பத்திரிகைச் செய்தி

கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்த மாநாட்டை தடை செய்து திருச்சி மாநகர காவல்துறை பிறப்பித்திருந்த தடையை எதிர்த்து நேற்று முன்தினம் (12-02-19) உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தோம். “காவல்துறையின் ஆணை செல்லத்தக்கதல்ல” என்று நேற்று 13-02-19 மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்தது.

மாநாட்டைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியடைந்து விட்டதால் பிரச்சாரத்தை தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது காவல்துறை. கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தால் ஆத்திரமடைந்துள்ள பா.ஜ.க. வினர் ஆங்காங்கே பிரச்சாரத்தை தடுக்க முயற்சித்தனர். எல்லா இடங்களிலும் அவர்களுக்கு மக்களே சரியான முறையில் பதிலடி கொடுத்து அடக்கியிருக்கின்றனர்.

பா.ஜ.க. வினரால் நிறுத்த முடியாத எங்களது பிரச்சாரத்தை தடுக்கும் பொறுப்பை இப்போது போலீசார் ஏற்றிருக்கின்றனர். எல்லா ஊர்களிலும் கடை வீதிகள், குடியிருப்புகளில் மாநாட்டுக்கான துண்டறிக்கை விநியோகிப்பதை காவல்துறை தடுத்து வருகிறது. சுவர் விளம்பரங்களை அழிக்குமாறும் சுவரொட்டிகளை கிழிக்குமாறும் மிரட்டுகிறது.

தஞ்சையில் கைது செய்யப்பட்ட தோழர்கள்.

நேற்று தஞ்சை பேருந்து நிலையத்தில் மாநாட்டு துண்டறிக்கை விநியோகித்துக் கொண்டிருந்த மக்கள் அதிகாரம் தொண்டர்கள் 9 பேர் கைது செய்து காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றனர். என்ன வழக்கு எதற்காக கைது என்பது கைது செய்த காவல்நிலைய அதிகாரிகளுக்கே தெரியவில்லை. பிறகு மேலிடத்திலிருந்து வந்த உத்தவின்படி, அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தார்கள், உருட்டுக்கட்டை கொண்டு தாக்க வந்தார்கள் என்று இந்திய தண்டனைச் சட்டம் 505 1(b), 353, 147, 506(2) ஆகிய பிரிவுகளில் பொய்வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர்.

மேலும், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கோவில்பட்டியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 5 தொண்டர்களை வீடு புகுந்து கொண்டு சென்றிருக்கிறது தூத்துக்குடி காவல்துறை. கைது நடவடிக்கை குறித்து பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தபோதிலும், அவை எதையும் மதிக்காமல் என்ன வழக்கு, எதற்காக கைது என்ற எந்த விவரத்தையும் சொல்லாமல், சட்டவிரோதமான முறையில் ரவுடிகளைப் போல இந்த ஆள்கடத்தலை போலீசு நடத்தியிருக்கிறது.

“காவல்துறையின் மேல்மட்டம் பா.ஜ.க.-வின் உத்தரவுக்கு ஆடுவது எல்லை மீறிப் போய்விட்டது” என்று போலீசார் வெளிப்படையாகவே புலம்பும் அளவுக்கு எடப்பாடி அரசு மோடியின் எடுபிடி அரசாக மாறி இருக்கிறது.

படிக்க:
திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்
திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !

எங்களது பிரச்சாரத்தை போலீசாரே முன்னின்று முடக்க முயல்வதன் மூலம், தனது சட்ட விரோத கைது நடவடிக்கைகளின் மூலமும், இது கார்ப்பரேட் காவி பாசிசத்தின் ஆட்சிதான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரச்சாரப் பணியை போலீசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

இனி நாங்கள் சொல்ல விரும்பும் செய்தி ஒன்றுதான் –  எதிர்த்து நில்!

#கார்ப்பரேட்-காவி பாசிசம் எதிர்த்து நில் #ResistCorporateSaffronFascism

மக்கள் அதிகாரம்
தோழமையுடன்,
வழக்கறிஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
தொடர்புக்கு: 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க