காதல் என்ற ஒற்றை வார்த்தைகளுக்கு எங்கும் எதிலும் பொருள் சொல்லப்படவில்லை. காதல் எங்கோ இருக்கிற பொருளும் அல்ல. ஆனால், அதை பேசாத சங்க இலக்கியமும் இல்லை, சரித்திரமும் இல்லை. அப்படி என்ன காதல் பேசுகிறது. காதல் என்பது இருவர் சம்பத்தப்பட்ட விஷயம் என்பதாலேயே இது மனங்களின் அந்தரங்கம் என்பதாலேயே காதலை நம் முன்னோர்கள் அகம் என்றார்கள். அகம் என்பது உள் என்று பொருள்.

காதலை நுட்பமும் ஆழமும் கூடிய உணர்வாகப் பார்த்தவர்கள் நாம். இதை எழுத்தாளர் பிரபஞ்சன் தமது கட்டுரைகளில் மிக அழகாக எடுத்துக் காட்டியிருப்பார். காதலை மறைபொருள் என்று நினைத்தோம். மலரினும் மெல்லியது காதல் என்று நெறிப்படுத்தினோம். காதலும் காமமும் ஒன்றாக கலந்து பேசுகிறது. ஒரு பெண்ணும் ஆணும் காதலிக்க மரத்தடி நிழலுக்கு சென்று சேர்கிறார்கள். அவள் அந்த மரத்தடி வேண்டாம். அங்கு போகலாம் என்று தூரத்தில் உள்ள மரநிழலைக் காட்டுகிறாள். ஏன் என்று அவன் கேட்கிறான். இவள் பதில் கூறினாள், “ஒரு நாள் விளையாடும் போது அம்மா குரல் கேட்க, அவசரமாய்ப் புன்னைக் காய்களைத் திரட்டிக்கொண்டு வீட்டுக்கு ஓடினேன். அப்போது மண்ணிலே தங்கிப்போன ஒரு புன்னை, அன்றிரவு பெய்த மழையால் முளைத்துவிட்டது. அம்மா எனக்கு ஊட்டும் அன்பு அனைத்தையும் புன்னை செடிக்கும் ஊட்டினேன். புன்னை மரமாயிற்று, நானும் வளர்ந்தேன். நானும் புன்னை மரமும் தங்கைகள் ஆனோம். நான் இந்தப் புன்னையைத் தங்கையாகவே நினைத்து வந்தேன். அந்த மரநிழலில் காதலிக்க முடியுமா? தங்கையின் முன்னாலே எப்படிக் காதலிப்பது ?”

படிக்க:
திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !
செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா ?

இப்படி காதலையும் காதலர்களையும் அந்தரங்கத்தையும் மறை பொருளையும் அப்படி காப்பாற்றியவர்கள் நாம். தமிழில் ஆதி இலக்கியத்தில்  சரிபாதிக்கு மேலாக அக இலக்கியங்கள் என்று பொதுவாக ஓர் உண்மையை முன்வைகிறது. காதலை கசிந்து உருகுகிற நம் மூதாதையரைப் பாருங்கள். சங்க இலக்கியம் தொட்டு நிலவுக்குள் ஊறி, ஊறி காதல் நம்மை தித்திக்க வைக்கிறது. இதில் உணர்வுகளும் உண்மைகளும் மட்டுமே மூத்தது. அதில் காதல் மாத்திரம், இன்னும் இளைமையாகவே இருக்கிறது. இதை குறுந்தொகையில்

“யாயும் யாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளீர்
செம்புல
பெயல் நீர்ப்போல்
அன்புடை
நெஞ்சம்தாம்
கலந்தனவே
கலந்தனவே”

என்ற உணர்வுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நமக்குள் கேட்கிறது. குறுந்தொகை தொடங்கி எல்லா இலக்கியங்களும் பேசிகொண்டே இருக்கின்றன. இப்படி, காதலை மனித மனத்தை வடிவமைப்பதில் மண்ணுக்கும் இயற்கைச் சூழ்நிலைக்கும் உரிய இடத்தை சங்க இலக்கியம் வரையறுத்திருக்கிறது.

காதல் வெறும் உடலுறவு அல்லவே. ஆனால், உடலும் சேர்ந்தே காதல். பெண் மற்றும் ஆணின் விரல்கள் தீண்டுதலில் தீண்டுபவை விரல்கள் அல்ல. மாறாக, ஒரு இனத்தின் நாகரிகம் தன்னைத் தானே ஸ்பரிசித்துக் கொள்கிறது என்பதே பொருள்.

