தொழு நோய்க்கான சிகிச்சை பெறுவதற்காக எனது மாமியாரை சென்னையிலிருந்து செங்கலபட்டு திருமணி தொழு நோய் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அவரைப் பார்த்து வருவதற்காக சென்றிருந்தேன். தொழு நோய் என்பது தோலில் உணர்ச்சியற்ற நிலை மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, தொழுநோயின் முழுமையான பாதிப்புக்ளையும் அது ஏற்படுத்தும் ரணத்தையும் கண்முன்னே காட்டியது திருமணி தொழுநோய் மருத்துவமனை.

என் மாமியாரின் படுக்கைக்கு அருகே ஒரு இளம் பெண். இரவு முழுவதும் ஒரு சொட்டுக்கூட தூக்கம் இன்றி கதறுகிறாள். உடம்பெல்லாம் கொப்புளம் போட்டு தூக்க மாத்திரைகள், சிராய்ட் மாத்திரைகள் கொடுத்தும் தூங்காமல் “உடம்பெல்லாம் எரியுதே, எரியுதே” என்று கதறுகிறாள். தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் உடம்பில் உள்ள துணியை எல்லாம் அவிழ்த்து அழுகி்றாள். அவளது கதறல் என் மனதை அறுக்கத் தொடங்கியது.  காரணம் அதே பருவ வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அம்மாவை நினைத்து, அருகில் இருந்த என்னை அழைத்து பெருங்குரல் எடுத்து கதறுகிறாள்.

******

அந்த இளம்பெண்ணின் பெயர் திலகவதி. பத்தொன்பது வயது. பன்னிரண்டாவது படித்தவர். சொந்த ஊர் தர்மபுரி. பெற்றோர்கள் கூலித் தொழிலாளிகள். கடந்த ரெண்டு வருசமா கம்பியூட்டர் கம்பெனியில் வேலை செய்து பெற்றோரின் குடும்ப பாரத்தில் பங்கெடுத்த பெண். தொடர்ந்து காலேஜில் படிக்க முடியாமல் போனாலும், படிப்பு ஆர்வத்தால் தொலைதூரக் கல்வியில் தற்போது டிகிரி படிக்கிறார்.

சிங்கமுக வடிவம்ஒரு வருசத்துக்கு முன்னாடி கம்யூட்டர்ல தொடர்ந்து வேலை செய்ய முடியாம விரல்கள் முடங்குது. தனியார் மருத்துவமனையில் பார்க்கிறார். விரல்கள் முடக்கத்துடன் உடல் முழுவதும் கொப்புளங்கள் கிளம்புகின்றன. ஆரம்பத்தில் அம்மை என்று நினைத்து அதற்கான வைத்தியம் எடுக்கிறார்கள். டாக்டர்களும்  கொப்புளங்களை பல டெஸ்ட் எடுக்குறாங்க …. கொப்பளத்தை கீறி, தசை எடுத்து கல்ச்சர் டெஸ்டுக்கு அனுப்பி, கொப்பளம் இருந்த இடத்துல தையல் போடறாங்க….. இது போல பல டெஸ்டுகள்.  பணம் கரையுது.

படிக்க:
சரஸ்வதி மாமியை மனித மதத்திற்கு மாற்றிய ஹாஜீரா பீவி ! அவசியம் படிக்க !
தொழு நோயாளிகளின் உலகிற்கு வருகிறீர்களா ?

“என் பொண்ணுக்கு என்ன நோய்னு கண்டுபிடிக்கவே இவ்ளோ செலவும், நாளும் ஆகுதே…”என திலகவதியின் அம்மாவுக்கு வேதனையாகுது.  நிலைமை மோசமாகுது. ஒரே பொண்ணு. செல்லமான பொண்ணு.என்ன நோய்ன்னே தெரியாம, பல ஆயிரங்களை செலவு பண்ணியும், குழந்த  படற வேதனையைப் பார்க்க முடியாம, மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுறாங்க.

