Wednesday, October 9, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!

மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!

-

மாருதி சுசுகி : முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர் !

அரியானா மாநிலம்  குர்கான் நகருக்கு அருகேயுள்ள மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மாருதி கார் தொழிற்சாலையில், அதன் நிர்வாகம் கடந்த அக்டோபர் 7 அன்று திணித்த சட்டவிரோத கதவடைப்பு, தொழிலாளர்களின் 14 நாள் போராட்டத்தின் பின் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  மாருதி நிர்வாகத்தின் இச்சட்டவிரோத கடையடைப்புப் போராட்டத்தை எதிர்த்து, அவ்வாலையின் நிரந்தரத் தொழிலாளர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் மட்டுமின்றி, மாருதியின் டீசல் கார்களுக்கான இஞ்சின்களைத் தயாரித்து வழங்கும் பவர்டிரெய்ன் ஆலைத் தொழிலாளர்களும் மற்றும் மாருதி காஸ்டிங் ஆலையைச் சேர்ந்த தொழிலாளர்களும் இணைந்து போராடி, குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் ஈட்டியுள்ளனர்.

மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு கார் தொழிற்சாலையில் பணியாற்றும் 2,500 தொழிலாளர்களுள், 1,450 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர்.  இந்த ஆலையில் ஒரு ஷிப்டில் ஏறத்தாழ 600 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  இதன் பொருள், தொழிலாளர்கள் தமது எட்டு மணி நேர ஷிப்டில், ஒரு நிமிடம்கூட ஓய்ந்து நிற்க நேரமின்றி  45 வினாடிக்கு ஒரு காரை உற்பத்தி செய்து தள்ளிக்கொண்டே இருக்க வேண்டும்.  இப்படிக் கசக்கிப் பிழியப்படும் நிரந்தரத் தொழிலாளிக்கு, அவரது தகுதிக்கு ஏற்ப ரூ.6,000 முதல் ரூ.18,000 வரை மாத ஊதியம் கிடைக்கும்.  இதே வேலைக்கு  ஒப்பந்தத் தொழிலாளி பெறும் மாத ஊதியமோ வெறும் ரூ.3,000 தான்.

தொழிலாளர்கள் ஒருநாள் விடுப்பெடுத்தால் ஊக்கத் தொகையில் ரூ.1,500/ ம், இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்தால் ஊக்கத்தொகை முழுவதும் வெட்டப்படும். மதிய உணவுக்கென ஒதுக்கப்படும் 30 நிமிடங்களுக்குள் 400 மீட்டர் தொலைவிலுள்ள உணவகத்துக்கு சென்று  நீண்ட வரிசையில் நின்று உணவு பெற்று, அவசர அவசரமாக விழுங்கிவிட்டுத் தாமதமின்றி பணிக்குத் திரும்பிடவேண்டும். ஒரு நிமிடத் தாமதத்துக்குக் கூடச் சம்பளம் வெட்டப்படும்.  ஒவ்வொரு ஷிப்டிலும் இரண்டு முறை கழிவறைக்கும் கேண்டினுக்கும்  சென்று திரும்ப ஏழரை நிமிடங்கள் என்ற வீதம் 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். அடுத்த ஷிப்டிற்கான ஆள் வராவிட்டால் 16 மணிநேர வேலை கட்டாயமாகப் பார்க்க வேண்டும். இவை  போன்ற எண்ணற்ற அநியாய விதிமுறைகளோடு பணியாற்றும் மானேசர் தொழிலாளர்களுக்குத் தங்கள் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க நிர்வாகத்தின் எடுபிடி சங்கத்தைப் புறக்கணித்துவிட்டு, தங்களுக்கென கட்சி சார்பற்ற தொழிற்சங்கம் ஒன்றைக் கட்ட கடந்த  ஜூனில் முயன்றனர்.

