ர இருக்கின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் சார்பாக, “வேண்டாம் பி.ஜே.பி, வேண்டும் ஜனநாயகம் –  கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்” என்ற இயக்கம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் ஊடாக களத்தில் வினையாற்றிய எமது அமைப்பு தோழர்கள் மக்களிடமிருந்தும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளிடமிருந்தும் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டனர். நடைமுறையிலிருந்து எழுப்பப்பட்ட இக்கேள்விகள் இந்த இயக்கத்தின் சூடேறிய கேள்விகளாக உள்ளன. இக்கேள்விகளுக்கான பதில்களை எமது தோழர்கள் மக்களிடத்தில் விளக்கியிருந்தாலும் தேவை கருதி அக்கேள்விகளையும் அளிக்கப்பட்ட விளக்கங்களையும் தொகுத்து இங்கு பதிவிடுகிறோம்.

வேண்டாம் பி.ஜே.பி.” என்றால் பா.ஜ.க.வைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பது தான் பொருள். பா.ஜ.க.வைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றால் அதனை நேரடியாக சொல்லலாம் அல்லவா? அதை ஏன் நேரடியாக சொல்ல மறுக்கிறீர்கள்?

“2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் பி.ஜே.பி.” என்று சொல்லும்பொழுது, மக்கள் தேர்தல் வரம்பில் இருந்துதான் அந்த முழக்கத்தினை அணுகுகின்றனர். பா.ஜ.க.வுடன் நேரடியாக முரண்பாடு இருக்கும் இடங்களில் வாழும் மக்கள் மட்டும்தான், “ஆர்.எஸ்.எஸ்-காரனை ஊருக்குள் விடக்கூடாது”, “சட்டத்திற்கு வெளியே களத்தில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும்” என்றெல்லாம் இயல்பாக சிந்திப்பார்கள். மேலும், பாசிசத்தை வீழ்த்த எமது அமைப்புகள் முன்வைக்கும் புரட்சிகரமான மாற்றை பற்றி மக்களுக்கு தெரியாது. எனவே, “வேண்டாம் பி.ஜே.பி.” என்று சொல்லும்போது யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி மக்களுக்கு இயல்பாக எழுகிறது.

மேலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்வதில் நாங்கள் ‘புனிதம்’ பார்க்கிறோம் என்றும் சொல்லப்படுகிறது. பா.ஜ.க.வைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றால் பா.ஜ.க.வை எதிர்த்து நிற்கின்ற “இந்தியா” கூட்டணியை ஆதரிக்க வேண்டியதுதானே, அதில் என்ன புனிதம் வேண்டியுள்ளது? என்ற நோக்கில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் “தேர்தல் புறக்கணிப்பு” அரசியலை முன்வைத்து வந்த அமைப்பு என்பதால் ஜனநாயக சக்திகள் மத்தியில் இப்படி ஒரு கேள்வி எழுவது இயல்பானதாகும்.

ஆனால், எமது அமைப்புகள் தேர்தலைப் புறக்கணிப்பு செய்கின்ற அமைப்புகளா, இல்லையா என்பது இங்கு பிரச்சினை அல்ல. பா.ஜ.க.வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளக்கூடிய எதிர்க்கட்சிகளின் தன்மை என்ன? தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றால் பாசிசத்தை வீழ்த்திவிட முடியுமா? போன்ற கேள்விகளுக்குள் சென்று பரிசீலிப்பதே பாசிசத்தை வீழ்த்துவதில் ஒத்த புரிதலை ஏற்படுத்தும்.

தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்ற கட்சி பா.ஜ.க. என்ற அடிப்படையிலும் அரசு கட்டமைப்பின் அனைத்து அங்கங்களிலும் ஊடுருவியுள்ள அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்ற அடிப்படையிலும் பா.ஜ.க.வைத் தேர்தலில் தோற்கடித்தாலும், குறுகிய கால இடைவெளிக்குள் பாசிச கும்பல் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இருப்பினும், பா.ஜ.க. நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்தப்பட்டால், பாசிச அரங்கேற்றத்திலிருந்து ஓரிரு ஆண்டுகள் கால “இடைவெளி” கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் மக்களும் கருதுகிறார்கள். இருப்பினும், தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடித்து ஆட்சிக்கு வரும் எதிர்க்கட்சிகளின் வரம்பு என்ன என்பதுதான் இங்கு முக்கியமான விடயம்.

பா.ஜ.க.வின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில், பல இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றுகளாக, புதிய கல்விக் கொள்கை, நீட், ஜி.எஸ்.டி, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, தொழிலாளர்களின் உரிமைப் பறிப்புகள், ‘உயர்சாதி ஏழைகளுக்கு’ பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு போன்றவற்றை வெறுமனே பா.ஜ.க. கொண்டுவந்தத் திட்டங்கள் என்று பார்க்க முடியாது. அவை, இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்களாகும். ஜி.எஸ்.டி-யை வைத்துக்கொண்டு மாநில உரிமையை பற்றி நம்மால் வாய் திறக்க முடியாது; உழைக்கும் மக்களை கல்வியில் இருந்து வெளியேற்றுகின்ற புதிய கல்விக் கொள்கையை வைத்துக்கொண்டு கல்வியில் எந்த சீர்திருத்தத்தையும் மேற்கொள்ள முடியாது; அரசுக் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி இருப்பதால், மக்களுக்கு நன்மை விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் எதிர்க்கட்சிகளால் நடைமுறைப்படுத்த முடியாது; மோடியின் ஆட்சியில் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பின் பெரும்பகுதி இந்துராஷ்டிரமயமாக்கப்பட்டுள்ளது.

அதைபோல், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு ஊர்களிலும் விதவிதமான பெயர்களில் நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்.-இன் கிளை அமைப்புகள் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை பா.ஜ.க.வை தேர்தலில் தோற்கடித்தாலும் இந்த அமைப்புகள் களத்தில் மூர்க்கமாக வேலை செய்யும். பாபர் மசூதி இடிப்பும், குஜராத் கலவரங்களும் ஒன்றியத்தில் காங்கிரசு கட்சி ஆட்சியில் இருந்த போது நடந்தவை என்பதை நாம் மறந்துவிட முடியுமா?

ஆனால், தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடித்து ஆட்சிக்குவரும் எதிர்க்கட்சிகள் இந்த திட்டங்களையும், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளையும் தடை செய்யுமா என்றால் நிச்சயமாக செய்யப்போவதில்லை. சொல்லப்போனால், “நீட்” தேர்வு கூட தடை செய்யப்படாது. இந்த திட்டங்களும் சங்கப் பரிவார அமைப்புகளும் தடை செய்யப்படாதவரை பா.ஜ.க.வைத் தோற்கடித்ததாக சொல்லிக்கொள்வதில் என்ன பொருள் இருக்கிறது?

பா.ஜ.க.வைத் தோற்கடிப்பது என்றால் என்ன என்ற முக்கியமான கேள்வி இங்குதான் எழுகிறது.

இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனவா? பா.ஜ.க.வின் அடித்தளத்திலேயே கைவைக்கும் வகையில், “சனாதனத்தை ஒழிப்போம்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, இந்தியா கூட்டணியே அதற்கு ஆதரவு தரவில்லை. ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு நிலை எடுத்தன.

பா.ஜ.க. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தபோதும், பீகாரில் நிதிஷ் குமார் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். இந்தியா கூட்டணியில் இல்லாத ஆந்திர மாநில அரசு கூட சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்வோம் என்று கூறுகிறது. ஆனால், மோடி எதிர்ப்பில் தீவிரமாக உள்ளதாகக் காட்டிக்கொள்ளும் மு.க.ஸ்டாலின், மம்தா பேனர்ஜி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏன் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை?

சரத் பவார், இந்தியா கூட்டணியில் பேசிக்கொண்டிருக்கும் போதே அஜித் பவாரையும் சந்திக்கிறார்; பிரதமருடனும் நெருக்கமான உறவைப் பராமரிக்கிறார். இதை என்னவென்று சொல்வது?

எதிர்க்கட்சிகளால் தங்கள் கூட்டணிக்குள்ளேயே ஒத்த கருத்துக்கு வர முடியவில்லை. நீட், ஜி.எஸ்.டி., காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை சட்டத்திருத்தம், ஈழத்தமிழர்கள் விவகாரம் என எந்த விவகாரத்திலும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குள் ஒத்த கருத்து இல்லை.

மேலும், எதிர்க்கட்சிகளில் உள்ளவர்களிலேயே எத்தனை பேர் கட்சி தாவுவார்கள் என்பது தெரியாது. தேர்தல் கமிசனை கையில் போட்டுக்கொண்டு, ஆயிரம் லஞ்சம் லாவணிகளை செய்து பா.ஜ.க.வால் எதிர்க்கட்சிகளை உடைக்க முடியும்; மீண்டும் எளிதாக ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் என்பதுதான் எதார்த்த கள நிலைமை.

நிலைமை இவ்வாறு இருக்கையில், எந்த அடிப்படையில் இந்தியா கூட்டணியை ஆதரிப்பது? ஆகையால், பா.ஜ.க.வுக்கு மாற்றாக இங்கு நிற்கின்ற கட்சிகள், தங்கள் கொள்கையில் ஒத்த கருத்து கொண்ட கட்சிகள் அல்ல. ஒரு சில சிறிய கட்சிகளைத் தவிர பிற அனைத்துமே ஜனநாயகமற்ற கட்சிகளாக தான் உள்ளன. எதிர்க்கட்சிகளிடையே மக்கள் கோரிக்கைகளில் ஒத்த கருத்து வேண்டும். அப்படியில்லாமல் பா.ஜ.க.வைத் தோற்கடிப்பது என்பது அர்த்தமற்றது.

சுருக்கமாக சொன்னால், மக்களைப் பொறுத்தவரையில், மக்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் உண்மையில் பா.ஜ.க.வை வீழ்த்துவதாகும். அந்த மக்கள் கோரிக்கைகள் குறித்துப் பேசாமல், பா.ஜ.க.வைத் தேர்தலில் தோல்வியடைய வைத்து ஒன்றும் ஆகபோவதில்லை.

உங்களுக்கு யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்களுக்குப் போடுங்கள். ஆனால், எதற்காக ஓட்டுப் போட வேண்டும் என்பது தான் இங்கு கேள்வி.

பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும், எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று சொல்பவர்கள், மேற்சொன்ன மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு மக்களிடம் வாக்கு கேட்கட்டும்.

நீங்கள் இந்த இயக்கத்தை எடுத்தது பொதுவான நேரம் இல்லை. தேர்தலையொட்டிதான் இயக்கம் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பா.ஜ.க. தோற்று எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் கோரிக்கைகள் நிறைவேறாது என்பது உண்மை தான். ஆனாலும், பா.ஜ.க. தேர்தலில் வெற்றியடைந்தால் இந்த கட்டமைப்பை சட்டப்பூர்வமாகவே பாசிசமாக மாற்றிவிடும் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும், உங்களது குறித்தத் திட்டத்தில் ஆளும்வர்க்க கட்சிகளுடன் குறைந்தபட்ச திட்டம் என்ற அளவில் கூட்டமைப்பு உருவாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே, இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டிய தேவை உங்களுக்கு உள்ளது. மேலும், இந்தியா கூட்டணியை ஆதரிப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது?

இது மிகவும் நெருக்கடியான நேரம். இப்படிப்பட்ட நேரத்தில் உங்களது மக்கள் கோரிக்கைகள்  பற்றியெல்லாம் பேச வேண்டாம். எதிரியை தோற்கடிக்க வேண்டும்” என்று சொல்கிறார்கள், சரி. ஆனால், இவர்கள் இப்போது மட்டுமல்ல, 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதும், இவ்வாறு தான் பேசினார்கள்.  ஆகையால், பிரச்சினை நெருக்கடியான நேரம் என்பதைப் பற்றியது அல்ல. பா.ஜ.க. வெற்றி அடைந்தால், பாசிச ஆட்சியைக் கொண்டுவரும் என்பது எங்களது திடமான கருத்து. ஆனால், நாம் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும்.

இன்று காங்கிரசு பிரதான எதிர்க்கட்சியாக இல்லை. அதற்கு அறுபது சீட்டுகள் வரைதான் உள்ளன. ஆனால், அவசர நிலை காலகட்டத்தில் இந்திராவுக்கு எதிராக நின்ற ஜனதா கட்சி நாடு தழுவிய அளவில் ஒற்றுமையாக நின்ற பெரிய கட்சி. அவர்கள் அமைத்த கூட்டணியில், இன்றைய பா.ஜ.க.வின் மூதாதையர்களான ஜனசங்கமும் இருந்தது. அந்த கூட்டணி, 1977 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திராவைத் தோற்கடித்தது. ஆனால், இன்றைய இந்தியா கூட்டணியை விட பலமடங்கு உறுதியான பெரிய கூட்டணியினாலேயே ஆட்சியைத் தக்க வைத்து கொள்ள முடியவில்லை. அன்று, இந்திரா தேர்தல் தில்லுமுல்லுகள் செய்து மக்களிடம் அம்பலப்பட்டு, அவசர நிலை ஆட்சியை அரங்கேற்றி மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்திருந்தது நல்ல வாய்ப்பாகவும் எதிர்க்கட்சிகளுக்கு இருந்தது.

ஆனால், அந்த ஜனதா கட்சியும் கூட்டணியும் பிளவுற்று ஆட்சி மூன்று ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வந்தது; அதன் பின்னர் நடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார் இந்திரா. இது வரலாறு.

இந்திராவின் அன்றைய காங்கிரஸ் கட்சி, இன்றைய பா.ஜ.க.வைப் போன்ற சித்தாந்த அடித்தளம் கொண்ட கட்சி அல்ல. அரசுக் கட்டுமானத்தில் அனைத்து அங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி இருப்பதைப் போல, அன்று இந்திராவுக்கு கட்டமைப்பு கிடையாது. அப்படிப்பட்ட கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடிந்தது என்றால் ஆர்.எஸ்.எஸ். பற்றி நீங்கள் என்ன புரிந்து வைத்துள்ளீர்கள். அரசு மற்றும் சமூகக் கட்டமைப்பின் ஒவ்வொரு தூணிலும் அது ஊடுருவி உள்ளது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடக்கும் சாதி கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் இருக்கின்றது. மணிப்பூரில் குக்கி இன மக்கள் மீதான கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுவிட்டால், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்று கனவு கண்டு கொண்டிருக்க முடியாது. எதிர்க்கட்சிகள் கூட்டணி வென்றால், எதிர்க்கட்சிகளிடைய உள்ள லாவணிகள், ஊழல்கள், முறைகேடுகளைப் பயன்படுத்திக்கொண்டு, “ஒரு ஸ்திரமான ஆட்சி வேண்டும்” என்ற பொதுக்கருத்தை உருவாக்கி, மிக விரைவில் பா.ஜ.க.வைக் கேள்விக்கிடமற்ற வகையில் மக்கள் ஆதரிப்பதற்கான வாய்ப்புகளை பா.ஜ.க. உருவாக்கிவிடும். இவ்வாறெல்லாம் நடக்காது, நாங்கள் ஒற்றுமையாக இருப்போம் என்று சொல்வதற்குக் கூட எதிர்க்கட்சிகளால் முடியவில்லை.

ஆகவே, தேவையில்லாமல் இந்தியா கூட்டணி மீது மிகைமதிப்பீடு வைத்து மக்களை ஆளும்வர்க்க நிகழ்ச்சிநிரலுக்கு இழுத்துச் செல்லாதீர்கள். மக்களுடன் கைகோர்த்து நில்லுங்கள்.

தி.மு.., காங்கிரசு போன்றவை பெரிய கட்சிகள், நீங்கள் சிறிய அமைப்பு. மேலும், மக்கள் அமைப்பாக்கப்படவில்லை, பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கும் நிலையில் இல்லை. இதனையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ளாமல் பேசுகின்றீர்கள்.

இடதுசாரி புரட்சிகர இயக்கங்கள் பலவீனமாக இருப்பதைப் பார்த்து மற்றவர்கள் வருந்த வேண்டிய அவசியமில்லை. பலவீனமான இந்த அமைப்புகள் செய்யும் பிரச்சாரத்தைப் பார்த்து ஏன் பெரிய கட்சிகளை ஆதரிப்பவர்கள் அஞ்சவேண்டும் என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். இங்குதான், “மக்கள் ஒரு மாபெரும் சக்தி” என்பதன் உண்மையான பொருள் அடங்கியிருக்கிறது.

இன்று, பா.ஜ.க-வைத் தோல்வி முகத்திற்குத் தள்ளியிருப்பது எது?

2019-இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பாருங்கள். இராமர் கோவிலுக்கு அடிப்படையான பாபர் மசூதி நிலம் விவகாரத்தில் சங்கப் பரிவார கும்பலுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது; காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது; அடுத்தடுத்த பாசிச திட்டங்களை அமல்படுத்தியது மோடி அரசு. அந்த வகையில், சி.ஏ.ஏ. கொண்டுவரப்பட்ட போது, இஸ்லாமிய மக்களும் அவர்களுக்கு ஆதரவாக இந்த ‘சிறிய’ பாட்டாளி வர்க்க அமைப்புகள் மற்றும் கட்சிகளும் இந்தியா முழுவதும் முன்னெடுத்த போராட்டங்கள்தான் பா.ஜ.க.வின் தொடர் தாக்குதல் நிலையை எதிர்த்து நின்ற பெரிய மக்கள் போராட்டமாகும்.

அடுத்து, மூன்று வேளான் சட்டங்களை எதிர்த்து ஹரியானா-பஞ்சாப் விவசாயிகள் நடத்திய போராட்டம் பா.ஜ.க.விற்கு மேலும் பலத்த அடியைக் கொடுத்தது. இந்த இரண்டு போராட்டங்களும்தான் பா.ஜ.க-கும்பலை தோல்வி முகத்திற்கு கொண்டு சென்றது. அதேபோல், தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பன எதிர்ப்பு உணர்வுதான் தி.மு.க-வை தமிழ்நாட்டில் வெற்றி பெறச் செய்தது.

ஆகவே, எதிர்க்கட்சிகள் மக்கள் போராட்டங்களுக்கும்  அவர்களின் கோரிக்கைகளுக்கும்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்படி அவர்கள் மக்களின் பக்கம் நிற்கவில்லையென்றால் அவர்களின் ஆட்சியே நிலைக்காது. தற்போது தி.மு.க-வை மக்கள் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வைக்கவே மக்கள் போராட்டங்கள்தான் தேவைப்படுகிறது.

