மார்க்ஸ் பிறந்தார் – 21
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

9. ஒரு மேதையும் அவருடைய சூழலும் – 1

  • உங்களுடைய முக்கியமான குணம்?
    கொள்கை உறுதி.
  • உங்களுக்கு மிகவும் பிடித்தமான மூதுரை?
    Nihil humani a me alienum puto. (மனிதனுக்குரிய அனைத்தும் எனக்கும் உரியன.) 
    கார்ல் மார்க்சின் ஒப்புதல்களிலிருந்து(1)

மார்க்சின் உலகக் கண்ணோட்டத்தின் முக்கியமான கூறுகள் உருவாக்கமடைந்த பொழுதே அவருடைய ஆளுமையும் உருவாகிவிட்டது. அந்த ஆளுமையில் விஞ்ஞானியும் புரட்சிக்காரரும் ஒன்றாக இணைந்திருந்தனர்.

மார்க்ஸ் விஞ்ஞானத் துறையில் ஒரு மாபெரும் புரட்சிக்காரர்; அவர் புரட்சிக்களத்தில் முதல் விஞ்ஞானி. அவர் தத்துவஞானத்திலும் சமூகத்தைப் பற்றிய கருத்துக்களிலும் மெய்யாகவே ஒரு காப்பேர்னிக்கப் புரட்சியை ஏற்படுத்தியவர், புரட்சிகரமான தத்துவமும் செய்முறையும் கறாரான விஞ்ஞானப் பாதைகளில் சுழலும்படி “நிர்ப்பந்தித்தவர்”.

அவர் ஒரு முன்மாதிரியான மனிதர். கடந்த காலத்தின் கலாச்சார பாரம்பரியத்தினுள் தனக்குச் சமகாலத்தவர்கள் எல்லோரையும் காட்டிலும் மிகவும் ஆழமாகக் குதித்து அதை விமர்சன ரீதியில் திருத்தியமைத்து தனக்கு முன்பிருந்த மாபெரும் தத்துவஞானிகள் எவரையும் காட்டிலும் காலத்தை விஞ்சி நின்றவர்.

மார்க்ஸ் பல்துறையிலும் வளர்ச்சி அடைந்த மனிதர் என்றபடியால் அவர் படைப்புத் துறையிலும் பல்துறை வளத்தை வெளிப்படுத்தினார். மனிதனுடைய நடவடிக்கையில் அவருடைய சிந்தனையின் தேடல் தொட்டுச் செல்லாத ஒரு துறையைக் கண்டுபிடிப்பது கடினம். மார்க்சைப் பற்றி தத்துவஞானி மற்றும் பொருளியலாளர், சமூகவியலாளர் மற்றும் வரலாற்றாசிரியர், புரட்சிக்காரர் மற்றும் ஸ்தாபன அமைப்பாளர், கட்டுரையாளர் மற்றும் மொழி இயல் நிபுணர், இலக்கிய மேதை மற்றும் பத்திரிகையாளர் என்று நாம் கூறுவது நியாயமானதே.

மூலதனத்தை எழுதி முடித்த பிறகு, தர்க்கவியலும் தத்துவஞானத்தின் வரலாற்றைப் பற்றியும் பல்ஸாக்கைப் பற்றிய புத்தகங்களும் கிராக்கஸ் சகோதரர்களைப் பற்றி ஒரு நாடகமும் எழுதுவதற்கு மார்க்ஸ் உத்தேசித்திருந்தார் என்பதை நாம் அறிவோம். அவர் கணிதத்திலும் தொழில் நுட்பவியல் வரலாற்றுத் துறையிலும் சில தற்சிந்தனையான ஆராய்ச்சிகளை விட்டுச் சென்றார்; பெளதிகம், இரசாயனம், உயிரியல், பரிணாமத் தத்துவம் ஆகியவற்றின் சாதனைகளில் அவர் அக்கறை கொண்டிருந்தார்.

மார்க்ஸ் தன்னுடைய கலைக்களஞ்சிய அறிவையும் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்திருந்த திறமைகளையும் அவருக்கு உரிய முனைப்புடன் பொருளாதாரப் பிரச்சினைகளின் தீர்வுக்கு அர்ப்பணித்தார். அதுவே அவருடைய விஞ்ஞான ஆராய்ச்சியின் முக்கியமான குறிக்கோளாக இருந்தது. தன்னுடைய துறையில் மட்டுமே நிபுணத்துவத்தைக் கொண்ட ஒரு அறிஞர் மூலதனத்தைப் போன்ற ஒரு நூலை ஒருபோதும் எழுதியிருக்க முடியாது.

அவருடைய வெளித்தோற்றம் கம்பீரமானது; மார்க்சை மிகக் குறைந்த காலமே அறிந்தவர்கள், மார்க்சியத்துடன் சம்பந்தமில்லாதவர்கள் கூட இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ருஷ்யாவைச் சேர்ந்த மிதவாத எழுத்தாளரான பா. ஆன்னென்கவ் 1846 மார்ச்சில் பிரஸ்ஸல்ஸ் நகரத்தில் மார்க்சைச் சந்தித்தார். அவர் சுறுசுறுப்பும் உறுதியான சித்தமும் அழிக்க முடியாத நம்பிக்கையும் உடையவர், அவர் தோற்றம் மிகவும் கம்பீரமானது என்று எழுதினார். அடர்த்தியான கறுநிறத் தலைமுடியுள்ள பெருந்தலை, முடி உள்ள கரங்கள், பாதி திறந்து விடப்பட்ட கோட்டு அணிந்து அவர் எப்படித் தோன்றினாலும், என்ன செய்தாலும் அவருடைய தோற்றமே மற்றவர்களை மரியாதை செய்யத் தூண்டும் என்று ஆன்னென்கவ் எழுதினார்.

அவருடைய நடையுடை பாவனைகள் தனித் தன்மையுடன், துணிவு மற்றும் சுய நம்பிக்கையுடன் இருந்தன. மற்றவர்களுடன் பழகும் பொழுது சுதந்திர உணர்ச்சி ஓங்கியிருக்கும்; பொதுவாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பழக்கங்களிலிருந்து அவை வேறுபட்டிருக்கும். அவருடைய கரகரப்பான மணிக்குரல் மக்களையும் நிகழ்வுகளையும் பற்றி அவருடைய முடிவுகளின் இறுதியான தன்மைக்கு முற்றிலும் பொருந்தியிருக்கும்.

இருபத்தெட்டு வயது நிரம்பிய மார்க்ஸ் மனிதர்களின் மனங்களை ஆட்சி புரிவதற்கும் அவர்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் தன்னுடைய திறமையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர், “போலித் தீர்க்கதரிசிகள்”, “மனிதகுல இரட்சகர்கள்” அனைவருடைய அறிவீனத்தைப் பற்றி அருவருப்படைந்தவர் என்று ஆன்னென்கவ் எழுதினார்.

ஆன்னென்கவ் கம்யூனிஸ்ட் நிருபர்கள் கமிட்டியின் கூட்டத்தை வர்ணிக்கிறார். இக்கூட்டத்தின் போது மார்க்சுக்கும் கற்பனாவாத கம்யூனிசத்தின் (அதன் கரடுமுரடான, சமத்துவவாத வடிவத்தில்) தத்துவாசிரியர்களில் ஒருவரான வில்ஹெல்ம் வைத்லிங்குக்கும் மோதல் ஏற்பட்டது. வைத்லிங் தன்னுடைய குழப்பமான, ஆனால் உணர்ச்சிகரமான சொற்பொழிவுகளின் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் ஒரளவு ஆதரவைப் பெற்று ஜெர்மனியில் பரபரப்பை உண்டாக்கியிருந்தார்.

உங்களுடைய நடவடிக்கைகளில் எத்தகைய தத்துவக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்கு உத்தேசிக்கிறீர்கள் என்று மார்க்ஸ் வைத்லிங்கிடம் கூர்மையாகக் கேட்டார். இக்கேள்விக்குப் பதிலளிக்கின்ற முறையில், புதிய பொருளாதாரத் தத்துவங்களை உருவாக்குவது என்னுடைய நோக்கம் அல்ல, தொழிலாளர்கள் தங்களுடைய நிலைமையின் பயங்கரங்களைப் புரிந்து கொள்ளச் செய்வதும் ஜனநாயக கம்யூனிஸ்ட் கம்யூன்களில் அவர்கள் சேர்ந்து வாழும்படி போதிப்பதும் என்னுடைய நோக்கம் என்று முரண்பாடான முறையில் விளக்கமளிக்கத் தொடங்கினார் வைத்லிங்.

மார்க்ஸ் கோபத்துடன் முகத்தைச் சுளித்துக் கொண்டு திடீரென்று வைத்லிங்கின் பேச்சில் குறுக்கிட்டார். மக்களின் நடவடிக்கையை அவசியமாக்குகின்ற உறுதியான, தேர்ந்தாராயப்பட்ட காரணங்களைச் சொல்லாமல் அவர்களைத் தூண்டுவது வெறும் ஏமாற்று வித்தையே என்றார். கறாரான விஞ்ஞானக் கருத்துக்கள் அல்லது ஆக்கபூர்வமான போதனைகள் இல்லாமல் தொழிலாளியை அறைகூவுவது நம்பிக்கை மோசடிக்குச் சமம். அது ஒரு பக்கத்தில் தீர்க்கதரிசி இருப்பதாகவும் மறுபக்கத்தில் வாயைப் பிளந்து கொண்டிருக்கின்ற கழுதைகள் இருப்பதாகவும் அனுமானிக்கிறது என்றார்.

வைத்லிங்கின் வெளிறிய கன்னங்களில் இரத்தம் பாய்ந்தது. அவர் தன்னுடைய சேவைகளைப் பற்றி ஆர்ப்பாட்டமாகப் பேசத் தொடங்கினார்; வேதனைப்படுகின்ற நலிந்த மக்களின் உலகத்திலிருந்து வெகு தூரத்துக்கு அப்பால் இருந்து கொண்டு கொள்கைகளை ஆராய்ச்சி செய்வதையும் விமர்சிப்பதையும் காட்டிலும் என்னுடைய அடக்கமான சேவை பொது இலட்சியத்துக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொண்டது என்றார்.

மார்க்ஸ் இச்சொற்களைக் கேட்டு ஆத்திரத்துடன் மேசையின் மேல் ஓங்கிக் குத்தினார், மேசை மீது வைக்கப்பட்டிருந்த விளக்கு ஆடியது. “அறியாமை எவருக்கும் ஒருபோதும் உதவாது”(2) என்று குதித்தெழுந்து கூறினார். மார்க்சைச் சந்தித்த பலரும் அவர் மக்களையும் கொள்கைகளையும் பற்றி நயமற்ற விதத்தில் “தீர்ப்பு” வழங்குவதைப் பற்றி அதிர்ச்சி அடைந்தனர். மார்க்ஸ் பொறுமை இல்லாதவர், “சர்வாதிகாரமானவர்”, அவருடைய கருத்துக்களை ஆதரிக்காதவர்களிடம் “மெஃபிஸ்டோபிலிய” இகழ்ச்சியுடன் நடந்து கொள்பவர், இதரவை என்று அற்பவாத எழுத்தாளர்களும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்களும் அடிக்கடி அவரைக் கண்டனம் செய்திருக்கிறார்கள்.

மார்க்ஸ் தன்னுடைய எதிரிகளிடம் நடத்திய வாதங்களின் போது அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டார் என்பது உண்மையே. பிறவி அரசியல்வாதியும் புரட்சிக்காரருமான மார்க்ஸ் சமூக விஞ்ஞானத் துறையில் கருத்து வேறுபாடுகளை வெவ்வேறு சமூக-வர்க்க நிலைகளின் சண்டை என்று கருதினார்; கல்வித்துறையில் போலித்தனமான மரியாதையுடன் நடைபெறுகின்ற வாதங்களில் தோல்வியடைகின்ற தரப்பினர் முக மலர்ச்சியுடன் தோற்றமளிக்கின்ற கலையைப் பரிபூரணமாக்குகின்றனர்; அத்தகைய விவாதமாக அவர் நினைக்கவில்லை.

கொள்கைப் பிரச்சினைகள் ஏற்படும் பொழுது பல வருடங்கள் தன்னிடம் நெருங்கிப் பழகிய தோழர்களிடம் கூட மார்க்ஸ் தயவு காட்டமாட்டார். எல்லாவற்றிலும் ஒரே அளவுகோலைப் பின்பற்றிய மார்க்ஸ் மற்றவர்களுடைய நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கு “மனித” நிலைக்கு ஒன்று, விஞ்ஞான, “தொழில்” நிலைக்கு ஒன்று என்று இரண்டு அளவுகோல்களைப் பயன்படுத்தவில்லை. ஒரு நபர் விஞ்ஞானத் தத்துவத்தில் அல்லது புரட்சிகர நடைமுறையில் “பிறழ்ந்து விட்டார்” என்றால் அவர் தார்மிகத் துறையிலும் தவறு செய்து விட்டதாகவே மார்க்ஸ் கருதினார், எனவே அவர் சிந்தனையாளர் அல்லது புரட்சிக்காரர் என்ற முறையில் மட்டுமல்லாமல் தனிநபர் என்ற முறையிலும் மார்க்சின் மரியாதையை இழந்தார். இதன் மறுதலையும் உண்டு ஒருவர் தனிப்பட்ட உறவுகளில் சிறிதளவு நேர்மையில்லாமல் நடந்து கொண்டாரென்ரறால் விஞ்ஞான மற்றும் அரசியல் துறைகளில் அவரை நம்பாதிருப்பதற்கு அது போதிய காரணம் என்று மார்க்ஸ் கருதினார்.

“பிளாட்டோவை நான் மதிக்கிறேன்; ஆனால் உண்மையை இன்னும் அதிகமாக மதிக்கிறேன்” என்ற மூதுரை நண்பர்களுடன் மார்க்ஸ் வைத்திருந்த உறவில் முழு விளக்கமடைந்தது. உண்மைக்குத் துரோகம் செய்த எவரையும் அவர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். விஞ்ஞானப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுதல் முடிவில் நட்பை முறித்துக் கொள்வதற்கும் பிறகு உக்கிரமான விவாதங்களுக்கும் இட்டுச் செல்லும்.

பு. பெளவர், அ. ருட்டென்பெர்க், அ. ரூகே, பி. புரூதோன், மி. பக்கூனின், மோ. ஹேஸ், வி. வைத்லிங், கி. ஹேர்வெக் ஆகியோரை இதற்கு உதாரணங்களாகக் காட்டலாம்.

இளைஞராகிய மார்க்ஸ் ஆன்மிக வளர்ச்சியில் வேகமாக முன்னேறியபடியால் நேற்றைய தினத்தில் அவருடன் ஒத்த கருத்துக் கொண்டிருந்த இளம் நண்பர்கள் பின்னே விடப்பட்டனர். ஆனால் விவாதங்களின் போது மார்க்சின் ஆத்திரத்தைத் தூண்டியது இதுவல்ல; அவர் தன்னுடைய அறிவையும் திறமைகளையும் நிச்சயமாக விளம்பரம் செய்பவரல்ல. விஷயம் தெரியாமல் ஏற்படுகின்ற அறிவீனத்தை அவர் எப்பொழுதுமே புரிந்து கொண்டு மன்னிக்கக் கூடியவர்; ஆனால் மற்றவர்களுக்குப் போதிப்பதற்கும் வழிகாட்டுவதற்கும் உரிமை கொண்டாடிய “மேதாவிகளின்” அறிவீனத்தை அவர் மன்னிக்க மாட்டார். இச்சந்தர்ப்பத்தில் அவர்களிடம் அறியாமை தனிப்பட்ட பலவீனமாக இருக்கவில்லை, அது ஒரு சமூக ஆபத்தாக மாறிவிட்டது. மார்க்ஸ் அதை வன்மையாகக் கண்டனம் செய்வார்.

நபர்களை மதிப்பிடுவதிலும் மார்க்ஸ் அநேகமாகத் தவறு செய்ததில்லை. இந்த நபர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வகிக்கின்ற சமூக நிலையை அவர் தெளிவாகப் பார்த்தது மட்டுமல்லாமல், அது எதிர்காலத்தில் அவரை எங்கே இட்டுச் செல்லும் என்பதையும் அவர் முன்னறியக் கூடியவர். அவருடைய தாக்குதல்கள் முதலில் நியாயமில்லாதவை என்று தோன்றும், ஆனால் முடிவில் மார்க்ஸ் கூறியபடியே சரியாக நடக்கும்.

புரூனோ பெளவர்

“சிந்தனையில்” பயங்கரவாதியான புரூனோ பெளவர் பிற்காலத்தில் பிற்போக்குவாத Kreuz-Zeitung இல் (“சிலுவைப் பத்திரிகை”) வேலை செய்யத் தொடங்கினார். அரசியல் தியாகியாக வாழ்க்கையைத் தொடங்கிய அடோல்ப் ருட் டென்பெர்க் Preussischer Staats-Anzeiger இன் (“பிரஷ்ய அரசுச் செய்தித்தாள்”) ஆசிரியராகின்ற அளவுக்குத் தரமிழந்தார். 1840க்களின் ஆரம்பத்தில் தன்னுடைய பிரசுரங்களில் அரசியல் போராட்டத்துக்கு அறைகூவிய அர்னோல்டு ரூகே தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பிஸ்மார்க்கின் ஆதரவாளரானார்.

வைத்லிங்கையும் புரூதோனேயும் பொறுத்தமட்டில், அவர்கள் ஒரே விதமான புகழையும் ஒரே விதமான முடிவையும் அடையும்படி விதிக்கப்பட்டிருந்தனர் என்று மேரிங் எழுதியிருப்பது முற்றிலும் சரியானதே. அவர்களுடைய பணிகளின் தொடக்கத்தில் வேறு எவரையும் காட்டிலும் மார்க்ஸ்தான் அவர்களை அதிகமாகப் பாராட்டியவர். தொழிலாளி வர்க்கத்திடம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சுய உணர்வுக்கு அவர்கள் உதாரணம் என்று மார்க்ஸ் கருதினார். ஆனால் ஜெர்மானியக் கைவினைஞரின் குறுகிய வரையறைகளுக்கு அப்பால் வைத்லிங்கனால் முன்னேற முடியவில்லை. அது போல பிரெஞ்சுக் குட்டி முதலாளியின் குறுகிய வரையறைகளுக்கு அப்பால் புரூதோனால் முன்னேற முடியவில்லை. அவர்கள் வரலாற்று வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள், மார்க்சிடமிருந்து பிரிந்தார்கள். அவர்கள் ஆரம்பித்த காரியத்தை மார்க்ஸ் மேதாவிலாசத்துடன் பூர்த்தி செய்தார்.