“டாக்டருங்களாலத்தான் முடியல… கடவுளையாவது நம்புவோம்ன்னு தொடர்ச்சியா பிரேயர், பிரேயர் பிரேயர்னு செபிச்சம்மா…. அதிலயும் தீர்வு இல்லம்மா”என்று மனம் உடைந்து அழுகிறார் திலகவதின் அம்மா… நிலைமை இன்னும் மோசமாக மாறுகிறது. பிறகுதான் ஒரு டாக்டர் செங்கல்பட்டு திருமணி தொழு நோய் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். இங்க வந்ததும் தொழுநோய்க்கான டெஸ்ட் நடந்தது. திலகவதிக்கு, “ஈஎன்எல் ரியாக்சன்”எனும்  தொழுநோய் இருப்பது உறுதி ஆனது.

குடும்பமே நிலைகுலைஞ்சி போகுது. தாங்க முடியாத துயரம்.  பயத்தை வெளியில் காட்டினால் மகள் உடைந்து விடுவாளே…! என்ன செய்வது? ஏற்கனவே  பக்கத்திலிருக்கும் நோயாளிகளைப் பார்த்தே பயந்திருக்கும் மகளுக்கு ஆறுதல் சொல்லுவதா? உனக்கும் இதே நோய்தான் என்று சொல்லுவதா? குழம்பித் தவிக்கிறது குடும்பம்.

தொழு நோயால் பாதிக்கப்பட்ட கை – மாதிரி படம் (படம் கூர் மழுங்கச் செய்யப்பட்டுள்ளது)

இவ்வளவு நாள், வலியின் கொடுமை எந்த ஆஸ்பத்திரிலயும் குறையல… இங்க வந்து பரவாயில்லையா இருக்கு…… என்பதால் திலகவதி  ஆஸ்பிட்டல்லில் தங்க ஒத்துக்கிட்டாங்க. பக்கத்தில்  இருக்கும் தொழு நோயாளிகளும், அங்கு வேலை பார்ப்பவர்களும் அவரிடம் அன்போடு,  நம்பிக்கையையும் கொடுத்ததால் சரியான இடத்திலதான் இருக்கோம்னு உணர்ந்தாங்க…

சிகிச்சைச் செய்யும் டாக்டர்கள், அவருக்கு தொடர்ச்சியாக சிராய்ட் மருந்தை  இன்ஜக்சன் ஆகவும் டெகட்ரான் மருந்தும் போடப்போட உடலில் கிளம்பும் கொப்பளங்கள் வெடிக்காமல், உள்ளுக்குள் அழுந்தி விடுகிறது. ஓரளவு வலியிலிருந்து மீள்கிறார் திலகவதி. ஆனால் கைகள் திடீரென மறத்துப் போகின்றன. அதற்கும் பிசியோவில் சிறு, சிறு எக்சசைஸ் செய்கிறார்.

மருந்தின் பக்க விளைவுகள் மேலும் வேதனையை தருகிறது. உடல் எடை கூடுகிறது. சில நாட்கள் தங்கி சிகிச்சைப் பெற்ற பிறகு திலகவதிக்கு மாதத்திற்கான மாத்திரையுடன் ஸ்டிராய்ட் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். திலகவதியும், பெற்றோர்களும் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் வீடு திரும்புகின்றனர்.

வீட்டில் தினமும் ஸ்டிராய்ட் மாத்திரையை சாப்பிட்டும் பலனின்றி நோயின் தீவிரம் பலமடங்கு அதிகமாகிறது. இடது கைவிரல்களும், மடங்கி உணர்ச்சியற்று,  மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு அழுதுக்கொண்டே வருகிறார்கள்.

படிக்க:
♦ தரமற்ற இடுப்பெலும்பு மாற்று உபகரணங்கள் : மூடி மறைத்த ஜான்சன் & ஜான்சன்
♦ THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!

உடல் முழுவதும் கொப்பளம். நோய், ஸ்டிராய்ட் மருந்துக்கு அடங்க மறுக்கிறது. தொடர்ச்சியாக காய்ச்சல், வாந்தி அதில் தூக்கமின்மையும் சேர்கிறது. வேதனையில் துடிக்கிறார் திலகவதி. இரவு முழுவதும் தூங்காமல் உடம்பெல்லாம், எரியுது, எரியுது என்று  பிதற்றுகிறார். உணவையும் சாப்பிட மறுக்கிறார். அதைக் காண சகிக்க முடியாமல் அவரது தாய் தேவி கதறுகிறார்.

எவ்வளவு நோயாக இருந்தாலும் வயசு பெண்கள்  தன் உடம்பை மருத்துவரிடம் காண்பிக்க தயங்குவார்கள். தன்னிலை மறந்து தன் முழு உடலையும் பெண்கள் காண்பிக்கும் ஓரே இடம் பிரசவ அறை. ஆனால் திலகவதி உடல் மீது எந்த துணியும் வேண்டாம். உடம்பெல்லாம் எரியுது, வலிக்குது என்று சிறு துணியை போர்த்தினாலும் அழுகிறார். திலகவதியை  பார்த்து அனைவருக்கும் வேதனை.

“திலகவதி தொடர்ந்து இரண்டு வாரங்களாக இதே நிலையில் தன்னிலை மறந்து கிடக்கிறார் . தற்போது, மஞ்சள் காமாலையும் அவளுக்கு சேர்ந்து விட்டது.அதற்கான சோதனையும் அவளுக்கு இங்கு செய்ய வசதியில்லை .வெளியில் அனுப்பிய ரிப்போர்ட், நோயை உறுதிப்படுத்தியது” என்கிறார் அங்கு பல ஆண்டுகள் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளி ஒருவர்.

கடைசியில் எழுந்திருக்கவும் முடியாமல்,  “தயவு செய்து என்னை விட்டுடுங்க, எவ்வளவு நோவு தாங்கறது, என்னால நோவு தாங்க முடியல… அம்மா வா, வீட்டுக்கு போய்டலாம்.நான் செத்துப் போனாலும் பரவாயில்லை” என்று கூறி அதிகாலை 3 மணிக்கு எழுந்து, நடக்க முடியாமல் தடுமாறும் திலகவதியைப் பார்த்து, வார்டு தொழு நோயாளிகள் கண்கள் கலங்கி  ஆறுதல் சொல்கின்றனர். அதை ஏற்கும் நிலையிலோ, காதில் வாங்கும் நிலையிலோ திலகவதி இல்லை.

மீண்டும் அதிகாலை  நாலு மணிக்கு ரொம்ப துடிக்கிறாங்க. மருத்துவமனை ஊழியர்கள் கேலமைன் லோஷன் தடவினா ஜில்லுனு இருக்கும்னு தடவுறாங்க…. தடவும் போது தன்னிலை மறந்து ஒட்டு துணியில்லாம தன் உடல் முழுவதும் தடவச் சொல்லி அழுகிறார் திலகவதி. நடுவில் டுயுட்டி டாக்டருக்கு போன் செய்யப்படுகிறது. எந்த ரெஸ்பான்சும் இல்லை… விடியற்காலை நாலு மணிக்கு செய்த போனுக்கு 8 மணிக்கு விளக்கம் கேட்கிறார் டாக்டர்.

”இந்த டாக்டர்கள் எல்லாம் எப்போதுமே இப்படித்தானா?”, அருகாமையில் இருந்த நோயாளி ஒருவரிடம் எரிச்சலுற்றுக் கேட்டேன்.

“இதுவரை,  மத்திய அரசின் செங்கற்பட்டு திருமணி ஆஸ்பத்திரி தொழு நோயாளிகளின் தாய்வீடாக இருந்து. அவர்களின் உடல்நிலை மட்டுமல்ல வாழ்நிலையையே மாற்றியமைத்த  பெருமைக்குரியது. நோயாளிகளுக்கு நோய் தீர்த்து, வேலை கொடுத்து, வீடு கொடுத்து, அவர்களின் வாரிசுகளை வளர்த்தெடுக்கவும் உதவி செய்தது. பல ஆண்டுகள் இங்கு தங்கி சிகிச்சை எடுத்து வரும் நான் பல அனுபவங்களை நேரில் பார்த்திருக்கிறேன். 700 ஏக்கரில் பரந்து விரிந்து இருக்கும் தொழுநோய் மீட்பு கருணை இல்லம் இது. காரணம், அப்போ இருந்த அர்பணிப்புள்ள டாக்டர்கள், ஊழியர்களின் வேலைப்பாங்கு”என்றார் அந்த நோயாளி.

