முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தோழர் சீனிவாசன் : போராட்டமும் மகிழ்ச்சியும் !

தோழர் சீனிவாசன் : போராட்டமும் மகிழ்ச்சியும் !

-

chennai-srinivasan-10

மே 5-ம் தேதி தியாகராய நகர் செ.தெ.நாயகம் பள்ளியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் தோழர் சீனிவாசனின் மறைவுக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஒருங்கிணைத்தார்.

தியாகிகளுக்கு வீரவணக்கம்

“கோடானு கோடி மக்களுக்காக குருதி சிந்திய தோழர்களே….” என்ற தியாகிகளுக்கு வீர வணக்க பாடலுடன் கூட்டம் தொடங்கியது.

தோழர் சீனிவாசனின் மகள் தோழர் பொற்கொடி, மக்கள் கலை இலக்கியக் கழத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன், விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் ஏழுமலை, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் கார்த்திகேயன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப தங்கராசு, பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் அஜிதா, மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் தோழர் சீனிவாசன் போன்ற தியாகிகளின் நினைவேந்தலின் முக்கியத்துவத்தை விளக்கி உரையாற்றினார்.

தோழர் வெங்கடேசன், தலைமை உரை

தோழர் வெங்கடேசன்ஒரு கம்யூனிஸ்டாக நாம் கடந்த காலத்தைப் பற்றி பரிசீலனை செய்கிறோம். தற்போது நடப்பவற்றைப் பற்றி ஆய்வு செய்கிறோம். நாளை வரும் காலத்தை எதிர் கொள்ள திட்டமிடுகிறோம். இவற்றின் மூலம் மக்கள் விடுதலைக்காக ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கிறோம்.

அந்த வகையில் தன் வாழ்நாளை மக்கள் பணிக்காக அர்ப்பணித்து மறைந்த தோழர் சீனிவாசனின் போராட்டங்களை நினைவு கூர்ந்து அவரது சிறந்த பண்புகளை கற்றுக் கொள்ளுதலை இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கமாக கருதலாம்.

தோழர் சீனிவாசன் கட்சி வேலைகளை எந்த நேரத்திலும் எந்த சுணக்கமும் இல்லாமல் மேற்கொள்பவராக இருந்தார். அவரது சிறந்த பண்புகளை வெறுமனே போற்றுவது போதாது, அவரைப் போல வாழ்வதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலி.

போலி கம்யூனிஸ்ட் கட்சியான சிபிஎம்.மில் பகத்சிங் புகழை போற்றுகிறார்கள். ஆனால், பகத்சிங் போல வாழ வேண்டும் என்று கட்சியின் இளைஞர்களுக்கு கற்பிப்பதில்லை. ஆனால், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் பகத்சிங் போல வாழ வேண்டும் என்று போராடுகின்றனர்.

நாம் அனைவரும் தோழர் சீனிவாசனைப் போல வாழ்ந்து காட்ட வேண்டும்.

தோழர் கார்த்திகேயன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

நான் 2000-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கல்லூரிக்கு வந்து மாணவர்களை ஒன்று சேர்த்து அமைப்பாக்கியதில் தோழர் சீனிவாசனின் பங்கு முக்கியமானது. புமாஇமுவில் அன்று அதிகம் பேர் இல்லை.

தோழர் கார்த்திகேயன்2004-ல் பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மாணவர்களின் கல்வி உதவித் தொகையை தனது கணக்கில் போட்டு வட்டி சம்பாதித்து வந்ததை வந்ததை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. கல்லூரிக்குள் மாணவர் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கல்லூரிக்குள் போய் மாணவர்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தும் போது கல்லூரி நிர்வாகம் எங்களை பிடித்து, அடித்து ஆடைகளை களைந்து போலீசில் ஒப்படைத்து விட்டார்கள். தோழர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தோழர் சீனிவாசனுடன் போலீஸ் அனுமதி பெறப் போயிருந்தோம். போலீஸ் அதிகாரி, “என்ன ஒரு 6-7 பேர் வருவீங்களா, வள்ளுவர் கோட்டத்தில் நடத்துறீங்களா? கலெக்டர் ஆபிஸ் முன்னே நடத்துங்க” என்று ஏளனமாக பேசிக் கொண்டிருந்தார்.

தோழர் சீனிவாசன், “இன்றைக்கு உங்களிடம் அனுமதி கேட்க வந்திருக்கிறோம். எதிர்காலத்தில் லட்சக் கணக்கான மக்கள் அணி திரளும் போது நாங்கள் அனுமதி கேட்க வர மாட்டோம். நீயாகவே வந்து எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியிருக்கும்” என்று பதிலளித்தார்.

அதை கடந்த மாதங்களில் ஈழத் தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் சார்பில் நடந்த போராட்டங்களில் மெய்ப்பித்து காட்டியிருக்கிறோம். சென்னையில் 800 மாணவர்களைத் திரட்டி பேரணி நடத்தினோம். போலீஸ் அனுமதி வாங்கவில்லை. அவர்களாக வந்து பாதுகாப்பு அளித்தார்கள்.

சின்ன தீப்பொறி பெரும் நெருப்பாக பரவுவது போன்ற இதுதான் நக்சல்பாரி அரசியல் என்று நடைமுறையில் கற்பித்தார் தோழர் சீனிவாசன். தோழரின் உறுதிதான் எங்களை வலுப்படுத்தியது.

இன்னொரு முறை போஸ்டர் ஒட்டும் போது பிடித்துச் சென்று விட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனின் உதவி ஆணையர், “நக்சலைட்டுக்கும் நக்சல்பாரிக்கும் என்ன வித்தியாசம்னு சொல்லு, உங்கள உடனே ரிலீஸ் பண்ணிர்றேன்” என்று மாணவர்களை கிண்டல் செய்தார். அப்போது தோழர், “அவங்க கிட்ட ஏன் கேக்கறே, நான்தான் தலைவர், என் கிட்ட கேளு ” என்று முன் வந்தார். “நக்சலைட்டுக்கும் நக்சல்பாரிக்கும் என்ன வித்தியாசம்னு உங்கிட்ட நான் ஏன் சொல்லணும், சொல்ல முடியாது” என்று பதில் சொன்னார். உறுதியாக அதிகார வர்க்கத்தை எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தை அவரிடம் கற்றுக் கொண்டோம்.

சமச்சீர் கல்விக்கான போராட்டத்தின் போது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், சந்தோஷ் நகரில் கூட்டம் நடந்த போது தானும் வருவதாக கிளம்பி விட்டார். நான் போட்ட விதைகள் முளைத்திருக்கின்றன என்று சந்தோஷப்பட்டார்.

விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் ஏழுமலை

“நக்சல்பாரிதான் நக்சலைட்டு, அதைப் பத்தியெல்லாம் உன்கிட்ட விளக்க வேண்டியதில்லை” என்று தோழர் சீனிவாசன் சொன்னதாக கேட்டதும் எனக்கு தோழர் ரங்கநாதனின் நினைவு வந்தது.

தோழர் ஏழுமலை1970-களில் கடுமையான அடக்குமுறை நிலவியது. நான்கு பேர் ஒண்ணா கூடி நின்று பேச முடியாது. அந்த சூழலில் தோழர்கள் நான்கு நாட்கள் பட்டினியாக வேலை செய்வார்கள். அப்போ சோறு எல்லாம் கிடையாது, எங்காவது அலைந்து திரிந்து கூழ் கொண்டு வந்து கொடுப்போம்.

அன்றைய சாகச அரசியலை கேள்வி கேட்டு மக்கள் திரள் அரசியலை முன் வைத்தார் தோழர் ரங்கநாதன். கழைக்கூத்தாடி கம்பத்தில் ஆடினாலும், காசு வாங்குவதற்கு கீழே இறங்கி மக்கள் மத்தியிலதான் வரணும். கழைக்கூத்தாடி போல அரசியல் செய்தால் பலனில்லை. மக்கள் மத்தியில வேலை செஞ்சு மக்களுக்கு அரசியல் கத்துக் கொடுங்க என்று போராடினார் தோழர் ரங்கநாதன். அவர் இறந்த பிறகும் சி.பி.எம். போலி கம்யூனிஸ்டுகள் அவருக்கு வஞ்சம் செய்தாங்க, அவர் நினைவாக நிழற்குடை கட்டறதைக் கூட எதிர்த்தாங்க.

1983க்குப் பிறகு விவசாயிகள் விடுதலை முன்னணியோடு தொடர்பு ஏற்பட்டது. 1991 முதல் கருவறை நுழைவு போராட்டம், இறால் பண்ணை அழிப்பு போராட்டம் என்று பல போராட்டங்களில் தோழர் சீனிவாசனோடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம். 1986-ல் வட்டார மாநாடு நடத்தினோம். கம்யூனிச இயக்கத்தை மக்கள் திரள் அரசியல் வழியில் செலுத்துவதற்கான பணியில் அரும்பாடு பட்ட தோழர்களில் தோழர் சீனிவாசனும் ஒருவர். விவசாயி வரப்பை வெட்டி பயிருக்கு தண்ணீர் கொண்டு வருவது போல கம்யூனிச அரசியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அவர் வெற்றி கண்டார்.

அந்த போராட்டங்களின் விளைவுதான் இன்று இவ்வளவு பேர் அவரது நினைவேந்தல் நிகழ்வுக்கு கூடியிருப்பது. தோழர் ரங்கநாதன் நிலப்பிரபுக்களை ஒழிக்க வேலை செய்தார். அவர்கள் ஒழிந்து விட்டார்கள். அதன் பிறகு மக்களுக்கு சொத்து, படிப்பு வைத்துக் கொள்ள உரிமை வந்தது, ஆனா எதுவுமே நிரந்தரம் இல்லை என்று மாற்றியிருக்கிறார்கள். இந்த சூழலில் மக்கள் திரள் அரசியலுக்காக வேலை செய்தவர் தோழர் சீனிவாசன்.

தோழர் சீனிவாசன் மாற்றுக் கருத்து உடையவர்களையும் நட்புடன் அணுகுபவர். எங்கள் வீட்டுக்கு தோழர் வரும் போது குடும்பத்தினர் சரியாக பேசக் கூட மாட்டார்கள். ஆனால் ஒவ்வொரு தடவையும் அவர்களைப் பற்றி தவறாமல் விசாரிப்பார். எங்கள் ஊரிலிருந்து கோவைக்கு அனுப்பிய இளம் பெண் தோழர்களை சிறப்பான தோழர்களாக வளர்ப்பதில் அவர் பங்களித்தார்.

இன்றைக்கு அமைப்பின் சார்பாக தொடர்ச்சியான வெளியீடுகள் வருகின்றன. எங்க ஊரில் அதிமுக காரன் அதை எல்லாம் படிச்சிட்டு, “என்ன தோழரே, நானும் உங்க அமைப்புக்கு உதவி செய்றேன். 2000 ரூபாய் தருகிறேன்” என்கிறான். இதுதான் நம் அரசியலின் வெற்றி.

இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று புதிய ஜனநாயக புரட்சியை நடதுதவோம் என்று உறுதி பூணுவோம்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன்

தோழர் சீனிவாசன் சுமார் 35 ஆண்டுகாலம் புரட்சிகர அரசியலை பின்பற்றியவர். அவரது இறுதி ஊர்வலக் காட்சிகள் இன்னும் மனதை விட்டு அகலாத நிலையில் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அவருடன் இணைந்து 25 ஆண்டுகள் நான் அமைப்பு பணி செய்தேன்.

தோழர் காளியப்பன்அவர் எந்த வேலையையும் முன் நின்று செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர் வேலை செய்வதை ஒரு போதும் சுமையாக எண்ணியதில்லை. வேண்டா வெறுப்பாக வேலை செய்ததில்லை. அமைப்பு வேலைகளை பெருமிதத்துடன் செய்வார்.

அவர் சென்னையை விட தஞ்சையில் பெரிதும் அறியப்பட்டவர். ஆண்டு தோறும் நடக்கும் தமிழ் மக்கள் இசைவிழாவில் ஒருங்கிணைப்பு வேலைகளை செய்தார். அந்த விழாவுடன் தொடர்புடைய ஒவ்வொருவருடனும் நெருங்கி பழகுவார்.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்

என்ற குறளுக்கு ஏற்ப அயராது வேலை செய்யும் இயல்புடையவர்.

அமைப்பு வேலை என்று பேச ஆரம்பித்தாலே அதை செய்வதற்கான திட்டங்களை மனதில் போட ஆரம்பித்து விடுவார். ஒரு போராட்டத்தை செய்யலாம் என்று ஆலோசனை நடத்தும் போதே நிறைவேற்றும் மனநிலைக்கு வந்து விடுவார். அதனால் பல முறை விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்.

எந்த வேலையையும் மறுத்ததே கிடையாது. யோசிக்காமலேயே ஒத்துக் கொள்வார். பெரிய வேலை, சின்ன வேலை என்று தோழர் சீனிவாசன் பாகுபாடு பார்த்ததே கிடையாது. “எவ்வளவு சிறிய வேலை செய்யவும் தயங்கக் கூடாது. சிறிய வேலைகள்தான் பெரிய மாற்றங்களின் ஆதாரங்கள்” என்று லெனின் கூறியிருக்கிறார். அதை முழுமையாக நம்பி பின்பற்றியவர் அவர்.

தோழர் அசாத்திய தைரியசாலி, யாருக்கும் பயப்பட மாட்டார் என்று எல்லோருக்கும் தெரியும். யாரிடம் பேசினாலும் தைரியமாக பேசுவார். ஒரு கலெக்டரிடம் பேசும் போது அதிகாரம் படைத்தவரிடம் பேசுகிறோம் என்ற எண்ணமே அவரிடம் இருக்காது.

அரிதான நோய் கணைய புற்று நோய் வந்து இன்னும் 2-3 மாதங்கள்தான் உயிரோடு இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கெடு வைத்த பிறகும் அந்த மன உறுதியோடுதான் 1 ஆண்டு காலம் ஆயுளை நீடித்திருந்தார்.

“காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன்” எனற பாரதியின் வரிகளைப் போல நெஞ்சுறுதியுடன் மரணத்தை எதிர் கொண்டார்.

அவரது வாழ்க்கை தோழர்களுக்கு சிறந்த முன்னுதாரணமான ஒன்று.

தோழர் சுப தங்கராசு, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர்

தோழர் சுப தங்கராசுதோழர் சீனிவாசன் ஒரு கம்யூனிஸ்ட் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தார். கம்யூனிஸ்ட் எளிமையாக வாழ வேண்டும் என்றால் அவர் எளிமையாக வாழ்ந்தார், ஒரு கம்யூனிஸ்ட் துணிச்சலாக செயல்பட வேண்டும் என்றால் அவர் துணிச்சலாக செயல்பட்டார். ஒரு கம்யூனிஸ்ட் பாசமாக இருக்க வேண்டும்; மக்களையும் தோழர்களையும் அமைப்பையும் மதிப்புடன் நடத்த வேண்டும் என்றால் அதைச் செயதார். கடினமான வேலைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கடினமான வேலைகளை ஏற்றுக் கொண்டார்.

கோட்பாட்டளவில் இவற்றை ஏற்றுக் கொள்வது எளிது. ஓரிரு ஆண்டுகள் செயல்படுவதும் எளிது. வாழ்நாள் முழுவதும் செயல்படுவது அரிது. அதை செய்து காட்டியவர் தோழர் சீனிவாசன்.

இன்று நமது போராட்டங்கள் லட்சக்கணக்கான மக்களை சென்றடைகின்றன. தோழர் சீனிவாசன் வேலை செய்ய ஆரம்பித்த காலங்களில் அமைப்பில் ஒரு சிலர்தான் இருந்தார்கள். ஒரு முறை பத்திரிகை விற்பனையில், எம்.ஜி.ஆரை கிண்டலாக சித்தரித்த அட்டைப் பட கார்ட்டூனுக்காக அதிமுக காரர்கள் தகராறு செய்து அவரை அடித்து சட்டையை கிழித்து விட்டனர். சட்டை இல்லாமலேயே பூந்தமல்லியிலிருந்து வீட்டுக்கு வந்தார்.

அவர் கனவு கண்ட லட்சியத்தை முடிக்க நாம் உறுதியேற்க வேண்டும். புரட்சியை சாதிக்கும் வரை அவரது பணியை தொடர வேண்டும்.

பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் அஜிதா

என்னை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமானவர் தோழர் சீனிவாசன். கம்யூனிச அரசியலை ஆசான்களின் நூல்களிலிருந்து கற்றுக் கொண்டதை விட மூத்த தோழர்களிடமிருந்து நடைமுறையில் நிறைய கற்றுக் கொண்டேன்.

தோழர் அஜிதாவினோதகன் மருத்துவமனை போராட்டம், கோக்கோ கோலா போராட்டம், திருவையாறு தமிழிசை போராட்டம் என்று பல போராட்டங்களில் தோழரின் தலைமையில் கலந்து கொண்டிருக்கிறேன். போராட்டத்தை மகிழ்ச்சியுடன் எதிர் கொள்வது எப்படி என்று அவரைப் பார்த்து கற்றுக் கொண்டேன். கடும் வெயிலில் வேலை செய்ய வேண்டியிருக்கும், நீண்ட தூரம் நடந்து போக வேண்டியிருக்கும். அவற்றை எல்லாம் மன உறுதியுடன் சமாளிப்பது எப்படி என்பதை தோழர் சீனிவாசனிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

தனது ஒரு செயல் மூலம் போராட்டத்தின் மொத்த சூழலையே மாற்றி விடுவார். அவரது அணுகுமுறைக்கு ஒரு எடுத்துக் காட்டு:

திருவையாறு தமிழிசை போராட்டத்தில் தோழர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழிசைக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினோம். அனைவரையும் பிடித்து, ஆண் தோழர்களை ஆடைகளை களையச் செய்து ஜட்டியோடு நிற்க வைத்து அடித்தது போலீஸ். தோழர்கள் போலீஸ் அடிக்கும் போது அவர்களுடன் வாக்குவாதம் புரிந்தார் தோழர் சீனிவாசன்.

பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகளும் Q பிரிவு அதிகாரிகளும் வந்து டிரெஸ் போட்டுக் கொள்ளும்படி சொன்னார்கள். அந்த சூழ்நிலையிலும் போராட்டத்தை விட்டுக் கொடுக்கவில்லை தோழர் சீனிவாசன். “நீதானே கழட்டினாய், நீயே எடுத்துக் கொடு” என்று கடைசி வரை தனது வேட்டியை எடுத்துக் கொள்ளவேவில்லை.

தோழர் சீனிவாசனிடம் பேசுவதற்கு தயக்கமே இருந்ததில்லை. மனப்பூர்வமாக சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்வார். அவரை விமர்சனம் செய்தாலும் ஏற்றுக் கொள்வார்.

அவர் நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் அவரை பார்க்க மருத்துவமனைக்கு போயிருந்தோம். ஒரு கம்பீரமான தோழர் நோயால் மெலிந்து தளர்ந்திருப்பதை பார்த்து கண் கலங்கினேன். அப்போது, “ஏன் அழுறீங்க, நான் கம்யூனிஸ்டா வாழ்ந்தேன், கம்யூனிஸ்டா சாகப்போறேன். அதை நினைச்சு சந்தோஷப்படுங்க” என்று சொன்னார்.

இந்த நேரத்தில் தோழரின் வாரிசுகளாக அவரது பணியை முன்னெடுத்துச் செல்வோம் என்று உறுதி ஏற்கிறேன்.

தோழர் பார்த்தசாரதி, மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

பொதுவாக ஒரு துறையில் முன்னோடியாக, அந்த துறையில் முன்னர் பணியாற்றியவர்களைப் பற்றிச் சொல்வது வழக்கம். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் போராட்டங்களுக்கு முன் உதாரணமாக சொல்வது தோழர் சீனிவாசனைத்தான். அவரை சந்திப்பதற்கு முன்பே அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன்.

தோழர் பார்த்தசாரதிசங்கராச்சாரி கைதின் போது இந்து முன்னணி காலிகளோடு மோதல் ஏற்பட்டது. அப்போது வழக்கறிஞர்களை திரட்டி அவர்களை எதிர் கொண்டார்.

ஒரு முறை ஒரு பிரச்சனைக்காக இரவு 1 மணி வரை போலீஸ் ஸ்டேஷனில் காத்திருந்து விட்டு 1.30 மணிக்கு அவரது வீட்டுக்கு போனோம். நானும் அங்கேயே தூங்கி விட்டேன். காலையில் எழுந்து பார்த்தால் தோழரை காணவில்லை. “அவர் அதிகாலை 4 மணிக்கே எழுந்து வேறு வேலையாக போய் விட்டார்” என்றார்கள்.

“நாம் மற்ற வேலைகளை எல்லாம் விட்டு விட்டு நள்ளிரவு வரை போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறோம்” என்று ஒரு மிதப்பு என்னிடம் இருந்தது. ஆனால், தோழர் சீனிவாசன் அதை ஒரு கடமையாக எடுத்துக் கொண்டு அடுத்த நாள் அடுத்த வேலையை செய்ய புறப்பட்டு விட்டிருந்தார். அது எனக்கு நிறைய கற்பித்தது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதற்கு அவர்களின் வலிகளை உணர வேண்டும். சட்டக் கல்லூரியில் தேவர் சாதி – தாழ்த்தப்பட்ட சாதி மோதல் நடந்த போது, புதிய ஜனநாயகம் அட்டையில் ஆதிக்க சாதி வெறிக்குப் பதிலடி என்று ஒரு மாணவன் அடிப்பதை போட்டிருந்தார்கள். இதை எப்படி மாணவர்களிடையே கொண்டு போவது என்று நாங்கள் தயங்கினோம். தோழர் சீனிவாசன், “ஆமா அப்படித்தான் அடிப்போம். எங்களை ஒடுக்குபவர்களை அப்படித்தான் அடிப்போம்” என்று பேசச் சொன்னார்.

அதே வழியில் இன்று ராமதாசை குண்டர் சட்டத்தில் போடுவதைத் தவிர வேறு என்ன செய்யச் சொல்றீங்க என்று கேட்கும் அரசியலை அது எங்களுக்கு கற்றுத் தந்தது.

அவர் நாம் பேசுவதை கவனமாக கேட்டுக் கொள்வார். விமர்சனங்களை ஏற்றுக் கொள்வார். எனது திருமணம் புரட்சிகர திருமணம் என்று அறிந்தவுடன் அது தனது சொந்த வேலை போல ஈடுபாடு காட்டினார். உடல் நிலை சரியில்லாமல் இருந்த போதும், “ஒரு கார் மட்டும் அனுப்பி விடு நான் வந்து விடுகிறேன்” என்று சொன்னார். திருமணம் முடிந்த பிறகு அவரை பார்க்க மனைவியுடன் போயிருந்த போது, மனைவியிடம், “திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அமைப்பை அணுகலாம். அமைப்பில் உள்ள தோழர்கள், வெளியில் உள்ளவர்கள் என்று பாரபட்சம் பார்க்க மாட்டோம். அதே போல தோழரின் அமைப்பு வேலைகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுபாஷ் ரெட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது “எல்லோரும் போலீஸ் வேனில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள், நீ என்ன செய்கிறாய், நீயும் போ” என்று தனது மகள் பொற்கொடியையும் கைதாக அனுப்பினார்.

அவரைப் பற்றி பேசுவதற்கு கூட நமக்கு தகுதி இருக்கிறதா என்ற தயக்கத்துடன்தான் பேசுகிறேன்.

தோழர் சீனிவாசனின் மகள் தோழர் பொற்கொடி, மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

தோழர் சீனிவாசன் என்னுடைய அப்பா, அவர் மாதத்தில் 10 நாட்கள்தான் வீட்டில் இருப்பார், 20 நாட்கள் வெளியில் போய் விடுவார். வீட்டில் இருக்கும் நாட்களில் ஜாலியாக இருப்பார், எங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார். இப்போதும் அவர் இறக்கவில்லை, எங்கோ வெளியூர் போயிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. அவரிடம் பேசுவதில் தயக்கமோ பயமோ எப்போதும் இருந்ததிலை. அவரை திட்டிக் கூட பேசலாம்.

தோழர் சீனிவாசன் குடும்பத்தினர்
தோழர் சீனிவாசன் குடும்பத்தினர்

தோழர் சீனிவாசனின் தந்தை தோழருக்கு 15 வயதாகும் போது இறந்து விட்டார். என் பாட்டி, தோழரின் தாய் 10, 8 வயது தம்பிகளுடன் எங்காவது போய் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சொன்னபோது, “நீங்க வேணும்னா போய் சாவுங்க, நான் வாழ வேண்டும்” என்று சொன்னார் என்று என் பாட்டி அடிக்கடி சொல்லுவார். 15 வயதில் வாழ்க்கையை எதிர் கொள்ள முன் வந்த அதே மன உறுதி 59-வது வயதில் நோயுடன் போராடும் போதும் அவரிடம் இருந்தது. மருத்துவர்கள் 6 மாதக் கெடு விதித்தார்கள். மருத்துவர்களுடனும் தோழர்களுடனும் கலந்தாலோசித்து கீமோதெரப்பி வேண்டாம் என்று முடிவு செய்தார். ஒரு ஆண்டு உயிர் வாழ்ந்தார்.

மருத்துவர் சிவராமன் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் நல்லது என்று சொன்ன போது, தோழர்களும் வற்புறுத்திய போது “அறுவை சிகிச்சை மூலம் நான் மீண்டும் பழையபடி செயல்பட முடியுமா? குடும்பத்தின் பண நிலவரம் எனக்குத் தெரியும். ம.க.இ.க.வின் பொருளாளர் என்ற வகையில் அமைப்பின் பொருளாதார நிலையும் எனக்குத் தெரியும். பணத்தை விரயம் செய்ய வேண்டாம்” என்று எழுதிக் கொடுத்து விட்டார்.

2012-ம் ஆண்டு ஜனவரியில் மிட் இந்தியா மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்யா விட்டால் 3 நாட்களில் இறந்து விடுவீர்கள் என்று கெடு விதித்ததும் குடும்பத்தினர், தோழர்கள் யாரிடமும் கலந்தாலோசிக்காமலேயே டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லி விட்டார். செய்தித் தாள் படிப்பது, தொலைக்காட்சி செய்தி பார்ப்பது என்று அடுத்த 3 மாதங்களை செலவழித்தார்.

இளம் வயதில் உறுதியாக தைரியமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் வயதான காலத்திலும் அதே உறுதியை அவருக்கு கொடுத்தது அவர் சார்ந்திருந்த அரசியலும் அவர் இணைந்து பணியாற்றிய தோழர்களும்.

சுபாஷ் என் ரெட்டி என்ற நீதிபதி 24 கட்டளைகள் போட்டு வழக்கறிஞர்களை ஒடுக்க முயற்சித்தார். அதற்கு எதிரான போராட்டத்தின் போது அப்போதுதான் பி.எல். முடித்து என் அப்பாவுடன் நான் அங்கு வந்திருந்தேன். போலீஸ் வேனில் என்னையும் ஏறச் சொன்னார். அதன் பிறகு தோழர் சீனிவாசன் கொடுத்த பேட்டிதான் அந்த போராட்டத்தை பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது.

இந்த தருணத்தில் என் தாய் தோழர் பானுமதியையும் குறிப்பிட வேண்டும். தோழர் சீனிவாசனின் பணிகளுக்கு இடையூறு செய்யாமல் ஆதரவு அளித்தார். “வீட்டில் இருப்பது இல்லை, குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதில்லை” என்றுதான் புகார் செய்வார்.

தோழர் பொற்கொடிசேத்துப்பட்டு ரவுடி தங்கையாவை எதிர்த்து ம.க.இ.க. போராட்டம் நடத்திய போது ரவுடிகளின் ஆட்கள் வீட்டுக்கு வந்து வீட்டின் உரிமையாளரை மிரட்டினார்கள். அந்த அம்மா வந்து, “நீங்க இந்த ஏரியாவிலேயே இருக்காதீங்க” என்று அறிவுரை சொன்னதும், “உங்களுக்கு கஷ்டம் இல்லாம வீட்டை காலி பண்ணிர்றேன், ஆனா இந்த ஏரியாவில இருக்கணுமான்னு நான்தான் முடிவு செய்வேன்” என்று சொன்னார் தோழர் சீனிவாசன்.

இது போன்ற இடையூறுகளை தனது பணிக்கான வெகுமதியாக கருதினார் அவர். இவர்கள் செய்யும் இடையூறுகள்தான் நான் சரியான பணியை செய்து வருகிறேன் என்பதை நிரூபிக்கிறது என்று பெருமைப்படுவார்.

அவரை ம.க.இ.க.விலிருந்து பிரிக்க முடியாது. ஜனவரி 2012-ல் மிட் இந்தியா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்த பிறகு வீட்டையே ஐ.சி.யு வாக மாற்றினார்கள் தோழர்கள். மருத்துவர் சிவராமன் ராம்-சீத்தா என்ற மூலிகைக்கு குணப்படுத்தும் பண்பு இருக்கிறது என்று சொன்னதும் ஒரு சென்னை தோழர் எங்கிருந்தோ ராம்-சீத்தாவுடன் வந்தார்.

1992-ல் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டார். மின்வாரியத்தில் வேலை செய்து வந்தார். நான் 6-ம் வகுப்பு படித்து வந்தேன். எனது தம்பி 1-ம் வகுப்பு படித்து வந்தான். குடும்பத்தில் எல்லோரும் திட்டினார்கள். நானும் அவரிடம் கேட்டேன்.

“நான் வேலையை விட்டதால நீ படிக்காமலோ, சாப்பிடாமலோ இருக்கப் போறதில்லை. நான் இப்போ செய்தது சரிதான்னு உனக்கு இப்போ புரியாது. எதிர்காலத்தில் தெரியும் என்றார்”

அது சரி என்று நிரூபிக்கப்பட்டதற்கு அவர் எழுதிய ஒரு குறிப்பை வாசிக்கிறேன்:

கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராயப்பேட்டை மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சை பிரிவில் உள்ளேன். இன்னொரு படுக்கையில் முன்னாள் ஓய்வு பெற்ற கலெக்டர் ஒருவர் உள்ளார். அவரை பார்த்துக் கொள்ள யாரும் வரவில்லை. அவரை ஐசியு அழைத்து சென்று வருவதற்கு காசு கொடுத்து ஆள் கூப்பிட வேண்டியிருந்தது. அதிகாரத்தில் இருந்த போது தன்னைச் சூழ்ந்து நின்றவர்கள் இன்று இல்லாமல் போய் விட்டதை நினைத்து அவர் கண்ணீர் வடிக்கிறார்.

அதுதான் ஆளும் வர்க்க அதிகார அமைப்புக்கு வேலை செய்தவர்களின் நிலை.

கம்யூனிஸ்டாக வாழ்ந்த எனக்கு தோழர்கள் உறுதுணையாக உள்ளார்கள். உழைக்கும் மக்களுக்கு சேவை செய்தால் ஆடம்பரம் இல்லை, ஆனால் ஆதரவு உண்டு. ஆட்சி அதிகாரத்தில் கொடி கட்டிப் பறந்த கலெக்டர் என்ன நிலையில் இருக்கிறார். அரசு உத்தியோகத்தை உதறி எறிந்தது உன்னதமானது என்று முழுமையாக உணர்கிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

கடைசி நேரத்திலும் மகிழ்ச்சியாகவே இருந்தார். அவரது ஒரே கவலை, தான் உழைத்த சமூக மாற்றம், புரட்சி நிகழ்வதற்கு முன்பே இறக்கிறோமே, புரட்சிக்கான வேலைகளை செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும்தான் அவருக்கு இருந்தது.

