Tuesday, August 9, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் நெஸ்லே : ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு !

நெஸ்லே : ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு !

-

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மீதான தடையை ஒட்டி எழுந்த பரபரப்பு அதே வேகத்தில் வடிந்து விட்டது. உடல் நலன், உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு என்றெல்லாம் கவலைப்பட்ட ஊடகங்கள், இப்போது சுதி இறங்கி ’நெஸ்லே போன்ற ஒரு பாரம்பரிய பெருமை மிக்க நிறுவனம் இப்படிச் செய்யலாமா?’ என்று வருத்தப்படுகின்றன. நுகர்வோர் மீதான கவலையை கார்ப்பரேட் மீதான பக்தி வென்று விட்டது.

மேகி பிரச்சினையின் போது நெஸ்லே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) தில்லிக்கு வந்திறங்கினார். அதன் பிறகு ஊடகங்கள் கவலையை மாற்றிய சக்தி எது என்பதை ‘துப்பறிந்து’ கண்டுபிடிக்க வேண்டியதில்லை.

ஒருபுறம்ம், நெஸ்லேவின் வணிக சின்னம் (Brand image) மீதான கருணைக் கட்டுரைகள்; மறுபுறம் நெஸ்லே மேகியில் உள்ள அதிகமான காரீயத்திற்கு அதில் பயன்படும் வெங்காயம் விளையும் மண்னின் தன்மையே என்பதை விளக்கும் அறிவியல் கட்டுரைகள். நீ மட்டும் யோக்கியமா போன்ற கிரிமினல்களின் மொழியில், மேகியில் மட்டுமில்லை, பல பொருட்களிலும் கலப்படம் உள்ளதை விவரிக்கும் தந்திரமான கட்டுரைகள், ‘அந்தக் காலம் மாதிரி வருமா’ என்று குற்றவாளியைத் தேடாமல் சுகத்தை அசைபோடும் கட்டுரைகள், இவைதான் மக்களின் சிந்தனை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.

நெஸ்லேவை ஆதரிக்கும் வாதங்களின் சாரம் என்ன? மேகியில் காரீயமும் மோனோசோடியம் க்ளூட்டமைட்டும் இருந்தது என்னவோ தப்பு தான், ஆனா பாருங்க நம்ம பாரம்பரிய பெருமை மிக்க நெஸ்லே பங்குச் சந்தையில் சரிந்து கிடக்கிறது; இது இந்தியா தொழில்களுக்கு நண்பன் என்ற பிம்பத்தை சிதைக்க கூடியது, எல்லாவற்றுக்கும் மேல் ஒரு வணிக பிம்பத்தைக் கட்டமைப்பது சாதாரமாணதில்லை – என்பதே இந்த வாதங்களின் உட்கிடை.

அப்பேற்பட்ட நெஸ்லே நிறுவனத்தின் பாரம்பரிய பெருமைதான் என்ன?

”குழந்தைக் கொலையாளி” நெஸ்லே
”குழந்தைக் கொலையாளி” நெஸ்லே

நெஸ்லே நிறுவனத்தின் வரலாறு 1830-ம் ஆண்டு துவங்குகிறது. டானியேல் ஆல்பர் நெஸ்லே என்ற ஜெர்மானியர் அந்த வருடம் தான் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு குடியேறி தனது ஆராய்ச்சியைத் துவங்குகிறார். தாய்ப்பாலுக்கான ஒரு மாற்று பானம் குறித்ததே அந்த ஆராய்ச்சி. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் 1866-ம் ஆண்டு நெஸ்லே பால் பவுடரைக் கண்டு பிடிக்கிறார். இப்படித்தான் 1867-ம் ஆண்டு நெஸ்லே நிறுவனம் துவங்கப்படுகிறது.

அடுத்து வந்த நூறாண்டுகளில் நெஸ்லே நிறுவன பால் பவுடருக்குப் போட்டியாக டூமிகோ மற்றும் மீட் ஜோன்சன் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் உருவாகியிருந்தாலும் பால் பவுடர் வர்த்தகத்தில் சுமார் 40 சதவீதம் நெஸ்லே வசம் தான் இருந்தது. இரண்டு உலகப் போர்களுக்குப் பின் பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரிக்கவே, பால் பவுடருக்கான தேவை அதிகரித்திருந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், காலனிய நாடுகள் விடுதலையடைந்து வந்தன. குறிப்பாக இந்த வகை மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் அப்போது தான் மெல்லத் தவழத் துவங்கியிருந்தது. பல ஆசிய, ஆப்ரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகளின் சுகாதாரக் குறியீடு மிகவும் பின்தங்கியிருந்தது. இந்த சந்தர்பத்தை நெஸ்லே மிகத் திறமையாக பயன்படுத்திக் கொண்டது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இந்நாடுகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதற்கு பதில் புட்டிப்பால் புகட்டுவதே நல்லது என்கிற பிரச்சாரத்தை நெஸ்லே முன்னெடுத்தது. பல நாட்டு அரசாங்கங்களின் சுகாதார அமைச்சகங்களை கைக்குள் போட்டுக் கொண்டு அரசு செலவிலேயே இந்த பிரச்சாரம் செய்யப்பட்டது.

அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் துவக்கத்திலும் புட்டிப்பால் புகட்டுவதால் ஆண்டொன்றுக்கு சுமார் பதினைந்து லட்சம் குழந்தைகள் மரணிக்கிறார்கள் என்று ஐ.நாவின் உலக சுகாதார நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை வெளியிட்டது. அச்சமயத்தில் பால்பவுடர் சந்தையில் முன்னணி உற்பத்தியாளராக நெஸ்லே இருந்தது தற்செயலானதல்ல. எழுபதுகளின் மத்தியில் இருந்து நெஸ்லே நிறுவனத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் வேகமெடுத்தன.

“நெஸ்லேவைப் புறக்கணிப்போம்”
“நெஸ்லேவைப் புறக்கணிப்போம்”

இன்றைக்கு ”நல்ல உணவு; நல்ல வாழ்க்கை” (Good Food, Good life) என்பதைத் தனது வர்த்தக முழக்கமாக கொண்டிருக்கும் நெஸ்லேவை அன்றைக்கு மக்கள் எப்படி அழைத்தார்கள் தெரியுமா? ”குழந்தைக் கொலையாளி” (Baby Killer)!

தனது லாபவெறிக்காக குழந்தைகளின் உயிர்களோடு விளையாடுவது நெஸ்லே புதிதாக வரித்துக் கொண்ட வணிக கொள்கையல்ல – அது தான் அதன் வரலாறே!

1977-ம் ஆண்டு சர்வதேச அளவில் நெஸ்லேவுக்கு எதிரான மக்களின் அதிருப்தி உச்சமடைந்த பல்வேறு நாடுகளில் “நெஸ்லேவைப் புறக்கணிப்போம்” என்ற பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டது. இன்றளவும் பல்வேறு நாடுகளில் இந்த பிரச்சார இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அடிப்படை மனித விழுமியங்களும் முதலளித்துவ சந்தை நலனும் கார்ப்பரேட் லாப வெறியும் எந்தக் காலத்திலும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ள நெஸ்லே ஒரு எடுப்பான உதாரணம்.

அதை நேரடியாகவே நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் பீட்டர் ப்ரெபெக் நமக்கு காட்டியருளுகிறார்.

பீட்டர் ப்ரெபெக்கின் தண்ணீர் குறித்த தத்துவத்தை அவரது வார்த்தைகளிலேயே கேட்க

அவரது வாதப்படி தண்ணீர் ஒரு முக்கியமான கச்சாப் பொருள். அதனால் மற்ற பண்டங்களுக்கு இருப்பது போல் இதற்கும் ஒரு சந்தை மதிப்பு இருக்க வேண்டும். எனவே, ஒரு மனிதனுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை மனித உரிமைகளில் சேராது. ஆக தண்ணீர் என்பது மற்ற உணவுப் பண்டங்களைப் போல் விற்பனைச் சரக்காக மாற்றப்பட வேண்டும்.

பீட்டர் ப்ரெபெக்கின் ’தண்ணீர் தத்துவம்’ என்ற சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை – வருடாந்திரம் சுமார் 10 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை (சுமார் 10.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) சம்பாதித்துக் கொடுக்கும் நெஸ்லேவின் தண்ணீர் வர்த்தகப் பிரிவின் லாபம் சமீபத்திய ஆண்டுகளில் லேசாக ஆட்டம் கண்டுள்ளதே அதற்குக் காரணம்.

”புட்டியில் அடைபட்ட வாழ்க்கை” (Bottled life) என்ற தலைப்பில் நெஸ்லே நிறுவனம் குறித்து சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆவணப் பட இயக்குனர் அர்ஸ் ஷென்னெல் மற்றும் பத்திரிகையாளர் ரெஸ் கெரிகர் ஆகியோர் இணைந்து ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளனர்.

பீட்டர் ப்ரெபெக்
பீட்டர் ப்ரெபெக்கின் ’தண்ணீர் தத்துவம்’ என்ற சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை

இருவரும் நெஸ்லேவின் இரத்தக் கவிச்சி வீசும் பாதையில் ஆப்ரிக்க கண்டம் துவங்கி ஆசியாவின் பாகிஸ்தான் வரை பயணித்துள்ளனர். சென்ற இடங்களில் எல்லாம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் நெஸ்லேவின் தண்ணீர் திருட்டைச் சொல்லிக் குமுறியுள்ளனர். பாகிஸ்தானின் பாத்தி தில்வான் கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நெஸ்லேவின் தண்ணீர் தொழிற்சாலை அந்த கிராமத்தின் நிலத்தடி நீரை 100 அடியில் இருந்து 400 அடி ஆழத்திற்கு விரட்டியுள்ளது.

பெரியர், விட்டல், ப்யூர் லைஃப் உள்ளிட்ட சுமார் 60 வணிகப் பெயர்களில் நெஸ்லே தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் வளர்ந்த நாடுகளில் உள்ள தமது கிளைகளின் லாபம் குறைவதைப் பற்றி கவலை தெரிவித்த நெஸ்லே நிறுவனத்தின் தண்ணீர் வர்த்தகப் பிரிவின் தலைவர் “ஐரோப்பாவைச் சேர்ந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் குழாய்த் தண்ணீருக்கு மாறி வருவது எங்களுக்குக் கவலையளிக்கிறது. ஒருவேளை பொருளாதாராம் மீண்டாலும், குழாய்த் தண்ணீருக்குப் பழகிய மக்கள் மீண்டும் பாட்டில் தண்ணீருக்கு மாறுவது சந்தேகமே” என்று வருந்தியுள்ளார்.

ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இருந்து கிடைத்து வந்த லாபம் குறையத் துவங்கியதை அடுத்து நெஸ்லே ஆப்ரிக்க, ஆசிய மற்றும் தென்னமெரிக்க நாடுகளைக் குறிவைத்துக் களமிறங்கியுள்ளது.

மலேரியா, எய்ட்ஸ் நோய், போர்கள் மற்றும் போக்குவரத்து விபத்துகளில் நேரும் குழந்தை மரணங்களின் எண்ணிக்கையை விட நாளொன்றுக்கு அதிகமான குழந்தைகள் சுகாதாரமற்ற குடிநீரைக் குடிப்பதாலேயே மரணிக்கிறார்கள். இந்நிலையில் நெஸ்லே போன்றதொரு நிறுவனம் ’சுகாதார மற்ற குடிநீரால் ஏற்படும் இறப்புகளுக்குத் தீர்வு சுத்தமான குடிநீரும் சுத்தமான வாழ்க்கையும் (Pure life) தான் விடை என்று சொன்னால் அதன் பொருள் என்ன?” என்று கேட்கும் ஐ.நா சபையின் முன்னாள் அலோசகர் மௌடீ பார்லோ, அதற்கான விடையை அளிக்கிறார்.

“உங்கள் ஊற்றுக்களின் நீரை வறண்டு போகச் செய்து உங்கள் தண்ணீரை உங்களுக்கே விற்போம்” என்பதே நெஸ்லே போன்ற நிறுவனங்களின் வாதம் என்று விளக்கும் பார்லோ, இது பொறுப்பற்றத்தனம் மட்டுமல்ல, எதார்த்தத்தில் ஒரு கொடுமையான கிரிமினல் அடக்குமுறை என்கிறார்.

மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்கும் கடமையைச் செய்வதைத் தடுக்கும் நெஸ்லே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், குடிநீர் வழங்கல் மற்றும் சுத்தமான குடிநீர் உற்பத்தியில் ஈடுபட்டு கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. காசிருந்தால் சுத்தமான குடிநீரை வாங்கிக் குடித்து பிழைத்துக் கிடக்கலாம் – காசில்லாதவர்கள் சுகாதாரமற்ற விஷத்தைக் குடித்து செத்துப் போக வேண்டும் என்பதே நெஸ்லே வழங்கும் Good food, good life என்ற மந்திரத்தின் பொருள்.

நெஸ்லே சாக்லேட்
கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டையின் முன் மனித சமூகம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இயற்கையும் அதன் பல்லுயிர்ச் சூழலின் எதிர்காலமும் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டு வருகிறது.

கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டையின் முன் மனித சமூகம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இயற்கையும் அதன் பல்லுயிர்ச் சூழலின் எதிர்காலமும் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டு வருகிறது. அடிப்படை மனித அறம், விழுமியங்கள் என்பதற்கெல்லாம் என்ன தான் பொருள்? எளிமையான இந்தக் கேள்வியை நீங்கள் அடுத்த முறை மொறுமொறுப்பான கிட் கேட் சாக்லேட்டைக் கடிக்கும் போது கேட்டுப் பாருங்கள் – உங்கள் கடைவாய்ப் பற்களின் இடையில் நொறுங்கும் கிட்கேட் சாக்லேட்டின் ”க்ரஞ்சி” சப்தங்களுக்கிடையே மெல்லியதாய்க் கேட்கும் உராங்குட்டான் குரங்குகளின் மரண ஓலங்கள் ஒருவேளை பதில் சொல்லலாம்.

நெஸ்லே கிட்கேட் சாக்லேட்டின் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் பாம் மரத்தின் எண்ணெய் மலேசியாவில் இருந்து தருவிக்கப்படுகிறது. இதற்காக பல லட்சம் ஏக்கர் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு பாம் மரங்கள் பயிரிடப்படுகின்றன. மழைக்காடுகளின் அழிவு அந்தக் காடுகளையே நம்பி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த உராங்குட்டான் குரங்குகளை அழிவின் விளிம்புக்குத் தள்ளியிருகின்றது.

உராங்குட்டான் குரங்குகள் அழிவதைத் தடுக்கவும், கிட்கேட் சாக்லேட்டுக்கு எதிராகவும் க்ரீன்பீஸ் வெளியிட்ட விளம்பரப்படம் யூட்யூப்பில் வெளியிடப்பட்டு நெஸ்லே நிறுவனத்தின் வற்புறுத்தலுக்குப் பின் நீக்கப்பட்டது. தற்போது அந்த விளம்பரம் விமியோ தளத்தில் காணக்கிடைக்கிறது

நெஸ்லே நிறுவனத்தின் லாபவெறியின் வரலாறு மிக நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டது. குழந்தைகளுக்கு தாய்ப்பாலை மறுத்தது, ஆப்ரிக்க கிராமங்களின் கிணறுகளில் விஷத்தைக் கலந்தது தொடங்கி இன்று தனது கிளை நிறுவனமான லோரியல் நிறுவனத்தின் முகப்பூச்சு கிரீம்களில் இன்னும் அனுமதிக்கப்படாத நானோ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது வரை மரபீணி மாற்றப் பயிர்கள், விதைகள் என்று அதற்கு பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.

முதலாளித்துவ கார்ப்பரேட்டுகள் என்ற பெரும் சாகரத்தின் ஒரு சிறு துளி தான் நெஸ்லே என்பதை மறந்து விடக்கூடாது. நெஸ்லேவுக்கு ஒப்பான – அதையும் விஞ்சும் பகாசுர கார்ப்பரேட்டுகளில் விற்கும் பொருட்களோடு தான் நமது ஒவ்வொரு நாளும் விடிகிறது; பின் அடைகிறது. ”பல்லுக்குள்ளே ஊடுருவிச் செல்லும்” பற்பசையில் இருக்கும் நானோ துகள்களோடும், கல்லீரலுக்குள் ஊடுருவிச் செல்லும் பூச்சி மருந்தைக் கொண்ட கோலா பானங்களோடும் தான் நமது ஒவ்வொரு நாளும் நகர்கின்றது.

இதனால்தான் கார்ப்பரேட்டுகளின் தண்ணீர் தனியார்மய நடவடிக்கைக்கு எதிராக “தண்ணீர் மக்களின் அடிப்படை உரிமை” என்பதை நிலைநாட்டிய கொலம்பியா, தென்னாப்ரிக்க மக்களின் கலகங்கள் மற்ற நாடுகளிலும் பரவுகின்றன. முதலாளித்துவ கார்ப்பரேட்டுகள் என்பவை பேரழிவை ஏற்படுத்தும் வெட்டுக்கிளி கூட்டங்கள் என்பதை உலக மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். அதை நாம் வால் வீதியிலும், லண்டன், கிரேக்கம் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தெருக்களில் கண்டோம்.

இந்த நச்சுக் கிருமிகளைத் தடை செய்யக் கோரி அரசாங்கங்களிடம் கெஞ்சுவதில் பொருளில்லை – அரசாங்கங்களும் முதலாளித்துவ கார்ப்பரேட்டுகளும் ஈருடல் ஓருயிர் என்பதை எப்போதும் மறைத்துக் கொண்டதேயில்லை. அதைத் தான் கோக் மற்றும் பெப்சியில் கலந்திருந்த பூச்சிமருந்தும், காட்பரீஸ் சாக்லேட்டில் நெளிந்த புழுக்களும் அவற்றின் மேல் அரசாங்கம் எடுத்த “நடவடிக்கைகளும்” நமக்கு உணர்த்துகின்றன.

மேகியில் கலந்திருக்கும் மோனோ சோடியம் குளூட்டமைட் மற்றும் காரீயம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கிய நிலையில் அவர்கள் மீண்டும் வருவார்கள் – அவர்களை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும். எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதை நாமக்கு கொலம்பியர்களும் தென்னாப்ரிக்கர்களும் ஏற்கனவே கற்பித்துள்ளனர்.

– தமிழரசன்

  1. சரியான நேரத்திதில் வெளியிடப்பட்டுள்ள கொள்ளை கும்பலின் சரித்திரம்
    நன்றி தமிழரசன்

  2. தாங்கள் தந்துள்ள விமியோ தளத்தில் காடழித்து எண்ணெய் வழங்கும் நிறுவனங்களிலிருந்து எண்ணெய் வாங்காது விடுவதற்கான திட்டத்தைத் தயாரிக்க நெஸ்லே நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவலும் உள்ளது. எனினும் அந்தத் தகவல் 5 வருடங்களிற்கு முற்பட்டது.
    அவர்களது பொருள்களைப் பகிஷ்கரிப்பதே வழி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க