தேசியக் குடிமக்கள் பதிவேடு:
யாருக்கும் மனநிறைவு அளிக்காத ஒரு கேடான வழிமுறை – ஹர்ஷ் மந்தேர்

சாம் மாநிலத்தில் நடைபெற்று வந்த குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் ஏறத்தாழ 19 இலட்சம் பேர் அந்நியர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இறுதிப் பட்டியலை பா.ஜ.க.வும் எதிர்க்கிறது. காரணம், அந்நியர்களாக அறிவிக்கப்பட்டவர்களுள் கணிசமானோர் இந்துக்கள் என்பதுதான். மேலும், இறுதிப் பட்டியலில் வந்தேறிகளான வங்கதேச முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பிடித்துவிட்டதாகவும் கூறி, இந்த இறுதிப் பட்டியலுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.

முஸ்லீம்களை அந்நியர்களாக முத்திரை குத்தி ஒதுக்கும் தேசியக் குடிமக்கள் பதிவேடு நடைமுறையை நாடெங்கும் கொண்டுவரவும் பா.ஜ.க. திட்டமிடுகிறது. அதற்கேற்ப குடிமக்கள் சட்டத்தைத் திருத்தவும் முயன்று வருகிறது.

ஹர்ஷ் மந்தேர்.

இதுவொருபுறமிருக்க, அசாம் குடிமக்கள் பதிவேட்டில் அந்நியர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் நிலை என்ன? அவர்களுள் முஸ்லீம்கள் நீண்டகாலத்திற்குத் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படக் கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார், மனித உரிமைகள் மற்றும் அமைதிக்கான செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்தேர்.

இட்லர் யூதர்களைத் தடுப்பு முகாம்களில் (Concentration Camps) அடைத்து வைத்ததற்கு ஒப்பான நிலை இது. இட்லரின் யூத இன அழிப்பு நாஜிசக் கொள்கை இங்கு இந்து மதவெறி பாசிசமாக, சட்டப்பூர்வமாக அரங்கேறிவருகிறது.

ஹர்ஷ் மந்தேர் இத்தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் குறித்து செப்.2, ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய A flawed process that pleased none என்ற கட்டுரை சுருக்கமாக மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கிறது.

–  ஆசிரியர் குழு


புதுப்பிக்கப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் தங்களது பெயர்கள் இடம்பெறாத  காரணத்தால், தங்களுக்கு என்ன நேருமோ என்ற அச்சமும் பதட்டமும் அசாமில் வசிக்கும் சுமார் 20 இலட்சம் மக்களையும் அவர்களது உற்றார் உறவினர்களையும் இறுகக் கவ்வி இருக்கிறது. ஆனால், பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்த பின்னாலும்கூட, வங்காள வம்சாவழி அசாமிய மக்களுக்குத் துளியும் நிம்மதியில்லை. ஏனெனில், பின்னாளில் அவர்கள் சட்டவிரோத வந்தேறிகள் என்று அறிவிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அசாமுக்கும் வங்காள தேசத்திற்கும் இடையிலுள்ள எல்லை வழியாக தொடர்ந்து இலட்சக்கணக்கான வங்கதேசிகள் தடையின்றிச் சட்டவிரோதமாக ஊடுருவிய வண்ணம் இருக்கிறார்கள்; அவ்வாறு வெள்ளமென ஊடுருவும் வங்கதேசிகள், அசாமின் பண்பாடு, மொழி அனைத்தையும் மூழ்கடித்து விடுவார்கள்; மேலும் தங்களை மெல்ல மெல்ல விளிம்புக்குத் தள்ளி தங்களது நிலம் மற்றும் காடுகளை விட்டே வெளியேற்றி விடுவார்கள்” என்பன போன்ற அச்சங்கள் அசாம் போராட்ட ஆதரவாளர்களின் மனதில் படிந்துபோன நம்பிக்கைகள்.  இவ்வாறு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் எண்ணிக்கை என்ன? 50 இலட்சம் முதல் ஒரு கோடி வரை எனப்  போராட்டத் தலைவர்கள் ஆளுக்கொரு கணக்கைச் சொல்லி வருகிறார்கள். ஆனால், இறுதியாகக் கணக்கிடப்பட்டிருக்கும் எண்ணிக்கையோ 20 இலட்சத்திற்கும் குறைவு. இந்தக் குறைந்த எண்ணிக்கை அவர்களைப் பெரும் சோர்வுக்கும் கடும் கோபத்துக்கும் ஆளாக்கியிருக்கிறது.