புரட்சியை எப்படி நடத்துவது என்று அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார். தோழர் சீனிவாசனைப் போல தோழர்களின் துணையோடு அவர் பாதையில் தொடர்வதற்கு உறுதி ஏற்கிறேன்.

இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் உரையாற்றினார். கூட்டத்தின் தலைவர் வெங்கடேசன் நன்றியுரை ஆற்றிய பிறகு சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி முடிந்தது.

(தோழர் மருதையனின் உரையை தனிக் கட்டுரையாக விரைவில் வெளியிடுகிறோம்.)

– வினவு செய்தியாளர்

 1. கூட்டத்தில் பேசிய அனைத்து தோழர்களும் சொன்னது, சீனிவாசன் தோழர் எந்த வேலை செய்தாலும் மகிழ்ச்சியுடன் செய்வார் என்று. அந்த மகிழ்ச்சி என்பது, நாம் அடைய நினைக்கும் இலக்கை நோக்கி, இட்டுச் செல்லும் பொறுப்பான முயற்ச்சி என்பதை புரிந்துகொண்டேன்.

 2. “மருத்துவர் சிவராமன் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் நல்லது என்று சொன்ன போது, தோழர்களும் வற்புறுத்திய போது “அறுவை சிகிச்சை மூலம் நான் மீண்டும் பழையபடி செயல்பட முடியுமா? குடும்பத்தின் பண நிலவரம் எனக்குத் தெரியும். ம.க.இ.க.வின் பொருளாளர் என்ற வகையில் அமைப்பின் பொருளாதார நிலையும் எனக்குத் தெரியும். பணத்தை விரயம் செய்ய வேண்டாம்” என்று எழுதிக் கொடுத்து விட்டார்”
  பண நிலவரைத்தை விட அவரின் மன உறுதி – என்ன சொல்லி அவரை போற்றுவது? வார்த்தைகள் தெரியவில்லை. தோழர் பற்ற வைத்த சிறு தீ காட்டுத் தீயாக பரவ வேண்டும். பரவும் நிச்சயம்.

 3. கூட்டத்தில் பேசிய தோழர் அஜிதா மிக அழகாக கூறினார். சீனிவாசன் தோழரிடம் பேசும் போது, அவர் மனதுக்கு பக்கத்தில் இருக்கலாம் என்று. சக தோழர்களை அரவணைப்போடு, புரிந்துகொள்ளும் பண்பான தோழமை உணர்வு அது.

 4. //* வினோதினி மருத்துவமனை போராட்டம் *//

  சிறு திருத்தம்… வினோதினி மருத்துவமனை அல்ல… தஞ்சையில் இருக்கும் சசிகலா தம்பி வினோதகன் குடும்பத்தின் வினோதகன் மருத்துவமனை…

 5. தோழர் இருக்கும் போது கற்றுக்கொண்டதை விட இறந்தும் போரடும் மகிழ்ச்சியை கற்றுக்கொள்ள மார்க்சிய பள்ளியாக இருக்கும் எமது அருமை தோழர் சீனிவாசன் லட்சிய கொள்கையை தளராமல் எடுத்துச் செல்வேன்.

 6. சில வருடங்களுக்கு முன்….

  ஜெயலலிதாவின் முதல் ஐந்தாண்டு காலம் லஞ்ச ஊழல் முறைகேடுகளால் சிறப்பு பெற்றது என்றால் இரண்டாவது ஐந்தாண்டு காலம் வேறு வகையில் ‘சிறப்பு’ பெற்றது. பாசிசத்தின் வெக்கையை மக்கள் ஆரம்ப நிலையிலே உணர ஆரம்பித்தனர். அவர் இப்போது போல அப்போது இல்லை. தமிழுணர்வு, ஈழத்தமிழர் நலன் என்று எந்த அரசியல் ஒப்பனையும் அற்று இருந்தார். புதிய கலாச்சாரம் அவர் முதல்வரானதை இருண்ட காலம் — பாகம் 2 என்ற அட்டைப்படத்துடன் வரவேற்றது. திமுக கூட்டங்களில் புதிய கலாச்சாரம் ஹாட் கேக்குகள் போன்று விற்பனையாகின. தோழர் முகிலனின் ஓவியத்தில் ஒவ்வொரு பு.க இதழும் ஏவுகணைகள் போல பாய்ந்தன. கடுமையான அடக்குமுறை சட்டங்களை உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், மக்கள் போராளிகளுக்கு எதிராகவும் தயக்கமின்றி ஏவி விட்டார். அரசையே பெரும் சுரண்டல் நிறுவனமாக மாற்றி மக்கள் பணமெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன.

  உலகவங்கியின் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதற்கு கைமாறாக பல்வேறு மானிய வெட்டுகளை செயல்படுத்தினார். போக்குவரத்து துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டார். அதனை எதிர்த்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். அந்த போராட்டத்துக்கு மகஇக முதலான புரட்சிகர அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. வேலை நிறுத்த அறிவிப்பையும் மீறி அன்று ஓடி கொண்டிருந்த பேருந்துகளில் நாங்கள் மூன்று பேர் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தோம். பாய்ந்து வந்த போலிஸ் எங்களை அள்ளிக் கொண்டு சென்றது. ஒரு காவல் நிலையத்தின் முன்பு நாங்கள் நின்று கொண்டிருந்தோம். பொதுவாக காவல் நிலையங்கள் சிவப்பு வண்ணத்தில் கொஞ்சம் கருப்பு வண்ணத்தை கலந்தது போன்ற மெரூன் வர்ணத்தில் சுவர்கள் பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கும். அவை இசக்கி அம்மன் கோயிலை நினைவுறுத்தும். ஆனால், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் காவல் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு இள வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன. அதனால் எங்கள் முன்பு இருந்த கட்டிடம் காவல் நிலையம் என்பதை அறிய முடியவில்லை.

