12.12.2024

ஒரே நாடு! ஒரே தேர்தல்!
பாசிசத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அமைச்சரவை!

பத்திரிக்கை செய்தி

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு பாசிச மோடியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேர்தல்கள் மாறி மாறி நடந்து வருவதால் மக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய முடியவில்லை என்றப் பொய்யானக் காரணத்தை கூறி ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்கிறது பாசிச மோடி கும்பல். மக்கள் நலனை ஒழித்துக்கட்டி அம்பானி-அதானி பாசிச கும்பலுக்காக நாட்டையே கூறு போட்டு பிளவுப்படுத்தும் பிஜேபி – ஆர்எஸ்எஸ் பாசிச கும்பல் சொல்வதை மக்கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை.

தற்பொழுது நடந்துவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மோசடி செய்த குற்றத்திற்காக அமெரிக்காவில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள அதானியைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.

மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்பி நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டங்களை உருவாக்குவதற்கு பதிலாக நாடாளுமன்றத்திற்கு வரும் பாசிச பா.ஜ.க. அமைச்சர்களுக்கு இந்திய தேசியக் கொடியையும் ரோசாப்பூவையும் வழங்கி வித்தியாசமான முறையில் ‘போராடி’ வருகிறார்கள் .

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே முடியாது; அதற்கு சாத்தியமே இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை கூறி வருகிறார்கள். பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இத்திட்டத்திற்கு எதிராக பேசி வருகின்ற இச்சூழலில்தான் இந்த பாசிசத் திட்டத்திற்கு மோடியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றங்கள் மீது பாசிச மோடி கும்பல் வைக்காத நம்பிக்கையை எதிர்க்கட்சிகள் வைத்துக் கொண்டிருக்கின்றன.

ஏற்கெனவே மின்னணு தேர்தல் இயந்திரங்களில் மோசடி நடக்கிறது என்று புலம்பிக் கொண்டிருப்பதை தவிர எதிர்க்கட்சிகளால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. மின்னணு தேர்தல் இயந்திரங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனதுதான் மிச்சம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளை ஒழித்துக்கட்டி தேசிய இன உரிமைகளை புதைகுழியில் போடும் இந்துராஷ்டித்திற்கான தேர்தல் ஆகும்.

வழக்கம் போன்றதொரு சடங்குத்தனமான எதிர்ப்புகள் மூலமாக ஒருபோதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது. மாறாக மாபெரும் மக்கள் போராட்டத்தை கட்டியமைத்து ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிராக மக்களை இயக்கமாக்கி ஆர்எஸ்எஸ் – பாஜக ; அம்பானி -அதானி பாசிச கும்பலை வீழ்த்தும் வழியில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தையும் தடுத்து நிறுத்த முடியும்.

அந்த மாபெரும் பணியை ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரிகளும் மக்களிடம் கொண்டு சென்று அதனை உருவாக்க வேண்டியது நம்முடைய கடமை என்று புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகளை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது .


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க