பா.ஜ.க.-வின் மைய வேலைத்திட்டம்

காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், ராமர் கோயில் கட்டுதல் போன்றே வங்காளதேசத்தில் இருந்து “ஊடுருவியவர்களை” வெளியேற்றுதல் என்ற செயல் திட்டமும் அசாமிலும் சரி, மத்தியிலும் சரி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க.-வின் மையமான வேலைத்திட்டத்தின் ஓர் அம்சமாகும்.  ஆனால், அவர்களது வரையறையின்படி  வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அசாமிய முஸ்லீம்கள் மட்டுமே தேசத்துக்கு ஆபத்தானவர்கள்.  அதேசமயம், வங்காளத்திலிருந்து குடியேறிய இந்துக்கள் ஊடுருவல்காரர்கள் அல்ல; அவர்களை அகதிகள் என்றும், அவர்களுக்கு இந்தியா இயற்கையான தாயகம் என்றும் கூறுகிறது பா.ஜ.க. தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விலக்கப்பட்ட 19 இலட்சம் பேர்களின் அதிகாரப்பூர்வமான பகுப்பு விவரம் நம்மிடம் இல்லை. எனினும், கிடைக்கப் பெற்ற அறிகுறிகளின்படி இவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் இந்துக்கள் ஆவர்.

தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் தமது குடும்பத்தினர் அனைவரும் விடுபடாமல் சேர்க்கப்பட்டிருக்கின்றனரா என உறுதி செய்துகொள்ள தேஜ்பூர் நகரிலுள்ள தெங்காபஸ்தி பகுதியில் அமைந்திருக்கும் மையத்தில் குவிந்திருக்கும் பொதுமக்கள்.

அசாமிய துணை தேசியம் என்றுமே மதவாதமாக இருந்ததில்லை; வங்காளத்தில் இருந்து குடியேறிய மக்கள் இந்துக்களா, முஸ்லீம்களா என்பதைப் பற்றி அதன் ஆதரவாளர்கள் அக்கறைப்பட்டதில்லை.  ஆனால், பா.ஜ.க.வைப் பொருத்தவரையில் வங்காளத்தில் இருந்து குடியேறிய இந்துக்களின் வாக்குரிமையைப் பறிப்பது அல்லது அவர்களை வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்புவது என்ற எதுவாயினும் அச்செயல் அவர்களது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. ஏனெனில், இதன் மூலம் அவர்கள் தமது பிரதானமான வாக்கு வங்கியைத் தியாகம் செய்ய வேண்டிவருகிறது.

எனவேதான், பா.ஜ.க.-வின் மாநிலத் தலைவர்களும், மையத் தலைவர்களும் அசாமில் தமது சொந்த அரசு செயல்படுத்திய ஒரு திட்டத்தை நேர்மையற்ற முறையில் பக்கச்சார்பானது என்று கூறிப் புறக்கணிக்கிறார்கள். சான்றாவணங்கள் இல்லாத குடியேறிகள் இந்துக்களாக இருந்தால் குடியுரிமை வழங்கவும், இஸ்லாமியர்களாக இருந்தால் குடியுரிமை மறுக்கவும் வகை செய்யும் வண்ணம் குடிமக்கள் (திருத்த) மசோதாவை நிறைவேற்றிச் சட்டமாக்கினால்தான் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