மார்க்ஸ் வைத்லிங்குடன் முறித்துக் கொண்ட பிறகும்-தன்னுடைய பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருந்தபோதிலும் – தொடர்ந்து அவருக்குப் பண உதவி செய்து கொண்டிருந்தார். “நீங்கள் அவரிடம் பகையுணர்ச்சி கொண்டிருந்தபோதிலும் உங்கள் பணப்பையில் ஏதாவது இருக்கின்ற வரை அதை மூடுகின்ற அளவுக்குப் போக மாட்டீர்கள் என்பது உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது தான்”(3) என்று ஹேஸ் இதனைப் பற்றி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார்.

தன்னுடைய உள்ளுணர்ச்சி தன்னை ஏமாற்றிவிட்டதாக மார்க்ஸ் ஒரு சமயத்தில் நினைத்தார். பக்கூனின் மீது அவருக்கு நம்பிக்கையில்லா விட்டாலும் பக்கூனினுடைய புரட்சிகர நடவடிக்கை அவருடைய சந்தேகங்களை நிரூபிக்கவில்லை,. Neue Rheinische Zeitung இன் (“புதிய ரைன் பத்திரிகை”) ஆசிரியராக இருந்த பொழுது பக்கூனினுக்கு எதிர்ப்பான நடவடிக்கைகளைச் செய்ததைப் பற்றி மார்க்ஸ் உடனடியாக வருந்தினார். அவர் பக்கூனினுடன் சமாதானம் செய்து கொண்டார். “அவருக்காதரவாகப் பேசினார்.”(4)

சில வருடங்கள் கழிந்தன. முதலாவது அகிலத்தில் பக்கூனின் குறுங்குழுவாத நிலையை மேற்கொண்ட பொழுது தன் உள்ளுணர்ச்சி தன்னை முற்றிலும் ஏமாற்றிவிடவில்லை என்பதை மார்க்ஸ் கண்டார்.

“நான் மிகச் சிலருடன் மட்டுமே நட்புக் கொண்டிருக்கிறேன், ஆனால் அவர்களிடம் உறுதியான நட்பு வைத்திருக்கிறேன்”(5) என்று மார்க்ஸ் ஒரு சமயத்தில் கூறினார். ஆம், அவருக்கு நண்பர்கள், உண்மையான நண்பர்கள் மிகவும் சிலரே. ஆனால் அவர்கள் எவ்வளவு தூய்மையானவர்கள், பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்கு எவ்வளவு விசுவாசமானவர்கள்! வில்ஹெல்ம் வோல்ஃப், யோசிஃப் வெய்ட மையர், வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட், கியோர்கு வீர்த்.

வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட்

மார்க்ஸ் மிக அதிகமான அன்பும் நட்புணர்ச்சியும் கொண்டவர், அதனால்தான் அவர் தவறு செய்தவர்களை அதிகமாக வெறுத்தார். அவருடைய வாழ்க்கையில் இரு நபர்கள் மிகவும் அசாதாரணமான பாத்திரத்தை வகித்தனர். ஜென்னியின் காதலும் எங்கெல்சின் நட்பும் வாழ்க்கை மார்க்சுக்கு அளித்த மிகவும் சிறந்த கொடைகளாகும்.

ஜென்னி அவருடைய மனைவியாக மட்டுமல்லாமல் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் அவருடைய புத்தகங்களின் முதல் விமர்சகராகவும் இருந்தாள். மார்க்ஸ் (அவருடைய நண்பர் ஹேய்னெயைப் போல) அவளுடைய நகைச்சுவையை, நயமான கலையுணர்ச்சியை, பரந்த அறிவை (சில துறைகளில் அவருடைய அறிவுக்குச் சிறிதும் குறைவில்லாதது) மிகவும் மதித்தார். அவர் ஜென்னியின் இலக்கியத் திறனை வியந்து போற்றினார்; கடிதம் எழுதுகின்ற கலையில் அவள் ஒப்பற்ற திறமை உடையவள் என்று கருதினார்.

மார்க்ஸ் அற்புதமான உரைநடை எழுதக் கூடியவர். அவருடைய உரைநடையில் “டாசிட்டசின் கடும் ஆவேசமும் ஜூவெனாலின் ஆபத்தான அங்கதமும் தாந்தேயின் புனிதமான சீற்றமும் கலந்திருக்கும்”(6) என்று வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட் எழுதினார். எனினும் மார்க்ஸ் ஜென்னியின் உதவியுடன் தன்னுடைய எழுத்து வன்மையைப் பூரணமாக்கிக் கொண்டார்.

1844 ஜூன் மாதத்தில் ஜென்னி மார்க்சுக்கு எழுதிய மிகவும் சுவாரசியமான கடிதம் இன்னும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ஜென்னி அக்கடிதத்தில் மார்க்சின் நடையை விமர்சித்துவிட்டு அவருக்கு அறிவுரை கூறுகிறாள்:

“…மிகவும் அதிகமான வெறுப்புடனும் எரிச்சலுடனும் எழுதாதீர்கள். உங்களுடைய மற்ற கட்டுரைகள் எவ்வளவு அதிகமான விளைவை ஏற்படுத்தின என்பது உங்களுக்குத் தெரியும். எதார்த்தமான முறையில் நயத்துடனும் நகைச்சுவையுடனும் இலேசாகவும் எழுதுங்கள். அன்பே! உங்கள் பேனாவைக் காகிதத்தின் மீது ஓட விடுங்கள், சில சமயங்களில் தடுக்கி விழுந்து விடுமானால், அதோடு சேர்த்து வாக்கியமும் சிதைவடைந்தாலும் கவலை வேண்டாம். உங்கள் சிந்தனைகள் பழைய காலத்துப் படைவீரர்களைப் போல அதிகமான உறுதியுடனும் துணிவுடனும் விறைப்பாக நிற்கின்றன. அவர்களைப் போல அவை ‘சாகும், ஆனால் சரணடைய மாட்டா’ (’elle meure, mais elle ne se rende pas’).

உடை ஏதோ சில சந்தர்ப்பங்களில் இறுக்கமாக இருக்கவே பொத்தான் மாட்டப்படாமல் தளர்வாகத் தொங்கினால் அது முக்கியமானதா? பிரெஞ்சுப் படைவீரர்களின் இயல்பான, தொய்வான தோற்றமே அவர்களுக்கு அதிகமான சிறப்பைத் தருகிறது. போலி உயரமுள்ள நமது பிரஷ்யர்களை நினைத்தால், அது உங்களுக்கு நடுக்கத்தைத் தரவில்லையா? பெல்டுகளைத் தளர்த்துங்கள், கழுத்துப்பட்டையைத் தளர்த்துங்கள், தலைக் கவசத்தையும் அகற்றுங்கள்; முடிவெச்சங்கள் இயல்பாகச் செல்லட்டும், சொற்கள் எப்படித் தோன்றுகின்றனவோ அப்படியே எழுதுங்கள். போர்க்களத்தில் ராணுவம் கறாரான ஒழுங்குமுறைப்படியே அணிவகுத்துச் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லையே. உங்களுடைய துருப்புகள்தான் போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கின்றனவே, அப்படித்தானே? தளகர்த்தருக்கு நல்வாழ்த்துக்கள்….”(7)

மார்க்சும் ஜென்னியும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தம்பதிகள் என்பது அவர்களை நன்கறிந்த எல்லோருடைய கருத்தாகும். துன்பங்களோ, சோதனைகளோ அவர்களுடைய காதலை பலவீனப்படுத்தவில்லை; அதற்கு மாறாக, துன்பம் அவர்களுடைய அன்பை வலுப்படுத்தியது. அவர் மாணவப் பருவத்திலிருந்ததைப் போலவே முதிர்ச்சிக் காலத்தின் போதும் ஜென்னியை மென்மையாக, தீவிரமாகக் காதலித்தார்.

1856ம் வருடத்தில் ஜென்னி ஜெர்மனிக்குக் குறுகிய காலப் பயணம் சென்றிருந்தாள். அப்பொழுது ஜென்னிக்கு வயது நாற்பத்திரண்டு, பெரிய குடும்பத்தின் தாயாகவும் இருந்தாள். அப்பொழுது மார்க்ஸ் பாசத்துடன் ஜென்னிக்கு எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. அக்கடிதம் மனித உணர்ச்சிக்குச் சிறந்த ஆவணம். அதில் மென்மையும் உணர்ச்சியும் இருப்பதுடன் ஆழமான சிந்தனையும் நிறைந்திருக்கிறது. மார்க்சின் ஆளுமைக்கும் காலப் போக்கில் முதுமையடையாத அவருடைய இளமையான காதலுக்கும் அக்கடிதம் அடையாளமாக இருக்கின்றபடியால் அதிலிருந்து நீண்ட மேற்கோளைத் தருவது பொருத்தமே.

“என் அன்பிற்கினியவளே,

“நான் மறுபடியும் உனக்கு எழுதுகிறேன், ஏனென்றால் நான் தனியாக இருக்கிறேன், என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடிக் கொண்டிருப்பதும் அதை நீ அறிந்து கொள்ள முடியாமல் அல்லது கேட்க முடியாமல் அல்லது எனக்குப் பதிலளிக்க முடியாமலிருப்பதும் என்னை வாட்டுகிறது….  எனக்கு முன்னால் நீ இருப்பதைப் பார்க்கிறேன், நான் உன்னை அன்போடு தொடுகிறேன், தலை முதல் கால் வரை உன்னை முத்தமிடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டுப் பணிகிறேன், ‘அன்பே! உன்னைக் காதலிக்கிறேன்’ என்று முணுமுணுக்கிறேன். ஆம், அந்த வெனிஸ் மூர் (ஒதேல்லோ. – ப-ர்.) எக்காலத்திலும் காதலித்ததைக் காட்டிலும் அதிகமாக நான் உன்னைக் காதலிக்கிறேன். அது உண்மை. போலியான, உளுத்துப் போன உலகம் எல்லா மனிதர்களையும் போலிகளாக, உளுத்துப் போனவர்களாகப் பார்க்கிறது. என்னை அவதூறு செய்பவர்கள், என் முதுகுக்குப் பின்னால் என்னைத் திட்டுபவர்களில் எவராவது இரண்டாந்தரமான நாடக அரங்கில் முதல்தரமான காதலன் பாத்திரத்தை நடிப்பதற்காக என்னை எப்பொழுதாவது குறை கூறியதுண்டா? ஆனால் அது உண்மையே. இந்தப் போக்கிரிகளுக்கு நகைச்சுவை இருக்குமானால் அவர்கள் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை உறவுகளை ஒரு பக்கத்திலும் உன் காலடியில் நான் கிடப்பதை மறு பக்கத்திலும் ஓவியமாகத் தீட்டியிருப்பார்கள். இந்தப் படத்தையும் அந்தப் படத்தையும் பாருங்கள் என்று அந்த ஓவியத்துக்குக் கீழே எழுதியிருப்பார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்தனமான போக்கிரிகள், முட்டாள்களாகவே in seculum Seculorum (எக்காலத்திற்கும்- ப-ர்.) நீடிப்பார்கள்.

“…..ஒரு கனவில் என்னை விட்டு நீ போய்விட்டால் கூட காலம் அதற்குச் (என் காதலுக்குச் – ப-ர்.) செய்த சேவை என்பதை நான் உடனடியாக அறிந்து கொள்வேன். சூரிய ஒளியும் மழையும் செடி வளர்ச்சியடைவதற்கு உதவி செய்வதைப் போன்றதே இது. நீ என்னைப் பிரிந்த உடனே உன்னிடம் நான் கொண்டிருக்கின்ற காதல் அதன் மெய்யான வடிவத்தை, அதாவது பேருருவத்தை அடைகிறது; அதில் என்னுடைய ஆன்மாவின் முழுச் சக்தியும் என்னுடைய இதயத்தின் முழுப் பண்பும் குவிக்கப்பட்டிருக்கின்றன. நான் மறுபடியும் மனிதனாக உணர்கிறேன். ஏனென்றால் ஒரு மாபெரும் உணர்ச்சியை நான் உணர்கிறேன். நவீனக்கல்வி முறையும் பயிற்சியும் நம்மிடத்தில் ஏற்படுத்துகின்ற பல்வகைத் தன்மையும், அகநிலையான மற்றும் புறநிலையான காட்சிகளை நாம் சந்தேகிக்க உபயோகிக்கின்ற ஐயுறவுவாதமும் நம் அனைவரையும் சிறியவர்களாக, பலவீனமானவர்களாக சிணுங்குபவர்களாக, மன உறுதி இல்லாதவர்களாகச் செய்ய உத்தேசிக்கப்பட்டவை. ஆனால் காதல்-ஃபாயர்பாஹின் மனிதனிடத்தில் அல்ல, மொலிஷோட்டின் “வளர்சிதை மாற்றத்தில்” அல்ல, பாட்டாளி வர்க்கத்தின் மீது அல்ல, ஆனால் அன்பு நிறைந்த பெண்ணிடம், உன்னிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது.