பெண்ணின் உலகம் ஆணை நம்பியும் அவன் அன்பை எதிர்பார்த்தே இருந்தது என்பதையும் கூடிய புரிதலோடேயே அந்தப் பழைய இலக்கியத்தை அணுக வேண்டும். அவை உன்னதமானவை அல்ல; மாறாக, அந்தக் காலத்தை உண்மையாக நாடகியமாகச் சொல்பவை. காதல் உலகத்தில் ஆண் ஒரு முதலாளியைப் போல, போலீஸ்காரனைப் போல நடந்துகொள்ளும் போது காதல் துளிர்ப்பதில்லை. காதல் அந்த மனிதரின் விடுதலை கூர் உணர்வில் தோன்றும் இயற்கை விழைவு. இந்த சமுகம் காதலை புரிந்து கொள்ளும் சமூகமாக இல்லை. இந்திய ஜனத்தொகையில் பெருபான்மையோர் வன்புணர்ச்சியில் பிறந்தவர்கள். ஏனெனில் சகாவான பெண் சம்பந்தப்பட்டு தாயாவதில்லை. இந்த தேசத்தில் காதல் தொழிலில் சமபங்கு ஆற்றாத பெண் காதலியாகக் கருதப் படலாமோ எனில் மட்டாள். மாறாக அவள் சுரண்டப்படும் மற்றுமொரு தொழிலாளியே ஆவாள்.

அடுத்தது அழகு. காதல் அழகோடு இணைத்து பேசப்படுகையில் ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் அழகு என்பதே ஒன்றில்லை. அழகில்லாதது என்பதும் ஒன்று இல்லை. எது இயல்பாக இருக்கிறதோ அது அழகு. எது இயல்புக்கு விரோதமாக இருக்கிறதோ அது ஆபாசம்.

படிக்க:
எது காதல் ? புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2015 வெளியீடு !
மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !

அழகு பற்றி ஒரு ரஷ்ய எழுத்தாளர் அருமையான கதை ஒன்று தந்துள்ளார். போர்க்களத்தில் பீரங்கியால் தாக்கப்பட்ட, ஒரு வீரனின் முகமே சிதைந்து போகிறது. 18 மாத சிகிச்சைக்குப் பிறகு அவன் உயிர் பெறுகிறான். அவன் முகமே அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. குரலும் மாறிவிடுகிறது. அவன் விடுமுறையில் தாய் தந்தையை பார்க்கப் போகிறான்.

கதவைத் தட்டுகிறான். கதவைத் திறந்த அம்மா, யாருப்பா நீ என்கிறாள். அவன் மகனின் நண்பன் என்கிறான் மகன். அம்மா அப்பாவிடம் அவர்களின் மகனின் வீரம் பற்றி அவனே சொல்கிறான். மறுநாள் திரும்பும் முன், அந்த மகனின் சினேகிதியைப் பற்றி விசாரிக்கிறான். இராணுவ முகாமுக்குத் திரும்புகிறான். அவன் தாயிடமிருந்து ஒரு கடிதம் வந்து இருந்தது. அதில் “மகனே, உன் நண்பன் ஒருவன் வந்து நம் வீட்டில் தங்கியிருந்தான். எனக்கென்னவோ வந்தவன் நீ தான் என்று தோன்றுகிறது. உண்மையை எழுது என்று எழுதிருந்தாள். மகன் உண்மையை எழுத தாயும், சினேகிதியும் இராணுவ முகாமிற்கு வருகிறார்கள்.

‘ஏண்டா என்னிடம் பொய் சொன்னே?’

இந்த கோரமுகத்தை என்னாலேயே சகிக்க முடியவில்லையே. உனக்கு எப்படி பிடிக்கும் என்று தான்.’ இப்போது தானடா உனக்காக நான் பெருமைப்படுகிறேன். என் மகன் தாயகத்துக்காகப் போராடிய வீரன் அல்லவா? அதுதானடா என் பெருமை.

“சினேகிதியைப் பார்த்து அவன் கேட்கிறான். இப்போதும் இந்த முகத்தை நீ விரும்புவாயா?” “முட்டாள்’’ என்று அவன் முகத்தில் முத்தமிட்டபடியே சொல்கிறாள் இப்போதுதானடா நான் உன்னைக் காதலிக்கிறேன்.

“புரிதலில்
புரிந்துணர்வு ஒப்பந்தமே
காதல்
அதில்
நெடுந்தூரப் பயணம்
திருமணம்
அதில்
அவன் அவனுமாய்
அவள் அவளுமாய்
ஒன்றாக பயணம் செய்யின்
அதுவே பயணத்தின் இலக்கு”

காதல் எங்கோ இருக்கிற பொருள் அல்ல. அது நம்மிடம் தான் இருக்கிறது. நாம் ஆணோ, பெண்ணோ ! நமக்களிக்கப்பட்ட தொழிலை நேசிப்போமெனில் நாம் வீரர்கள், அறிஞர்கள், அழகர்கள், மொத்தமாக மக்கள். நாம்தான் காதலிக்கப்படுவோம். ஆதலினால் காதல் செய்வீர் !

– சிந்துஜா, சமூக ஆர்வலர்


இதையும் பாருங்க !

நீங்க காதலிக்கிறீங்களா ? காதல் – பார்வைகள் பத்து !