அதானியின் ஊழல் முறைகேடுகள் மீண்டும் அம்பலம்!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் கனவான இந்துராஷ்டிரம் என்பதே அதானி போன்ற பார்ப்பன, பனியா, மார்வாடி, பார்சி கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தைப் பொருளாதாரத்தில் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டதுதான் என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

ழல், முறைகேடுகள், பங்குச்சந்தை மோசடிகள் மூலம் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வளர்த்தெடுக்கப்பட்ட நிறுவனம்தான் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு சொந்தமான “அதானி குழுமம்”. ஹிண்டன்பர்க் அறிக்கை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் (OCCRP) என்ற சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் வலைப்பின்னல் வெளியிட்ட அறிக்கை ஆகியவற்றை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள “பைனான்சியல் டைம்ஸ்” பத்திரிகையின் ஆய்வு செய்தியும் இந்த உண்மையை நமக்கு உணர்த்துகின்றன.

இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து நிலக்கரி வர்த்தக நடவடிக்கைகளிலும், நிலக்கரி விலையை உயர்த்திக் காட்டி மோசடி நடந்துள்ளதாக அதானி நிறுவனத்தின் ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி இருக்கிறது, இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை. மேலும், அதானி நிறுவனத்தின் ஊழல் முறைகேடுகள் தற்போதுவரை தங்குதடையின்றி தொடர்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

2019-ஆம் ஆண்டிலிருந்து 32 மாதங்களுக்குள் “அதானி எண்டர்பிரைசஸ்” நிறுவனம், இந்தோனேசியாவிலிருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்த 30 வர்த்தக நடவடிக்கைகளை ஆய்வு செய்துள்ளது, பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை. அனைத்து வர்த்தக நடவடிக்கைகளிலும் நிலக்கரி விலைகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் அதானி நிறுவனம் 582 கோடி ரூபாய் (70 மில்லியன் டாலர்) அளவுக்கு மோசடி செய்துள்ளதாக தன்னுடைய ஆய்வில் கண்டறிந்துள்ளது, பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை.

சான்றாக, 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தனில் உள்ள கலியோராங் துறைமுகத்திலிருந்து 74 ஆயிரத்து 820 டன் அனல் நிலக்கரி, டி.எல். அகாசியா என்ற கப்பலில் இந்தியாவிற்கு வந்தது. இந்த நிலக்கரியின் மதிப்பு 15 கோடி ரூபாய் (1.9 மில்லியன் டாலர்). ஆனால், அதானி குழுமத்தின் முந்த்ரா துறைமுகத்தில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி மதிப்பு 35 கோடி ரூபாய் (4.3 மில்லியன் டாலர்).


படிக்க: “வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்” இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!


மேலும், தன்னுடைய பினாமி நிறுவனங்கள் மூலமும் இந்தோனேசியாவிலிருந்து இந்தியாவிற்கு நிலக்கரியை இறக்குமதி செய்து அதானி நிறுவனம் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதையும் பைனான்சியல் டைம்ஸ் அம்பலப்படுத்தி இருக்கிறது. கவுதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானியின் நெருங்கிய கூட்டாளியும் தைவான் தொழிலதிபருமான சாங் சுங்- லிங்கிற்குச் சொந்தமான “ஹை லிங்கோஸ்” நிறுவனம்; சாங் சுங் – லிங்கின் கூட்டாளியான நாசர் அலி ஷாபன் அஹ்லி என்ற தொழிலதிபருக்கு உறவினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற முகமது அலி ஷபான் அஹ்லியின் நிறுவனமான “டாரஸ்”; அதானி குழுமத்தின் முன்னாள் ஊழியரால் நடத்தப்படும் “பான் ஏசியா டிரேட்லிங்க்” – ஆகிய நிறுவனங்கள் அதானி நிறுவனத்தின் பினாமி நிறுவனங்களாக செயல்பட்டுள்ளன.

இந்த பினாமி நிறுவனங்களின் மூலம் மட்டும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 42 ஆயிரம் கோடி ரூபாய் (5 பில்லியன் டாலர்) மதிப்புள்ள நிலக்கரியை, உண்மையான விலையைவிட இரு மடங்கு அதிகமாக்க காட்டி, அதானி நிறுவனம் இறக்குமதி செய்துள்ளதாக தன்னுடைய ஆய்வில் கண்டறிந்துள்ளது, பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை.

அதானி நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளை சில குறிப்பிட்ட ஆண்டுகளில் மட்டும் ஆய்வு செய்ததன் மூலம் ஏறக்குறைய 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது, பைனான்சியல் டைம்ஸ். உண்மையில், அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடிகளின் மூலம் கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு இதைவிடப் பலமடங்கு அதிகமாக இருக்கும்.

நிலக்கரி இறக்குமதி மோசடிகள் மூலம் பல்லாயிரம் கோடிக் கணக்கில் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்துவரும் அதானி, விலையுயர்த்தி காட்டப்பட்ட நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை மாநில அரசுகளிடம் அதிக விலைக்கு விற்பதன் மூலமும் பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருகிறார்.


படிக்க: பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்


கடந்த ஆகஸ்ட் மாதத்தில், குஜராத் மாநிலத்தில் நிலக்கரி விலையுடன் இணைக்கப்பட்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளில் “அதானி பவர்” நிறுவனத்திற்கு குஜராத் மாநில அரசு கிட்டத்தட்ட 4,162 கோடி ரூபாய் (500 மில்லியன் டாலர்) அதிகமாக செலுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதே அதற்குச் சான்றாகும்.

அதானி நிறுவனத்தின் ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி ஹிண்டன்பர்க் அறிக்கை, ஓ.சி.சி.ஆர்.பி அமைப்பின் அறிக்கை, பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் ஆய்வறிக்கை போன்று எத்தனை அறிக்கைகள், ஆய்வு செய்திகள் வெளியே வந்தாலும், மோடியின் ஆட்சியில் அதானி தண்டிக்கப்படப் போவதில்லை. ஏனென்றால், பிரதமர் மோடியே அதானியின் ஏவலாளாகத்தான் இருக்கிறார். மேலும், மோடி அரசின் துணையில்லாமல் அதானியால் இந்த ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டிருக்க முடியாது என்பது ஊரறிந்த உண்மை.

மோடியின் ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியில், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், நிலக்கரி உற்பத்தி போன்ற துறைகளில் அதானியின் ஆதிக்கம் நிறுவப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் கனவான இந்துராஷ்டிரம் என்பதே அதானி போன்ற பார்ப்பன, பனியா, மார்வாடி, பார்சி கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தைப் பொருளாதாரத்தில் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டதுதான் என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

மக்களின் வரிப்பணத்தையும் சேமிப்பையும் கொள்ளையடிப்பது போன்ற தேசவிரோத நடவடிக்கைகளுக்காக அதானி போன்றவர்களை தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நிறுவனங்களை முடக்க வேண்டும், சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்களை பொருளாதாரத்தில் அதானிகளின் ஆதிக்கத்தை அறுத்தெறியும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டியது பாசிசத்திற்கு எதிராகப் போராட நினைக்கும் ஒவ்வொருவரின் கடமையாகும்.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க