உட்கட்சிப் போராட்டம் ||  இறுதி பாகம்

பாகம் – 14

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஐரோப்பிய சமூக ஜனநாயகத்திற்கு பாராம்பரியம் இருந்ததில்லை; ஆனால் சீன மென்ஷ்விசத்திற்கு ஒரு பாராம்பரியம் இருந்திருக்கிறது.

இந்த ரக போலி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்களை, போலி போல்ஷ்விக்குகளை அவர்கள் வார்த்தைகளை வைத்து, பொதுவான தோற்றத்தை வைத்துக் கண்டுபிடிப்பது முடியாத காரியம். பேச்சில் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பதங்களை உபயோகப்படுத்தக் கூடும். வெளிக்கு அதிக புரட்சிகரமானவர்களாகவும், அதிக கடுமையாக உழைப்பவர்களாகவும், விசேஷமான சுமூகத் தன்மையும், அதிக நட்பும் கொண்டவர்களாகவும் தோற்றமளிப்பார்கள். அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக யதார்த்தத்தை வைத்து சோதிப்பது அவர்கள் வேலையை விமர்சன உணர்வுடன் பரீட்சிப்பது என்றால் ஒரேநடுக்கமாக நடுங்குகின்றனர். வேறெதைக் கண்டும் இவர்கள் அஞ்சுவதில்லை .

அதனால் இந்த ரகத்திலுள்ள நபர்களைக் கண்டுபிடித்து அவர்களுடைய உண்மையான முகலட்சணத்தை நடைமுறையின் மூலம், அவர்கள் வேலையின் மூலம், பிரச்சினைகளை புரிந்து கொள்வதிலும் சமாளிப்பதிலும் கைக்கொள்ளும் முறை மூலம், அவர்கள் வேலையின் பலனை பரிசீலிப்பதன் மூலம், அம்பலப்படுத்துவதும் அவசியமாகிறது. உண்மையாக அவர்கள் வார்த்தை அளவில்தான் மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்டுகள்; நடைமுறையில் நடவடிக்கையில் அல்ல.

வழக்கமாக அவர்கள் நடைமுறையிலிருந்து வழுவாத மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கோட்பாடுகளினால் வழிகாட்டப்படுவதில்லை. வேலை செய்யும் பொழுது தங்கள் நடவடிக்கைக்கு புத்தகங்களை, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் மேற்கோள்களை, தீர்மானங்களிலிருந்து பகுதிகளை, பொதுவான கருத்துக்களை, தத்துவங்களை ஆதாரமாகக் கொள்கின்றனரே அல்லாமல், நடைமுறை அனுபவம், அல்லது நடைமுறைவேலை கற்றுக் கொடுப்பதை அல்ல.

பிரச்சினைகளைப் பற்றியும், கொள்கை பற்றியும் முடிவுகள் எடுப்பதில், யதார்த்தத்திலிருந்தோ அல்லது நிலவும் யதார்த்த நிலைமையை, ஆராய்ந்தறிவதிலிருந்தோ அவர்கள் அணுகுவதில்லை; புத்தகங்களிலுள்ள சூத்திரம் சரித்திரப் பூர்வமான ஒப்புவமைகள், சோவியத் யூனியனிலிருந்து அல்லது ஐரோப்பிய நாடுகளிலிருந்து உதாரணங்கள், இன்னும் இதர உவமைகளிலிருந்து அணுகுகின்றனர். இவ்வாறு யதார்த்த வேலையில் அடிக்கடி தவறு செய்கிறார்கள்; இறுதியாக அவர்களுக்கு சரியாக வேலை செய்ய முடிவதில்லை. நடைமுறையில் அவர்கள் எண்ணத்திற்கும் வார்த்தை அளவில் ஆதியில் செய்யும் பிரகடனங்களுக்கும் விளைவுகள் நேர்முரணாகத்தானிருக்கும்; அவர்களுடைய வேலை முறையை நீங்கள் கவனித்து வந்து, அவர்கள் வேலையையும் அதன் பலனையும் விமர்சனப் பூர்வமான சோதனைக்கு உட்படுத்தினால் அவர்கள் உண்மை முகம் அம்பலமாகும். “மூன்றுவித பாங்கு திருத்தம் செய்யும் இயக்கம்” பற்றி தோழர் மாசேதுங் செய்த பிரசங்கத்தில் இம்மாதிரியான ஆளை வெகு வன்மையாக விமர்சித்துள்ளார்.

