ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் விசாகப்பட்டினம் உருக்கு ஆலை என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ராஷ்ட்ரிய இஷ்பாட் நிகாம் லிமிடெட் (RINL) என்ற பொதுத்துறை நிறுவனம் 20,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும். இந்த நிறுவனத்தில் 13,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர்.
நாட்டின் எஃகு உற்பத்தியில் முக்கியப் பங்காற்றும் விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை தனியார்மயப்படுத்துவதற்கான முயற்சியில் 2021 ஆம் ஆண்டிலிருந்து மோடி-அமித்ஷா கும்பல தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உற்பத்தியை திட்டமிட்டு சீர்குலைப்பது, பிளாஸ்ட் ஃபர்னஸ்-3, ஸ்டீல் மெல்டிங் ஷாப் போன்ற பல கீழ்நிலைத் துறைகளை மூடுவது, கடனை காரணமாகக் காட்டி மூலப்பொருட்களை தடுத்து நிறுத்துவது போன்ற பல்வேறு சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக உருக்கு ஆலைத் தொழிலாளர்கள் பல கட்டப் போராட்டங்களை கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர். ஆந்திரா மட்டுமின்றி, நாட்டிலுள்ள ஜனநாயகச் சக்திகளில் பலரும் ஆலை தனியார்மயப்படுத்தப்படுவதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு அங்கமாகத் தான், விசாகப்பட்டினம் உருக்கு ஆலையின் சொத்துகள் மற்றும் மனித வளத்தைத் தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து ஒன்றிய அரசின் முன்னாள் செயலாளரான இ.ஏ.எஸ்.சர்மா, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “ஆர்.ஐ.என்.எல். போன்ற ஒன்றிய பொதுத்துறை உருக்கு ஆலையை மீண்டும் உருவாக்குவது, குஜராத்தில் அமைந்துள்ள லாபம் ஈட்டும் அமெரிக்க நிறுவனமான மைக்ரானுக்கு ரூ.13,000 கோடி மானியம் வழங்குவதை விட தேச நலனை உயர்த்தும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “உங்கள் அரசாங்கம் ஆர்.ஐ.என்.எல். போன்ற ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களைப் பலப்படுத்தி தேசிய எஃகு கொள்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அவற்றை வேண்டுமென்றே பலவீனப்படுத்தி, தனியார் நிறுவனத்திற்குக் குறைவான விலைக்கு விற்க வழிவகுத்து, உருக்கு துறையில் உலகின் முன்னணி நாடாக மாற விரும்புவது நகைப்புக்குரியது. விசாகப்பட்டினம் உருக்கு ஆலைக்கு உங்கள் அரசாங்கம் ஒன்று அல்லது இரண்டு இரும்புத் தாது தொகுதிகளை ஒதுக்கியிருந்தால், இரும்புத்தாது மற்றும் நிலக்கரியைப் பெறுவதற்கு தர்க்க ரீதியான ஆதரவை வழங்கியிருந்தால், போதுமான நிதி ஆதரவை வழங்கியிருந்தால் அந்நிறுவனம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடன் போட்டிபோட்டு இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, “உங்கள் அரசாங்கம் உயர்தர இரும்புத் தாதுவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதும், உற்பத்தி செய்யப்பட்ட எஃகு பொருட்களுக்கு அந்த நாட்டைச் சார்ந்திருப்பதும், ஆர்.ஐ.என்.எல். இரத்தம் கசிவதற்கு அனுமதிக்கப்படுவதும் முரண்பாடாக இல்லையா? ஒரு தனியார் நிறுவனத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட இரும்புத்தாது தொகுதிகளை ஒதுக்கும் உங்கள் அரசாங்கம், ஆர்.ஐ.என்.எல்.க்கு ஒரு தொகுதியைக் கூட ஒதுக்க மறுப்பது கேலிக்கூத்து இல்லையா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
படிக்க: என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’
மேலும், “உங்கள் அரசாங்கத்தின் திட்டமிட்ட கொள்கையின் விளைவாக நிதி ரீதியாக நலிவடைந்த விசாகப்பட்டினம் உருக்கு ஆலையானது ஒன்றிய பொதுத்துறை வங்கிகளில் வாங்கியுள்ள கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. மறுபுறம், ஒன்றிய பொதுத்துறை வங்கிகள் அதிகக் கடன்பட்ட, வாங்கிய கடனைக் கட்டத்தவறிய தனியார் நிறுவனங்களுக்கு தங்களது நிதியை அதிக அளவில் வழங்கி வருகின்றன. ஒன்றிய அரசிடம் பெரும் வணிகர்களுக்கு ஒரு கொள்கையும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு கொள்கையும் இருப்பதாகத் தெரிகிறது” என்றும் கூறியுள்ளார்.
ஆகவே, “இந்த தாமதமான நேரத்திலும் உங்கள் அமைச்சகம் எஃகு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, விசாகப்பட்டினம் உருக்கு ஆலைக்கு ஒரு விரிவான மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்கி, ஆந்திரப் பிரதேச மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆலைக்கு புத்துயிர் அளிப்பதற்கான அனைத்தையும் அவசரமாகச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைச் செய்யத் தவறினால் ஆந்திர மக்களை ஏமாற்றியதாகிவிடும்” என்று இறுதியாக கூறி தன்னுடைய கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.
இவ்வாறு இந்திய அரசின் முன்னாள் செயலாளரால் எழுதப்பட்டுள்ள கடிதத்தை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கழிவறைக் காகிதமாகக் கூட கருதப்போவதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த விசயமாகும். ஏனென்றால் மோடி-அமித்ஷா கும்பலின் பத்தாண்டுகால பாசிச ஆட்சியில் ஆர்.ஐ.என்.எல், பி.எச்.இ.எல் உள்ளிட்டு பல பொதுத்துறை நிறுவனங்களும் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதும், தேசிய பணமயமாக்கல் போன்ற திட்டங்கள் மூலம் அடிமாட்டு விலைக்கு அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல்களுக்கு தூக்கிக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல் கால் பதிக்காத துறைகளே இல்லை என்ற அளவுக்கு நிலைமையை மோடி-அமித்ஷா கும்பல் மாற்றிவிட்டது. அத்துறைகளில் அம்பானி-அதானிகளின் ஆதிக்கத்தையும் நிறுவுவதிலும் மோடி-அமித்ஷா கும்பல் உறுதியாக உள்ளது. இத்தகைய அம்பானி-அதானிகளின் கட்டற்ற கொள்ளைக்கான மோடி ஆட்சியை முதலாளித்துவவாதிகளாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைத் தான் இந்திய நாட்டின் முன்னாள் செயலாளரால் எழுதப்பட்ட கடிதம் நமக்கு உணர்த்தும் விசயமாகும்.
செய்தி ஆதாரம்: கவுண்டர் கரண்ட்ஸ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube