சென்ற ஆண்டு சிறந்த அரசு நிர்வாகத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம், வேளாண்மை, தொழில்வளர்ச்சி, வணிகம், மனிதவளம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு என பத்து துறைகளில் 5.6 மதிப்பெண் தமிழகம் பெற்றுள்ளது. மத்திய மோடி அரசும், இந்தியா டுடே தேசிய ஊடகமும் 99 வகையான பதக்கங்களை எடப்பாடி அரசுக்கு வழங்கியிருக்கின்றன. மேலும் காலஞ்சென்ற ஏவுகணை மனிதர் அப்துல்கலாமின் கனவுகளும், இந்திய வல்லரசு உதயம் 2020-ம் இதில் சேர்ந்து கொண்டது. புத்தாண்டு பொங்கல் திருநாள் கொண்டாடங்களும் தமிழகத்தில் சேர்ந்து கொண்டது. அரசியல் தலைவர்களின் நல்வாழ்த்துக்கள், பழம் நழுவிப் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல் காட்சியளிக்கிறது.

மக்கள் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மற்றும் எடப்பாடி ஆட்சியின் திருப்பாற்கடலில் எப்படி மெய்மறந்து நீந்துகிறார்கள் என்பதையறிய சென்னையின் இரு முக்கிய தொழிற்பேட்டைகளைச் சுற்றி தொழிலாளர் மாணவர்களைப் பேட்டி கண்டோம்.

கிருஷ்ணமூர்த்தி, ஹரீஷ், மகேஷ், அப்துல், இராஜவேலு – கிண்டி அரசு ஐ.டி.ஐ மாணவர்கள்

”மோடி அரசு மொதல்ல நல்ல அரசே இல்ல, அப்பால எங்க நாடு வல்லரசாகும். மோடி இருக்குற வரைக்கும் இதுக்கு சான்சே இல்ல. வல்லரசா நம்ம சாதிக்கனும்னா நம்ம எல்லாரும் ஒத்துமையா வாழனும், அதுக்கு இங்க வழியில்ல. முசுலீம், இந்துன்னு நம்மள பிரிக்கிறாங்க, பொழப்புக்கு வழிசொல்லுங்கன்னு கேட்டா ‘ஆன்ட்டி இந்தியன்’னு பட்டம் கொடுக்குறாங்க.. ஆனா அவுங்க ஆட்சிக்கு நல்லாட்சி பட்டம் கெடைச்சிடுச்சுன்னு சொல்லுறாங்க, யார ஏமாத்துறதுக்கு” என்று சீறினார்கள் மாணவர்கள். அவர்களோடு நின்றுகொண்டிருந்த அப்துல் என்ற முசுலீம் மாணவனின் தோளில் தட்டி, ”இதோ இவன் முசுலீம்தான், நாங்க ஒன்னா தான் பழகுறோம், சாப்புடுறோம், அவுங்க வீட்டுக்குக் கூட நாங்க கும்பலா போவோம். இவனா எங்க எதிரி… நோ … நோ” என்று முசுலீம் நண்பனை உற்சாகமாகத் தட்டிக்கொடுத்தனர்.

ரேவதி பெருமாள், ரக்‌ஷா – எம்.பி.ஏ. மாணவர்கள் – புகைப்படம் தவிர்த்தனர்.

”இந்தியா வல்லரசாவுறது கடைசிவரைக்கும் பகல் கனவுதான். முதல்ல நம்ம எஜுகேஷன் சிஸ்டத்த அப்டேட் பண்ணச் சொல்லுங்க. வெறும் ஒன் வேர்டு ஆன்சர், ஃபில் இன் த பிளாங்கஸ்-ங்குற அப்ஜெக்டிவ் டைப்ல மனப்பாடம் பண்ணுற கல்வி முறையதான் இன்னும் தினிக்கிறாங்க. வேல தேடி வெளில போனா, தகுதி வாய்ப்பு இல்லன்னு தொரத்துறாங்க. ஆனா கையளவு ஃபோன்ல டிக்-டாக் பண்ணுற தகுதிக்குத் தான் ஸ்டூடண்ட்ச ரெடி பண்ணுறாங்க நம்ம அரசியல்வாதிங்க, ஆனா சீனாக்காரன் இந்த ஆப்-அ கொடுத்து நம்மள ஆஃப் பண்ணிட்டான். இவுங்க வேஸ்டு சார். இதோ நாங்க எம்.பி.ஏ படிச்சுட்டு புராஜெக்டுக்காக படிப்படியா ஏறி இறங்குறோம். இப்பவும் அதுக்குத்தான் அவசரமா போறோம்.”

நிகில், மங்கள் ரோஷ், ஆதேஷ், பவன் வட நாட்டு மாணவர்கள்

”இந்தியாவில் இப்போது நடக்கும் அனைத்தும் ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது. மக்களிடம் பிரிவினையைத் தூண்டி வளர்த்தால் நாடு எப்படி முன்னேறும், எங்கள் மாநிலங்கள் தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் கல்வியிலும் வளர்ச்சியிலும் மிகவும் பின் தங்கியிருக்கிறது. மோடியின் அரசியல் விரும்பத்தக்க வகையில் இல்லை. மதவெறி ஒன்று மட்டுமே இந்த நாட்டின் குறிக்கோளாக எப்படி இருக்க முடியும். வியாபார நிறுவனங்கள், விவசாயிகள் என எல்லாருமே பாதிக்கப்படும்போது இந்தியா வல்லரசாவது கனவிலும் நடக்காது.”

ராம்மோகன் – சூப்பர்வைசர் – ஹூண்டாய் நிறுவனம்

”ஹூண்டாய்-ன் கிளை நிறுவனம் ஒன்றில் நான் நிரந்தர ஊழியர். 5 வருசம் சர்விஸ்-ல 35,000 சம்பளம், ஆனா காண்டிராக்டு எம்பிளாயிக்கு இதே வேலக்கி வெறும் 15,000 தான் சம்பளம். என்ன மாதிரி பத்து பேற நிரந்தரமா வெச்சுக்கினு, 100 பேர காண்டிராக்டுக்கு எடுக்குறாங்க, இத கண்டுக்காத மாதிரி நடிக்கிறாங்க நம்ம அரசியல்வாதிங்க… இதுல வேற நாடு வல்லரசாயிடுச்சுன்னு கனவு காணச்சொல்றாங்க. எனக்கு 400 ரூபா கேஸ் சிலிண்டர் 850-க்கு விக்கிறாங்க….460 ரூபா நேரா கொடுத்து வாங்குனத விட்டுட்டு மானியம் தர்றோம்னு சொல்லி 850 ரூபாயா வெலைய ஏத்திவிட்டு இப்போ மாணியப்பணம் தர்றதே இல்ல. எனக்கே சிரமமா இருக்கும்போது காண்டிராக்டு லேபர்-லாம் எப்படி பொழக்கிறது. இப்போ அவனவன் உயிர் வாழுறதே கனவாயிடுச்சு. எதிர்காலத்த நெனச்சா பயமாயிருக்கு.”

விக்டர் – தனியார் நிறுவன ஊழியர்.

”எனக்கு இந்த பி.ஜே.பி. மேல நம்பிக்கை இல்ல. மக்களப் பிளவுபடுத்தி  மோதவிட்டு இரத்தம் குடிக்கிறது தான் பி.ஜே.பி-யின் விஷன் 2020. தற்போதைய அரசியல் நிலவரம் கலவரமாக இருக்கிறது. நாட்டுல அமைதியே நிச்சயிமில்லாத போது நீங்க பேசுறதே வேஸ்டு. ஒரு சின்ன உதாரணம், நமக்கு நம்ம வீட்டுல எப்போ மரியாத வரும், நாம சம்பாதிச்சு குடும்பத்த காப்பாத்துனா தானே. அதுதான் நாட்டுக்கும். பி.ஜே.பி இருக்குற வரைக்கும் இதுக்கு வழியேயில்ல.”

நாகராஜ் – நாளிதழ் சூப்பர்வைசர்.

நாகராஜ், (வலது புறம்).

”நம்ம நாட்டு பொருளாதாரத்த ஐ.சி.யூ. வார்டுக்கு எடுத்துட்டு போயி சேத்துட்டாங்க. அது திரும்பவும் எப்போ ஆரோக்கியமா வெளில வரும்னு தெரியாது. வேலையில்லாத பிரச்சின இப்போ உச்சத்துக்கு போச்சு, இந்தியாவே இப்ப அத்துக்கூலி நாடா மாறிபோச்சு. ஜனங்க இப்ப உயிர்பிச்ச கேக்குறதே பெரிய போராட்டமா இருக்குது. இதுல வல்லரசு கனவு உங்களுக்கு வேடிக்கையா இல்லையா?”

ஸ்டீபன் – ஐ.டி ஊழியர்.

ஸ்டீபன்.

”என் சொந்த ஊர் தேவகோட்டை. எனக்கு வேலையில்லன்னு பிரச்சினையில்ல, போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறேன், தேவையானது கெடைக்கிது, அப்பா டெய்லர், அம்மா வடகம் வத்தல் போட்டு விக்கிறாங்க, என் சம்பளத்துல கொஞ்சம் அனுப்புறேன், படிச்ச கடன அடைக்கனும், எல்லா மதமும் கோபப்படாம பொறுமையா இருன்னு தான் சொல்லுது, அத வாழ்க்கையில கடைபிடிச்சா போதும். எனக்கு அரசியல் தெரிஞ்சுக்க விருப்பம் இல்ல. நான் வாட்சப், சோஷியல் மீடியா பக்கம் அதிகமா போறதில்ல, எனக்கு ஈஷா போதனைகள் பிடிக்கும், ஓய்வு நேரங்கள்-ல் ஸ்பிரிச்சுவல் கூட்டத்துக்குப் போவேன், எனக்கு நீங்க கேக்குற கேள்வி புரியல, எல்லாரும் ஒழுங்கா இருந்தா நாடும் நல்லா இருக்கும்… சிம்பிள்.”

ஆரோக்கியராஜ், கணேசன், சஞ்சீவி – திண்டுக்கல் பகுதி கட்டிட தொழிலாளர்கள்

”நாங்க செண்டிரிங் – கம்பி கட்டுற வேலையில ஸ்பெசலிஸ்டு. 700 ரூவா கூலிய இப்போ 600-ஆ குறைச்சுட்டாங்க. ஆள் அதிகமாயிடுச்சு, வேல கொறஞ்சிடுச்சு, போட்டியில நிக்க முடியல, 40 வயசு ஆனாலே இந்த வேலையில்லன்னு சொல்லுறான். சின்னப்பசங்களா கேக்குறான், வட நாட்டுக் காரனுங்களுக்கு 600-க்கு பதிலா 400 ரூவா கொடுத்துட்டு வேல வாங்குறான். ஊர்ல இந்த வேலைய செய்யாலுமுன்னு பாத்தா நாலு நாள் கூட வேலையில்ல. இங்க வந்த நம்ம பொழப்பு கல்லு மண்ணு மாதிரி ஒரு ஓரமா தகரக் கொட்டாயில போகுது. கொதிக்கிற வெயிலும் தூசியும் ஒடம்ப பாதியாக்கிடுச்சு. இதுல நாடு வல்லரசு ஆனா என்னா, ஆவலன்னா என்னா, பொங்கலுக்கு ஊருக்குப் போறதே பெரும் பாடா இருக்குது. 300 ரூவா மிச்சம் பண்ணுறதுக்காக பஸ்-ல போகாம டிரெயினுக்கு அரை நாள் ஒக்காந்து கெடக்குறோம், இதுதான் எங்க நிலம, நீங்க கேக்குற இந்திய நெலம பத்தி நாங்க என்னத்த சொல்ல….”

அன்பரசு, அபிஷேக் – கல்லூரி மாணவர்கள்

”நாங்கள் பி.பி.ஏ. படிக்கிறோம், எனக்கு (அன்பரசு) லா படிக்கனும்னு ஆசை, அவன் எம்.பி.ஏ படிச்சி ஐ.டி-யில் ஹெச்.ஆர் ஆகப்போறானாம். இப்போ எங்களுக்கு பசிக்கொடும, மத்தியானம் சாப்பாடு எடுத்துட்டு வரல, எங்கப்பா குடிகாரர், அம்மா தான் வேலைக்குப் போகுது, தங்கச்சி +2 படிக்குது. நான் ஸ்காலர்ஷிப் எழுதிப்போட்டு வரவேயில்ல. காலேஜ் லீவு நாள்ல நான் காசிமேடு போயி மீன் தூக்குற வேல, மீன் வெட்டுற வேலை செய்யுறேன். ஒரு நாளக்கி 500 ரூபா கொடுப்பாங்க. அந்த பணத்துல காலேஜுக்கு வந்து போறேன். இங்க அரசியல்வாதிங்க சரி கிடையாது, அவுங்க குடும்பம்தான் அவுங்களுக்குப் பெருசு, நாம அவுங்களுக்குத் தேவையில்ல. இதுக்கு மேல எங்கள எதுவும் கேக்காதீங்க.”

தாமோதரன் – அரசு ஊழியர்.

டி.வி, பத்திரிக்கை-ய பாக்குறதுக்கே இப்ப பயமாயிருக்குது, ஒரே கலவரம். இங்க அரசியல்வாதிங்க யாரயும் நாம தண்டிக்க முடியாது, நாடு வல்லரசாவலாம், இப்ப இருக்குற அரசியல்வாதிங்க அதுக்கு விடமாட்டாங்க, அரசுப்பணம் இவுங்க பாக்கெட்ட விட்டு வேற எங்கயும் போகக்கூடாது. மோடியும் எடப்பாடியும் மக்கள முழுசா ஏமாத்துறாங்க, நம்மள வெறுப்பேத்தி அவன் வேணா, இவன் வேணா, முசுலீம் வேணாம்னு நம்மள பிரிக்கிறாங்க, தெருவுல ரவுடித்தனம் பண்ணிக் கொள்ளையடிக்கிறவன் மாதிரிதான் இந்த அரசாங்கமும் நடந்துக்குது. கவர்மெண்ட் கணக்குப்படி மாசம் 10,000 ரூபா வருமானம் இல்லாதவன் தான் அதிகம் இருக்குறான். இந்த சாதாரண ஜனங்க இப்போ கவுரவமா பொழைக்க முடியுமா? பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, தேசிய குடியுரிமை சட்டத்திருத்தம், இது எங்க போயி நிக்கும்னு தெரியல, முதல்ல நம்ம மேல் பாக்கெட்டுல கைய வெச்சானுங்க, அடுத்து அடிப்பாக்கெட்டுக்குல கைய வெச்சானுங்க, இப்ப ஜட்டிக்குள்ளே கைய விட்டுத் துழாவுறானுங்க, வெட்கம் கெட்டவனுங்க…”


வினவு புகைப்படச் செய்தியாளர்


இதையும் பாருங்க …

BJP – RSS சோலிய முடி ! அதிர விட்ட மக்கள் அதிகாரம் முழக்கங்கள் !

SAY NO NRC ! SAY NO BJP ! Kovan Song | கோவன் பாடல் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க