ருத்துவக் கருவிகள் மற்றும் மருந்து தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற கார்ப்பரேட் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. செயற்கை இடுப்பெலும்புக் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் முற்றிலும் தரக்குறைவான மற்றும் பயன்படுத்தத் தகுதியில்லாத ஆபத்தான கருவிகளைத் தயாரித்து, சந்தையில் விற்று காசு பார்த்து விட்டது. தங்களின் தயாரிப்புக்கள் தரமற்றவை என்பது நன்கு தெரிந்தும் அதை கமுக்கமாக மூடி மறைத்து சந்தையில் விற்பனை செய்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இப்போது கையும் களவுமாகச் சிக்கி, சில இந்திய ஊடகங்களில் அம்பலப்பட்டு பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தால் தயாரிக்கபட்ட உபகரணம் ஏற்படுத்தும் பாதிப்பு

இது குறித்து விசாரிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு நிபுணர் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு கடந்த 12 மாதங்களுக்கும் மேலாக விசாரணையில் ஈடுபட்டு தயாரித்த அறிக்கையில் தரக்குறைவான இடுப்பெலும்பு மாற்றுக் கருவிகள் குறித்த தகவல்கள் தவிர கூடுதலான வேறு பல தகவல்களும் இணைக்கப்பட்டு, அந்த அறிக்கை 23.08.2018 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திலும், லைவ் மிண்ட் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் ’செயற்கை இடுப்பெலும்புக் கருவிகள்’ பொருத்தப்பட்ட 4,700 நோயாளிகளில் 3,600 பேரைப் பற்றிய தகவல்களைப் பெற முடியவில்லை என்றும், மேலும் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்ட 4 பேர் இதுவரை மரணமடைந்துள்ளதும் பதிவாகியுள்ளது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தரக்குறைவான இடுப்பெலும்புக் கருவிகளைப் பொருத்தியதன் காரணமாக, பெரும்பான்மையினருக்கு மீள் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. அதிலும் சிலருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட 5 ஆண்டிற்குள்ளாகவே மீள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 254 பேருக்கு இடுப்பெலும்பு மீள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

படிக்க:
இந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா ?
பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்!

கடந்த 2013-ம் ஆண்டு, அமெரிக்காவில் இதே இடுப்பெலும்பு மாற்றுக் கருவிகளால் பாதிப்படைந்த 8,000 நோயாளிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக (2.47 பில்லியன் அமெரிக்க டாலர்) கொடுப்பதற்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ஒப்புக் கொண்டது. தரக்குறைவான மருத்துவக் கருவிகளுக்கான இழப்பீடு வழங்குவதில் வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகப்படியானது என லைவ்மின்ட் ஊடகம் கூறுகிறது.

ஆனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விரும்பவில்லை என்று நிபுணர் குழுவின் அறிக்கை கூறுகிறது. மேலும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திடமிருந்து இதுவரை எந்த உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை என்றும் செலவு செய்த பணத்தைத் திரும்ப கொடுப்பதையே இழப்பீடு என்பதாகக் காட்ட முனைகிறது அந்நிறுவனம் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் ரூ. 20 இலட்சம் இழப்பீடு கொடுப்பதோடன்றி 2025-ம் ஆண்டு வரைக்குமான மருத்துவச் செலவுக்கான சலுகைகளையும் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எதுவும் நடந்தபாடில்லை.

‘ASR XL’ ஏஸ்டேபுலர் இடுப்பு மாற்று உபகரணம்

ஜான்சன் & ஜான்சனின் தரக்குறைவான ‘ASR XL’ ஏஸ்டேபுலர் இடுப்பு அமைப்பு (ASR XL Acetabular Hip System) மற்றும் ‘ASR’ இடுப்பு மீள்பொருத்துதல் அமைப்பு (ASR Hip Resurfacing System) ஆகிய இந்த இரண்டையும் தயாரித்தது அதன் துணை நிறுவனமான ‘டெப்யூ ஆர்த்தோபீடிக்ஸ்’ (DePuy Orthopaedics Inc). அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து துறையால் 2005-ம் ஆண்டில் இந்தக் கருவிகள் அங்கீகரிக்கப்பட்டன. உலக அளவில் 93,000 நோயாளிகளுக்கு இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கூறுகிறது.

இந்தக் கருவிகள் பொருத்தப்பட்ட பல்வேறு நோயாளிகளுக்கு சுகவீனம் ஏற்பட்டு மற்றுமொரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதையொட்டி இந்தக் கருவிகளின் பக்கவிளைவுகள்  குறித்து அளிக்கப்பட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு இக்கருவிகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

படிக்க:
நெஸ்லே : ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு !
கார்ப்பரேட் உணவு நிறுவனங்களின் அமெரிக்கத் தரம் எப்படி ?

இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உண்மைகளை மூடி மறைப்பதிலேயே குறியாக இருக்கிறது எனவும் இந்தக் கருவிகளை உபயோகிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அந்நிறுவனம் கொடுத்துள்ள விவரங்களை, நடைமுறையில் ஏற்பட்ட பாதிப்புக்களுடன் ஒப்பிடுகையில் அவை பெரிதும் முரண்படுகின்றன என்றும் குறிப்பிடுகிறது.

உயிருக்கே எமனாய் மாறிய இடுப்பெலும்பு மாற்றுக் கருவிகள்

தரமற்ற இந்த செயற்கை இடுப்பெலும்புக் கருவிகள் ஏற்படுத்திய பாதிப்புக்களால் நூற்றுக்கணக்கான மக்கள் மீண்டுமொருமுறை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இது மட்டுமன்றி இந்தக் கருவிகளில் உபயோகப்படுத்தப்பட்ட கோபால்ட் மற்றும் குரோமியம் அமிலங்கள் எலும்புகளிலும், இரத்தத்திலும் கசிந்து நச்சுத்தன்மையை ஏற்படுத்தி அதில் சிலருக்கு உறுப்புச் சிதைவுகள் ஏற்பட்டுள்ளது. மற்றும் சிலர் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்ததால் உயிரிழந்தனர்.

இப்படியாக இடுப்பெலும்பு மாற்றுக்கருவிகள் உயிரைப் பறித்தது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு உளவியல் ரீதியிலான பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளது. அதாவது மாற்றுக் கருவிகளைப் பொருத்திக் கொள்வதன் மூலம் நோயிலிருந்து, வலியிலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் இந்த அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் அந்தக் கருவிகளே தங்களுக்கு எமனாய் மாறும்போது அந்த மனிதனின் சமூக வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் கேள்விக்குரியதாகிவிடுகிறது. பாதிக்கப்பட்டவரின் மன உறுதியை சுக்கு நூறாக்கி விடுகிறது.  நடையற்று செயல்படாமல் முடங்கிய நிலையில், அத்தனையையும் சகித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் வலி மற்றும் வேதனையுடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

முகப்பூச்சு பவுடரால் ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏவா எசெவர்ரியா

அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் முகப்பூச்சு பவுடரைப் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக புகார் எழுப்பிய 22 பெண்களுக்கு, 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அந்நிறுவனத்திற்கு கடந்த 2018, ஜூலை மாதம் உத்தரவிடப்பட்டது.  மேலும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தன்னுடைய முகப்பூச்சு பவுடரில் கல்நாரை (asbestos) 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தியதை மூடி மறைத்ததாக அப்பெண்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சினையில் 9,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் இழப்பீட்டை வழங்கத் தயாராக இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், இந்தியாவில் அதனைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட முயற்சிக்கிறது. ஆண்டை அமெரிக்கா தனது குடிமக்களின் நலனையும் உரிமையையும் சிறிதேனும் பாதுகாக்கிறது. ஆனால் அடிமை இந்தியாவோ தனது எஜமானனின் இலாபத்தை உறுதி செய்ய குடிமக்களின் நலனையும் உரிமைகளையும் காவுகொடுக்கிறது. அது அணு விபத்து கடப்பாடு மசோதாவாக இருக்கட்டும் அல்லது மரபணு மாற்றப் பயிர்களாகட்டும் அல்லது இந்திய மக்களை மருந்துக் கம்பெனிகளின் சோதனைச் சாலை எலிகளாக்குவதாகட்டும் இந்தியர்களின் உயிர் கார்ப்பரேட்டுகளின் முடிக்குச் சமானமாக மதிக்கப்பட்டு வந்ததே வரலாறு.

நன்றி : தி வயர்
தமிழாக்கம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க