கட்டட வாடகைக்கு 18% ஜி.எஸ்.டி-யை எதிர்த்து வணிகர்கள் போராட்டம்:
தேவை மாற்று பொருளாதாரத் திட்டம்!
நேற்று (டிசம்பர் 11) கட்டட வாடகைக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி. விதிப்பதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் 56 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடைகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு வாடகையாக செலுத்தப்படும் தொகைக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்துவரியும் ஆறு சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவையன்றி வணிக உரிமக் கட்டணமும் தொழில்வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கட்டட உரிமையாளர்கள் மட்டுமன்றி வாடகை கட்டடத்தில் வணிகம் செய்துவரும் வணிகர்களும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வரி என்னும் பெயரில் வணிகர்கள் மீது தொடுக்கப்படும் இந்த அப்பட்டமான சுரண்டல் நடவடிக்கையை கண்டித்தும் அவற்றை திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி, கோயம்பேடு மார்க்கெட் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர், சென்னை மருந்து வணிகர் சங்கத் தலைவர் ரமேஷ், இந்திய ரயில் எஸ்டேட் பில்டர்ஸ் சங்க தலைவர் வி.என்.கண்ணன், தமிழ்நாடு பர்னிச்சர் மற்றும் உரிமையாளர்கள் சந்தானபதி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ், தமிழ்நாடு டிஜிட்டல் சங்கத் தலைவர் சுரேஷ், சென்னை பெருநகர டீக்கடை சங்கத் தலைவர் ஆனந்தம், தமிழ்நாடு காலணி வியாபாரிகள் சங்க தலைவர் காஜா முகைதீன் உள்ளிட்ட பல்வேறு தரப்பு வணிகர்களும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாடகை கட்டடத்துக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதையும், ஆண்டுதோறும் 6 சதவிகிதம் சொத்துவரி உயர்த்துவதையும் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். 2017-ஆம் ஆண்டு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு தற்போது ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள் என்று கேட்கிறார்கள். தற்போது இணக்க வரி போட்டுள்ளார்கள். ஒன்றரை கோடிக்கு வியாபாரம் செய்பவர்கள் ஒரு சதவிகிதம் ஜி.எஸ்.டி கட்டுகிறார்கள், இவர்களில் 40 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளார்கள். வாடகை கட்டடம் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். வணிகர்கள் மீது போடும் குப்பை வரி, தொழில் உரிம வரி உயர்வையும் திரும்பபெற வேண்டும். வியாபாரிகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு அரசு அனைத்து வரிகளையும் குறைக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் கடை கடையாக சென்று உயர்த்தப்பட்ட வரி விதிப்பதை நிறுத்த வேண்டும்” என்றார்.
மேலும், “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில் தென்மாநிலங்களை ஒருங்கிணைத்து வரும் டிசம்பர் 27-ஆம் தேதி தென்மண்டல கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் மாதத்தில் டெல்லியை நோக்கி மாபெரும் பேரணி மற்றும் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இதற்கும் ஒன்றிய அரசு செவி சாய்க்காவிட்டால் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
ஜி.எஸ்.டி. வரி என்னும் பெயரில் பாசிச மோடி அரசானது, வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மீது அப்பட்டமான தாக்குதலை தொடுத்து வருகிறது. ஆனால், ஜி.எஸ்.டி. வரி என்பது கொள்ளைக்கான வரி மட்டுமல்ல, அது அம்பானி-அதானிகளுக்கான “ஒற்றை சந்தை”யை உருவாக்கும் பாசிச திட்டத்தை உள்ளடக்கியதாகும்.
ஜி.எஸ்.டி. வரிமுறையால் தற்போது ஒழித்துக்கட்டப்பட்டு வரும் சிறுகுறு தொழில்கள் என்பவை அமைப்புசாரா தொழில்துறை மட்டுமல்ல; இவற்றில் பெரும்பாலானவை மாநில, வட்டார அளவிலான சந்தையைக் கொண்டவை. பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு தரகு முதலாளித்துவ நிறுவனங்களைப் போல, தேச அளவிலான சந்தையை மையமாகக் கொண்டு இயங்குபவை அல்ல. இவற்றையும் சிறுகுறு தொழில் நிறுவனங்களையும் ஜி.எஸ்.டி. வரி மூலம் ஒரே சட்டகத்தில் கொண்டுவருவதென்பது, பல்வேறு தேசிய இனங்களின் பொருளாதாரத்தைச் சிதைத்து, “ஒரே நாடு ஒரே சந்தை” என்ற பெயரில் சிறு குறு தொழில்களை அழித்து ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பார்ப்பன, பனியா, மார்வாடி முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் கொண்டு சேர்க்கும் சதிகாரத் திட்டமாகும்.
இந்த சதிகாரத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே, மாநில அரசுகளின் உரிமையை பறித்து அவற்றை ஒன்றிய மோடி அரசின் கப்பங்கட்டும் அமைப்புகளாக மாற்றியுள்ளது பாசிச மோடி அரசு. இதன் மூலம் மாநிலக் கட்சிகளை பெயரளவுக்குத் கூட தனித்த அரசியல்-பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருக்க முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது. ஆனால், பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் இந்த பாசிச கும்பலின் பொருளாதாரத் திட்டத்திற்கு மாற்றாக “மாற்று அரசியல்-பொருளாதாரத் திட்டத்தை” முன்வைத்து பாசிச சக்திகளை எதிர்ப்பதில்லை. மாறாக, பாசிச மோடி அரசு நெருக்கடி கொடுக்கும் போதெல்லாம் அதன் கட்டளைக்கிணங்கி சொத்து வரி, மின்சார வரி போன்றவற்றை உயர்த்துவதன் மூலம் பாசிஸ்டுகளின் பொருளாதாரத் திட்டத்திற்குள் உழல்கின்றன.
எனவே, தற்போது கட்டட வாடகைக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி. விதிப்பையும் தங்கள் மீதான பிற வரிச் சுரண்டலையும் எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் வணிகர்கள் பாசிஸ்டுகளின் பொருளாதாரத் திட்டத்திற்கு எதிரான மாற்று பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து அதன்கீழ் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அந்த மாற்று திட்டத்தை மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சிகளை ஏற்க வைக்கும் வைக்க நிர்பந்திக்கும் வகையிலான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram