உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 14

பாகம் – 13

மார்க்சியம் தோன்றிய காலத்திலிருந்தே மார்க்சிய இயக்கத்தில் உண்மையான மார்க்சிஸ்டுகளும் போலி மார்க்சிஸ்டுகளும் இருந்து வருகின்றனர். மார்க்சிஸ்டு இயக்கத்தின் முழு சரித்திரமும் இந்த இரண்டு மார்க்சிஸ்டு கோஷ்டிகளுக்கும் இடையில் நிகழ்ந்த போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது. இதைப்போலவே சீனாவிலுள்ள மார்க்சிஸ்டு இயக்கத்திலும், இரண்டு மார்க்சிஸ்டு கோஷ்டிகள் இருந்தன; அதே போன்ற ஒரு சரித்திரமும் இந்த இரண்டு கோஷ்டிகளுக்கிடையில் நிகழ்ந்த சண்டைகள் நிறைந்திருக்கின்றன. நமது கட்சி அங்கத்தினர்கள் அனைவரும் இதை பரிபூரணமாக புரிந்து கொள்ள வேண்டும்.

இருபது வருடங்களுக்கு முன்னாடியே இந்த இரண்டு மார்க்சிஸ்டு குழுக்களை ஸ்டாலின் சரியாக விவாதித்துள்ளார். இது சீனாவுக்கும் பொருந்தும். ஸ்டாலின் பின்வருமாறு கூறினார் :

மார்க்சிஸ்டுகளில் இரு கோஷ்டிகள் உண்டு. மார்க்சியம் என்ற கொடியின் கீழ்தான் இருசாராரும் பணியாற்றுகின்றனர். இருசாராருமே தங்களை உண்மையான” மார்க்சிஸ்டுகள் என்று கருதிக்கொள்கின்றனர். இருந்த போதிலும் அவர்கள் ஒன்றல்ல. அதற்கு மாறாக, அவர்களுக்குள் பெரும் பேதமிருக்கிறது; அவர்களுடைய வேலைமுறை ஒன்றுக்கொன்று நேர்முரணானது.

முதல் கோஷ்டி, மார்க்சிசத்தை வழக்கமாக வெளிக்கு ஒப்புக் கொள்வதுடன் முறைப்படி அங்கீகாரம் செய்வதுடன், நின்று விடுகின்றனர். ஆனால் மார்க்சியத்தின் சாராம்சத்தை கிரகித்துக் கொள்வதற்கு முடியாத காரணத்தினால் அல்லது இஷ்டமில்லாததினால், அதை யதார்த்தமாக்குவதற்கு முடியாத காரணத்தால் அல்லது விரும்பாததினால், மார்க்சியத்தின் ஜீவனுள்ள புரட்சிகரமான கோட்பாடுகளை ஜீவனற்ற அர்த்தமில்லாத வாய்ப்பாடுகளாக இக்கோஷ்டி மாற்றி வருகிறது.

படிக்க :
♦ பேராசான் எங்கெல்ஸ்  – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !
♦ பாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு

இது தனது நடவடிக்கைகளுக்கு அனுபவத்தை, நடைமுறை வேலை கற்றுக் கொடுப்பனவற்றை அடிப்படையாகக் கொள்வதில்லை; மார்க்சிடமிருந்து மேற்கோள்களை அடிப்படையாகக் கொள்கிறது. கண்கூடாக யதார்த்தங்களை அலசி ஆராய்வதின் வாயிலாக தனக்கு யோசனைகளையும், திசை வழியையும் பெறுவதில்லை; அதற்கு மாறாக உவமைகளிலிருந்தும் சரித்திர பூர்வமான ஒத்த திருஷ்டாந்தங்களிலிருந்தும் அது யோசனைகளையும், திசை வழியையும் பெறுகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாதிருப்பது இந்தக் குழுவின் பிரதான வியாதி.

அதனால்தான் ஏமாற்றமும், தலைவிதியை சர்வசதா நொந்து கொள்வதும் திரும்பத் திரும்பத் தலைவிதி அவர்களுக்கு துரோகம் செய்து, சர்வபங்கப்படுத்துகிறது. இந்த கோஷ்டி (ரஷ்யாவில்) மென்ஷ்விக்குகள் அல்லது (ஐரோப்பாவில்) சந்தர்ப்பவாதிகள் என்று வழங்குகின்றனர். தோழர் டிஸ்கா(யோகிஷல்) இந்தக் குழுவைத்தான் லண்டன் காங்கிரசில் வெகு பொருத்தமாக இவர்கள் மார்க்சிய கண்ணோட்டத்திற்கு நிற்கவில்லை , அதன் மீது படுத்து உறங்குகின்றனர்” என்று கூறினார்.

இரண்டாவது குழு, அதற்கு நேர்மாறாக மார்க்சியத்தை வெளிக்கு அங்கீகாரம் செய்வதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது நிறைவேற்றப்படுவதற்கு, அது யதார்த்தமாக மாற்றப்படுவதற்கு பிரதான முக்கியத்துவம் கொடுக்கின்றனர்; இந்தக் குழு நிலைமைக்கு ஏற்ப மார்க்சியத்தை அடைவதற்கு வழிவகைகளை நிர்ணயிப்பதிலும், நிலைமை மாறும்பொழுது இந்த வழிவகைகளை மாற்றுவதிலும் தன்விசேஷ கவனத்தை பிரதானமாக செலுத்துகிறது.

இது தனக்கு யோசனைகளையும் , திசைவழிகளையும் சரித்திரப் பூர்வமான உவமைகளிலிருந்தும், ஒத்த திருஷ்டாந்தங்களிலிருந்தும் பெறுவதில்லை; சுற்றுச் சார்பிலுள்ள நிலைமையை பரிசீலனை செய்து அதிலிருந்தே பெறுகிறது; அதன் நடவடிக்கைகளுக்கு மேற்கோள்களையும், முதுமொழிகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சரிதானாவென்று நடைமுறையின் ஒளியில் சோதித்து, தவறுகளிலிருந்து படித்துக்கொண்டு, மற்றவர்களுக்கு புதிய வாழ்க்கை காட்டுவது எப்படி என்று போதித்துக்கொண்டு, நடைமுறையை அடிப்படையாகக் கொள்கின்றன.

உண்மையாக இந்தக் குழுவின் சொல்லுக்கும் செயலுக்கும் ஏன் வேறுபாடு இல்லாமல் இருக்கிறது என்பதற்கும், மார்க்சின் போதனை ஏன் ஜீவனுள்ள புரட்சிகரமான சக்தியை இழக்காமலிருக்கிறது என்பதற்கும் விளக்கம் இதில்தான் அடங்கியிருக்கிறது. இந்தக் குழுவை பொறுத்தமட்டிலும், மார்க்சிஸ்டுகள் உலகத்தை வியாக்கியானம் செய்வதுடன் திருப்தியடைய முடியாது. உள்ளதை மாற்ற வேண்டும் என்ற மார்க்சின் மொழிகள் முற்றிலும் பொருந்தும். இந்தக்குழு போல்ஷ்விக்குகள், கம்யூனிஸ்டுகள் என்று வழங்கப்படுகின்றனர்.

இந்தக் குழுவை உருவாக்கியவரும் தலைவரும் வி.ஐ.லெனின் ”

இங்கு ஸ்டாலின் வெகு தெளிவாக இரண்டு கோஷ்டிகளும் மார்க்சியம் என்னும் கொடியின் கீழ்தான் வேலை செய்கின்றனர் என்றும், தங்களை ‘உண்மையான’ மார்க்சிஸ்டுகள் என்று கருதுகின்றனார் என்றும், ஆயினும் அவர்களுடைய வேலை முறை, அதாவது அவர்களது சிந்தனை முறை, ஒன்றுக்கொன்று நேர் எதிரானது என்றும் மொழிந்துள்ளார்.

முதல் குழு போலி மார்க்சிஸ்டுகள்: அவர்கள் மென்ஷ்விக்குகள், சந்தர்ப்பவாதிகள். அவர்கள் வெளிக்கு ஒப்புக் கொள்ளுவதுடன், பேச்சளவில் அங்கீகரிப்பதுடன் நின்று விடுகின்றனர்; மார்க்சிசத்தின் சாரத்தை உட்கொண்டு, அதை யதார்த்தமாக மாற்றுவதற்கு முடிவதில்லை. அவர்கள் வேலையில், நடைமுறை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் நடவடிக்கை அமைவதில்லை; நடைமுறை வேலை கற்றுக் கொடுப்பதை ஆதாரமாகக் கொள்வதில்லை. புத்தகங்களை ஆதாரமாகக் கொள்கின்றனர். என்ன யோசனைகள் கூறுவது, என்ன கொள்கைகளைப் பின்பற்றுவது என்று முடிவு செய்வதற்கு இவர்கள் யதார்த்த நிலைமையை, ஆராய்ச்சியை ஆதாரமாகக் கொள்வதில்லை; புத்தகங்களையும் சரித்திரப் பூர்வமான உவமைகளையும் ஒத்த உதாரணங்களையும் ஆதாரமாகக் கொள்கின்றனர்.

அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமிருக்கிறது; அவர்கள் மார்க்சியம் பேசுகின்றனர்; ஆனால் அவர்கள் செய்வது மார்க்சியத்திற்கு அறவே சம்பந்தமில்லாதது. உருவாகும் யதார்த்த நிலைமை அடிக்கடி அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும்; மனமொடிந்து சோர்வுற்றுக்கிடப்பர்.

மற்ற குழு உண்மையான மார்க்சிஸ்டுகள் : அவர்கள் லெனினிஸ்டுகள், போல்ஷ்விக்குகள்; அவர்கள் மார்க்சியத்தை கையாளுகின்றனர்; அதை யதார்த்தமாக்குகின்றனர். நிலைமைக்குத் தக்க முறையில் மார்க்சியத்தை கையாளுவதற்கும் நிலைமை மாறும் பொழுது இந்த வழிகளை மாற்றிக் கொள்வதற்கும் வழிவகைகளைத் தேடுவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். என்ன யோசனை கொடுப்பது, என்ன திசை வழியைப் பின்பற்றுவது என்று முடிவு கட்டுவதற்கு சரித்திரப் பூர்வமான உவமைகளை ஆதாரமாகக் கொள்வதில்லை; நிலவும் நிலைமையை ஆராய்ந்தறிவதையே ஆதாரமாகக் கொள்வர். வேலை செய்யும் பொழுது மேற்கோள்கைளையும், முதுமொழிகளையும் தங்கள் நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக கொள்வதில்லை; நடைமுறை அனுபவத்தைக் கொண்டு சோதிக்கின்றனர்; தவறுகளிலிருந்து படித்துக்கொள்கின்றனர். மற்றவர்கள் தங்கள் பணியை முன்கொண்டு செல்ல கற்றுக் கொடுக்கின்றனர்.

இந்தக்குழுவில் வார்த்தைக்கும், செயலுக்குமிடையில் வித்தியாசமில்லை . அவர்கள் மார்க்சியம் பேசுகின்றனர்; அவர்கள் செய்வதும் மார்க்சியத்திற்கு ஒத்திருக்கிறது. அவர்கள் உலகத்தைப் பற்றி வியாக்கியானம் செய்வது மட்டுமல்ல; உலகத்தை மாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எப்பொழுதும் அவர்கள் மார்க்சியத்தின் ஜீவனுள்ள, புரட்சிகரமான சக்தியை பேணிப் பாதுகாக்கின்றனர்.

இந்த இரண்டு விதமான மார்க்சிஸ்டுகளும் சீனக் கம்யூனிஸ்டு இயக்கத்திலும், சீன கம்யூனிஸ்டு கட்சியிலும் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகின்றனர்; முதல் வகையைச் சேர்த்த சீன போலி மார்க்சிஸ்டுகள் பின்வருபவர்கள்: சென்-டு – சி யூ, பெங் – ஷீ-சீ, சீன ட்ராட்ஸ்கீயவாதிகள், லிலிசான் கொள்கை, உள்நாட்டு யுத்த காலத்திய “இடதுசாரி” சந்தர்ப்பவாதம், வறட்டு தத்துவவாதம் இவையெல்லாம் சாராம்சத்தில் சீனாவின் மென்ஷ்விசம், அல்லது சமூக ஜனநாயகம்.

இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள், சீனாவிலுள்ள உண்மையான மார்க்சிஸ்டுகள், தோழர் மாசேதுங்கும், அவரைச்சுற்றித் திரண்டுள்ள இன்னும் பல தோழர்களுமாவர். கடந்த காலத்தில் அவர்கள் கடைப் பிடித்ததும், ஸ்தாபிப்பதற்குப் போராடியதுமான கொள்கையும், அவர்கள் வேலை முறையும் சாராம்சத்தில் சீனாவின் போல்ஷ்விஸமாகும்.

நமது கட்சியின் சரித்திரத்தில் ஒரு மென்ஷவிச கொள்கையும், மென்ஷ்விச சித்தாந்தமும், இருந்து வருகிறது என்ற விஷயத்தை நமது தோழர்களும் ஊழியர்களும் புரிந்து கொள்ள வேண்டும்; இன்னும் அதிக உஷார் உணர்வு காட்ட வேண்டும்.

படிக்க :
♦ சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்
♦ நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

சென்டு சி யூ , பெங்ஷீசீ, லி லிசான் மூலம் பிரதிபலித்ததிலிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு காலகட்டங்களில் பிற்பாடு தோன்றிய சகல விதமான சந்தர்ப்பவாதம், வறட்டு தத்துவவாதம் எல்லாம் அமைப்பு ரீதியாக ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படாமலிருந்தாலும், அவர்கள் வேலை முறை சிந்தனா முறை, சாரம் எல்லாம் ஒன்றுதான்.

அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் அவர்களுக்கு ஒரே தத்துவமிருந்து வந்திருக்கிறது. கட்சிக்கும், சீனப்புரட்சிக்கும் அவர்கள் செய்துள்ள தீமை மிகப்பெரியது. ஐரோப்பிய ட்ராட்ஸ்கியவாதிகளிலிருந்து நேரிடையாகத் தோன்றிய ட்ராட்ஸ்கியவாத சென்டு சியூ கும்பல் போக, சீனாவிலிருந்த மற்ற மென்ஷ்விச வடிவங்கள் நேரிடையாக ஐரோப்பிய ட்ராட்ஸ்கியவாதிகளிடமிருந்தோ அல்லது ரஷ்ய மென்ஷ்விக்குகளிடமிருந்தோ உதிக்கவில்லை; அதற்கு மாறாக சீனாவின் குறிப்பான நிலைமைகளில் சீன குட்டி பூர்ஷ்வா சமுதாயத்திலிருந்து சுயேச்சையாகத் தோன்றியுள்ளது.

அதனால் ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகள், ரஷ்ய மென்ஷ்விக்குகளுடன் ஒப்பிட்டால், வெளித்தோற்றத்தில் இந்த நபர்களுக்கு பல விசேஷ குணாம்சங்கள் தென்பட்டன. சீனாவில் மென்ஷ்விஸம், வடிவத்திலும், வார்த்தையிலும் ‘மென்ஷ்விச எதிர்ப்பு’ ‘லெனினிஸம்’ ‘ போல்ஷவிஸம்’, ‘சர்வதேசக் கொள்கை’ என்று தோன்றிற்று. இத்தகைய கவர்ச்சிகரமான வெளிவடிவம், புரட்சிகரமான பதப்பிரயோகம் முதலியவற்றின் மறைப்புக்குப் பின்னால், மென்ஷ்விக்குகள் நடைமுறையில் லெனினிஸ எதிர்ப்பு, போல்ஷ்விக் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தினர். மென்ஷ்விசத்தை பிரசுரம் செய்து, நடைமுறையில் அனுஷ்டித்தும் வந்தனர். நமது கட்சித் தோழர்கள், ஊழியர்கள் பலருடைய தத்துவப் பயிற்சிக் குறைவின் காரணமாக, மென்ஷ்விஸத்தின் சாராம்சத்தை கண்டுபிடிக்கப் போதிய அனுபவமற்ற இவர்கள், மென்ஷ்விக்குகளின் கவர்ச்சிகரமான வெளிவடிவத்தையும் புரட்சிகரமான பதப்பிரயோகத்தையும் கண்டு பெரும்பாலும் ஏமாந்து போயினர்.

அடிக்கடி மென்ஷ்விக்குகளுக்கு கொஞ்சகாலத்திற்கு கட்சி அங்கத்தினர்கள், ஊழியர்கள் ஆகியோரின் ஆதரவைப் பெறுவதற்கும், கட்சியில் அல்லது கட்சியின் சில பகுதிகளில் தலைமை ஸ்தானங்களைக் கைப்பற்றுவதற்கும் சாத்தியமாயிருக்கிறது. அவர்கள், குட்டி பூர்ஷ்வா அரைகுறை பிரபுத்துவ சீன சமூகத்துடன் பிறந்ததும், சீன சமூகத்தில் கொள்ளைக்காரர்களுடைய மோசடி நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டதுமான குறுங்குழுவாதம், தனி நபர்வாதம் ஆகியவற்றை வளர்த்தார்கள். இவ்வாறு கட்சிக்கு அவர்கள் இழைத்த தீமை விசேஷ வகையில் பெரியாதாயிருந்தது; குறிப்பாக, நுனிப்புல் மேய்வது, கொச்சைப்படுத்துவது, அதிதீவிரத்தில் இறங்குவது, மோசடி செய்வது முதலான வடிவங்களில் பிரதிபலித்தது. சீன மென்ஷ்விசத்தின் பிரதான குணாம்சம் இதுதான்.

(தொடரும்)

3 மறுமொழிகள்

 1. //மற்ற குழு உண்மையான மார்க்சிஸ்டுகள் : அவர்கள் லெனினிஸ்டுகள், போல்ஷ்விக்குகள்; அவர்கள் மார்க்சியத்தை கையாளுகின்றனர்; அதை யதார்த்தமாக்குகின்றனர். நிலைமைக்குத் தக்க முறையில் மார்க்சியத்தை கையாளுவதற்கும் நிலைமை மாறும் பொழுது இந்த வழிகளை மாற்றிக் கொள்வதற்கும் வழிவகைகளைத் தேடுவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். என்ன யோசனை கொடுப்பது, என்ன திசை வழியைப் பின்பற்றுவது என்று முடிவு கட்டுவதற்கு சரித்திரப் பூர்வமான உவமைகளை ஆதாரமாகக் கொள்வதில்லை; நிலவும் நிலைமையை ஆராய்ந்தறிவதையே ஆதாரமாகக் கொள்வர். வேலை செய்யும் பொழுது மேற்கோள்கைளையும், முதுமொழிகளையும் தங்கள் நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக கொள்வதில்லை; நடைமுறை அனுபவத்தைக் கொண்டு சோதிக்கின்றனர்; தவறுகளிலிருந்து படித்துக்கொள்கின்றனர். மற்றவர்கள் தங்கள் பணியை முன்கொண்டு செல்ல கற்றுக் கொடுக்கின்றனர்.

  இந்தக்குழுவில் வார்த்தைக்கும், செயலுக்குமிடையில் வித்தியாசமில்லை . அவர்கள் மார்க்சியம் பேசுகின்றனர்; அவர்கள் செய்வதும் மார்க்சியத்திற்கு ஒத்திருக்கிறது. அவர்கள் உலகத்தைப் பற்றி வியாக்கியானம் செய்வது மட்டுமல்ல; உலகத்தை மாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எப்பொழுதும் அவர்கள் மார்க்சியத்தின் ஜீவனுள்ள, புரட்சிகரமான சக்தியை பேணிப் பாதுகாக்கின்றனர்.//

  இது (இந்த மேற்கோள்) இரு புறமும் கூராக இருக்கும் ஆயுதம். விமரிசனம்-சுயவிமரிசனத்தப் போலவே இருபுறமும் கூரான ஆயுதம்.

  விமரிசனம் சுயவிமரிசனத்தைப் போலவே இதையும் கூட தன் பக்கமிருக்கும் கூர்மைக்கு மட்டும் “கையுறையை” வைத்துக் கொண்டு லாவகமாக பயன்படுத்துபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

  இருபுறமும் பற்றி எரிய வேண்டிய அணையா நெருப்பே உட்கட்சிப் போராட்டம்.

 2. ஐயா! எனக்கு சந்தர்பவாதம் என்றால் என்ன என்று விளக்கம் தர முடியுமா?

  • வணக்கம் சுமன்,

   சந்தர்ப்பவாதம் என்பதன் பொதுவான பொருள், “பொதுவான நோக்கம் / இலக்கு நோக்கிப் பயணிக்கையில், தமக்கு மட்டுமோ அல்லது தம்மைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமோ சாதகமான ஒரு வாய்ப்பு வருகையில் (பொது நோக்கத்திற்கு எதிரான பாதையில்) அதனைப் பயன்படுத்திக் கொண்டு பொது நோக்கத்தைக் கைவிடுவது அல்லது, பின்னுக்குத் தள்ளுவது” என்பதாகும்.

   ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் சந்தர்ப்பவாதம் என்பது குறித்து தோழர் லெனின், இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சி எனும் தனது கட்டுரையில் எளிமையான விளக்கம் ஒன்றை அளிக்கிறார். “சிறுபான்மையினரின் தற்காலிக நலன்களின் பொருட்டு பெருந்திரளான தொழிலாளர்களின் நலன்களை தியாகம் செய்து விடுவது” என்கிறார். அதாவது ஒட்டுமொத்த தொழிலாளிவர்க்கத்தின் விடுதலை என்னும் முழுமையான இலக்கை குறிப்பிட்ட பிரிவினரின் நலனுக்காக கைவிட்டுவிடுவது என்பதாகும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க