ஆள் அரவமற்ற பகுதிக்குள் தனித் தனித் தீவுகளாய் எழும்பி நிற்கும் ஆலை வளாகங்களுக்கிடையே… சாலையோரம் அமர்ந்து கொண்டு தொண்டை தண்ணீர் வற்ற முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள் அந்தத் தொழிலாளர்கள்.

”மெஷின் மாதிரி ஒன்னுக்குக்கூட போகாம வேலை செய்யனும். சம்பளம்னு நீயா பார்த்து போடுறத வாய மூடிட்டு வாங்கிட்டு போகனும். டிப்ளமோ படிச்சவன ஹவுஸ்கீப்பிங் வேலை பண்ணச் சொல்றதையும் சகிச்சி செய்யனும். சம்பளம் உயர்த்திக்கொடு, போனஸ் கொடு, சட்டப்படியான உரிமைகளை கொடுன்னு சங்கமா சேர்ந்து கேட்டா பழிவாங்குவியா? நாங்கள்லாம் என்ன உன்னோட அடிமைகளா?” கோபம் கொப்பளிக்க கேள்வியெழுப்புகிறார்கள் அந்தத் தொழிலாளர்கள்.

சங்கம் தொடங்கியதற்காக இரண்டு தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக பத்து நாட்களுக்கும் மேலாக உறுதியோடு போராட்டத்தைத் தொடரும், இந்தியா யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் இவர்கள்.

ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட யமஹா மோட்டார் கம்பெனியின் துணை நிறுவனம்தான் இந்தியா யமஹா மோட்டார்ஸ். உலகெங்கும் பல கிளைகளை பரப்பியிருக்கும் இந்நிறுவனம், இந்தியாவில் உ.பி.யில் சூரஜ்பூர், ஹரியானவில் பாரிதாபாத் மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம் என மூன்று இடங்களில் பிரதான உற்பத்தி ஆலையை நிறுவியிருக்கிறது.

காஞ்சிபுரம், ஒரகடம் சிப்காட் பகுதியில் 150 கோடி முதலீட்டில் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலையில் யமஹா நிறுவனத்தின் 6 பைக் மாடல்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் பத்துக்கும் மேற்பட்ட சப்ளையர்ஸ் நிறுவனங்களும் இதே பகுதியில் அமைந்துள்ளன. இவை அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள்.

தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கப் போவதாகக்கூறி, அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற்று தொடங்கப்பட்ட இந்த ஆலையில் பணியாற்றும் 4,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுள் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 807. எஞ்சியுள்ளவர்கள் ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள்.

வேலையைக் கற்றுக்கொண்டு திறம்பட செய்வதை பொறுத்து, இரண்டு ஆண்டுகளில் பணிநிரந்தரம் செய்து விடுவோம் என்று வாக்குறுதியளித்துதான் தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்திருக்கிறது, யமஹா. மூன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டது. வாக்குறுதியளித்தபடி பணிநிரந்தரம் செய்யவில்லை. சம்பளமும் உயர்த்திக் கொடுக்கவில்லை. ஆண்டுக்கு ரூ700 சம்பளம் உயர்த்தப்படுவதே பெரிய விசயம் என்கிறார்கள் தொழிலாளர்கள். நிரந்தரத் தொழிலாளியின் சம்பளம் குறைந்தபட்சம் 12,500; அதிகபட்சம் 18,000. ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களின் சம்பளமோ 8,000 – லிருந்து 10,000க்குள்தான்.

நிறுவனத்தோடு முரண்பட்டுக் கொள்ளாமல், பணிநிரந்தரமாகும்வரை பல்லைக் கடித்துக்கொண்டு ஓட்டிவிடலாம் என்றுதான், நினைத்திருக்கிறார்கள். அவ்வாறும் மூன்றரை ஆண்டுகாலம் சகித்தும் பார்த்து விட்டார்கள். ஆலை தொடங்கப்பட்டபோது முதல் நூறு தொழிலாளர்களுள் ஒருவராக வேலையில் சேர்ந்தவருக்கே இன்னும் பணி நிரந்தரமாகவில்லை.

