நினைவேந்தல் – படத்திறப்பு !

அண்ணாமலை அரங்கம்,
ரயில்வே நிலையம் அருகில்,
கோயம்புத்தூர்.

23-06-2019,
காலை 10 மணி

 

தலைமை :

தோழர் அ.முகுந்தன்,
மாநில தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

உருவ படம் திறப்பு :

தோழர் மனோகரன்,
முன்னாள் பொருளாளர்,
கோவை மண்டல பஞ்சாலைச் சங்கம்.

நினைவேந்தல் உரை :

தோழர் எஸ். கிருஷ்ணமூர்த்தி,
மாவட்டச் செயலாளர்,
சி.ஐ.டி.யு. – கோவை.

தோழர் என். தாமோதரன்,
சி.பி.ஐ.(எம்.எல்) மாநில குழு உறுப்பினர்,
கோவை.

திரு C. நடராஜன்

திரு M.P. ஆறு குட்டி

தோழர் காளியப்பன்,
பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

தோழர் ப.விஜயகுமார்,
பொருளாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

தோழர் மருதையன்,
பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.


ன்பார்ந்த நண்பர்களே !

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோவை மாவட்டத்தின் ஒப்பற்ற புரட்சிகர நக்சல்பாரி தலைவரான தோழர் விளவை இராமசாமி அவர்கள் கடந்த 11.06.2019 அன்று இயற்கை எய்தினார். தான் தலைமையேற்று நடத்திய போராட்டங்களில் தோல்வியை ஒருபோதும் விரும்பாத பிறவிப் போராளியான அவர், உடல் நலிவுற்ற நிலையில் கடந்த 20 மாதங்களாக இயற்கையோடு நடத்திய போராட்டத்தில் மட்டும் ‘தோற்று’ப் போனார். அவரது மறைவு புரட்சிகர இயக்கத்திற்கும், தொழிலாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்திய புரட்சி இயக்கம் ஒரு முன்னணிப் போராளியை இழந்து விட்டது.

கோவையின் வடக்கு வட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான விளாங்குறிச்சியில் பழனியப்பன் – செல்லம்மாள் தம்பதிகளுக்கு 1960-ம் ஆண்டு மார்ச் 6-ம் நாள் பிறந்தார். இளமைக்காலத்தில் இருந்தே பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் மீதும், முற்போக்கு பத்திரிகைகள் மீதும் பெரும் நாட்டம் கொண்டவராக இருந்து வந்தார். முற்போக்கு பத்திரிகைகள் மீதான அவரது ஈர்ப்பு வெறும் இலக்கியத்தின் மீதான காதல் அல்ல. மாறாக சமூகத்தின் மீதும் இந்த சமூகத்தை மாற்ற வேண்டும் என்கிற வேட்கையின் மீதும் உள்ள வெளிப்பாடுதான். புரட்சிகர இயக்கமான நக்சல்பாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு முன்னதாக, 1989-ல் ஞானி நடத்திய “நிகழ்” இதழில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர் எழுதிய கவிதையே இதற்குச் சான்று. அந்தக் காலகட்டத்தில் தன்னைச் சுற்றி அன்றாடம் நடக்கும் சமூக அவலங்களை பல்வேறு பத்திரிகைகளுக்கு செய்தியாக அனுப்புவதை ஒரு வேலைத்திட்டமாகவே கொண்டிருந்தார்.

CS&W பஞ்சாலைத் தொழிலாளியின் மகனான இராமசாமியினுடைய வாழ்க்கைக் கனவு தான் ஒரு ஓவியராக ஆக வேண்டும் என்பதே. ஆனால், தன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, மத்திய அரசின் தேசிய பஞ்சாலைக் கழகத்தைச் (என்.டி.சி) சேர்ந்த முருகன் மில்லில் 1982-ல் சாதாரண பஞ்சாலைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கினார். இவ்வாலையில் அப்ரண்டிசாக பணிபுரிந்தபோது, அவரது சூப்பர்வைசர் அவரிடம் சிகரெட் வாங்கி வரச் சொல்கிறார். இந்தச் செயல் தனது தந்தைக்கு பிடிக்காது எனக்கூறி சூப்பர்வைசரின் உத்தரவை நடைமுறைப்படுத்த மறுக்கிறார். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மறுநாள் இவரது ஐ.டி. கார்டை பிடுங்கிக் கொண்டு தர மறுத்தார் சூப்பர்வைசர். இதை எதிர்த்து, தன்னுடன் பணிபுரியும் அப்ரண்டிஸ் தொழிலாளர்களை இணைத்துக் கொண்டு போராடி, நிர்வாகத்தை பணிய வைத்தார். அன்று முதல் சாதாரண தொழிலாளி இராமசாமி தோழர் இராமசாமியாக அறியப்பட்டார்.

இயல்பாகவே பஞ்சாலைகளில் தொழிலாளர்களின் வேலை புல்நைட், பகல்நைட் என ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கைத் தரமோ நாளுக்கு நாள் மோசமாகி போய்க்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தொழிலாளர்களின் பாதுகாவலனாக, அவர்கள் பிரச்சினைகளை நிர்வாகத்திடம் பேசும் தொழிற்சங்கத் தலைவராக உருவெடுத்தார், இராமசாமி. துவக்கத்தில் முருகன் மில்லில் இயங்கி வந்த ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் கிளைச்செயலாளராக பொறுப்பேற்று முருகன் மில்லிலும் என்.டி.சி. நிறுவனத்தின் பிற மில்களிலும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இராமசாமியின் குரல் விரிவடையத் துவங்கியது. வெறும் தொழிற்சங்க நடவடிக்கை என்பதில் இருந்து தாண்டி, தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்துக்கான வழிகுறித்து தனது சித்தனையை விரிக்கத் துவங்கினார். சரியான அமைப்புக்கான தேடலையும் துவங்கினார். இந்தத் தேடலின் இறுதியில் நக்சல்பாரி புரட்சிகர அமைப்பில் இயங்கத் துவங்கி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் முன்னோடிகளில் ஒருவராக உயர்ந்தார். அதன் நிறுவனர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பு.ஜ.தொ.மு. மாநில துணைத் தலைவராகவும், கோவை மாவட்டத் தலைவராகவும், பு.ஜ.தொ.முவுடன் இணைக்கப்பட்ட கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்று கொங்கு மண்டலத்தில் புரட்சிகர தொழிற்சங்கத்தை கட்டியமைப்பதில் பெரும் பங்காற்றினார்!

1980-களில் நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தின் வழிகாட்டுதலில் தன் அரசியல் பயணத்தை துவங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளி வர்க்கத்திற்காக செயலாற்றி வந்தார். எந்தப் பிரச்சினை என்றாலும், வெற்றியோ, தோல்வியோ களத்தில் இறங்குவோம் என போராட்டங்களில் உறுதியாக நின்றவர். “உழைக்கும் மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு விசயத்திலும், எதிரி எத்தகைய பலமானவனாக இருந்தாலும், தோற்கக்கூடிய சூழலாக இருந்தாலும் போராடித் தோற்க வேண்டும் தோழரே! பாட்டாளி வர்க்கத்தின் தற்காலிகத் தோல்வி கூட கவுரவமானதாக இருக்க வேண்டும் தோழரே!” இதுதான் தோழர் இராமசாமியின் போர்க்குரல்! தோழர் இராமசாமி உடல் நலிவுற்று வீழ்ந்த நிமிடம் வரையிலும் இந்தக் கம்பீரக்குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.

தோழர் இராமசாமி பணியாற்றிய முருகன் மில்லை உள்ளடக்கிய என்.டி.சி. நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது என்கிற போதிலும், தொழில் நசிவைக் காரணம் காட்டி, பல மில்களை மூடுவது, அதன் சொத்துக்களை அற்ப விலைக்கு விற்பது போன்ற அயோக்கியத்தனங்களுக்கெதிராக போர்க்குரல் எழுப்பிய தோழர் இராமசாமி, என்.டி.சி தொழிலாளர் சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தலை நிர்வாகம் பல ஆண்டுகளாக நடத்தாமல் தொழிற்சங்க கட்டைப் பஞ்சாயத்துத் தலைவர்களுடன் பேரம் பேசிக் கொண்டிருந்ததை கண்டு கொதித்துப் போனார். இதன் விளைவாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் ”கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்” என்கிற சங்கத்தை கட்டியமைத்து ஒத்த கருத்துடைய தொழிலாளர்களை அணிதிரட்டினார். தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் பெற்றார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடந்த சங்க அங்கீகாரத் தேர்தலில் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்துக்கு தொழிற்சங்க அங்கீகாரத்தை வழங்கிய தொழிலாளி வர்க்கம் தோழர் இராமசாமியை தனது தலைவராக அங்கீகரித்து, செங்கொடியை உயர்த்திப்பிடித்தது.

கோவை பகுதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, சுவரொட்டி ஓட்டுவதற்கு கூட தடை இருந்தபோது அந்தத் தடைக்கு எதிராக, போலீஸ் இராஜ்ஜியத்தை அம்பலப்படுத்தி வீதியில் இறங்கி போராடியதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக 2015-ம் ஆண்டு பாசிச ஜெயாவின் விடுதலை குறித்து பு.ஜ.தொ.மு. சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளைக் காரணம் காட்டி தோழர் மற்றும் அவரது மகன் மீது கோவை போலீஸ் பல்வேறு வழக்குகளில் கைது செய்து சிறையில் தள்ளியது.

அதேபோல கோவை மண்டலத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றதில் தோழரின் பங்கு அளப்பரியது. தொழிலாளர்களுடைய போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு, அவர்களின் போராட்ட பந்தலிலேயே அமர்ந்து உரையாடித் தொழிலாளர்களுக்கு, எளிமையாக வர்க்க அரசியலை விளக்கி உணர்வூட்டுவதில் அவருக்கு நிகர் அவரே! ஆசான் லெனினின் ”என்ன செய்ய வேண்டும்?” நூலை தொழிலாளிகளும் எளிமையாக புரிந்து கொள்ளும் விதமாக காணொளி மூலமாக விளக்கி, தமிழகத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஒரு வழிகாட்டியாக தன்னை பதிவு செய்துள்ளார்.

படிக்க:
தோழர் சீனிவாசன் : போராட்டமும் மகிழ்ச்சியும் !
சுத்தியால் அடித்துத்தான் முதலாளி எங்களை எழுப்புவார் !

தான் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் உறுதி, கொள்கையில் விடாப்பிடியான போராட்டம், அரசியல் முன்முயற்சி, இழப்புக்கு அஞ்சாத தலைமை பண்பு ஆகியவை தோழர் இராமசாமியின் அடையாளங்கள். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னணி படைவீரராக களம் கண்டவர். குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதை எதிர்த்தும், தேசிய பஞ்சாலைக் கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது எனவும் கடுமையாக எதிர்த்தவர். கோவை மண்டல பஞ்சாலைச் சங்கத்தை நிறுவி, சிதறிக் கிடந்த பஞ்சாலைத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து இறுதிவரை போராடினார். அதனாலேயே நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு ஆளாகி தன் வேலையையும் இழந்தார். வேலை இழப்பு அவரது உறுதியையோ, பாட்டாளி வர்க்கத்துக்கான பணிகளையோ ஒருபோதும் பாதித்தது இல்லை .

“கம்யூனிஸ்ட் என்பவர் பரந்த உள்ளம் படைத்தவராக இருக்க வேண்டும். அவர் நேர்மையும் ஊக்கமும் உடையவராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களை தனது சொந்த உயிர் போல கருத வேண்டும். தனது சொந்த நலன்களை புரட்சியின் நலன்களுக்கு கீழ்ப்படுத்த வேண்டும். எங்கும் எப்போதும் ஏற்றுக் கொண்ட கோட்பாட்டினை உயர்த்திப் பிடிப்பதும் தவறான கருத்துக்கள், செயல்பாட்டுக்கு எதிராக சளைக்காமல் போராட்டம் நடத்தவும் வேண்டும்” என்கிற மாவோவின் கூற்றுக்கு இணங்க தன்னுடைய புரட்சிகர இயக்க வாழ்க்கையை சமரசம் இன்றி போராடி வாழ்ந்து மறைந்தவர் தோழர் விளவை இராமசாமி.

உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்து மரணமடைந்த தோழரின் அர்ப்பணிப்பை பற்றிக் கொள்ளுவோம்! நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! அவர் ஏற்றுக் கொண்ட மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! ஆளும் தகுதியை இழந்துவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை வீழ்த்த தோழர் விளவை இராமசாமியின் நினைவேந்தலில் உறுதியேற்போம்!

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி.
தொடர்புக்கு: 94444 42374, 90924 60750

3 மறுமொழிகள்

  1. தோழர் விளவை ராமசாமி நினைவை நெஞ்சில் ஏந்துவோம்..!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க