மாருதி சுசுகி : முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர் !தொழிற்சங்க அனுமதிக்கான விண்ணப்பங்களை அம்மாநிலத் தலைநகரான சண்டிகரில் கொடுக்கச் சென்றிருந்த தொழிற்சங்க முன்னோடிகள் 11 பேரை பழிவாங்கும் நோக்கில் நிர்வாகம் வேலை நீக்கம் செய்தது. இதனைக் கண்டித்து ஜுன், ஜூலை மாதங்களில் முதற்கட்டமாக மானேசர் மாருதி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.  13 நாட்கள் உறுதியாக நடந்த இந்தப் போராட்டத்தின் முடிவில், அரியானா மாநில அரசு, மாருதி நிர்வாகம், தொழிலாளர்கள் ஆகிய முத்தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவாரத்தையின் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் சேர அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 11 வருடங்களாக நடத்தாமலிருந்த, மாருதி நிர்வாகத்தின் எடுபிடி சங்கமான “மாருதி உத்யோக் தொழிலாளர் சங்கத்தின்’ தேர்தலைத் திடீரென நிர்வாகம் நடத்தியது.  மானேசர் மாருதி ஆலைத் தொழிலாளர்கள் இந்தத் தேர்தலை மொத்தமாகப் புறக்கணித்தனர். வெறும் 8 ஓட்டுகள் மட்டுமே அந்தத் தேர்தலில் பதிவாகியது.

இதற்கிடையில்  ஜூலை 26ஆம் நாள், மாருதி தொழிலாளர்கள் விண்ணப்பித்திருந்த புதிய தொழிற்சங்கமான “மாருதி சுசுகி பணியாளர் சங்கத்தை’ அம்மாநில அரசு பதிவு செய்ய மறுத்தது. அதன் பின் மாருதி நிர்வாகம் தனது அடக்குமுறையைத் தீவிரப்படுத்தத் தொடங்கியது. ஜுலை 28இல் 4 தொழிலாளர்கள் எந்தக் காரணமும் கூறப்படாமல் நிர்வாகத்தால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.  இதனை எதிர்த்துத் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் (டூல் டவுன்) செய்தனர்.  நிர்வாகமோ பழிவாங்கும் போக்கை மென்மேலும் தொடர்ந்தது. ஆகஸ்டு 23 தொடங்கி ஆகஸ்டு 30க்குள்ளாக 57 தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டனர். அவர்களில் 26 பேர் நிரந்தரமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்; 31 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இவற்றுக்கெல்லாம் உச்சமாக ஆகஸ்டு 29ஆம் தேதி ஆலைக்குள் நுழைய வேண்டுமானால், தொழிலாளர்கள் அனைவரும் “நன்னடத்தைப் பத்திரம்’ ஒன்றில் கையெழுத்திட வேண்டும் என நிர்வாகம் உத்தரவிட்டது. தொழிற்சாலையைச் சுற்றிலும் 500 மீட்டர் நீளத்திற்கு  அலுமினியத் தகடுகளால் கோட்டைச் சுவரைப் போலத் தடுப்பு உருவாக்கியும், ஆலையின் வாயில்களை கன்டெயினர் லாரிகளைக் கொண்டு அடைத்தும் யாரும் உள்ளே போகவோ வெளியேறவோ முடியாமல் தடுத்தது. இந்த நன்னடத்தைப் பத்திரத்தில் கையெழுத்திட மறுத்த தொழிலாளர்களோ அலுமினியச் சுவருக்கு வெளியே புதர்களின் நடுவே குழுமி போராடத் தொடங்கினர்.

நன்னடத்தைப் பத்திரம் என்ற பெயரில் ஒரு கொத்தடிமைத்தனப் பத்திரத்தைத்தான் தொழிலாளர்கள் மீது திணிக்க முயற்சி செய்தது, மாருதி நிர்வாகம்.  நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரளுவதையும், போராடுவதையும் தடுப்பதுதான் “இந்நன்னடத்தையின்’ நோக்கமாகும்.  குறிப்பாக, இப்பத்திரத்தின்படி தொழிலாளர்கள் செய்யும் 8 சிறிய தவறுகளுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களை 15 நாட்களுக்குச் சம்பளம் இன்றி பணியிடை நீக்கம் செய்யவும்; 103 பெரிய தவறுகளுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களை வேலையிலிருந்து நீக்கவும் நிர்வாகத்திற்கு அதிகாரமுண்டு என அறிவிக்கப்பட்டது.  தவறான காரணங்களைச் சொல்லி விடுமுறை எடுத்தல், கழிப்பறை செல்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல், புகையிலை போடுதல், சுத்தமாக இல்லாமல் இருத்தல்  போன்றவையெல்லாம் பெரிய தவறான நடத்தைகளாக இப்பத்திரத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்தன.  மைய அரசின் தொழிலாளர் நலத் துறையின் முன்னாள் செயலாளர் இந்த நன்னடத்தைப் பத்திரத்தைச் சட்ட விரோதமானது எனச் சுட்டிக் காட்டிய பின்னரும், மைய அரசு மாருதி சுசுகி நிர்வாகத்துக்கு எதிராக சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை; அரியானா மாநில அரசோ மாருதி நிர்வாகத்திற்கு வெளிப்படையாகவே ஜால்ரா தட்டியது.

இக்கொத்தடிமைப் பத்திரத்தில் கையெழுத்திட மறுத்து அனைத்துத் தொழிலாளர்களும் ஆகஸ்டு 29 முதல் செப்டம்பர் 30 முடிய ஏறத்தாழ 33 நாட்கள் தொடர்ந்து போராடினார்கள். அதன் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினார்கள். ஆனால், வேலைக்குத் தொழிலாளர்கள் திரும்பியதும், மறுநாளே தொழிலாளர் மீதான அடக்குமுறையை நிர்வாகம் தொடங்கியது. இச்சமயத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்களும் போராட்டத்தில் இறங்கினர்.  இந்த இருதரப்பினரின் ஒற்றுமையைச் சிதைத்திடத் திட்டமிட்ட நிர்வாகம், 1200 ஒப்பந்தத் தொழிலாளர்களை அக்டோபர் முதல் நாளன்று வேலையை விட்டு நீக்கியது. அத்துடன், நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரையும் அவர்கள் வேலைபார்த்த யூனிட்டுகளிலிருந்து வேறு யூனிட்டுகளுக்கு மாற்றிப்போட்டது.  ஏற்கெனவே போதிய அளவிற்கு இயக்கப்படாமலிருந்த பேருந்து வசதியை, நிர்வாகம் முற்றாக நிறுத்தியது.

நன்னடத்தைப் பத்திரத்தில் கையெழுத்திடாத தொழிலாளர்களை ஆலைக்குள் அனுமதிக்க மறுத்தது, ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் மாருதி நிர்வாகம் மறைமுகமான வழியில் ஒரு சட்டவிரோதமான கதவடைப்பைச் செய்துவிட்டு, தனது எடுபிடி முதலாளித்துவப் பத்திரிக்கைகளின் மூலம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துவிட்டதாகவும், உற்பத்தியைச் சீர்குலைப்பதாகவும் புளுகுணிப் பிரச்சாரத்தை நடத்தியது.  இன்னொருபுறம் அரியானா மாநில அரசு வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது என்ற போர்வையில் போலீசு, நீதிமன்றம் மூலம் தொழிலாளர்களை மிரட்டி மாருதிக்கு ஆதரவாக நடந்து கொண்டது.

மாருதி நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராகக் கடந்த ஜூன் மாதம் தொடங்கி பல்வேறு வழிகளில் நடந்துவரும் போராட்டத்தை குர்கானைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் ஆதரித்து வந்த நிலையில், தற்பொழுது சுசுகி பவர்டிரைன் ஆலைத் தொழிலாளர்களும், சுசுகி காஸ்டிங்ஸ் மற்றும் சுசுகி மோட்டார் சைக்கிள்ஸ் தொழிலாளர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.  தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம்; பரவுவதைத் தடுத்துவிடலாம் எனக் கனவு கண்டு கொண்டிருந்த மாருதி சுசுகி நிர்வாகத்திற்கு தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமை இடியாக இறங்கியது.  இப்பிரச்சினையைத் தீர்க்காமல் இழுத்துக் கொண்டே போனால், குர்கான் முழுவதுமே தொழிலாளர்களின் போராட்டம் பரவிவிடும் என அஞ்சிய அரசும், மாருதி நிர்வாகமும் தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டனர்.

மாருதி சுசுகி : முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர் !இப்பேச்சுவார்த்தையின்படி, 1,200 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளவும், ஷிப்டுக்குத் தொழிலாளர்களை அழைத்து வரும் பேருந்து வசதியினை மீண்டும் முறையாக நடத்தவும், பணியிடை நீக்கம்/வேலை நீக்கம் செய்யப்பட்ட 94 தொழிலாளர்களில் 64 பேரை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளவும் நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.  தொழிலாளர்களின் புதிய சங்கத்தை அங்கீகரிக்க நிர்வாகம் மறுத்துவிட்டபோதும், நிர்வாகத்தின் எடுபிடி சங்கத்தில் தொழிலாளர்கள் சேர வேண்டும் என நிர்பந்திப்பதைக் கைவிடவும், தொழிலாளர் நல சங்கம் ஒன்றை நிர்வாகமும் தொழிலாளர் பிரதிநிதிகளும் இணைந்து ஏற்படுத்தவும் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

மாருதி ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தை எவ்விதச் சலுகையும் கொடுக்காமல் ஒடுக்கிவிடுவதன் மூலம், குர்கான் பகுதியில் இனி எந்தவொரு தொழிலாளர் போராட்டமும் தலையெடுக்கவிடாமல் செய்துவிட வேண்டும் என முதலாளித்துவ வர்க்கம் எண்ணிக் கொண்டிருந்தது.  மாருதி ஆலைத் தொழிலாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேறாவிட்டாலும், முதலாளிகளின் அந்த எண்ணத்தில் மண் விழுந்திருப்பது இந்தப் போராட்டத்தின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.  மேலும், இப்போராட்டம் நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமின்றி, தனித்தனி தொழிலகங்களையும் தாண்டி குர்கானைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் ஐக்கியத்தை உருவாக்கி வருகிறது.

இப்போராட்டத் தலைமை பிழைப்புவாதத் தொழிற்சங்கங்களை அண்டாமல், போர்க்குணத்தோடும், தியாக உணர்வோடும் இப்போராட்டத்தை உறுதியாக நடத்தியிருந்தாலும், தொழிலாளர்களின் மீதான இந்தக் கொடிய அடக்குமுறையானது நாடு மறுகாலனியாவதன் வெளிப்பாடு என்பதை உணர்ந்து கொள்வதும், அதற்கேற்ப புரட்சிகரத் தொழிற்சங்கங்களில் அணிதிரளுவதும் காலத்தின் கட்டாயமாகும்.

2005இல் ஹோண்டாவில், 2009இல் ரிக்கோவில், 2011இல் மாருதியில் என அடுத்தடுத்து குர்கானில் நடந்துவரும் போராட்டங்களினால், மாருதி நிர்வாகம் ஏற்றுமதிக்கான தனது புதிய கார் ஆலையை குஜராத்தில் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறது.  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தமக்குத் தேவைப்படும் மானியங்களையும், வரிச்சலுகைகளையும் வாரி வழங்குவார் என்பதோடு, தொழிலாளர் போராட்டங்கள் எதுவும் முளைத்துவிடாமலும் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கைதான் மாருதி நிர்வாகத்தை அரியானாவை விட்டு குஜராத்தை நோக்கி ஓடச் செய்திருக்கிறது.  இந்த வகையில் குர்கான் மறுகாலனியத் தாக்குதலை எதிர்கொண்டுவரும் இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஊட்டும் சின்னமாகவும், மோடியின் குஜராத் எதிர்ப்புரட்சியின் மையமாகவும் விளங்குகிறது என்று கூறலாம்.

________________________________________________

புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க