  எங்களிடம் விசாரணை நடத்திய போலிஸ் துணை ஆய்வாளர் முகத்தாடையிலும், நெஞ்சிலும் குத்த ஆரம்பித்தார். அவர் கேள்விகளுக்கு நாங்கள் அளித்த பதில்களை இடக்கு மடக்காக உணர்ந்தார். எங்கள் மூவரில் சற்றே சீனியராக இருந்த தோழரை குறி வைத்து தாக்கினார். அந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் போஸ்டர்கள் மட்டுமல்ல; ஸ்கெட்ச் பென்னில் சார்ட் பேப்பரில் எழுதபட்ட போஸ்டர்களும் எங்களிடம் இருந்தன. வேறு ஒரு பகுதி பிரச்சினையில் கைதான தோழர்களை விடுதலை செய்ய கோரியும், நக்சல்பாரி இயக்கத்தில் மக்களை இணைய அறைகூவல் விடுத்தும் எழுதப்பட்டிருந்தன. அதனை படித்து பார்த்த துணை ஆய்வாளர் ரொம்பவே பதறினார். உயரதிகாரி ஒருவருக்கு போனை போட்டு வாசகங்களை படித்து காண்பித்தார். பிறகு எங்களை உட்கார பணித்தார். அபோதெல்லாம் மொபைல் போன்களின் எண்ணிக்கை குறைவு. காவல் நிலையத்திற்கு ஒரு பெண்மணி வந்திருந்தார். அவரிடம் அமைப்பு தொடர்பு எண்ணை கொடுத்து தோழர்களிடம் தகவல் தெரிவிக்க சொன்னோம்.

  கைது செய்யப்பட்ட நாங்கள் அமைப்பு வேலைகளுக்கு புதியவர்கள். பொதுவாக அமைப்பில் புது தோழராக கருதப்படும் காலம் குழந்தைமையை இன்னுமொருமுறை வாழ்க்கையில் அனுபவிப்பது போன்றது. ஷேக்ஸ்பியரின் All the World’s a Stage என்று தொடங்கும் கவிதையில் மனிதர்களுக்கு இரண்டாம் குழந்தைமை என்றொரு பருவம் இருப்பதாகவும், அது முதுமை நிலை என்றும் வாழ்க்கையை வகைபடுத்தியிருப்பார். அமைப்பு வாழ்க்கையை மேற்கொள்ள முன்வரும் ஒருவருக்கு முதுமை பருவம் மூன்றாம் குழந்தை பருவம் என்று வேண்டுமானால் சொல்லலாம். எங்கள் கைது செய்தியால் மூத்த தோழர்கள் மிகவும் பதறி போனார்கள்.

  தோழர்கள் காவல் நிலையம் வருவதற்குள் எங்களை ஒரு கலியாண மண்டபத்திற்கு அழைத்து சென்றார்கள். அங்கு ஏராளமான திமுக தொண்டர்களை முனெச்சரிக்கை நடவடிக்கையில் கைது செய்து வைத்திருந்தனர். எங்களை கல்யாண மண்டபத்தில் தோழர் சீனிவாசன் மற்றும் வேறு தோழர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் எங்களை உற்சாகமூட்டும் வண்ணம் பேசினர். மார்க்சிய–லெனினிய அமைப்பை சேர்ந்த எங்கள் மீது போலீஸின் கண்கள் நிலைகுத்தியிருந்தன. எங்களை கண்காணித்தபடி போலீஸ்; போலீஸை கண்காணித்தபடி வெளியே சிவில் ட்ரஸில் தோழர்கள் என்று பொழுது சாய்ந்தபடி இருந்தது. அனைவரையும் விடுவித்த பிறகு யார்யாரிடமோ ஆலோசனை பெற்று போலீஸ் எங்களை விடுதலை செய்தது. வெளியே வந்த போது மறுபடியும் முகமெல்லாம் புன்னகையோடு சீனிவாசன் தோழர் நின்று கொண்டிருந்தார். எங்களை கைகொடுத்து வாழ்த்தி விட்டு, தனக்கும் போலீஸ் ஆய்வாளருக்கு இடையே நடந்த உரையாடலை விளக்கினார். எங்கள் தோழர்களை எப்படி அந்த காவல் துணை ஆய்வாளர் அடிக்கலாம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், உங்கள் அமைப்பு தோழர்கள் என்று நிச்சயமாக தெரியாது என்றாராம். இதனை சொல்லி விட்டு சொன்னார் ” ஒரு வேளை நான் கைது செய்யப்பட்டிருந்தால் கூட என்னை அடித்து விட்டு இந்த வசனத்தை பிறகு பேசியிருப்பார்கள்” என்று சொல்லி மீண்டும் சிரித்தார். போலீஸின் உளவியலை அவ்வளவு தெளிவாக எங்களுக்கு உணர்த்தினார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க