“அன்பே, நீ சிரிக்கலாம்; நான் திடீரென்று பிரசங்கத்தில் இறங்கிவிட்டது ஏன் என்று கேட்கலாம். ஆனால் உன்னுடைய இனிமை நிறைந்த தூய்மையான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். நான் மெளனமாக இருப்பேன், ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன். என் உதடுகளினால் உன்னை முத்தமிட இயலாதபடியால் என்னுடைய நாக்கினுல்தான் உன்னை முத்தமிடுவேன், வார்த்தைகளைத்தான் கொட்டுவேன். நான் கவிதை கூட எழுதுவேன் என்பது மெய்யே….

“உலகத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் அழகானவர்கள் என்பது உண்மையே. ஆனால் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு சுருக்கத்திலும் என்னுடைய வாழ்க்கையின் மிகவும் சிறந்த, மிகவும் இனிமையான நினைவுகளைத் தூண்டுகின்ற அந்த முகத்தை நான் மறுபடியும் எங்கே காண்பேன்? உன்னுடைய இனிய முகத்தில் என்னுடைய முடிவில்லாத துயரங்களை, ஈடு செய்யப்பட முடியாத இழப்புக்களை (மார்க்சின் மகன் ஏட்கார் இறந்து விட்டதைப் பற்றிய குறிப்பு – ப-ர்.) நான் காண்கிறேன்; உன்னுடைய இனிய முகத்தை நான் முத்தமிடுகின்ற பொழுது நான் துயரங்களை முத்தமிட்டு விரட்டுகிறேன். ‘அவளுடைய கரங்களில் புதைந்து, அவளுடைய முத்தங்களில் புத்துயிர் பெற்று’ – அதாவது உன்னுடைய கரங்களில், உன்னுடைய முத்தங்களின் மூலம்; நான் பிராமணர்களுக்கும் பிதகோரசுக்கும் மறு பிறவியைப் பற்றி போதிப்பேன், கிறிஸ்துவ சமயத்துக்குத் திருமீட்டெழுச்சியைப் பற்றி அதன் போதனையைத் தருவேன்.”(7)

குடும்பத் துன்பங்களின் சுமைகள் எப்படி இருந்தபோதிலும் மார்க்சின் விஞ்ஞான மற்றும் அரசியல் பணியில் ஜென்னி அலுப்படையாமல் உதவி செய்தாள். பல வருட காலம் ஜென்னியே மார்க்சின் காரியதரிசிப் பொறுப்பில் பணியாற்றினாள், அவருடைய நூல்களைப் பிரதியெடுத்தாள், கட்சிப் பணிகளில் அவருடைய “தகவலறிவிப்பாளராக” இருந்தாள். சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்த பல பிரமுகர்களுடன் அவள் கடிதத் தொடர்பு வைத்திருந்தாள்; அந்த இயக்கம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் அவள் அக்கறை காட்டி வந்தாள். அவள் தன்னைக் கட்சியின் ஊழியன் என்று பெருமையாகக் கருதினாள். ஜென்னி லஸ்ஸாலுக்கு எழுதிய கடிதத்தில் நகைச்சுவை மிளிர்கிறது:

“அவசரமாக இந்தச் சிறு குறிப்பை எழுதுவதற்காக மன்னியுங்கள். என் தலையில் எவ்வளவோ கிடக்கிறது. செய்ய வேண்டிய கைவேலையும் ஏராளம். மேலும் இன்று நகரத்திற்கும் போக வேண்டும். எனவே இரண்டு அல்லது மூன்று மணிநேரம் சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிருப்பேன். நான் கட்சியின் இயங்கும் பகுதியில் இன்னும் இருக்கிறேன், அது முன்னே செல்கின்ற, மைல் கணக்கில் நடக்கின்ற கட்சி. மற்றவை எப்படி இருந்தாலும் நான் நல்ல கட்சிக்காரி அல்லது ஓடிக் கொண்டிருப்பவள். உங்களுக்குப் பிடித்தமானபடி வைத்துக் கொள்ளுங்கள்.”(8)

குறிப்புகள்;

(1)Reminiscences of Marx and Engels, p. 266.
(2)Ibid., p. 272.
(3)Franz Mehring, Karl Marx, The Story of his life, covici, Friede Publishers, New york, 1935, p. 145.
(4)Marx, Engles, Werke, Bd, 30, S. 498.
(5) Ibid., p. 488.
(6) Reminiscences of Marx and Engels, p. 103.
(7) Marx, Engles, Collected Works, Vol. 3, p. 579.
(8) Marx, Engles, Werke, Bd, 29, S. 532-536.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள் :

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
  16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
  17. துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
  18. கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்
  19. விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது !
  20. அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க