ரோப்பிய முதலாளித்துவம் தனது பிறப்பிலேயே எப்படி சுரண்டலை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை கார்ல் மார்க்ஸ் விளக்கியிருப்பார். அடிமை வர்த்தகம், காலனியச் சுரண்டல் என நவீன சமூகத்தின் கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை அன்றைய ஐரோப்பிய முதலாளிகள் கட்டவிழ்த்துவிட்டு தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டனர். ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கருப்பு மனிதர்களை விலங்குகளைப் போல் பொறிவைத்துப் பிடித்து கூட்டம் கூட்டமாக கூண்டுகளில் அடைத்து அமெரிக்காவுக்கு ”ஏற்றுமதி” செய்தனர் அன்றைய ஐரோப்பிய முதலாளிகள்.

வேட்டையில் சிக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்தும், உறவுகளில் இருந்தும் பிய்த்தெறியப்பட்டு விலங்குகளைப் போல் நடத்தப்பட்டு பெரும் கப்பல்களில் அடைத்து ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். பசிபிக் பெருங்கடலைக் கடப்பதற்குள் கூண்டுகளில் அடைபட்ட மனிதர்களில் பலர் இறந்தும் போயுள்ளனர். சுமார் 400 ஆண்டுகள் நடந்த அடிமை வியாபாரத்தில் இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறத்தாழ 20 கோடி. அலெக்ஸ் ஹேலி எழுதிய “ஏழு தலைமுறைகள்” நூலின் துவக்கத்தில் ஆப்பிரிக்கர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுங்கோன்மைகளின் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரம் காணக்கிடைக்கிறது.

முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மைகளை குறித்துப் பேசும் போதெல்லாம் அதன் பண்டித சிரோமனிகள்  ஆஜராகி, ”அதெல்லாம் அந்தக்காலம். இப்போது முதலாளித்துவம் சைவமாகி விட்டது. எவ்வளவோ நாகரீகம் வளர்ந்து விட்டது. நீங்கள் ஸ்கேண்டிநேவிய நாடுகளைப் பார்த்ததில்லையோ?” எனப் பாடம் எடுப்பதைப் பார்த்திருப்போம். இது உண்மைதானா? முதலாளித்துவம் ”முதிர்ச்சியடைந்து திருந்திவிட்டதா”? கொத்தடிமைத்தனம் ஒழிந்து விட்டதா? இல்லை என்பதே பதில்.

கூலி உழைப்புதான் (அதாவது ஊதியத்திற்கு வாங்கப்பட்ட மனித உழைப்பு) முதலாளித்துவத்தின் பிரதான சுரண்டலாக இப்போது நிலவுகின்றது – என்றாலும், எங்கெல்லாம் தனக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிமை உழைப்பை உறிஞ்சிக் கொள்ள முதலாளித்துவம் தயங்குவதில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பு கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் அந்த ஆண்டில் உலகெங்கிலும் சுமார் 2.5 கோடி கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகெங்கும் இருக்கும் கொத்தடிமைத் தொழிலாளர்களில் சுமார் 24 இலட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர் என்கிறது அதே அறிக்கை. இந்த எண்ணிக்கையில் உலகெங்கிலும் மாபியா கும்பல்களால் கடத்தப்பட்டு கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், அமெரிக்காவில் உள்ள சுமார் 20 இலட்சம் சிறைக்கைதிகளை அந்நாட்டின் 13-வது அரசியல் சாசனத் திருத்தம் ”அடிமைகளாக” வகைப்படுத்தியுள்ளது – இந்த எண்ணிக்கையும் மேற்படி அறிக்கையின் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

படிக்க:
பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் !
சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !

குறிப்பாக 2010-ம் ஆண்டில் இருந்து கொத்தடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் கொத்தடிமைத் தொழிலாளர்களை அதிகளவில் பயன்படுத்துவது அந்நாட்டு பாதுகாப்புத் துறை.

சவுதியைச் சேர்ந்த தைமிமி குழுமம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஏராளமான ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்டுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு உணவு சப்ளை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களை வென்றுள்ள தைமிமி குழுமம், கொத்தடிமைத் தொழிலாளிகளை பணியில் ஈடுபடுத்தியிருப்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலமாகியுள்ளது. 2011-ம் ஆண்டு பரவலாக ஊடகங்களில் இப்பிரச்சினை வெடித்ததைத் தொடர்ந்து தைமிமி குழுமத்தின் மீது 11 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏழைகளை கவர்ந்திழுக்கும் தைமிமி குழுமம், அவர்களிடம் ஓட்டல் வேலை என பொய் சொல்லி ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கி போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாதம் ஆயிரம் டாலர் சம்பளம் என வாய் வார்த்தையாய் சொல்லி விட்டு, ஒப்பந்தத்தில் 400 டாலரே எழுதப்பட்டிருக்கும் – இதே போல், ஒப்பந்தங்களில் மாற்றி எழுதப்பட்ட விசயங்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அத்தொழிலாளிகள் படிப்பறிவு பெற்றவர்கள் இல்லை.

வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏமாற்றி பிடித்து வரப்படும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு  ஆபத்தான இடங்களில் பணிக்கமர்த்தியுள்ளது தைமிமி குழுமம். தகிக்கும் பாலைவன வெப்பத்தில் சிறிய தகரக் கொட்டகைகளுக்குள் ஆறேழு தொழிலாளர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளது. மேலும், தொழிலாளர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் பிடுங்கி வைத்துக் கொள்ளும். அயல் நாட்டுத் தொழிலாளர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பது அமெரிக்க பாதுகாப்புத் துறையில் உள்ள விதி – இது மீறப்பட்டுள்ளது என்பதில் இருந்தே உயரதிகாரிகளின் ஆசியின்றி கொத்தடிமை முறை நிலவுவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்க இராணுவ முகாம்களில் பணியாற்றும் கொத்தடிமைகள்.

இதே போல் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் காண்டிராக்ட் நிறுவனமான டைன்கார்ப் எனும் மற்றொரு நிறுவனம், போஸ்னியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் வைத்து விபச்சார விடுதியே நடத்தியது 1999-ம் ஆண்டு அம்பலமாகி நாறியது. டைன்கார்ப் நிறுவனம் இந்த குற்றங்களுக்காக உரிய தண்டனை பெறவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அந்நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய அதன் முன்னாள் ஊழியரோ கொலை மிரட்டல்களுக்கு அஞ்சி போலீசுக் காவலில் முடங்கிக் கிடக்கிறார். இதே நிறுவனத்திற்கு மீண்டும் ஆப்கானில் இராணுவ ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. மீண்டும் 2009-ம் ஆண்டு ஆப்கானிய சிறார்களைக் கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபத்தியது அம்பலமானது.

இது ஏதோ ஒரு சில காண்டிராக்ட் நிறுவனங்களின் பிரச்சினை அல்ல. அமெரிக்க இராணுவம் வெளியிடும் டெண்டர்களை வெல்வதற்கான போட்டியில் குறைந்த தொகையை குறிப்பிடுகின்றன. இவ்வாறு வெல்லப்படும் ஒப்பந்தங்களில் இருந்து இலாபம் ஈட்ட ஒரே வழி தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் குறைப்பது. அதற்கு ஒரே உத்திரவாதமான வழி கொத்தடிமை முறை. அனைத்தும் சட்டப்பூர்வமாகவே நடந்தேறுகின்றது. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஒரு குறிப்பிட்ட கூலி என்பது நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக யார் குறைந்த கூலிக்கு செய்ய முன் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்த வேலைக்கான ஒப்பந்தத்தைக் கொடுக்கின்றனர். இதன்மூலம் மறைமுகமாக தெரிந்தே கொத்தடிமை முறை நிலவுவதற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றனர்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அடிமை முறை ஒழிந்து போகவில்லை. அது நம் பார்வையில் படாமல் சட்டப்பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி மிகச் செழிப்பாக வளர்ந்துள்ளது. முதலாளித்துவத்தின் லாபவெறி அதற்கு தண்ணீர் ஊற்றி உரமிட்டுக் கொண்டுள்ளது.


சாக்கியன்

செய்தி ஆதாரம் :
The US Military and the Slave Trade

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க