பணிநிரந்தரம் குறித்த கேட்டதற்கு, ”எனக்கு முன்னாடி இருந்தவங்க என்ன சொல்லி வேலைக்கு சேர்த்தாங்கன்னுலாம் எனக்குத் தெரியாது. கம்பெனி விதிப்படி 15 வருசம். உனக்காக வேணுன்னா ஆஃபர் தாரேன். 12 வருசத்துக்குள்ள உன்னோட பெர்ஃபாமென்ஸ் பார்த்து கன்பார்ம் பன்றேன்” என்று திமிராக பதிலளித்திருக்கிறது, யமஹா நிர்வாகம்.

இதற்கேற்ப தொழிலாளர்களை லெவல்-1, லெவல்-2 என்று வகைப்படுத்தியிருப்பதோடு மட்டுமின்றி, ஒவ்வொரு லெவலிலும் கேஸ்-1, கேஸ்-2 என்று உட்பிரிவுகளை உருவாக்கி அடுத்த லெவலுக்கு உயர்ந்து செல்லும் காலத்தின் அளவை தந்திரமாகக் கூட்டியிருக்கிறது. ”எனக்கு இப்பவே 30 வயசாகுது, இன்னும் 12 வருசம் கழிச்சி 42 வயசுல கன்பார்ம் ஆகி என் லைஃப்ல எப்போ செட்டிலாகிறது?” என்று கேள்வியெழுப்புகிறார், ஒரு தொழிலாளி.

”பால் விலையும் பெட்ரோல் விலையும் இன்ன தேதியில இன்ன விலை ஏத்தப் போறோம்னு சொல்லிட்டா ஏத்துறாங்க? ஆனா, எங்களுக்கு, அடுத்த வருசம் ஜனவரி மாசம் என்ன சம்பளம்னு இப்பவே சொல்லிட்டாங்க. இப்ப வாங்குற சம்பளத்தவிட 700 அதிகம். அதுதான் என்னோட அடுத்த வருசம் முழுசுக்கும் சம்பளம்” என்கிறார், மற்றொரு தொழிலாளி.

பணிநிரந்தரம், சம்பள உயர்வு, போனஸ் பற்றிய பிரச்சினைகள் ஒருபக்கம் இருந்தாலும் மிக முக்கியமாக ஆலையில் தாங்கள் மிகவும் கேவலமான முறையில் நடத்தப்படுவதாகக் குமுறுகிறார்கள் இந்தத் தொழிலாளர்கள்.

படிக்க:
♦ மாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்!
♦ மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!

”ஆலை நடத்துறாங்களா, இல்ல ஸ்கூல் நடத்துறாங்களானு தெரியல. எதுக்கெடுத்தாலும் அப்பாவ கூட்டிட்டுவா… அம்மாவ கூட்டிட்டுவா.. இனிமே இதுமாதிரி நடக்காதுனு லெட்டர் எழுதி கொடு… ஒரு தொழிலாளிக்கு அம்மா மட்டும்தான். அவங்களும் ஹார்ட் பேசன்ட். அடுத்த மாசம் ஆபரேசன் பன்ற நிலையில இருக்கிறவங்க. உடம்பு முடியாதவங்க சார் கூட்டிட்டு வரமுடியாதுனு எவ்ளோ கெஞ்சுறான். கொஞ்சம்கூட இரக்கமே இல்லாம, ஆம்புலன்ஸ அனுப்புறேன் அள்ளிப்போட்டுட்டுவா அப்டின்றார் ஒரு ஹெச்.ஆர். அதிகாரி… இதவிடக் கொடுமை. பையன் மெட்ராஸ்ல பெரிய கம்பெனில வேலையில இருக்கானு பெருமையா நினைச்சிட்டிருந்த வயசான அப்பா ஒருத்தர், தன்னோட பையன் முன்னாடியே ஹெச்.ஆர். அதிகாரி கால்ல விழுந்து கெஞ்சுறார்… அப்படி என்னயா தப்பு பன்னிட்டோம் நாங்க?” என்று கேள்வியெழுப்புகிறார்கள் இந்தத் தொழிலாளர்கள்.

”எங்க அசெம்ப்ளி டிபார்ட்மெண்ட்ல 800 பேர் வேலை செய்றோம். இருக்கிறது ஒரு கேண்டீன். அதுலயும் ஒரே கவுண்டர்தான். 800 பேரும் வரிசையா நிப்பான். கையெல்லாம் கிரீசா இருக்கும். சோப்பாயிலைத் தேடி கையை கழுவிட்டு அந்த வரிசையில நின்னு சாப்பாட்ட வாங்கிட்டு உட்காந்தா சைரன் அடிக்கும். இன்னும் 5 நிமிசம்தான் இருக்குன்றதுக்கான சைரன். 5 நிமிசத்துல அவசரம் அவசரமா சாப்டு ஓடிப்போயிரலாம்னா… கம்பெனி வளாகத்துல ஓடக்கூடாதுனு ஒரு ரூல் இருக்கு. இப்போ நான் என்னா பன்றது? ஓடுனாலும் ஏன் ஓடுனேனு லெட்டர் எழுதி கொடுக்கனும். நடந்து போனா லேட் ஆகும். ஏன் லேட்னு லெட்டர் எழுதி கொடுக்கனும்.”

தமக்கு நேர்ந்த அவமானங்களை, தாம் சந்தித்தத் துயரங்களை விவரிக்கும் இவர்கள் அனைவரும் இளம் தொழிலாளர்கள். அதிகபட்ச வயது 30 இருக்கலாம். ஆலை நிர்வாகத்திற்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டங்களை நேரில் கண்டிராதவர்கள். துண்டறிக்கைகளை கையில் வைத்துக்கொண்டு செங்கொடியேந்தி கோஷம் போட்டுக் கொண்டிருந்தவர்களை, கம்பெனி பேருந்தின் கண்ணாடி வழியே கண்டும் காணாததுமாய் கடந்து போனவர்கள்.

தமது சொந்த அனுபவத்திலிருந்து குறைந்தபட்சம் சங்கமாக அணிதிரள வேண்டுமென்ற உந்துதலோடு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் வழிகாட்டலில் இந்தியா யமஹா மோட்டார்ஸ் தொழிற்சங்கமாக அணி திரண்டார்கள்.

சம்பள உயர்வு, போனஸ், சட்டப்படியான உரிமைகள் சிலவற்றைப் பட்டியலிட்டு யமஹா நிர்வாகம் தங்களுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு வரவேண்டுமென்று தொழிலாளர் நலத்துறையிடம் தொழிற்தாவா எழுப்புகிறார்கள். தொழிலாளர் நலத்துறையும் செப்-20 அன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு இருதரப்பையும் அழைக்கிறது. பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் பொருட்டு தங்கள் இருவருக்கும் இரண்டு மணிநேரம் அனுமதி வழங்குமாறு யமஹா நிறுவன அதிகாரிகளிடம் கோருகிறார்கள் சங்க முன்னணியாளர்களான பிரகாஷ் மற்றும் ராஜபாண்டியன் ஆகியோர். அனுமதி மறுக்கப்படுகிறது. விடுமுறைக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கு நிர்வாகத் தரப்பில் எவரும் வரவில்லை. மறுநாள் அவ்விரு தொழிலாளர்களையும் டிஸ்மிஸ் செய்துவிட்டதாகக்கூறி, ஆலைக்குள் விடமறுத்து தகராறு செய்கிறது, யமஹா. கனன்று கொண்டிருந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட அவ்விரு தொழிலாளர்களுக்கு ஆதரவாக அங்கேயே அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்துகிறார்கள்.

ஆறு நாட்களாக நடைபெற்ற இப்போராட்டத்தை உடைக்க தொழிலாளர்கள் கழிவறையைப் பயன்படுத்த அனுமதி மறுப்பது; உணவு தர மறுப்பது என்பது தொடங்கி சங்க முன்னணியாளர்களின் வீடுகளுக்குச் சென்று அடியாட்களை வைத்து மிரட்டுவது வரையில் பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தும் தோல்வியுற்றது.