சனாதனம் குறித்து பா.ஜ.க கும்பலிடம் கேள்வியெழுப்பி பா.ஜ.க. கும்பல் பின்வாங்கும் நேரத்தில், சனாதனம் குறித்துப் பேச வேண்டாம், சி.ஏ.ஜி குறித்துப் பேசுங்கள் என திமுகவும் காங்கிரசும்தான் பிரச்சனையை திசைதிருப்பின.

எனவே, இந்த விஷயத்தை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். இது நெருக்கடியான தருணம், அபாயகரமானது என்று பீதியூட்டுவதெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்காக எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.

ஆனால், உண்மையில் மக்கள் இப்போதே நெருக்கடியில்தான் உள்ளார்கள். அது நரசிம்மராவ், மன்மோகன், வாஜ்பாய் ஆட்சிக் காலங்களிலேயே அவர்களுக்கு உருவாகிவிட்டது. தற்போது உள்ள ஜி.எஸ்.டி-க்கு அடிக்கல் போடப்பட்டதே மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில்தான். இப்போது “மோடி எக்னாமிக்ஸ்” என்றால், அப்போது “மன்மோகன் எக்னாமிக்ஸ்”. தற்போது மீண்டும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்து, பா.ஜ.க.வைப் போலவே கார்ப்பரேட் சேவைகளைத்தான் செய்யப் போகின்றனர் என்றால், மக்கள் எதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒன்றுமே இல்லாமல் மொத்தமாக அழிந்துபோய்விடும் என்ற அச்சம் எதிர்க்கட்சிகளுக்கு இருந்தால் மக்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு மக்களுடன் களத்திற்கு வரட்டும்.

மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதையும் பாசிசத்தை வீழ்த்துவதையும் இணைத்து வைத்துப் பேசுவது, பாசிசம் முதன்மையான பிரச்சினை என்று நீங்கள் கூறுவதையே நிராகரிப்பதாகாதா? பாசிச அபாயம் முன்னிலைக்கு வந்திருக்கும் இந்த சூழலில், பாசிச பா.ஜ.க.வை எதிர்க்கின்ற இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதுதானே சரியானதாக இருக்கும்?

பாசிசம் அரங்கேறுகிறது என்ற கருத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கருத்தாகும். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இசுலாமிய மக்கள், சிறுபான்மை மதத்தினர், தலித்துகள், உழைக்கும் மக்களுக்கு குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதம் கூட இல்லாமல் போய்விடும் என்பதும் இவர்களது கருத்தாகும்.

ஆனால், தி.மு.க.வோ பா.ஜ.க.வையும் ஆர்.எஸ்.எஸ்.சையும் பாசிசம் என்று கூறவில்லை; சனாதனத்தை எதிர்ப்பதாகக் கூறுகிறது. சனாதனம் என்பது இன்று நேற்று இருப்பதல்ல, தொன்று தொட்டு இருப்பது; காங்கிரசு கட்சியே அரை சனாதனக் கட்சிதான். ஆகையால், இன்றைக்கு சனாதனத்தையும் பார்ப்பன, பனியா, மார்வாடி, பார்சி வகை கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தைக் கொண்டுவருவது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.தான். ஆகையால், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கார்ப்பரேட் ஆதிக்கம் என்பதுதான் பாசிசம்.

ஆனால், இந்தக் காரணத்திற்காகக் கூட, காங்கிரசு பா.ஜ.க.வை எதிர்க்கவில்லை. மிகவும் மொண்ணையாக, “வெறுப்பு அரசியலை எதிர்ப்போம்”, “இந்தியா ஒற்றுமை” என்று கூறிவருகிறது. பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கு அதனிடம் சரியான மாற்று சித்தாந்தம் இல்லை.

ஆகையால், பாசிசம் வருகிறது என்பது உழைக்கும் மக்கள், சிறுபான்மையினர், தலித் மக்களின் கவலையாகும். இது தி.மு.க., காங்கிரசின் கவலை அல்ல. அவர்களைப் பொருத்தவரை, பா.ஜ.க. தேர்தலில் முறியடிக்கத்தக்க ஜனநாயகக் கட்சிதான். அது தடை செய்யப்பட வேண்டிய கட்சி அல்ல.

ஆகையால், அன்றாடம் தனது உரிமைகளைப் பறி கொடுத்து வருகின்ற உழைக்கும் மக்களுக்கு பாசிசத்தை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியும். இதனை அலட்சியம் செய்துவிட்டு, தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது என்ற ஒற்றை குறிக்கோளை முன் தள்ளி, மக்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கும் நாடகத்தை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்கள் கோரிக்கைகள்தான் பாசிசத்தை வீழ்த்தும் ஒரே வழி.

