டந்த செப்டம்பர் 10-ஆம் தேதி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் வரலாறு காணாத விலையேற்றத்தை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையேற்றம் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் கடும் அதிருப்தியை சமாளிப்பது எப்படி என பாரதிய ஜனதா திணறி வருகின்றது. இதற்காக பா.ஜ.க முன்வைக்கும் சப்பைக்கட்டுகள் ஒவ்வொன்றும் அவர்கள் எதிர்பார்ப்பதற்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்தி வருகின்றது.

திங்களன்று மாலை பாரதிய ஜனதாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் இருந்து இரண்டு “புள்ளி” விவரப் படங்கள் வெளியிடப்பட்டது. மேற்படி அட்டவணையின் படி பார்த்தால், 71-ஐ விட 80-ம், 56-ஐ விட 72-ம் சிறிய எண்கள். இதைப் பார்த்தால் பெங்களூரு குமாரசாமியே வெட்கப்படுவார். எனினும், இதற்கும் முட்டுக் கொடுக்க முன்வந்தனர் சங்கிகள். அதாவது விலையேற்ற சதவீதத்தின் அடிப்படையில் முந்தைய காங்கிரசு ஆட்சிக்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் முறையே 75.8% மற்றும் 83.7% அதிகரித்ததாகவும், தங்களது ஆட்சிக் காலத்தில் முறையே 13 மற்றும் 28 சதவீதம் தான் அதிகரித்துள்ளதாகவும் விளக்கம் அளித்தனர்.

எனினும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் விளக்கம் என்பது, “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஏற்றம்” என்பது தான். இந்த விளக்கத்தின் படி பார்த்தால் முந்தைய அரசுகளில் என்ன விலைக்கு விற்றது, எத்தனை சதவீதம் விலை உயர்த்தப்பட்டது என்பதை குறிப்பிட்டதோடு அப்போது சர்வதேச கச்சா எண்ணையின் விலை என்னவென்பதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

உண்மை என்னவென்றால், முந்தைய காங்கிரசு ஆட்சிக் காலத்தை விட தற்போது சர்வதேச கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. முந்தைய ஆட்சிக் காலத்தில் 100 டாலர்களைத் தாண்டிச் சென்ற ஒரு பீப்பாய் கச்சா எண்ணையின் சர்வதேச விலை, மோடி பதவியேற்ற பின் 35 டாலர்கள் வரை குறைந்து பின் தற்போது சராசரியாக 70 டாலர்களுக்கு விற்பனையாகின்றது. எனில், பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு என்ன காரணம்?

பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்திச் செலவுகள் குறையும் போது, அதன் விற்பனை விலையும் குறைய வேண்டும். ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பின் பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மத்திய மற்றும் மாநில வரிகள் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. 2014-15ல் இருந்து 2015-16 காலகட்டத்தில் மட்டும் மத்திய கலால் வரி ஒன்பது முறை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோலின் மீதான கலால் வரி 226 சதவீதமும் டீசலின் மீதான கலால் வரி 486 சதவீதமும் இந்தக் காலகட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளின் மூலமான வருவாய் 2014-15 காலகட்டத்தில் 99,000 கோடிகளாக இருந்து, 2017-18 காலகட்டத்தில் 3 லட்சம் கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

ஏன் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை குறைக்கக் கூடாது என்கிறார் ஒரு பா.ஜ.க தலைவர். ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட போது, மாநில அரசு விதித்து வந்த வரிகளை ஒழித்து ஒரே வரியாக மாற்றியது மத்திய அரசு. அப்போது பல்வேறு மாநிலங்கள் வரிவிதிக்கும் உரிமையை தங்களிடம் இருந்து மத்திய அரசு பறிப்பதாக குற்றம் சாட்டிய போது, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்ட ஒருசில பொருட்களுக்கு மட்டும் மாநில அரசுகள் வரி விதித்துக் கொள்ளலாம் என வாக்குறுதி அளித்ததன் பேரிலேயே மாநிலங்கள் ஜி.எஸ்.டிக்கு ஒப்புதல் வழங்கின. ஆக, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் திட்டங்களுக்கான நிதி ஆதாரமாக பெட்ரோலியப் பொருட்களே இருக்கும் படி செய்ததோடு, விலை ஏற்றத்திற்கான பழியையும் மாநில அரசுகளின் மீதே சுமத்துகின்றது மத்திய பா.ஜ.க அரசு.

சரி, ஏன் மத்திய பா.ஜ.க அரசு, பெட்ரோலியப் பொருட்களுக்கு தான்  விதிக்கும் அதிகப்படியான வரியை குறைக்க மறுக்கின்றது? இந்த நிதி எல்லாம் எங்கே செல்கின்றன? இதற்கு பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் அளிக்கும் ஒரு விளக்கம், “இந்த வரி வருவாயைக் கொண்டு தான் உள்கட்டுமானத் திட்டங்களை பாரதிய ஜனதா நிறைவேற்றி வருகின்றது” என்பதாகும். இதே விளக்கத்தை வெவ்வேறு சந்தர்பங்களில் பா.ஜ.க.வின் மற்ற அமைச்சர்களும் ஆதரவாளர்களும் முன்வைத்துள்ளனர்.

ஆனால், இந்த விளக்கம் ஒரு பச்சைப் பொய் என்பதற்கான ஆதாரம் மத்திய பா.ஜ.க அரசின் பட்ஜெட்டிலேயே உள்ளது . 2015-16 காலகட்டத்தில் உள்கட்டுமானத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, 2,37,718 கோடி; அதே 2017-18 காலகட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி 2,73,445 கோடி – அதாவது ஆண்டு தோரும் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு சராசரியாக 7 சதவீதம் தான் அதிகரித்துள்ளது. இதே பெட்ரோலியப் பொருட்களின் மூலம் கிடைக்கும் வருமானமோ மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

உண்மையில் மக்களைக் கசக்கிப் பிழிந்து வசூலிக்கப்படும் வரி வருவாய் பெரும்பான்மையாக ஸ்வச் பாரத் போன்ற மோடி அரசின் படாடோபமான வெற்றுத் திட்டங்களுக்கும், சுய விளம்பரங்களுக்கும் பாய்ந்தது போக பட்ஜட் பற்றாக்குறையை சமாளிக்கவே பயன்பட்டு வருகின்றது. இந்தியத் தொழில்துறையை கடந்த நான்கு ஆண்டுகளில் சகல முனைகளிலும் படுதோல்வி அடையச் செய்துள்ளார் மோடி. இதன் காரணமாக அரசுக்கு வரும் வருமானமும் குறைந்துள்ளது. எனவே பெட்ரோலியப் பொருட்களின் மீது அதிகப்படியான வரி விதிப்பதன் மூலம் மக்களிடம் இருந்து ஜேப்படி செய்யும் தொகையைக் கொண்டு தான் அரசை நடத்தி வருகிறது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா.

இந்த உண்மையை மறைப்பதற்கு  பாரதிய ஜனதா சொல்லும் பொய்கள் ஒவ்வொன்றும் அடிப்படை தர்க்கத்திற்கே விரோதமாக இருப்பதால் மக்களால் எள்ளி நகையாடப்படுகின்றது. அந்தக் கோமாளித்தனமான விளக்கங்களின் வரிசையில் புதிய வரவு தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கீச்சுகளும்.

– வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க