நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வழிசெய்யும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவுக்கு, பாசிச மோடியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது இந்தியா முழுவதும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை சட்டமாக்கும் முயற்சியில் ஒன்றிய மோடி அரசு இறங்கியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவரும் இத்திட்டத்தை ஆதரித்து வந்த மோடி அரசின் கைபாவையுமான ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்த நிலையில், ஒன்றிய அமைச்சரவை திட்டத்திற்கான ஒப்புதலை அளித்திருந்தது. இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து, நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்மசோதா குறைந்தது ஆறு அரசியல் அமைப்புச் சட்டத்திருத்தங்களை கோருவதால், இரு அவைகளிலும் 3-இல் 2 பங்கு பெரும்பான்மை கிடைத்தால்தான் மசோதாவை சட்டமாக நிறைவேற்ற முடியும். இதன் காரணமாக, பிற கட்சியினரை ஏற்க வைப்பதற்காக மசோதாவை நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்புவது போன்ற கபட நாடகங்களின் மூலம் சட்டத்தை நிறைவேற்ற மோடி அரசு தீவிரமாக முயற்சிக்கும். 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை இந்தியாவில் அமல்படுத்த பாசிச மோடி கும்பல் பல ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறது. இதற்கான காரணமாக, வெவ்வேறு சமயங்களில் தேர்தல் நடத்துவதால் அரசின் செலவீனம் அதிகரிக்கிறது என பா.ஜ.க. கண்ணீர் வடிக்கிறது. ஆனால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தி பல மோசடிகளை அரங்கேற்றி பிற கட்சிகளை ஒழித்துக்கட்டுவதன் மூலம் “ஒரு கட்சி சர்வாதிகாரம்” என்ற பா.ஜ.க-வின் பாசிச நோக்கத்தை ஈடேற்றுவதே இதன் நோக்கமாகும். அந்தவகையில், இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானமாகவே இச்சட்டத்தை கொண்டுவரத் துடிக்கிறது, பாசிசக் கும்பல்.
ஆனால், எதிர்க்கட்சிகளோ இச்சட்டத்தின் பின்னால் இருக்கும் பாசிச நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பதிலாக இத்திட்டத்தின் அபாயத்தை நீர்த்துபோகச் செய்யும் வகையிலேயே இச்சட்டத்தை அணுகி வந்தது.
சான்றாக, முன்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரசின் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைப் பிரதமர் மோடியால் நடைமுறைப்படுத்தவே முடியாது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அனைத்து தரப்பினரின் நம்பிக்கையையும் பெற வேண்டும். அதன் பிறகுதான் நடைமுறைப்படுத்த முடியும்” என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தாலும் அதனை நிறைவேற்றுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறினார்.
படிக்க: ஒரே நாடு ஒரே தேர்தல்: பாசிஸ்டுகளுக்கு எதிராக “மாற்றுத் திட்டம்” வேண்டும்
தமிழ்நாட்டின் முதல்வரான மு.க.ஸ்டாலின், சென்ற செப்டம்பரில் தி.மு.க-வின் பவளவிழா பொதுக்கூட்டத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்துப் பேசுகையில், “ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது. இவர்களால் நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடிந்ததா? நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலை ஏழு கட்டமாகத்தான் நடத்த முடிந்தது. நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள், நாடாளுமன்றத்திற்கும் இந்தியாவில் உள்ள எல்லா மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப் போவதாகச் சொல்வது, கூரை ஏறி கோழியைப் பிடிக்க முடியாதவர், வானத்தைக் கிழித்து வைகுண்டத்தைக் காட்டுவேன் என்று சொல்வது போல் உள்ளது. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று ஒரே பாட்டைப் பாடிக்கொண்டிருக்கின்றனர். நடைமுறை சாத்தியமற்ற, சிக்கல் நிறைந்த பிரச்சினை இது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கும் மக்களாட்சித் தத்துவத்திற்கும் விரோதமானது இது. இதனால் என்ன நடக்கும்? மாநில அரசுகளின் பதவிக்காலம் குறையும். மாநிலங்களில் குழப்பம் ஏற்படும்” என்றார்.
ஆக, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அவற்றை யூனியன் பிரதேசங்கள் அளவிற்குச் சுருக்குவதில் முக்கிய பங்காற்றுகின்ற ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நடைமுறை சாத்தியமற்றது என்பதே எதிர்க்கட்சியினரின் வாதம். ஆனால், இன்று சட்ட மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்தடுத்த நகர்வுகளுக்கும் தயாராகி வருகிறது.
இருப்பினும் தற்போதும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை சட்டமாக நிறைவேற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை காரணம்காட்டி எதிர்க்கட்சிகள் மெத்தனம் காட்டலாம். ஆனால், இதைப்போன்ற சிக்கலான இன்னும் பல நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் தற்போதைய நவீனக் காலத்தில் மிக எளிதாகத் தீர்க்கப்பட்டுள்ளன.
எனினும், மக்கள் நலனிற்கெதிராக திட்டமிட்டுச் செயல்படுகின்ற பாசிச பா.ஜ.க. அரசு, அடக்குமுறைகளை ஏவி தனது பாசிசத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தயங்காது. காஷ்மீருக்கான சிறப்பு உரிமை பறிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவை இதற்குச் சான்றுகளாகும்.