வேண்டுமெனில் இப்படி சொல்லலாம். பாசிசம் உழைக்கும் மக்களை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளையும் விட்டுவைக்காது; ஆகையால், உழைக்கும் மக்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, அந்தவகையில், ஒரு கொள்கை ஒற்றுமையை சாதித்து, மக்கள் பக்கம் நின்றால், பாசிசத்தை வீழ்த்தி அனைவரும் “இடைவெளி”யை சுவாசிக்கலாம்.

தொழிற்சங்க பாணியில் சொன்னால், கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் தொழிலாளர்களை, அவர்களது கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு வர சொல்வதைப் போன்றதாகும். கம்பெனியில் இருக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும்போது, “உற்பத்தி பாதிக்கப்படுகிறது, இதனால் உங்களுக்குத்தான் பாதிப்பு, கம்பெனி நடந்தால்தானே உங்களுக்கும் நல்லது, அதனால் வேலைக்கு வாருங்கள்” என்று கூறுவது எப்படி சரியாக இருக்கும்?

உற்பத்தி பாதிக்கப்படுவதைப் பற்றி முதலாளிக்கு அக்கறை இருந்தால், தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, ஆலையில் ஒடுக்குமுறைகளைத் தளர்த்தி, ஜனநாயகத்தை வழங்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, “உற்பத்தி பாதிக்கப்படுகிறது, நெருக்கடியாக உள்ளது” என்று கூறுவது தொழிலாளர்களின் கோரிக்கைகளை அடகு வைத்துவிட்டு, கொத்தடிமைத்தனத்தை ஏற்க வைப்பதாக ஆகிவிடும்.

நீங்கள் சொல்வது போல உடனடிக் கோரிக்கைகளின் அடிப்படையில் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் கூட்டமைப்பு உருவாக்கி செயல்படலாமே?

தற்போது, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் இணைந்துதான் செயல்படுகிறோம். ஆனால், அதில் உள்ள அமைப்புகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் விசயத்தில் ஒத்த கருத்து இல்லை. தேர்தலை ஆதரிப்பவர்கள், தேர்தல் அரசியலுக்கு வெளியே நிற்பவர்கள், இந்தியா கூட்டணியை ஆதரிப்பவர்கள், காங்கிரசு-பா.ஜ.க. இரண்டுமே ஒன்றுதான் என்று கூறுபவர்கள் எனப் பலரும் இந்தக் கூட்டமைப்பில் இருக்கின்றனர்.

நாங்கள் மக்கள் கோரிக்கைக்காக நிற்போம். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் ஆர்.எஸ்.எஸ் இந்த கட்டமைப்புக்குள் ஊடுருவதைத் தடுக்க முடியாது. எனவே, எதிர்க்கட்சிகளை ஆதரித்து அவர்களை வெற்றி பெற வைப்பது எங்களுடைய நோக்கம் அல்ல, மக்களிடம் பா.ஜ.க. வேண்டாம், மக்களது கோரிக்கைகள் நிறைவேற்றப் பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டு செல்வதே எங்களுடையே நோக்கம்.

உங்களது கருத்துப்படி பார்த்தால், பெரும்பாலான புரட்சிகர, ஜனநாயக சக்திகள், இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுப்பதற்குத்தான் வாய்ப்புகள் உள்ளன. தேர்தலில் உடனடி கோரிக்கைகளை முன்வைத்து செயல்படுவதற்கு உங்களுக்கும் அவர்களுக்கும் தற்போது எதுவும் இல்லை. நிலைமை இவ்வாறிருக்கையில், எதற்கு கூட்டமைப்பு பற்றி நீங்கள் இப்போது பேச வேண்டும்?

இதை இயங்கியலாக பரிசீலிக்க வேண்டும். வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம் என்ற எமது இயக்கத்தில் நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பலவற்றில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் இருக்கும் அமைப்புகளுக்கும் மே 17 இயக்கம் போன்ற அமைப்புகளுக்கும் உடன்பாடு இருக்கின்றன. வி.சி.க., தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட தலித் அமைப்புகள், கட்சிகள், த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இசுலாமிய அமைப்புகள், கட்சிகளுக்கு எமது கோரிக்கைகளில் வேறு பலவற்றில் உடன்பாடு இருக்கின்றன.