படிக்க :
♦ உச்சநீதிமன்ற நீதிபதிகளையே மோடியால் விலைக்கு வாங்க முடியும் | எடியூரப்பா வாக்குமூலம் !
♦ இது போராட்டக்காலம் ! புரட்சி வெற்றி கொள்ளும் !! ம.க.இ.க பாடல்

”அப்போன்னா எப்போ? இப்ப நடக்குறதெல்லாம் பாக்கும் போது, நீங்க சொல்றது எதுவும் சமீபத்துல நடந்த மாதிரி தெரியல..” என்றேன். அந்த நெடுநாள் நோயாளி விரிவாகக் கூறத் தொடங்கினார்…

*****

பல சம்பவங்கள் உதாரணத்துக்கு சொல்லலாம். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த பச்சையம்மாள் தொழுநோயில் சாகும் நிலையில் வந்தார்.  நோயைக் கண்டறிந்த மருத்துவர் டாக்டர்  வாசு அவரின் நோயை ஆய்வுக்குட்படுத்தி, பல கட்டத்தில் சோதித்தறிந்து, பின் விளைவுகள் இல்லாமல்  தொழு நோயை எப்படிப் போக்கலாம் என்று மெனக்கெட்டார்.

மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து வீடு திரும்பி போகும்வரை பச்சையம்மாளின் அசைவுகளை கண்காணிப்பார். ஆதரவு கூறுவார். அவரை சிரிக்க வைக்க கிண்டல் பண்ணுவார். உடல் முழுவதும் போட்ட கொப்புளங்களை வெடிக்க வைத்து தொடர்ச்சியாக கவனித்து ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ற மருந்துகளை பல அளவுகளில் கொடுப்பார்.

உடல் முழுவதும் கொப்புளமாகி வெடித்து சீழ் வடிந்து காணவே கொடுமையாக மாறும். பிறகு, மாயம்போல், உடல் மாறும்.  அவரின் மருத்துவ கவனிப்பாலும், மருத்துவ ஊழியர்களின் அரவணைப்பாலும், கண்ணெதிரே படிப்படியாக தேறினார் பச்சையம்மாள்.வீடு சென்ற அவர் கம்பெனி வேலைக்கு சென்று தன் காலில் நிற்கிறார். 45 வயதாகும் பச்சையம்மா, தன்னை காப்பாற்றிய டாக்டரை அப்பா என்றே இன்றும் நினைவு கூறுவார்.

இப்படி பல நோயாளிகள். திக்கற்றவர்களாக வந்தவர்களுக்கு நோய் தீர்த்த நீண்ட வரலாறு திருமணி தொழு நோய் ஆஸ்பத்திரிக்கு உண்டு.

ஆனால், இப்போது திலகவதி போலவே இன்னொரு நோயாளி ராஜா…. 16 வயது.

படிக்க :
♦ எழுத்தாளர் அருந்ததி ராய் பங்கேற்கும் “எதிர்த்து நில் !” – மக்கள் அதிகாரம் | திருச்சி மாநாடு | பிப் 23
♦ நீங்க நல்லவரா ? கெட்டவரா ? – உளவியல் ஆய்வுகளை முன்வைத்து ஒரு பார்வை !

அவனுக்கு ஒரு வருடத்துக்கு முன்பு நோய் கண்டறியப்பட்டது.  அதிகமான ஸ்டிராய்ட் கொடுக்கப்பட்டது.   வலியால் துடித்தான். ஸ்டிராய்ட்டுக்கு கட்டுபடவில்லை என்பதால், டிஎல்டி கேப்சூல்களை தர ஆரம்பித்தார்கள். இந்த மருந்தைப் கொடுப்பதற்கு முன்பு நோயாளிகளை பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். இது  விதி.

இனி எதிலும் குணப்படுத்த முடியாது என்ற நிலையில் நோயாளியின் பெற்றோர்களின் ஒப்புதலுடனும், பிள்ளை பெற்றுக் கொள்ள கூடாது என்ற கண்டிசனுடனும்தான் மருந்து போடுவார்கள். வயதானவர்களுக்கே இதுதான் நிலைமை.