இறுதியாக, நீதிமன்ற ஆணையைக் காட்டி போலீசை வைத்து தொழிலாளர்களை வெளியேற்ற முயற்சித்தது. ஆலையிலிருந்து வெளியேற மறுத்து அங்கிருந்த டவரில் ஏறிப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க முன்னணியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆலை கேட்டிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால், கொளுத்தும் வெயிலில் சாமியானா பந்தல் அமைத்து உறுதிகுலையாமல் அமர்ந்திருக்கிருக்கிறார்கள் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்.

யமஹா தொழிலாளர்களுக்கு ஆதரவாக ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம்.

யமஹா தொழிலாளர்களின் இந்தப் போராட்டம், சக தொழிலாளர்கள் மத்தியில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உணவு சமைத்து எடுத்துவந்து கொடுத்திருக்கிறார்கள் பிற ஆலையில் பணிபுரியும் சக தொழிலாளர்கள். ரெனால்டு நிசான் ஆலைத்தொழிலாளர்கள் ரூ. 25,000 நிதியுதவியும் வழங்கியிருக்கின்றனர். யமஹா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக போர்டு, நிசான், ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களும், எம்.எஸ்.ஐ., அப்பல்லோ டயர்ஸ், ஜே.கே.டயர்ஸ், ராயல் என்பீல்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

தோழர் முத்துக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட செயலர், சி.ஐ.டி.யு.

ஆலையிலிருந்து வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகக்கூறி, நீதிமன்ற ஆணையைக் காட்டி, ”எங்களுக்கும் ஈகோ இருக்கும்ல” என்று எகத்தாளமாகப் பேசினாராம், ஒரு ஹெச்.ஆர். அதிகாரி. தொழிலாளர்களோ, ஆலையை கடந்து ஒன்றுபட்டு நிற்பதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் ஆணவத்தை சற்றேனும் அசைத்திருக்கின்றனர்.

”தொழிலாளர்களை ஆலையிலிருந்து வெளியேற்றச் சொல்லி ஒருதலைபட்சமாக ஆணையிட்டது தவறு என்று நீதிமன்றத்தில் முறையிட்டோம். கேட்டிலிருந்து 200 மீட்டர் தள்ளி போராட்டத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்றுதானே உத்தரவிட்டோம். வெளியேற்ற சொல்லவில்லையே என்று புது வியாக்யானம் கொடுத்தது நீதிமன்றம். இவ்வளவுக்குப் பிறகும், பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுக்கிறது, யமஹா நிர்வாகம்.

கம்பெனியிலிருந்து பேருக்கு ஒருத்தர் மட்டும் வர்றாரு. அவரும், கம்பெனியில கேட்டு சொல்றேனு ஒரே பதிலைத்தான் சொல்றாரு. லேபர் ஆபிசிலிருந்து கம்பெனிக்கு போன் போட்டா போன எடுக்க மாட்டேங்குறாங்க. நாங்க என்ன சார் பன்னமுடியும்னு லேபர் ஆபிசரே கையை விரிக்கிறாரு. இந்த இலட்சணத்துலதான் இருக்கு” என்கிறார், சி.ஐ.டி.யு.வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தோழர் முத்துக்குமார்.

”பரந்து விரிந்து கிடக்கும் சிப்காட் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டு தொழில் செய்யும் யமஹா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகின்றன. இந்திய அரசின் சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்படத்தேவையில்லை என்றுத் திமிராக நடந்து வருகின்றன. பண்ணையடிமைகளைவிட மிகக் கீழான நிலையில்தான் தங்கள் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களை நடத்திவருகின்றன. இத்தகையப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆண்டைத்தனத்திற்கு எதிரானப் போராட்டங்களுள் ஒன்றுதான் யமஹா தொழிலாளர்களின் போராட்டம்.” என்கிறார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தோழர் ஆ.கா.சிவா.

படிக்க:
சென்னை ஒரகடம் : கழிப்பறைக்கு ஸ்வைப் கார்டு போடும் அமெரிக்க சான்மினா
சென்னை திருப்பெரும்புதூர் : பு.ஜ.தொ.மு முற்றுகை

மேலும் ”இங்கு மட்டுமில்லை, சிறீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், இருங்காட்டுக் கோட்டை, சிறீபெரும்புதூர் மாம்பாக்கம், மறைமலைநகர் போன்ற சிப்காட் வளாகங்களிலும் இதுதான் நிலைமை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்துவிட்டு, அமெரிக்க நிறுவனமான ஹனிவெல் ஆலையை மூடிவிட்டது.