இம்மாதிரி நபருடைய ஆபத்து எதில் அடங்கியிருக்கிறது என்றால், அவர் உபயோகப்படுத்தும் எண்ணற்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பதங்களிலும், போல்ஷ்விசத்தை மேற்கோள் காட்டுவதிலும் அவரது உடன்பிறந்த மோசடியிலும்தான் அவர் பல தொழிலாளி விவசாயத் தோழர்களையும் திணறடித்து வழிதவறச் செய்வார்; முதிர்ந்த தோழர்கள், வேலை செய்து அனுபவம் பெற்றவர்கள். ஆனால் தத்துவத்தைப் பொறுத்தமட்டில் பாகுபாடு செய்து பார்க்கும் திறமையில் முதிர்ச்சியில்லாதவர்கள் கூட அடிக்கடி இவர்களால் கவரப்பட்டு, வழிபிறழச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு கட்சியின் லட்சியத்தை பெரும் அபாயத்திற்கு இவர்கள் உள்ளாக்குகின்றனர்.

படிக்க :
♦ தவறுகளை ஒப்புக்கொள்ளும் போல்ஷ்விக் உறுதி வேண்டும்! | தோழர் ஸ்டாலின்
♦ கம்யூனிஸ்ட் கட்சியில் விசுவாசமும் கூட்டுத் தலைமையும் !

கட்சியின் கடந்தகால சரித்திரம் போல்ஷ்விக் கொள்கைக்கும் மென்ஷ்விக் கொள்கைக்கும் நிகழ்ந்த போராட்டங்கள் மலிந்த சரித்திரமாக நிகழ்கிறது. நமது கட்சியின் சரித்திரத்தில் இரண்டு கொள்கையும், இரண்டு பாரம்பரியமும் இருந்து வந்திருக்கிறது. ஒன்று போல்ஷ்விச கொள்கையும் பாரம்பரியமுமாகும்; மற்றது மென்ஷ்விச கொள்கையும் பாரம்பரியமுமாகும்; முன்னது மாசேதுங்கில் உருப்பெற்றிருக்கிறது; பின்னது கட்சியிலுள்ள பல்வேறு சந்தர்ப்பவாத கும்பல்களில் உருபெற்றிருக்கிறது.

நீண்டகால கட்டத்திற்கு இந்த இரண்டு கொள்கைக்கும் பாரம்பரியத்திற்கும் இடையில் கடுமையான போராட்டங்கள் நடந்தேறியுள்ளன. அதன் உள்ளடக்கம் மிகவும் செழுமையானது. இந்தப் போராட்டங்களில் கட்சியின் தவறான கொள்கை மென்ஷ்விக் கொள்கை மோலோங்கி, பல குறுகிய காலகட்டங்களில் தற்காலிக வெற்றிகளும் பெற்ற போதிலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது எப்பொழுதுமே தோற்கடிக்கப்பட்டது.

நமது கட்சி அடிக்கடி வேலை செய்யும் போக்கில் தவறான கொள்கையை சமாளித்தது. எனினும், சித்தாந்த ரீதியாக மென்ஷ்விக் முறை முற்றிலும் சமாளிக்கபடவோ, அல்லது அறவே ஒழிக்கப்படவோ அல்லது இறுதியான மரண உதை கொடுக்கப்படவோ இல்லை. இவ்வாறு, இவ்விதமான சித்தாந்தம், இவ்விதமான பாரம்பரியம், இன்னும் கட்சியில் சாகாமலிருந்து வருகிறது, சில காலகட்டங்களில், சில சூழ்நிலைகளில், அது வெடித்து மீண்டும் பேராபத்துக்கு உட்படுத்தக் கூடும்.

சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், செயல் முறைகளிலும் கட்சியிலுள்ள மென்ஷ்விசத்தின் மிச்ச சொச்சங்களை அறவே ஒழித்துக்கட்டுவதற்கு இதுதான் தருணம். கட்சியின் சரித்திரப் பூர்வமான அனுபவத்தைத் திறமையாகத் தொகுப்பதற்கும், குறிப்பாக இரு கொள்கைக்கும் இடையே நிகழ்ந்த போராட்டங்களைப் பற்றிய அனுபவத்தை தொகுப்பதற்கும் அதை கட்சி அங்கத்தினர்களுக்கும், ஊழியர்களுக்கும் போதனை அளிப்பதற்கு உபயோகப்படுத்துவதற்கும் இதுதான் தருணம்.

இந்த வழியில்தான் வியாதியைக் குணப்படுத்தி, நோயாளியைக் காப்பதற்கும், கட்சி அணியில் ஐக்கியம், கட்டுப்பாடு அடைவதற்கும், கட்சி பூராவும் தொடர்ச்சியான, சரியான தலைமையை உத்திரவாதம் செய்வதற்கும், எதிர்காலத்தில் சீனப்புரட்சியை வெற்றி பெற நடத்திச் செல்வதற்கும் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வதென்பது சாத்தியமாகும். இல்லாவிடில் நம்மை எதிர்நோக்கும் கடுமையான, சிக்கல் நிறைந்த மகத்தான காலத்தில், முன்னணி அரசியல் கட்சி என்ற முறையில் நமது சரித்திர பூர்வமான பணியை நாம் பூர்த்தி செய்ய முடியாமல் போவோம்.

நமது கட்சியிலுள்ள மென்ஷ்விசம் கட்சியிலுள்ள குட்டி பூர்ஷ்வா சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாகும்; அது பின்னதன் வளர்ச்சியடைந்த பிரதிபிம்ப வடிவமாகும்; அது ஒரு குறிப்பான சித்தாந்த நெறிமுறையாகும். கட்சியில் மென்ஷ்விசத்தையும், அதன் நெறிமுறையையும் வேரோடு கெல்லி எறிய குட்டி பூர்ஷ்வா சித்தாந்தத்தை விரட்டியடிக்க தொழிலாளி வர்க்க சித்தாந்தத்தை உபயோகிப்பதும், எல்லா வடிவங்களிலும் தொழிலாளி வர்க்க, குட்டி பூர்ஷ்வா கருத்துகளுக்கிடையில் பாகுபாடு செய்வதற்கு உதவுவதும் அவசியமாகிறது. இந்த மாதிரி வேலையை நாங்கள் செய்திருக்கிறோம்; சில இடங்களில் இன்னும் செய்து கொண்டிருக்கிறோம்.

தோழர் மாவோ

சென்ற வருஷத்திலிருந்து தோழர் மாசேதுங் எடுத்து விளக்கிய இந்த “மூன்று பாங்கு திருத்தம் செய்யும் இயக்கம்” நடந்து வந்திருக்கிறது. கட்சியில் இந்த சுயகல்வி, சுயவிமர்சன இயக்கத்திற்கு கடந்த இருபத்திரண்டு வருட சரித்திரத்திலேயே முன்பின் இணையில்லை. போல்ஷ்விக் பாதையில் நமது கட்சிக்கு இணையற்ற உத்வேகம் அளித்திருக்கிறது.

இந்த புனரமைப்பின் அடிப்படையில் நாம் மேலும் செல்ல வேண்டும்; இந்த இருபத்திரண்டு வருடகால செழுமைமிக்க சரித்திரப் பூர்வமான அனுபவத்தை தொகுக்க வேண்டும்; கட்சியின் சித்தாந்தத்திலிருந்து மென்ஷ்விசத்தின் மிச்ச சொச்சங்களை அறவே ஒழிக்க வேண்டும். நமது கட்சியின் போல்ஷ்விக் தரத்தை என்றென்றும் மேல் மட்டங்களுக்கு உயர்த்திக் கொண்டே போக வேண்டும். கட்சியைக் கட்டுவதில் இன்று அதுதான் நமது மையமான கடமையாகும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திரம் சீனாவில் மார்க்சிஸம் – லெனினிஸம் வளர்ந்த வரலாறு; மார்க்சிஸ்டு – லெனினிஸ்டுகளுக்கும், பல்வேறு சந்தர்ப்பவாத குழுக்களுக்கும் நிகழ்ந்த போராட்டங்களின் சரித்திரமும் கூடத்தான். எதார்த்தத்தில் இந்த சரித்திரம் தோழர் மாசேதுங்கை மையமாகக் கொண்டுள்ளது.

கட்சியிலுள்ள பல்வேறு சந்தர்ப்பவாத கோஷ்டிகளின் சரித்திரம், கட்சியின் சரித்திரமாகிவிட முடியாது. கட்சியில் மென்ஷ்விக் கொள்கையும், அதன் பாரம்பரியமும் கட்சியினுடைய சித்தாந்தமாகவோ அல்லது அதன் பாரம்பரியமாகவோ அமைய முடியாது. நமது கட்சியின் உள்சரித்திரம் இந்த மாதிரியான சித்தாந்தம், பாரம்பரியத்தை எதிர்த்து நடத்திய போராட்டம் பற்றியும், அது எப்படி தோற்கடிக்கப்பட்டது, நசுக்கப்பட்டது என்பதை பற்றியும் ஆகும்.

இந்த பாரம்பரியத்தின் மிச்ச சொச்சங்களை வேரோடு கெல்லி எறிவதற்கு அதை அம்பலப்படுத்துவது மிகவும் அவசியம்; அதை நாம் மூடி மறைக்ககூடாது; உள்ளதை மறுக்கவும் கூடாது. அது கட்சிக்கு பிரயோஜனப்படாது. தீமைதான் விளைவிக்கும்.

