மறைந்த நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுப்பிரமணியனின் படத் திறப்பு விழாவில் செலுத்தப்பட்ட  நினைவஞ்சலி உரையின் சுருக்கம்
றைந்த நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுப்பிரமணியன், நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரம் பயின்றவர்.
அக்காலத்தில் மாநிலக் கல்லூரி மிகவும் தரம்வாய்ந்த கல்லூரியாகும். அங்கு பயின்றவர்களுக்கு, மிகவும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. அங்கு படித்தவர்கள், எந்தக் கல்லூரியிலும் விரிவுரையாளராகச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இருப்பினும் தோழர் சுப்பிரமணியன், அத்தகைய வாழ்க்கை முறையை வெறுத்து இடதுசாரி அரசியலில் ஆர்வம் கொண்டு, உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடுவதை தனது நோக்கமாகக் கொண்டிருந்தார்.
மாணவராக இருந்தபோது நக்சல்பாரி அரசியல் அவருக்கு அறிமுகம் ஆனது. சி.பி.எம் கட்சியின் நவீன திரிபுவாதத்தை உணர்ந்து அதை மறுதலித்த தோழர் சுப்பிரமணியன், நக்சல்பாரி இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு, கட்சியின் முழுநேரப் புரட்சியாளராக உயர்ந்தார்.
அக்காலகட்டத்தில், அறிவுத்துறையினரும் மாணவர்களும் பெருமளவில் நக்சல்பாரி இயக்கத்தில் அணிதிரண்டனர். பலர் முழுநேர ஊழியர்களாக, நக்சல்பாரி கட்சிக்கு தமது வாழ்வை அர்ப்பணித்தனர்.
படிக்க :
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுப்பிரமணி அவர்களுக்கு சிவப்பஞ்சலி!
நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார்
அது 1970-களின் காலகட்டம். நக்சல்பாரி என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற அவதூறு பிரச்சாரம் அரசால் பரப்பப்பட்டு, நக்சல்பாரிகள் எவ்வித விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட, அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடிய காலம்.
தோழர் சுப்பிரமணியன் இவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையை உயர்த்திப்பிடித்து, வர்க்க உணர்வுடனும் வைராக்கியத்துடனும் கட்சிப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
அன்று கட்சி தீர்மானித்தபடி, கூலி ஏழை விவசாயிகளுடன் ஐக்கியப்பட்டு, அவர்களுடன் சேர்ந்து கூலி வேலை செய்து கொண்டு அவர்களை அரசியல்படுத்தி அமைப்பாக்கும், மாபெரும் கடமையை மேற்கொண்டார். படித்த இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினரை, கட்சிக்கு வென்றெடுத்து அரசியல் வகுப்புகள் நடத்தி, அவர்களை ஊழியர்களாக வளர்த்தெடுத்தார். தனது ஊனமுற்ற கால்களுடன், கிராமம் கிராமமாக நடந்து சென்று, கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்.
அன்றைய ஒன்றுபட்ட மார்க்சிய லெனினிய கட்சியில், தமிழகத்தில், கிழக்கு பிராந்திய கமிட்டியின் உறுப்பினராகவும், அக்கமிட்டியின் முக்கிய தோழராகவும் இருந்தார். அரசால் நக்சல்பாரிகள் வேட்டையாடப்பட்ட அந்த நெருக்கடியான சூழலிலும் தோழர் சுப்பிரமணியன் உறுதி குறையாமல் உற்சாகத்துடன் பணியாற்றினார்.
பின்னர் 1975-ல் அவசரநிலை பாசிச ஆட்சி கட்டவிழ்த்துவிடப்பட்டு, நக்சல்பாரி இயக்கத்தின் மீது கடுமையான அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. நக்சல்பாரி புரட்சியாளர்கள் பலர், கேள்விமுறையின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அத்தகைய சூழலிலும் தோழர் சுப்பிரமணியன் அச்சமின்றி உறுதியுடன் கட்சிப் பணியாற்றினார்.
