விசாகப்பட்டிணம் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் லாபவெறியால் நிகழ்ந்த விசவாயுக் கசிவுப் படுகொலைகளுக்குப் பின்னரும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த எந்த அதிகாரிகளும் கைது செய்யப்படவில்லை. மேலும் அந்த நிறுவனத்தை உடனடியாக மூடவேண்டும் எனப் போராட்டம் நடத்திய அப்பகுதி மக்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தது மட்டுமல்லாமல், தனது குழந்தையின் உயிரைப் பறிகொடுத்த ஒரு தாயின் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது ஆந்திர போலீசு.

விசாகப்பட்டிணம் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் லாபவெறியால் ஏற்பட்ட விசவாயுக் கசிவில் படுகொலை செய்யப்பட்ட 12 பேரில் 9 வயது சிறுமி கரிஷ்மாவும் ஒருவர். விச வாயுக் கசிவு ஏற்பட்ட அன்று அதிகாலையில் சிறுமி கரிஷ்மா மற்றும் அவளது 11 வயது அண்ணன் பார்தா ஆகியோரை அழைத்துக் கொண்டு அவர்களது பெற்றோர் அப்பகுதியிலிருந்து வெளியேறிச் சென்றனர். போகும் வழியிலேயே அதிகமான விசவாயுவை நுகர்ந்ததால், குழந்தைகள் இருவரும் மயங்கிச் சரிந்துள்ளனர். அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது சிறுமி கரிஷ்மா இறந்துவிட்டதாக தெரிவித்தனர் மருத்துவர்கள்.

கடந்த மே 9 அன்று (சனிக்கிழமை) கரிஷ்மாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. விசவாயுக் கசிவில் உயிரிழந்தவர்கள் வேறு சிலரின் உடலும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேராக எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவன வாயிலுக்குச் சென்று அந்நிறுவனத்தை உடனடியாக மூடி சீலிட வேண்டும் என்ற போராட்டத்தில் அப்பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

எல்.ஜி. ஆலையைச் சுற்றி போலீசு படை குவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்று முழங்கினர். அந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த லட்சுமி, போலீசு உயரதிகாரிகளிடம், அந்த ஆலையை எப்படியாவது மூடிவிடும்படி கைகூப்பிக் கெஞ்சினார்.

தனது மகளின் உயிரைப் பறித்த இந்த ஆலையின் அதிகாரிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

அவருடன் அப்பகுதி மக்களும் இதே கேள்வியை எழுப்பினர். அவர்களிடம் சமாதானம் பேசிய போலீசு அதிகாரி, கலைந்து செல்லும்படியும், அப்பகுதி மக்களுக்குப் போதுமான நிவாரணத் தொகை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள், “எங்களுக்கு ஒரு பைசா கூட நிவாரணம் தேவையில்லை. உடனடியாக ஆலையை மூடி சீலிடு” என்று கூறி போராட்டத்தைத் தொடர்ந்தனர். லட்சுமி மூடப்பட்டிருந்த எல்.ஜி பாலிமர்ஸ் ஆலையின் கதவின் மீது ஏறிக் குதித்து உள்ளே இறங்கி, உட்பக்கமாக பூட்டியிருந்த கதவைத் திறந்து விட்டார். அதனைத் தொடர்ந்து பகுதி மக்களும் ஆலை வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத்தை நடத்தினர். அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தது போலீசு.

இதனைத் தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை (11.05.2020) அன்று காலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடிக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. அன்று மாலையே, எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தை மூடக் கோரி சனிக்கிழமை (09-05-2020) போராட்டம் நடத்திய அப்பகுதி மக்களின் மீது வழக்குப் பதிவு செய்ததோடு கைதும் செய்துள்ளது ஆந்திரப் போலீசு.

படிக்க:
♦ பிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா ? | பொ.வேல்சாமி
♦ விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !

பகுதி மக்கள் 5 பேர் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் 7 பேர் உள்ளிட்டு 12 பேர் மீது பிரிவு 147 (கலவரம் செய்தல்), 447 (குற்ற நோக்கோடு அத்துமீறி நுழைதல்), 353 (அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தது), 188 (அரசு ஊழியர்களின் உத்தரவிற்கு அடிபணிய மறுத்தது), 271 (தனிமைப்படுத்தலை மீறியது) மற்றும் 51(A) (அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கத் தவறியது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டன.

மேலும் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவன வாயிற்கதவின் மீது ஏறிக் குதித்த ‘ஒரு பெண்’ என்று குறிப்பிடப்பட்டு அவரின் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த நாசகார நிறுவனத்தின் கோரத் தாண்டவத்தால் உயிரை இழந்த கரிஷ்மாவின் தாயான லட்சுமிதான் வாயிற்கதவின் மீது ஏறிக் குதித்த ‘அந்தப் பெண்’. ஆனால் இந்தச் சூழலில் லட்சுமியின் மீது நேரடியாக வழக்குப் பதிந்தால் பிரச்சினையாகும் என்பதை உணர்ந்த ஆந்திர போலீசு நயவஞ்சகமாக ‘ஒரு பெண்’ என மட்டும் குறிப்பிட்டுள்ளது.

டில்லியில் இருக்கும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், ஸ்டைரினைத் தேக்கி வைத்திருக்கும் உருளைகள் மிகவும் பழையவையாகவும், பராமரிப்பற்றும் இருந்ததுதான், விபத்துக்கான காரணம் என்று அறிக்கை வெளியிட்டது.

இந்திய ஒன்றிய ஆற்றல்துறையின் முன்னாள் செயலரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஈ.ஏ.எஸ். சர்மா, இந்த விபத்துக்கு முறையற்று இயங்கும் அந்த நிறுவனமும், அதற்கு அனுமதியளித்த அதிகாரிகளும்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

நடந்த படுகொலைக்கு எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் லாபவெறிதான் முதன்மைக் காரணம் என்று அம்பலப்பட்டுள்ள நிலையிலும், அந்நிறுவனத்தைச் சேர்ந்த யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால், அந்நிறுவனத்தின் நச்சுச் சூழலால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் அப்பகுதி மக்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைதும் செய்துள்ளது போலீசு. பெற்ற பிள்ளையை இழந்த பெண்ணின் மீது வழக்குப் போட்டுள்ளது.

இவ்விவகாரத்தை ஓரிரண்டு நாட்களில் அப்படியே கைவிட்டு அடுத்த விவகாரங்களுக்குத் தாவி விட்டன ஊடகங்கள். எல்.ஜி குழுமத்தின் விளம்பரத்திற்காக நாவில் நீர்வடியக் காத்திருக்கும் இத்தகைய ஊடகங்களிடம் அறத்தை எதிர்பார்க்க முடியாது.

அன்று வாரன் ஆண்டர்சன் தொடங்கி, நேற்று அனில் அகர்வால், இன்று எல்.ஜி நிறுவன தலைமைச் செயலதிகாரி வரை அனைவரும் கைது செய்யப்படாமல் இந்த அரசால் பாதுகாக்கப்பட்டே வந்திருக்கின்றனர். இந்தப் படுகொலைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மரணம் நம் வீட்டு வாசல் வரும்வரையில் அமைதிகாக்கப் போகிறோம் எனில், அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.


நந்தன்

செய்தி ஆதாரம் :
♦ Cops book cases against gas leak victims, arrest 5 villagers, 7 CPI activists
♦ Mother of Deceased 9-Yr-Old Demands Closure of LG Polymers

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க