ஆனால், இப்போது வந்த டாக்டர்கள் பதினாறு வயதான ராஜாவுக்கு அதிக வீரியமுள்ள டிஎல்டியை இனிப்பு மிட்டாய் மாதிரி வாரிக் கொடுக்கிறார்கள். மாத்திரை போட்டதும்  வலி பறந்து போகும். போதை பொருள் சாப்பிட்ட எஃபெக்ட் கிடைக்கும். தூக்கம், தூக்கம். எதையும் மறக்கும் தூக்கம். இதை அனுபவித்து விட்டால், நோயைத் தாங்கும் தன்மை உடம்புக்கு இல்லாது போகும். டிஎல்டி மட்டும் இருந்தால் போதும் என்ற நிலைக்கு நோயாளிகள் வந்துவிடுவார்கள். இப்போது 16 வயது ராஜாவை ஒரு வருடத்தில் 30 வயது முதியவர் ஆக மாற்றி விட்டார்கள். எந்த வலியையும் தாங்க முடியாமல்  மாத்திரையை நிறுத்தினால், அதிர்ச்சியாகி விடுகிறான். எதாவது காரணம் சொல்லி மாத்திரையை வாங்குகிறான்.  தற்போது சர்க்கரை நோய்க்கும் ஆளாகி அதற்கும் மாத்திரை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இதுதான் இன்று திருமணி ஆஸ்பத்திரியின் நிலை.

நோயாளிகளின்  நாட்பட்ட புண், புழுவைத்து எலும்புகள் அழுகி நொறுங்க ஆரம்பிக்கும்.   மீதி காலையாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் கால் மூட்டுக்கு கீழே காலை வெட்டும் அறுவை சிகிச்சை செய்வார்கள். வெகு நாட்களாக ஆறாத புண்ணுக்கு பல சிகிச்சைகள் செய்வார்கள்.

இன்று செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் அனைத்தும் நோயாளிகளை காக்க நடத்தப்படுவது இல்லை. ஆபரேஷன் தியேட்டருக்கு கணக்கு காட்டவே நடத்தப்படுகிறது. தியேட்டரில் ஆபரேசன் லிஸ்ட் பெரியதா இல்லை என்றால், கேட்கும் நிதி பல கோடி கிடைக்காது என்கிறார்கள்.

இன்று மருத்துவமனைகளும் மருத்துவர்களும் நோயாளிக்கானதாக இல்லை

கைகால் முடமான நோயாளி,  புட்டத்தால தேய்ச்சி நகர்ந்துப் போகும் நோயாளி,  கண்ணு தெரியாம சுவரை தடவிக்கொண்டு நகரும் நோயாளி, இப்படிப்பட்டவர்களை தனி கவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும். ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ ஒதுக்கும் பணத்தில் கமிஷன் பார்க்கவும் தங்கள் அலுவலக அறையை நட்சத்திர விடுதியாக மாற்றவும் செலவழிக்கிறது. ஏசி அறை, டைல்ஸ் சுவர், நடக்கும் வழிக்கு குரோட்டன்ஸ் தோட்டம் என்று வாழ்கிறது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை அனைத்தையும் திரும்பவும் இடித்து ஆஸ்பத்திரியை தனக்கான அரண்மனையாக மாற்றிக் கொள்கிறது.

மருத்துவ தேர்வுக்கான நீட்டால என்ன பிரச்சனை? தனியார்ல படிச்ச டாக்டரால என்ன பிரச்சனை? என்று கேட்பவர்களுக்கு ஏழை நோயாளிகளின் துயரம் தெரிவதில்லை. இத்தேர்வுகள் மூலம் வரும்  டாக்டர்களின் வேலையைப் பார்க்கும்போது ரொம்பவும் பயமா இருக்கு. ஏழ்மையில் உழலும் நோயாளிகளை அவர்கள் தீண்டதாகதவர்களாக நடத்துகிறார்கள். இதனுடன் நோயாளிக்கு தொழுநோயும் சேர்ந்தால் அவர்கள் கதி என்ன ஆவது?