தோழர் ஆ.கா.சிவா, காஞ்சிபுரம் மாவட்ட செயலர், பு.ஜ.தொ.மு.

11 ஆண்டுகளாக இயங்கிவந்த தென்கொரிய நிறுவனமான டோங்சான் (DONGSAN) கடந்த மார்ச் முதல் ஆலையை மூடிவிட்டது. சட்டவிரோத ஆலை மூடலுக்கு எதிராக தொழிலாளர்கள் போட்ட வழக்கை பத்து மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டு வைத்திருக்கும் நீதிமன்றம் ஆலையிலுள்ள இயந்திரங்களை போலீசு பாதுகாப்போடு எடுத்து செல்ல உத்திரவிட்டிருக்கிறது. தனித்தனி ஆலையில் நடைபெறும் இத்தகையப் போராட்டங்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவை இன்று எழுந்திருக்கிறது. தனித்தனி ஆலைக்கு ஒரு சங்கம் அமைத்து போராட்டத்தைத் தொடர்வது என்பதைவிட, அந்தந்த சிப்காட் வளாகங்களுக்கென்று ஒருங்கிணைந்த ஒரு சங்கத்தை கட்டியமைக்க வேண்டியிருக்கிறது.” என்கிறார், அவர்.

தொழிற்பழகுநராக உள்ளே நுழையும் மாணவர்களையும் உற்பத்தியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்கிறது மோடி கொண்டுவந்திருக்கும் NEEM திட்டம். காண்டிராக்டு முறையில் நேரடியாக ஆலை நிர்வாகமே தொழிலாளர்களை பணியிலமர்த்திக்கொள்ளலாம். இவர்களுக்கு சட்டப்படியான இ.எஸ்.ஐ., பி.எஃப்., மட்டுமல்ல விபத்துக்கான இழப்பீடுக்கூட கொடுக்கத் தேவையில்லை என்கிறது FTE திட்டம்.

மண்ணூர் சிப்காட்டில் உள்ள ஹுண்டாய் சப்ளையர் தென்கொரிய நிறுவனமான எம்.எஸ்.ஐ.யில் NEEM திட்டம் நான்கு மாதங்களுக்கு முன்பே அமலுக்கு வந்துவிட்டது. இதே சிப்காட்டில் அமைந்துள்ள என்பீல்டு ஆலையில் 1000 மாணவர்களை NEEM திட்டத்தின்கீழ் உள்ளே நுழைக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. இதற்காக, புரோபசனரி காலம் முடிந்து பணிநிரந்தரத்திற்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்களை ஆட்குறைப்பு என்ற பெயரில் வெளியேற்றும் தருணத்திற்காகக் காத்திருக்கிறது.

ஓட்டுக் கட்சி அரசியல் விவாதங்களிலேயே மலிவான பரபரப்பை உருவாக்கி காலம் தள்ளும் ஊடகங்களின் மத்தியில், பிக் பாஸில் ரித்விகா வென்றதையே உருகி உருகி பேசும் ’அறிஞர்கள்’ மத்தியில், புதிய பைக் வாங்குவதற்கு ‘ஆராய்ச்சி’ செய்து அப்பாக்களிடம் மல்லுக் கட்டும் இளைஞர்கள் காலத்தில், நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

யமஹா தொழிலாளிகள் போராட்டம் நடத்தும் களத்திற்கு செல்வோம்!
அங்கே நமது நுகர்பொருள் கலாச்சாரத்தின் நட்சத்திர பொருட்களை தயார் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் இன்னொரு முகத்தை அறிந்து கொள்வோம்.
யமஹா தொழிலாளிகளின் போராட்டத்தை ஆதரிப்போம்!

2 மறுமொழிகள்

  1. புலி ஏப்பம் விடுபவனுக்கு பசி ஏப்பம் விடும தொழிலாளி கவலை புரியாது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க