மறுபுறம் சட்டவிரோதக் குடியேற்றம் பற்றிய மதிப்பீடுகள் மிகப்பெரும் அளவில் ஊதிப் பெருக்கப்பட்டவை என்று வங்காள வம்சாவளி அசாமியர்கள் நெடுநாட்களாகவே கூறிவருகிறார்கள். மேலும், பெரும்பாலான வங்காள வம்சாவழியினர் நெடுங்காலம் முன்னர் கிழக்கு வங்காளத்தையும் சேர்த்து இந்தியா ஒரு நாடாக இருந்தபோதே சட்டபூர்வமாகக் குடியேறியவர்களின் வாரிசுகள்தான் என்றும், 1971-க்கு பிந்திய சட்டவிரோதக் குடியேற்றம் என்பது மிகமிகச் சொற்பமானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கு மிக மோசமான வழிமுறைகள் அவர்கள் மீது  திணிக்கப்பட்ட பின்னரும், குடிமைப் பதிவு மறுக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவாக இருப்பதிலிருந்து, அவர்கள் இதுகாறும் கூறிவந்தது உண்மை எனத் தோன்றுகிறது.

பிறப்பு, பள்ளிப் படிப்பு மற்றும் நிலவுடமை தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் தன்னை இந்நாட்டின் குடிமகன் என்று நிரூபிக்கும் பொறுப்பு அசாம் வாழ் மக்கள் மீது சுமத்தப்பட்டுவிட்டது. பரம ஏழைகளாகவும் படிப்பறிவு அற்றவர்களாகவும் இருக்கும் கிராமப்புற மக்களுக்கு, அவர்கள் அசாமியர்களாக இருந்தாலும் வேறு எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மேற்படி ஆவணங்களை ஆய்வுக்குச் சமர்ப்பிப்பதென்பது மிகமிகக் கடினமான ஒன்று.

முஸ்லீம்களை ஒதுக்கும் பாரபட்ச நோக்கத்தோடு நாடெங்கும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவை எதிர்த்து மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

மக்கள் எப்படியோ அலைந்து திரிந்து உரிய ஆவணங்களைத் திரட்டி வெற்றிகரமாகச் சமர்ப்பித்த போதிலும், அற்பமான வேறுபாடுகளைக் கண்டுபிடித்து, நொட்டஞ்சொல்லி அவை நிராகரிக்கப்பட்டன. ஒரு வங்காளியின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்படும் போது ஏற்பட்டுவிடும் எழுத்துப்பிழை காரணமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அது போல பெரும்பான்மையான கிராம மக்கள் தங்களது பிறந்த தேதியை அறியமாட்டார்கள் என்பது உலகறிந்த விடயம். இருப்பினும், ஆவணத்தில் பதிந்துள்ள வயதில் காணப்படும் சிறு தவறு சுட்டிக்காட்டப்பட்டு, அந்த ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் பலரிடம் சட்டபூர்வமான நில உரிமை ஆவணங்கள் இல்லை. மேலும், இந்தத் தேசியக் குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்படும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடைச்செருகலாக, அசாமிய பூர்வகுடிகள் என்ற பொத்தாம் பொதுவாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒரு வகையினம் அறிமுகப்படுத்தப்பட்டது. உரிய ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க முடியாத நிலையில்கூட இவர்களுக்கு மிதமிஞ்சிய சலுகை காட்டப்பட்டது.

இவர்களது எதிர்காலம் என்ன?

வங்காள வம்சாவளி அசாமிய மக்களின் எதிர்காலம்தான் என்ன?  தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இடம் மறுக்கப்பட்டவர்கள் வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயத்தில் (Foreigners Tribunals – FTs) மேல் முறையீடு செய்யலாம். இது அவர்களுக்குக் காட்டப்படும் இருண்ட எதிர்காலமே அன்றி, வேறல்ல.  ஏனெனில், இத்தீர்ப்பாயங்கள் வெளிப்படையான வெறுப்புணர்ச்சியுடனும் ஒருதலைப் பட்சமாகவுமே செயல்பட்டிருக்கின்றன. வெளிநாட்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கையை முடிந்தவரை உயர்த்த வேண்டும் என்று அரசாங்கம் வாய்வழியாகத் தீர்மானிக்கும் இலக்குகளும் உத்தரவுகளும்தான் இத்தீர்ப்பாயங்களை வழி நடத்துகின்றன.

