privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்சுத்தியால் அடித்துத்தான் முதலாளி எங்களை எழுப்புவார் !

சுத்தியால் அடித்துத்தான் முதலாளி எங்களை எழுப்புவார் !

-

மெல்லிய இசையுடன் துவங்கும் அந்த காணொளியில் இளம் சிறுவன் ஒருவன் மெல்ல நடக்கிறான். வயதுக்கேற்ற உடல்வாகுடன் இருந்தாலும் நடையோ 60 வயது முதியவர் போல இருக்கிறது. அவன் சென்ற இடத்தின் அருகிலேயே இன்னொரு சிறுவன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். அவனால் சூரிய வெளிச்சத்தை எதிர் கொள்ள முடியவில்லை. நான்கு வருடங்கள் சூரியனையே பார்க்காமல் இருந்ததன் விளைவால் கண் கூசுகிறது. அது மட்டுமன்றி அவர்கள் உடல்களில் பல இடங்களில் தழும்புகள் இருக்கின்றன. முன்னவன் ஷ்யாம் பிந்தையவன் லக்கி. இவ்விரு சிறுவர்களுக்கும் நோயெல்லாம் ஒன்றும் இல்லை. அவர்கள் இருவரும் குழந்தை தொழிலாளிகள்.

 முதலாளி சுத்தியலால் அடித்துதான் எங்களை ஏழு மணிக்கு எழுப்புவார்.
முதலாளி சுத்தியலால் அடித்துதான் எங்களை ஏழு மணிக்கு எழுப்புவார்.

இவர்கள் போலவே இன்னும் ஏராளமான சிறுவர்கள் அந்த சிறிய குடிலை சுற்றி இருந்தார்கள். அவர்கள் செல்வதுடன் அந்த காணொளி முடிகிறது. இவர்கள் அனைவரும் 2017 பிப்ரவரி மாதம் டெல்லி சீலம்பூரில் உள்ள ஒரு ஜீன்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்டவர்கள். மொத்தம் 26 சிறுவர்கள் அனைவரும் 8 லிருந்து 13 வயதிற்குட்பட்டவர்கள்.

அச்சிறுவர்களின் பணிச்சூழல் பற்றி அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.

“நாங்கள் தினமும் காலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை மட்டுமே தூங்க அனுமதிக்கப்பட்டிருந்தோம். முதலாளி சுத்தியலால் அடித்துதான் எங்களை ஏழு மணிக்கு எழுப்புவார். கடந்த நான்கு வருடங்களாக தினசரி இரு வேலை உணவாக உருளைக்கிழங்கும் சோறும் மட்டுமே. இந்த உணவு மாறியதே இல்லை. அறையிலிருந்து ஒரு நொடி கூட வெளியே செல்ல எங்களுக்கு அனுமதி கிடையாது.” இதை சொல்வது வெறும் ஏழே ஏழு வயதான ரஹீம்.

இவர்களது வேலை ஜீன்ஸ் துண்டுகளை கத்தரித்து அதை பேக் செய்வது. பத்து நிமிடத்தில் பத்து எண்ணிக்கை. இதில் கடைசியாக முடிப்பவருக்கு சுத்தியல் அடி கட்டாயம். கொஞ்சம் அதிகமாக உணவு சமைத்தால் சுத்தியல் அடி. வேலை செய்கையில் தூங்கினால் சுத்தியல் அடி. கழிவறைக்கு சென்றால் கூட சுத்தியல் அடி என கிட்டத்தட்ட நரகத்திலிருந்து மீண்டுள்ளார்கள்.

அந்த சிறுவன் ஷியாம் மேற்கண்ட தொழிற்சாலைக்கு ஒவ்வொரு மாதமும் புதிதாக ஐந்து சிறுவர்கள் வருவதை பார்த்திருக்கிறான். நாங்கள் அவனை மீட்கையில் அவனால் நகரக் கூட முடியவில்லை. நாங்கள் அவனை தூக்க வேண்டியிருந்தது. இப்போது பிஸியோதெரபி சிகிச்சை தொடர தொடர கொஞ்சம் கொஞ்சமாக அடியெடுத்து வைக்கிறான். நாங்கள் அங்கு பார்த்த ஒவ்வொரு சிறுவனும் காயத்துடனும் ஊட்டச்சத்து குறைபாட்டுடனுமே இருந்தான் என்கிறார் மீட்புக் குழுவில் இருந்த தன்னார்வ தொண்டர் ஒருவர்.

“நாங்கள் மிகச்சிறிய அறை ஒன்றினுள் அடைக்கப்பட்டிருந்தோம். அங்கு சூரிய வெளிச்சம் என்பதே இல்லை. நான் மீட்கப்பட்ட பொழுது என்னால் கண்ணையே திறக்க முடியவில்லை. நாங்கள் குளிக்கவோ கழிவறை செல்லவோ கூட அனுமதிக்கப் படவில்லை. நாங்கள் தினமும் சுமார் 5000 எண்ணிக்கையில் துணிகளை பேக் செய்ய வேண்டியிருந்தது.” இதைக் கூறுவது லக்கி.

இவர்கள் அனைவரும் பீகாரை சேர்ந்த சிறுவர்கள். அதில் அறுவர் குழந்தை கடத்தல் கும்பலால் வந்தவர்கள். இப்போது அந்த தொழிற்சாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூஹி சவுத்ரி

ஓரிரு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக-வின் துணை அமைப்பான மகிளா மோர்ச்சா வின் ஜல்பைகுரி மாவட்ட தலைவர் ஜூஹி சவுத்ரி குழந்தை கடத்தல் கும்பலில் முக்கிய புள்ளியென போலிசால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். விசாரணையின் போது செல்வாக்கு மிக்க பாஜக தலைவர்கள் பலரது பெயரையும் கூறியிருப்பதோடு தான் ஒரு அப்பாவி எனவும் கூறியிருக்கிறார்.

இது மட்டுமன்றி பாஜக-வின் மாநிலத் தலைவர் திலீப் கோஷ், ஜூஹி சவுத்ரி குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்த குற்றவாளியுடன் கட்சி அனுமதி இல்லாமல் டெல்லி சென்று கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருக்கிறார் எனவே நாங்கள் அவரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

இவை மட்டுமல்லாமல் காவல்துறை விசாரணையில் முன்னுக்கு பின் உளறி கொட்டியுள்ளார்கள். பிறந்த குழந்தைகள் கடத்தலில் நேரடியாக ஜூஹி ஈடுபட்டுள்ளார் என சிஐடி துணை இயக்குனர் ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.

இவ்விரு செய்திகளும் நமக்கு அறியத்தருபவை எப்படிப்பட்ட ஒரு குற்றக் கும்பலின் ஆளுகையின் கீழ் எவ்வளவு ஒரு மோசமான முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத்தான். ஒரு ஜூஹி சவுத்ரி என நாம் இதை யோசிக்க முடியுமா…? கலவரங்கள், குற்றக் கும்பல்கள், ரவுடித் தலைவர்கள், குண்டு தயாரித்தல், அசீமானந்தா, பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பது தொடங்கி ரவுடிகளை நேரடியாக ரெக்ரூட் செய்வது முதல் சமீபத்தில் பினராயி விஜயன் தலைக்கு விலை வைத்தது வரை ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் க்ரைம் ரேட் மற்ற எல்லா கட்சியினரை விடவும் அதிகம்.

சுமங்கலி திட்டம்
சுமங்கலி திட்டம்

உலக ஆய்வறிக்கை ஒன்றின்படி அனைத்து உதிரி வேலைகள் பார்ப்பவர்களை உள்ளிட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட நவீன அடிமைகள் இந்தியாவில் அதிகமாம். சுமார் 18 மில்லியன் பேர். இது இந்திய மக்கள் தொகையில் 1.4% என்கிறார்கள். இந்த புள்ளிவிவரமே மிகக்குறைவு என்றே தோன்றுகிறது.

ஷியாம் லக்கியை போலவே தமிழகத்து பஞ்சாலைகளில் கேம்பஸ் கூலி என்ற பெயரிலும் சுமங்கலித் திட்டம் என்ற பெயரிலும் அன்றாடம் உழன்று கொண்டிருப்பவர்கள் ஏராளமான சிறுமிகள் மற்றும் சிறுவர்கள். அவர்கள் 14 என்கிற வயதைத் தாண்டி 15 -லும் 16 -லும் இருப்பதால் நம் சட்ட வரையறையில் அவர்கள் குழந்தை தொழிலாளர்கள் இல்லை.

சுமங்கலித் திட்டத்தில் பணிக்கு வரும் தொழிலாளிகள் மேலதிகாரிகளினால் அடையும் பாலியல் சீண்டல் துன்புறுத்தல்கள் சொல்லொணாத் துயரம் தோய்ந்தவை. இவையெல்லாம் கேள்விக்கு அப்பாற்றட்டவையாக மாறியிருக்கிறது. எட்டு மணி நேர வேலையும் அடுத்த சிப்டிற்கு ஆள் வரவில்லையெனில் அதையும் சேர்த்து பார்க்க வேண்டிய கட்டாயமும் இங்கு மிக இயல்பானதாக ஆக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இந்துத்துவமும் முதலாளித்துவமும் கலந்து நம் மக்களை கசக்கி பிழிகிறது. குழந்தை தொழிலாளர்களை மீட்பதோ அவர்களை சமூக நிலையில் உயர்த்துவதோ, பஞ்சை பராரிகளாய் இருக்கும் ஒப்பந்த தொழிலாளரை விடுதலை செய்வதோ பார்ப்பனியத்தையும், முதாளித்துவத்தையும் எதிர்த்து போராடுவதில் இருக்கிறது.

(ஹிந்துஸ்தான் டைம்ஸில் வந்த கட்டுரையை தழுவி எழுதப்பட்டது)

– விளவை இராமசாமி

செய்தி ஆதாரம்:
Delhi jeans factory horror: Kids hit with hammer, made to work for 22 hours
Bengal child trafficking: Arrested BJP woman leader names ‘political personalities’

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க