தொகுதி மறுவரையறையை முடித்துவிட்டு தனக்குச் செல்வாக்கு இருக்கும் மாநிலங்களைக் கொண்டே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டால், ஓரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பாசிச பா.ஜ.க. எந்த எல்லைக்கும் செல்லும். எதிர்க்கட்சிகளை உடைப்பது, அமலாக்கத்துறையை ஏவி மிரட்டுவது என எதற்கும் பாசிச கும்பல் தயங்காது.
மேலும், ஒரே வரி என்று பாசிச கும்பல் குறிப்பிட்டாலும், அது தனது கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு ஒரு வகையிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு வேறு வகையிலும் அணுகுமுறைகளைக் கொண்டுள்ளது. ஆகையால், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்களை ஏமாற்றி ஒடுக்கும் ஒரு தந்திரமுமாகும்.
அதுமட்டுமின்றி, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது, அதன் இந்துராஷ்டிரத் திட்டத்தின் அங்கமாகும். பொது சிவில் சட்டம், ஜி.எஸ்.டி. ஒரே வரிமுறை போன்றவையும் அத்தகையவையே.
ஆகையால், பாசிச பா.ஜ.க. அரசிடம் சென்று நடைமுறை சார்ந்த அம்சங்களை முன்வைத்து, அதனால், பாசிசத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாது என்று பேசுவது, அதன் திட்டங்களுக்குத் தெரிவிக்கப்படும் உண்மையான எதிர்ப்பு அல்ல.
உண்மையில், ஜி.எஸ்.டி.யை மாநிலங்கள் எதிர்த்தன. ஆனால், அது நடைமுறைக்கு வந்தது மட்டுமின்றி, அதன் மூலமாக மாநிலங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன; சிறுவணிகர்களும் உழைக்கும் மக்களும் அதன் சுமையைச் சுமக்கின்றனர். அதைப்போலவே, தேசிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது; புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது.
படிக்க: ஒரே நாடு! ஒரே தேர்தல்! பாசிசத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அமைச்சரவை!
இவ்வாறான பாசிசத் திட்டங்கள் நடைமுறையில் சாத்தியமில்லை என்று கூறி எதிர்த்தவர்கள், அது நடைமுறைக்கு வந்த பின்னர், அதற்குக் கட்டுப்படத் தொடங்கிவிடுகின்றனர். இத்திட்டங்களுக்கு மக்களிடம் எதிர்ப்பு இருந்தால், அதனை எதிர்ப்பதைப் போல நாடகமாடுகின்றனர்.
நீட் தேர்வு முறையை எடுத்துக் கொள்வோம். இது நடைமுறைக்கு வந்தது மட்டுமின்றி, அதன் அடிப்படையிலான கட்டமைப்புகள் விரிவாக அமைந்துவிட்டன. தமிழ்நாட்டில் அதற்கு எதிர்ப்பு இருப்பதால், காங்கிரசு உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பைப் பேசுகின்றன. மற்ற மாநிலங்களில் இது குறித்து வாயைத் திறப்பதில்லை.
எதிர்க்கட்சிகளில் இந்த சந்தர்ப்பவாதத்தின் வெளிப்பாடுதான், நடைமுறை சாத்தியப்பாடு என்ற அம்சத்தை மட்டும் வைத்து, பாசிச எதிர்ப்பைப் பேசுவதாகும்.
உண்மையில், இந்த பாசிசத் திட்டங்களை உறுதியாக எதிர்ப்பதாக இருந்தால், இந்த எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும்? மூன்று வேளாண் சட்டங்களுக்கெதிராகப் போராடிய ஹரியானா விவசாயிகளைப் போல் டெல்லியை முற்றுகையிட்டுப் போராட வேண்டும்; குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் இறங்கியது போலப் போராட வேண்டும்.
இவ்வாறான போராட்டங்கள், இந்தக் கட்டமைப்புக்கு வெளியே உண்மையான ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கி நகரும்.
தாங்கள் அடிக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கு, தற்போது இருக்கும் இற்றுப்போன, நாடாளுமன்றக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்வதை மட்டுமே தீர்வு என்று பார்க்கின்றன எதிர்க்கட்சிகள். எந்த அளவிற்கு இந்துராஷ்டிரம் அரங்கேறினாலும் அந்த அளவிற்கு அதில் தங்களது பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் கும்பல்களின் நலன்களை உத்தரவாதப்படுத்திக் கொள்வதில் மட்டுமே கவனமாக இருக்கின்றன.
ஆகையால், இந்த கார்ப்பரேட் கட்சிகள் சொல்லும் வழியில் சென்று பா.ஜ.க-வின் பாசிசத் திட்டங்களை முறியடிக்க முடியாது.
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற ஒரு மாற்று அரசியல் பொருளாதாரக் கோரிக்கைக்கான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதன் மூலமே, பாசிச பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளைக் கொண்ட உண்மையான பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி உருவாகும்; பாசிசத் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்; பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான பாதையும் திறக்கப்படும்!
ஆலம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram