தசார்பற்ற ஜனதா தளம் காங்கிரசுடன் இணைந்து கர்நாடகத்தில் அமைத்திருக்கும் ஆட்சியை எப்பாடு பட்டாவது கலைத்துவிட வேண்டும் என பாஜக அனைத்து வழிகளிலும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஓராண்டு நெருங்கும் நிலையிலும் எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் மூலம் இழுப்பதை எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக நிறுத்தவில்லை.

பதவி கிடைக்காத அதிருப்தி காங்கிரஸ்-மஜத கட்சி எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் பேசி இழுப்பதாக கடந்த ஒரு மாதமாக கர்நாடக அரசியல் தேசிய அளவில் கேவலப்படுகிறது.  தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளும் முனைப்பில் இருக்கிற முதலமைச்சர் குமாரசாமி, எடியூரப்பா பேரத்தில் ஈடுபட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளார். இதில் பாஜக ஜனநாயகத்தை எப்படி வெறிநாயாக கடித்து குதறுகிறது என்பதை கேட்க முடிகிறது.

படிக்க:
♦ பிட்டுப் படம்னா அது பி.ஜே.பிதான்! ‘யோக்கியன்னா’ அது எடியூரப்பாதான்!!
♦ பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!

இந்த ஆடியோவில் வெளிவந்திருக்கும் முக்கியமான ஆதாரம், மோடி-அமித் ஷா கும்பல் நீதியை விலைக்கு வாங்குவதையே பிழைப்பாகக் கொண்டவர்கள் என்பதே. குஜராத் படுகொலை வழக்குகளை விசாரித்த நீதிபதிகளிலிருந்து, தற்போது ’மூடி திரையிட்ட’ ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் வரை மோடி-அமித் ஷா வளைத்த கதை ஊரறிந்த ரகசியமாக இருந்தபோதும், ஒரு பாஜக சங்கியின் வாயிலிருந்து பெருமிதமாக வெளிப்பட்டிருப்பதால் இது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

“நாங்கள் 12 எம்.எல்.ஏக்களுக்கும் பத்து கோடி கொடுத்து, அமைச்சர் பதவியும் தருகிறோம். அதை என் மகன் தருவான்.  சபாநாயகருக்கும் ரூ. 50 கோடி கொடுத்து அவரையும் ‘புக்’ செய்வோம். மகாராஷ்டிரா முதலமைச்சர் ஃபட்னாவிஸ் இதைப் பார்த்துக்கொள்வார். நீதிமன்றம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. பாஜக தலைவர் அமித் ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியும் உச்சநீதிமன்றத்தை ‘மேனேஜ்’ செய்துகொள்வார்கள்”. எப்படியாவது பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாமல் தடுத்துவிட்டால் போதும். மற்றதையெல்லாம் மேலே இருக்கும் அமித் ஷாவும் மோடியும் பார்த்துக்கொள்வார்கள். அனைத்து அமைப்புகளையும் வளைத்துவிட்ட அவர்களால் எதுவும் முடியும்” என ம.ஜ.த கட்சி எம்.எல்.ஏ-வின் மகனிடம் அலைபேசியில் பேரம் பேசுகிறார் எடியூரப்பா.

மேலும், ‘ஆபரேஷன் கமலா’ அமித் ஷாவின் பரிபூரண ஆசியுடன் நடத்தப்படுகிறது என்றும், கட்சி தாவல் தடை சட்டத்தை தாம் பார்த்துக்கொள்வதாகவும், ஆளுநரும் இதற்கு உடந்தைதான் என்றும் அடுத்தடுத்து தாக்குகிறார்.

இந்த ஆடியோ வெளியானபோது, “இது என்னுடைய குரல் இல்லை; அப்படி நிரூபித்தால் அரசியலை விட்டே விலகிப் போகிறேன்” என சத்தியம் செய்த எடியூரப்பா, மூன்றே நாளில், “இது என்குரல்தான்” என ஒப்புக்கொண்டார்.

அதாவது, எம்.எல்.ஏக்களுக்கு 12 கோடி கொடுப்பேன் என சொன்னது உண்மை; அமித்ஷா – மோடி நீதிபதிகளை விலைக்கு வாங்குவார்கள் என சொன்னது உண்மை; ஆளுநரையும் சபாநாயகரையும் அவர்கள் சரிகட்டுவார்கள் என சொன்னதும் உண்மை.

பெரும்பான்மை கிடைக்காதபோதும் எடியூரப்பா அவசர அவசரமாக பதவி ஏற்க முயற்சித்து, உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னும் பதவி வெறிபிடித்து அலைகிறார் எடியூரப்பா. கார்ப்பரேட் கொள்ளையர்களுக்காக நடத்தப்படும் இந்த ஆட்சியில், ’ஜனநாயகத்தின்’ தூண்களாக சொல்லப்படும் நீதித்துறை முதல் ஊடகங்கள் வரை அனைத்தையும்  வளைத்து தமது கைகளில் வைத்துக் கொண்டு ஜனநாயகத்தை எள்ளி நகையாடுகிறது ஆர்.எஸ்.எஸ் – மோடி – அமித்ஷா கும்பல். ஜனநாயகத்தின் இழிநிலை அப்பட்டமாக அம்பலமான பிறகும் வாய்திறக்க மறுக்கிறன சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தின் தூண்கள் !

செய்தி ஆதாரம் : நியூஸ் சென்ட்ரல் 24/7
அனிதா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க