எல்லா ஊழியர்களும், எல்லா கட்சி அங்கத்தினர்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த இருபத்திரண்டு வருடகால சரித்திரப் பூர்வமான அனுபவத்தை ஜாக்கிரதையாகக் கற்றறிய வேண்டும்; சீனப் புரட்சி பற்றியும், மற்ற விஷயங்களைப் பற்றியும் தோழர் மாசேதுங்கின் போதனைகளை ஜாக்கிரதையாக கற்றறிய வேண்டும்; மாசேதுங்கின் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு மாசேதுங்கின் சித்தாந்தத்தின் உதவியைக் கொண்டு கட்சியில் மென்ஷ்விக் சித்தாந்தத்தை வேரோடு கெல்லி எறியவும் வேண்டும்.

படிக்க :
♦ ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான்  ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !
♦ தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !

ஆயினும் நமது ஊழியர்களும், கட்சி அங்கத்தினர்களும் கீழ்கண்ட விஷயங்களைப் பற்றி உஷாராக இருக்க வேண்டும். சமீப வருடங்களில் கட்சிக்குள் ஊடுருவுவதற்கு சில ரகசிய ஏஜெண்டுகள் நுழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆட்களும் மார்க்சிஸ்டு – லெனினிஸ்டுகள் என்ற போர்வையில் தோன்றியிருக்கின்றனர்.

இவர்களுக்கும் மேலே கூறியுள்ள போலி மார்க்சிஸ்டு – லெனினிஸ்டுகளுக்கும் இடையில் கொஞ்சம் வித்தியாசமிருக்கிறது. இவர்கள் எல்லாம் எதிர்ப்புரட்சி நபர்கள். கட்சிக்குள் நுழையும் இந்த எதிர்ப்புரட்சிகாரர்கள் சம்பந்தப்பட்ட வரையில் நாம் அவர்களை சலித்து எடுக்கவேண்டும். இதற்கு அர்த்தமென்னெவென்றால், கட்சியில் புரட்சிக்காரர்களுக்கும் எதிர்ப்புரட்சிக்காரர்களுக்கு மிடையில் வரையறுப்பு செய்ய வேண்டும்.

கட்சியில் மென்ஷ்விசத்தின் மிச்ச சொச்சங்களை வேரோடு களைந்தெறிவதென்றால், தொழிலாளி வர்க்கத்திற்கும் குட்டி பூர்ஷ்வா வர்க்கத்திற்குமிடையில் வரையறுப்பு செய்வதாகும். இந்த இரு வரையறுப்புகளும் தெளிவாக வகுக்கப்பட வேண்டும். ஆனால் உபயோகப்படுத்தும் முறைகள் வேறாக இருக்க வேண்டும். முன்னது ஊழியர்களையும், கட்சி அங்கத்தினர்களையும் பரீட்சை செய்யும் போக்கில் கண்டுபிடிக்கப்படுகிறது; பின்னது புனரமைப்பு, அனுபவங்களை தொகுத்தல் ஆகிய முறைகளில் செய்யப்படுகிறது.

கட்சிக்குள் குட்டி பூர்ஷ்வா சித்தாந்தத்தையும், அதன் வழிமுறைகளையும், மார்க்சிசம், லெனினிசம் உதவி கொண்டு ஒழிப்பதும், விரோதியின் ஏஜெண்டுகளை சலித்து பிரித்தெடுப்பதும் கட்சியை பலப்படுத்துவதற்கும், உயர்த்து வதற்கும் நமது உடனடியான இரண்டு பெரிய கடமைகளாகும். அதன் வெற்றிகரமான சாதனை சித்தாந்தத்திலும், அமைப்பிலும் நம்மை நாமே தயாரித்துக் கொண்டுள்ளோம் என்று அர்த்தம். நம்மை எதிர்நோக்கும் பிரமாதமான காலகட்டத்தை நமது நிலைமையை பரிபூரணமாக ஸ்திரப்படுத்திக் கொண்டும், தயாரித்துக் கொண்டும் எதிர்கொள்ளலாம்.

மார்க்சியம் -லெனினியத்தை கசடறக் கற்றுக் கொள்ளுங்கள். கட்சிக்குள் எஞ்சியிருக்கும் சந்தர்ப்பவாத மிச்ச சொச்சங்களை ஒழியுங்கள். நம்மை யாராலும் வெல்லமுடியாது!

(முற்றும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க