பின்னர் இடது சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான மேற்கு பிராந்தியக் குழுவின் சித்தாந்த போராட்டத்தை ஆதரித்து தோழர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கிழக்குப் பிராந்தியக் குழுவினர் ஐக்கியப்பட்டனர்.
மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்து, நக்சல்பாரி புரட்சிகர பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து, மாநில அமைப்புக் கமிட்டியின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியவர்தான், தோழர் சுப்பிரமணியன்.
ஆங்கில மொழியைக் கற்றுத் தேர்ந்த தோழர், பல நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்து, கட்சி ஊழியர்களின் சித்தாந்தக் கல்விக்குப் பெரிதும் உதவியுள்ளார். மாரிஸ் கான்ஃபோர்த்தின் இயக்கவியல் பொருள்முதல்வாதம், லெனின் எழுதிய கட்சி நிறுவனக் கோட்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
பின்னர் தோழர் சுப்பிரமணியன் கீழைக்காற்று நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பிலிருந்தார். அப்பதிப்பகத்தின் சார்பில், பல மார்க்சிய மூல நூல்களை மொழிபெயர்த்தார். அதோடு, ஏற்கெனவே வெளியாகியிருந்த பல மார்க்சிய மூல நூல்களின் மொழியாக்கத்தில் இருந்த குறைகளை நீக்கி, மறுபதிப்பு செய்ததில் துணை நின்றார்.
அதன் பின்னர் தோழர், புஜதொமு-வில் அலுவலக நிர்வாகப் பணியில் ஈடுபட்டார். அப்பணியின் ஊடாக பல நூல்களையும் கட்டுரைகளையும் மொழியாக்கம் செய்தார். குறிப்பாக சோசலிச சீனாவும், முதலாளித்துவ சீனாவும் என்ற நூல் மொழிபெயர்க்கப்பட்டு புஜதொமு பெயரில் வெளியிடப்பட்டது, பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்தகைய வெளியீடுகள் தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் அரசியல் கல்வி அளிப்பதில் முக்கிய பங்காற்றின.
கடந்த பத்தாண்டு காலமாக, முதுமை காரணமாக, தோழரால் கட்சிப் பணிகளிலும், புஜதொமு-வின் பணிகளிலும் செயல்பட இயலாத நிலைமை இருந்தது. இருப்பினும் அவரது புரட்சிகர உணர்வும் ஆர்வமும், என்றும் குறைந்ததில்லை.
சகதோழர்களிடம் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ, தேசிய சர்வதேசிய அரசியல் நிலைமைகளைப் பற்றியும், நக்சல்பாரி இயக்கத்தின் முன்னேற்றத்தை பற்றியும் கேட்டறிந்து விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
படிக்க :
இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !
தோழர் சுப்பிரமணியன், தான் மட்டுமின்றி தன் குடும்பத்தினரையும் அமைப்பு வேலைகளிலும் ஈடுபடச் செய்தார். அவர், கம்யூனிஸ்ட்டுகளுக்கே உரித்தான எளிய வாழ்வை மேற்கொண்டார். சக தோழர்கள் தவறு செய்தால், அதைச் சுட்டிக் காட்டி கறாராகவும் கண்டிப்புடன் விமர்சிப்பார்.
கடந்த ஆண்டில், முறையாக இயங்க முடியாத சூழலிலும் கூட, இந்த அமைப்பை சீர்குலைக்க முயன்ற பிளவுவாதிகளுக்கு எதிராக, தனது வெறுப்பையும்ம் வெஞ்சினத்தையும் வெளிப்படுத்தினார்.
தோழர் சுப்பிரமணியனுக்கு எமது அமைப்புகளின் சார்பாக எமது சிவப்பு அஞ்சலியை செலுத்தும் அதே நேரத்தில், அவர் பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் சுப்பிரமணியனின் உயரிய கம்யூனிசப் பண்புகளை நமதாக்கிக் கொள்வோம். வர்க்க உணர்வு, புரட்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அவரது புரட்சிகர உணர்வை வரித்துக் கொள்வோம். அவரது புரட்சிகர கனவை நனவாக்க சூளுரை ஏற்போம்.
தோழர் சுப்பிரமணியனுக்கு வீரவணக்கம் !

இவண்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்புக் குழு
தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க