பிரச்சனை அதுவல்ல, பாசிசத்தை வீழ்த்துவது குறித்துப் புரிந்து கொள்வதற்கும், மாற்று குறித்து ஒருங்கிணைந்த கருத்துக்கு வருவதை நோக்கி நகர்த்துவதற்கும் கூட்டமைப்பு என்ற அரங்கம் தேவைப்படுகிறது. இதற்காக பல சுற்று விவாதங்கள், பல நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. இதன் போக்கில்தான் ஒரு பொதுக் கருத்துக்கு வர முடியும். அந்த இலக்கை நோக்கிப் பயணத்தை தொடங்குவதற்குத்தான் தற்போதைய செயல்பாடுகள், கூட்டமைப்புகள், கூட்டு நடவடிக்கைகள் உதவுமே தவிர, இன்றைய நிலையிலேயே உறுதியான பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி உருவாகிவிடாது.

எதார்த்தத்தில், பாசிச பா..., இந்த கட்டமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கி, தனது பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது. இவையில்லாமல் சமூகத்தின் பல்வேறு தளங்களில் கருத்துருவாக்கங்களை செய்துவருகிறது சங்கப் பரிவார கும்பல். இவை எதுவும் உதவவில்லையென்றால் கலவரங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கான குண்டர் படையும் அனிடம் உள்ளது. ஆகையால், பாசிஸ்டுகளை தேர்தலில் மட்டும் வீழ்த்தாமல் எல்லா தளங்களிலும் முறியடிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பது சரிதான். ஆனால், தற்போது நமக்கு தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்ற தேவை உள்ளதே. அப்போது அதைப் பற்றி ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும், அல்லவா?

“எதிரி யாரோ, அவர்களை வீழ்த்துவதற்குதான் இந்த கூட்டணி, நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதற்கானது அல்ல” என்று தெளிவாக சொல்கிறார், தி.மு.க. தலைவர் ஸ்டாலின். “பா.ஜ.க.-வை வீழ்த்துவதுதான் எங்கள் குறிக்கோள்” என்று எதிர்க்கட்சிகள் அரசியல் களத்தில் வந்து நிற்கிறார்கள். அதேபோல, நாங்களும் “வேண்டாம் பி.ஜே.பி.” என்றுதான் சொல்கிறோம். ஆகையால், தேர்தலில் தெளிவான எமது முடிவு இதுதான்.

நீங்கள் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டுமென்றால் எங்களுடைய மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது எங்களது இன்னொரு தெளிவான முடிவு.

“இந்த கோரிக்கைகளை முன்வைத்து இந்தியா கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தாதீர்கள். தி.மு.க.வும் காங்கிரசும் முதலாளித்துவக் கார்ப்பரேட் கட்சிகள், அவர்களை நீங்கள் திருத்த முடியாது. ஆனால், பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்பது நமக்குத்தான் அவசியமானது, ஆகையால், இந்தியா கூட்டணியை ஆதரிப்பதுதான் சரியான, தெளிவான முடிவாகும்” என்பது உங்களுடைய  கோரிக்கையாக உள்ளது.

ஆனால், உதயநிதி ஸ்டாலின் தனது கார்ப்பரேட் வர்க்க நலனுக்காக மோடியை போய் சந்தித்துவிட்டு வருகிறார். இந்தியா கூட்டணியில் உள்ள பல கட்சித் தலைவர்கள், G20 மாநாட்டிற்குச் சென்று மோடியைக் கவுரவிக்கின்றனர். அதாவது, G20-யில் அவர்களது பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் வர்க்கங்களின் பங்கைப் பெறுவதற்காக முயற்சிக்கின்றனர். உதயநிதி சனாதானம் குறித்து பேசும்போது, அவரது கட்சியில் இருக்கும் டி.ஆர்.பாலுவே அதற்கு ஆதரவு தரமறுக்கிறார். இந்தியா கூட்டணிக் கட்சிகள் மக்கள் கோரிக்கைகள் குறித்த விசயத்தில் ஒத்த கருத்துக்கு வர மறுக்கிறார்கள்.

ஆனால், மக்களைப் பார்த்து, இந்தியா கூட்டணியுடன் ஒத்த கருத்துக்கு வரக் கோருகிறீர்கள், இந்தியா கூட்டணியை ஆதரிக்கக் கோருகிறீர்கள். இது என்ன நியாயம்?

தி.மு.க., காங்கிரசு எல்லாம் கார்ப்பரேட் கட்சி, அவர்கள் மக்கள் கோரிக்கைகளுக்கெல்லாம் போராடுவார்கள் என்று கருதுவது தவறு என்று சொல்வதன் மூலம், அவர்களை நீங்கள் புனிதமாக்கிவிடுகிறீர்கள். அவர்கள் மக்களுக்காக இறங்கி வரவேண்டும் என்பதைத் தடுத்து அவர்களை உயர்ந்த பீடத்தில் வைத்துவிடுகிறீர்கள். உழைக்கும் மக்களை அவர்கள் பின்னால் அணிவகுக்கச் சொல்கிறீர்கள். இது அப்பட்டமான துரோகமல்லவா?

தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பன எதிர்ப்பு உணர்வின் காரணமாகத்தான் ஸ்டாலின் ஆட்சியில் உள்ளார் என்பதை அவர் உணர்ந்திருந்தால், இந்நேரம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும். காவிரி பிரச்சினைக்கு தமிழ்நாட்டில் பந்த் நடந்திருக்கும். தி.மு.க.விற்கு அந்த உணர்வு இல்லை. அதை ஒப்புக் கொள்ளுங்கள். காங்கிரசுக்கு அந்த உணர்வில்லை, அதை ஒப்புக்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் சனாதன எதிர்ப்பு வடநாட்டில் ராமருக்கு பஜனை இந்த இரட்டை வேடத்தைக் கேள்வியெழுப்பக் கூடாதா?  மக்களுடைய கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல், மக்கள் ஆதரவு இல்லாமல், கவர்ச்சிவாத திட்டங்களை மட்டும் வைத்து வாக்கை அறுவடை செய்யலாம் என்று நினைத்தார்கள் என்றால் அவர்களால் வெற்றிபெற முடியாது.

நீங்கள் சொல்வதையெல்லாம் பார்த்தால், இந்தியா கூட்டணி உங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று நன்கு தெரிகிறது.

அது எங்களுடைய முடிவு இல்லை. 2024 தேர்தலுக்கான முழக்கங்களாக மக்கள் கோரிக்கைகளை வைத்துள்ளோம். இதை இந்தியா கூட்டணியினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. ஏற்றுக்கொள்வார்களா, மாட்டார்களா என்பது தேர்தலின் போதுதான் தெரியும். நிலைமைகள் அவர்களையும் நிர்பந்திக்கும். இந்தியா கூட்டணியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றால், எதற்கு பிரச்சாரம், எதற்கு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லாம். மக்கள் கோரிக்கைகளை இந்தியா கூட்டணி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பா.ஜ.க.வை எதற்கு தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்?

நீங்கள் தேர்தலை புறக்கணிக்கும் அமைப்பு, அப்படியிருக்கையில் நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றுவீர்கள். அதற்கு என்ன தீர்வு முன்வைக்கிறீர்கள்?

நாங்கள் தேர்தலில் நிற்கிறோமா, புறக்கணிக்கிறோமா என்பது எங்களது கொள்கை சார்ந்த விசயம். அதற்கும் நாங்கள் முன்வைக்கும் மக்கள் கோரிக்கைகளுக்கும் தொடர்பில்லை. ஒரு கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமானால், அந்த கோரிக்கையை எந்த அளவிற்கு மக்கள் வலியுறுத்துகிறார்கள், அதில் எந்த அளவிற்கு மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் முடிவு செய்யப்படும்.

உங்களது கோரிக்கைகளில் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற “அரசியல் மாற்றை” (political alternate) முன்வைத்துள்ளீர்கள், அது குறித்து விளக்குங்கள்?

இந்த அரசுக் கட்டமைப்பு என்பது ஜனநாயகமற்றதாக, பாசிசம் வளர்வதற்கு அடிப்படையாக உள்ளது. எனவே, இந்தக்கட்டமைப்புக்கு மாற்றாக வேறொரு மாற்றுக் கட்டமைப்பு வேண்டும். அவ்வாறு ஒரு மாற்றை முன்வைக்காமல், நிலவும் பாசிசத்தை வீழ்த்த முடியாது; ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலைத் தடுக்க முடியாது. அந்த மாற்று என்பதைப் பொறுத்துவரை எமது அமைப்புகள் சார்பாக வெளியிட்டுள்ள, “தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்ற கையேட்டில், மூன்று முக்கியமான அம்சங்களை வைத்துள்ளோம்.

சட்டமியற்றுபவர்களுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கும் ஒருங்கே ஒரு அதிகாரம் வேண்டும். அதைபோல் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் திருப்பி அழைக்கப்படும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும். தொழிலாளி வர்க்கத்திற்கு அளிக்கப்படும் ஊதியம்தான் அதிகார வர்க்கத்திற்கும் தரப்படும். இவ்வாறான ஒரு கட்டமைப்பு அரசியல் தளத்தில் இருக்க வேண்டும் என்கிறோம். ஆனால், இதுவும் அரசியல் கட்டுமானம் தொடர்பான ஒரு துறையில் மட்டும் முன்வைக்கப்பட்டுள்ள மாற்றுதான். இதைப்போல, பல துறைகளில் மாற்று வைக்கப்பட வேண்டியிருக்கிறது. சாதி குறித்து, தேசிய இனங்களைக் கையாள்வது குறித்து இன்னும் விளக்க வேண்டியுள்ளது. இது வளர்ச்சிப்போக்கில்தான் உருவாக்கப்படும்.


வெற்றிவேல் செழியன்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க