பிப்ரவரி 14 காதலர் தினம் என்றாலே காவிகளுக்கு  கடுப்பாகி விடுகிறது. வருடா வருடம் காதலர் தினத்தன்று இவர்கள் செய்யும் அட்டூழியம் சொல்லில் அடங்காது. இந்த வருடமும் சங்கி மங்கிகளின் அட்டூழியம் தொடர்கிறது. “காதல் இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது. ஜோடியாக திரியும் காதலர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்போம்” என்று மிரட்டி வருகின்றனர். காதலர் தினம் அல்லாத நாட்களில் இவர்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் காதலர்களையும், குறிப்பாக காதலிக்கும் முஸ்லீம்களையும் குறிவைக்கின்றனர்.

இவர்களுக்கு போட்டியாக ஆடியோ பிஜே புகழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக காதலை விபச்சாரத்துடன் ஒப்பிட்டு தங்கள் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள். இந்த விஷயத்தில் இரண்டு கும்பலுக்கும் வேறுபாடு இல்லை. ஆனால், காவிகள் சொல்லும் “கலாச்சாரம்” பெரும்பான்மையின் பெயரால் வருவதால் அது நாட்டு மக்களின் நிம்மதியை குலைக்கிறது.

சாதிகளைப் பாதுகாக்கும் அகமண முறையை பாதுகாக்க காதல் கூடாது என்பார்கள். மீறி காதலித்தால் கட்டி வைத்து எரிப்பார்கள். பெண்களை தாய், மாதா, புனிதம் என்பார்கள். ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை துளியும் வெட்கமின்றி நியாயப்படுத்துவார்கள். கோயில் கருவறையில் எட்டு வயது சிறுமி ஆசிபாவை வைத்து குதறுவார்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடவும் செய்வார்கள். இதுதான் இவர்கள் போற்றும் கலாச்சாரம்.  சங்க பரிவாரங்களின் காதல் எதிர்ப்பு காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றி  சென்னையின் பெசன்ட் நகர் கடற்கரை, செம்மொழி பூங்கா ஆகிய இடங்களுக்கு வந்திருந்த இளைஞர்களிடம் கேட்டுப் பார்த்தோம். அவர்களில் சில காதலர்கள் உண்டு. என்ன கூறுகிறார்கள் பார்ப்போம்.

பர்வத் அகமத், (பீகாரை பூர்வீகமாகக் கொண்டவர்)

“படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். திருவொற்றியூர்ல இருக்கேன்.. இந்த மாதிரியான கேள்வியெல்லாம் யாராவது என்கிட்ட கேப்பாங்களான்னுதான் வெயிட் பன்னிகிட்டிருந்தேன். காதல் என்பது நம்முடைய பிரைவசி. இது சுதந்திர நாடு என்பதால் எல்லோருக்கும் காதலிக்க உரிமை இருக்கிறது. நாங்களும் இண்டர் காஸ்ட் மேர்ரேஜ் தான் பன்ன போறோம். வீட்ல எந்த எதிர்ப்பும் இல்ல. ஆனா, ஆர்.எஸ்.எஸ். – காரங்க எதிர்க்கிறாங்க.

இவ்வளவு பேசுறாங்களே அந்த ராமனே – சீதையை காதலிச்சிதான் கல்யாணம் பன்னிக்கிட்டாரு. கிருஷ்ணர் ஒரு ப்ளே பாய் தான். இதுக்கு என்ன சொல்வாங்க… ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியைப் பொருத்த வரைக்கும் இந்தமாதிரி எதையாவது பண்ணிகிட்டு இருந்தாதான் அவர்கள் இருப்பதாகவே மக்களுக்கு தெரியும். இல்லைன்னா அவங்க இருக்கிற இடமே தெரியாம போயிடும். காதல் எதிர்ப்புன்ற பேர்ல விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். இதை விட்டா இவர்களுக்கு வேறு வழியும் இல்லை.

» காதலர்களுக்கு கட்டாயமா தாலியோடு கல்யாணம் பண்ணி வைப்போம்னு சொல்லுறாங்களே…..?

என்கிட்ட வந்து சொன்னா அது உங்க வேலை இல்லைன்னு சொல்லுவேன். அவங்க எப்படி எனக்கு கல்யாணம் பண்ணி வெக்க முடியும்? அது அவுங்க வேலயே இல்ல… எனக்கு திருமணம் பண்ணி வக்கிறதுக்கு எங்க பெற்றோர்கள் இருக்காங்க. என்னோட குடும்பம் சார்ந்தது. அதனால என் திருமணத்தப் பத்தி என்னோட குடும்பத்தினர் தான் கவலைப்படனும். இவர்கள் இல்லை.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்
மக்கள் அதிகாரம் : தஞ்சையில் 9 தோழர்கள் கோவில்பட்டியில் 5 தோழர்கள் கைது சிறை !

அதேமாதிரி இவர்கள் சொல்லுறது இங்க செல்லாது. நார்த் இண்டியாவுல வேணும்னா இவுங்க படம் ஓடும். இது சவுத் இந்தியா. இங்க கல்வியறிவு இருக்கு. வட இந்தியாவுல கல்வியறிவு இல்ல. அதனால வட இந்திய பெற்றோர்கள் இவங்களுக்கு சப்போர்ட் பன்றாங்க. தமிழ்நாட்ல அது முடியாது. அதனால நான் தமிழை நேசிக்கிறேன்.

» தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஹத்தும் இதை எதிர்க்குறாங்களே…?

நான் சார்ந்த இனமாக இருந்தாலும் இதை எதிர்க்கிறேன். யார் செய்தாலும் தவறுதான்.

ஹாசன்.

இப்படி எதிர்க்குறாங்கன்னு நீங்க சொல்லிதான் தெரியும். அந்த காலத்துலயே லவ் இருந்துட்டுதான் வருது. இப்ப அதை ஒன்னும் செய்ய முடியாது.

» இது இந்திய கலாச்சாரத்தை கெடுக்கும்னு சொல்றாங்களே….?

அப்படின்னா…. “நான் ஒரு ஆண்டி இந்தியன்-னு வெச்சுக்கங்களேன்”

கமல், (புகைப்படம் தவிர்த்தார்).

காதல், தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தால் அது தவறாகத்தான் தெரியும். நாங்க காதலிக்கிறதே கல்யாணம் பண்ணிக்கத்தான். இவர்கள் யார் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வக்க? ஒருவேளை எங்ககிட்ட வந்து அப்படி சொன்னா எங்க வீட்ல வந்து பேசி முடிங்கன்னுதான் சொல்லுவேன். இவனுங்க எல்லாம் இதை ஒரு பாப்புலாரிட்டிக்குத்தான் செய்யிறானுங்க.  மத்தபடி வேற எந்த நோக்கமும் இல்ல. எல்லாம் அரசியல்தான்.

காலித், (புகைப்படம் தவிர்த்தார்).

அவுங்க காலத்துல மட்டும் லவ் பண்ணாமலா இருந்தாங்க. அப்பல்லாம் ஆட்டம் போட்டுட்டு இப்ப வயசான காலத்துல நீதி நியாயம்னு பேசினா எப்படி? இது என்னோட தனிப்பட்ட வாழ்க்கை. எனக்கு சுதந்திரம் இருக்கு. எங்க வீட்ல சொல்லிட்டோம். எந்த எதிர்ப்பும் இல்ல. நானும் ஒரு முசுலீம்தான். எங்க ஆளுங்களே காதலிச்சா விபச்சாரத்துக்கு சமம்னு சொல்லுறத ஏத்துக்க முடியாது.

நிதிஷ், விஷ்ணு,  (எம்.ஜி.ஆர். கல்லூரி மாணவர்கள், செம்மொழி பூங்கா).

(இடமிருந்து இரண்டாவது) நிதிஷ் மற்றும் விஷ்ணு நண்பர்களுடன்.

லவ்வர் இருக்கவனுக்கு ஜாலி.. இல்லாதவனுக்கு பொறாமை’ண்ணா…. காதல்-ங்கிறது செம்ம ஃபீல்… அது வேற லெவல்…. அதெல்லாம் இப்படி எதிர்க்கிறவனுங்களுக்கு தெரியாது. நான் கோ-எஜுகேட்லதான் படிக்கிறேன். எல்லாம் ஆல்ரெடி கமிடட். எங்களுக்குத்தான் இன்னும் செட் ஆகல. அதுக்குதான் பார்க் – பார்க்கா சுத்திட்டு இருக்கோம். சீக்கிறத்துல செட் ஆகிடும் ப்ரோ.

படிக்க:
ஆதலினால் காதல் செய்வீர் !
லவ் – பியார் – பிரேமா – காதல் | மு.வி.நந்தினி

காதலர்கள் ஒன்னா இருக்கும்போது தொந்தரவு பண்றவங்கள அடிச்சி விரட்டனும். பசங்க கொஞ்சம் பயப்படுறாங்க. அதுக்கு காரணம், கூட இருக்குற பொண்ணுக்கு பாதிப்பாகிடுமோன்னு யோசிக்கிறாங்க. இல்லன்னா இந்த மாதிரி ஆளுங்கள ஓட விட்டுடுவாங்க. எங்ககிட்ட வந்து அந்த மாதிரி பண்ணா அதுதான் நடக்கும். காதல எதிர்க்கிறவன் எல்லாம் சாதி வெறியனாத்தான் இருப்பான். அதனால தான் பி.ஜே.பி. எதிர்க்குது. அந்த கட்சியில இருக்கவன் எல்லாம் சாதி வெறியனுங்கதான்.

மணிகண்டன்.

லவ் ஒன்னும் இந்த காலத்துல வந்ததில்லயே… அந்த காலத்துலயும் லவ் எல்லாம் இருந்துச்சில்ல. காதலிக்கிறதே ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசி அவங்களோட பலம் – பலவீனம் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி விட்டு கொடுத்து பிரச்சன வராம பாத்துக்குவோம். இதுவே வீட்டுல பார்த்து கல்யாணம் பண்ணா அவங்கள புரிஞ்சிக்கவே சில காலம் ஆகும். ரெண்டு பேரோட கேரக்டரும் ஒத்து வராதபோது அது பிரச்சனையாகிடும். பேசி தீர்த்துகிறதுக்குள்ள அது குடும்ப சண்டையா மாறிடும். இந்து மக்கள் கட்சி போன்ற கட்சிங்க, லவ் பன்றத வேணாம்னு சொல்றதெல்லாம் சரியில்லாதது. போலிசுல கம்ப்ளையண்ட் பண்ணா பொண்ணுக்கு பிரச்சனையாகும். வேற வேலை இல்லன்னு இதெல்லாம் பண்ணிகிட்டு இருக்காங்க. அதனால, கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றவங்கள அடிக்கிறத விட்டா வேற என்ன பண்ண முடியும்?


நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்


இதையும் பாருங்க !

நீங்க காதலிக்கிறீங்களா ? காதல் – பார்வைகள் பத்து !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க