுடன் போட்டிப் போடும் கட்சி” என்றும் கிண்டலடித்துக் கொண்டிருப்பது மட்டும் போதாது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவுக்கு எதிரான செயல்பாடுகள், போராட்டங்கள் என்பவை வெறும் சமூக வலைத்தளங்களிலும் தேர்தல் களத்திலும் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டியவை அல்ல. அவை, மக்கள் மத்தியிலும் மேற்கொள்ளப் படவேண்டிய கருத்து நிலைப் போராட்டங்களும் நடவடிக்கைகளுமாகும்.

மேலும், தமிழ்நாட்டில் திராவிட மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களின் செல்வாக்கு இன்னும் நீடிப்பதால்தான் ஆர்.எஸ்.எஸ்.-ஆல், தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை. அதேசமயம், இந்த முற்போக்கு சித்தாந்தங்கள் இல்லாத தமிழ்நாட்டுப் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்றுகிறது. சென்னிமலை மற்றும் அச்சங்குட்டம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளானது பார்ப்பனிய எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாட்டிற்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும். பார்ப்பனிய எதிர்ப்பு, முற்போக்கு, ஜனநாயக சித்தாந்தங்களை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கீழ்மட்ட அளவில் கொண்டு சேர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை முற்போக்கு, ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகள் தோளில் சுமத்தப்பட்டிருக்கிறது. விரைந்து செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க