அதிகப்படியான தொழுநோய் தொற்றுடன் வரும் நோயாளிகளை உடனே  பார்க்க  டாக்டர்கள் விரும்புவதில்லை. அதை கட்டு கட்டும் ஊழியர்கள் பாதி சரி செய்து, நோய் முக்கால்வாசி ஆறியப்பிறகு, தியேட்டருக்கு அந்த நோயாளிகளை அனுப்பி நாடகமாடுகிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் தொழு நோயாளிகளுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாரும் வருவது இல்லை. பெரும்பாலும் கைவிடப்பட்டவர்கள். அநாதைகள், பிச்சை எடுப்பவர்கள். எனவே அவர்கள் இறந்தாலும் அவர்களை யாரும் உரிமை கோருவது இல்லை. இந்த தைரியத்தில்தான், மேட்டுக்குடி வகுப்பைச் சேர்ந்த இந்த டாக்டர்கள் அவர்கள் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்.

வாரத்துக்கொருமுறை வார்ட் ரவுண்ட்ஸ் வரும் டாக்டர்கள் நோயாளிகள் தங்கள் வலிகளை சொல்ல ஆரம்பிக்கும் முன்னமே, தங்களுக்குள் ஆங்கிலத்தில், “இப்ப அழுது நடிக்கப் போகுது பாரு” என்று  கேலி பேசுகிறார்கள்.  தோல் மட்டுமே உணர்ச்சியற்ற இந்த நோயாளிகளை சுய உணர்ச்சியற்றவர்களாக, தன்மானம் அற்றவர்களாக நினைக்கிறது இந்த புது மருத்துவ கும்பல்.

ஆனால், பணியில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பல அலவன்சுகளையும் அரசு சலுகையையும் இவர்கள் தேடித்தேடி அலைகிறார்கள். அதை உடனடியாக அடைவதில் கண்ணும், கருத்துமாக இருக்கிறார்கள். வருடாந்திர சுற்றுலா, எல்டிசி  எங்கே போகலாம், ஒவ்வொரு வருசத்துக்கும் புதுப் புது அலவன்சுகளை வாங்குவது எப்படி?

மாதத்திற்கு லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டு, மேலும் உயர் கல்வி கற்பதற்கு எப்படி அனுமதி பெறுவது? என்று இதற்காக தங்களுக்கு ஒதுக்கிய  ரெஸ்ட் ரூமுக்குள் அதிவேக இண்டர்நெட்டுடன் கணினி, ஏசி என்று மொத்தத்தில் தொழுநோயாளிகளின் உடம்பில் உயிர்வாழும் ஒட்டுண்ணி புழுவாக திரிகிறார்கள்.

நாங்களும் நோய் தீர்க்கிறோம் என்று நோயாளிகளின்  வேதனையை தற்காலிகமாக குறைத்து பின் விளைவுகளைப் பற்றி கவலையின்றி மருத்துவம் பார்ப்பது, “என்னுடைய டூட்டியில் எந்த பிரச்சனையும் வரவில்லை” என்ற எண்ணத்தில் செயல்படுவது, மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கித் தருவது ஆகியவை தவிர வேறு ஒன்றும் செய்யாமல்  சினிமாவில் வரும்  டாக்டர்களாக வலம் வருகிறார்கள்.

ஆனால். சிறிது காலத்திற்கு முன்பு நடந்தது வேறு. ரவி என்று ஒரு  டாக்டர்.  நோயாளிகளின் நோயை போக்குவதில் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கொடுத்து பேசுவதிலும் ஸ்பெஷலிஸ்ட்.  எங்களைப் போன்ற நோயாளிகளே  எங்களுக்கு மருந்து, மாத்திரை வேண்டாம், ரவி டாக்டரை  வரச்சொல்லுங்கள் என்று வேண்டுவோம். இப்படிப்பட்டவர்களை இனி நாம் எங்கு காண்பது!”

ஏக்கத்தோடு சொல்லி முடித்தார் அவர்.

சமீபத்தில் இறந்த 5 ரூபாய் டாக்டர் பத்தி தமிழ்நாட்டு மக்கள் தொடங்கி, மோடி வரைக்கும் பேசினார்கள். இனி அது போன்ற மருத்துவர்களை பார்க்க நாம் வானுலகுதான்  செல்ல வேண்டும். வேறு வழியில்லை.

காமாட்சி

(உண்மைச் சம்பவம் ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க