மேலும் கூடுதலான கவலை அளிக்கக்கூடிய விடயம் என்னவென்றால், தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படாதோர் என்ற ஒரு பெரும் திரளான மக்களின் வழக்குகளை அந்நியர்களுக்கான தீர்ப்பாயம் விசாரிக்கும் என்பதோடு இந்த விவகாரம்  முடியவில்லை.   இறுதிப்பட்டியலின்படி வெளியேற்றப்பட வேண்டிய வங்காள  முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஏமாற்றமடைந்திருக்கும் மாநில அரசு, பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களையும்கூட அரசு தொடர்ந்து பரிசீலிக்கும் என்றும் பின்னாளில் அவர்கள் அந்நியர்கள் என்று இவ்வரசு கருதுமானால்,  அவர்களையும்கூட அன்னியர்களுக்கான தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

உரிமைகள் அற்ற குடிமை

மிகப்பெரிய கேள்வி இதுதான். இந்த வழிமுறைகளின் இறுதியில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்” என்று அறிவிக்கப்படும் மக்களின் தலைவிதி என்ன? வங்கதேசம் அவர்களை ஏற்றுக் கொள்ளாது. இந்திய அரசு டாக்காவுடன் இது தொடர்பாகப் பேச்சு வார்த்தை எதுவும் நடத்தவில்லை. அசாம் கிளர்ச்சியின் கோரிக்கைகள் தெளிவானவை. அவை, சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிதல், (வாக்காளர் பட்டியலில் இருந்து)  நீக்குதல் மற்றும் திருப்பி அனுப்புதல் ஆகியனவாகும்.

இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தில்கூடத் தங்கவிடாமல் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்புவேன்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.  இது எவ்வாறு நிறைவேற்றப்படும்?  இவர்கள் அடையாளம் கண்டிருக்கும் 10 இலட்சக்கணக்கான மக்கள் வங்கதேசத்திற்குள் பலாத்காரமாகத் தள்ளப்படுவார்களா? அல்லது மாபெரும் தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கப்படுவார்களா? ஆம் என்றால், எத்தனை காலத்திற்கு?  நடைமுறை சாத்தியப்பாடு எதுவாக இருக்கக்கூடும்?  இறுதியில் அவர்கள் குடிமக்களுக்கான எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் வாழ்வதற்கு அனுமதிக்கப்படக் கூடும்.  அவர்கள் சூடு வைக்கப்பட்ட அடிமைகளைப் போல அடையாளமிடப்பட்ட மக்களாக, உரிமையற்றவர்களாக, கும்பல் வன்முறைக்கும் அரசின் மூர்க்கமான கண்காணிப்புக்கும் எளிதில் இலக்கானவர்களாக இருப்பார்கள்.

தேசியக் குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதற்கும் விரிவாக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அதற்கு அமித் ஷா அளித்த வாக்குறுதியையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவர உத்தேசித்திருக்கும் திருத்தத்துடன் தேசியக் குடிமக்கள் பதிவேட்டு நடைமுறை நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்படும்போது என்ன நடக்கும் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். இந்தத் திருத்தத்தின்படி இஸ்லாமியர்கள் தவிர, அந்நிய நாடுகளிலிருந்து குடியேறிய அனைவரும் சான்றாதாரங்கள் இல்லையென்றாலும், இந்தியராக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.

படிக்க:
காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் !
ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி

தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் அந்நியர்களுக்கான தீர்ப்பாய நடைமுறைகள் தோற்றுவிக்கும் கொடிய துயரம் எனும் சூறாவளிக்குள் இந்திய முஸ்லீம்களில் ஒருபகுதியினர் வீசியெறியப்படுவதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அழித்தொழிப்பது என்பதே இதன் பொருள். மாறுபட்ட மத நம்பிக்கைகள் கொண்ட நாம் எல்லோரும் சமமாய்ச் சொந்தம் கொண்டாடிய, நாம் அறிந்த இந்தியாவின் அழிவுக்காலம் இது என்பதே இதற்குப் பொருள்.

மொழியாக்கம் : வாசு


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க